இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வெள்ளி, ஜூலை 16, 2010

இராஜபக்சேவுடன் ஒப்பந்தம்: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் மன்மோகன் சிங்


'இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி' என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற எந்த அரசையும் சாராமல் இயங்கும் சர்வதேச நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த லெலியோ பஸோ என்பவரது முன்முயற்சியால் 1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியிலுள்ள பொலோக்னா என்ற இடத்தில் 31 நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆகும். நோபல் பரிசு வென்ற 5 பேர் இதில் உள்ளனர். மனித உரிமைகள் மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது இதன் செயல்பாடாகும்.

          அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் உள்ள 'இலங்கையில் அமைதிக்கான ஐரிஷ் முன்னணி” என்ற அமைப்பு 19 நவம்பர் 2009 அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், டப்ளினில் 'இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை' நடத்துவது என்று முடிவு செய்தது. 2006 ஜூலை முதல் 2009 ஏப்ரல் வரை நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதல் மற்றும் வலிமையான ஆயுதப் பயன்பாட்டால் அன்றாடம் 116 தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களையும், கடைசி வாரங்களில் மட்டும் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாட்டு மைய நீரோட்டப் பத்திரிகைகள் அளித்த செய்திகளையும் அப்புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இலங்கை அரசு மீது சாட்டப்பட்ட குற்றங்கள் இவைதான்: மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் அரசால் அறிவிக்கப்பட்ட 'பாதுகாப்பு மண்டலங்கள்' ஆகியவற்றில் வெடிகுண்டுகளை வீசி எண்ணற்ற பொதுமக்களையும், மருத்துவர்களையும், தன்னார்வ பணியாளர்களையும் கொன்றது, போர் நடைபெறும் பகுதிக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு, நீர் மற்றும் சுகாதார வசதிகளை தடுத்து நிறுத்தியது, இன்னும் பல்வேறு கொடூரமான மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்தது.

          உலக சமூக மாமன்றத்தின் நிறுவனக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் பிரான்காய்ஸ் ஹௌடார்ட் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து 2010 ஜனவரி 14 முதல் 16 வரை இவ்வழக்கை விசாரித்தது. இலங்கை அரசுக்கு முறையாக அழைப்பு விடுத்து, அதன் சார்பாக யாரும் ஆஜராகாத நிலையில் 'ஒரு பொது அறிவிப்பு' வெளியிட்டுவிட்டு இவ்வழக்கை அந்தக் குழு நடத்தியது. பாதிக்கப்பட்டவர்கள், நேரடி சாட்சிகள், துறை சார்ந்த வல்லுநர்கள் என்று பலரை விசாரித்து இக்குழு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் இராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியது, அப்பாவிப் பொதுமக்களை வான்வழியாகக் குண்டு வீசிக் கொன்றது, பாதுகாப்பு மண்டலத்தில் குண்டுவீசியது, இன்னும் இது போன்ற ஏராளமான 'போர்க் குற்றங்களை' செய்துள்ளதாக மிகப் பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும், வன்புணர்ச்சிகள், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் உள்ளிட்ட 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை' புரிந்துள்ளதாகக் கூறியுள்ளது. போர்க் காலத்திலும், அதற்குப் பின்பும் உள்நாட்டு அகதிகள் முகாம்களிலும் (முள்வேலி முகாம்களில்) பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதையும் இத்தீரிப்பாயக் குழு உறுதி செய்துள்ளது. இதனோடு மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகள், இலங்கைக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் வழங்கின, ஆயுதப் பயிற்சி வழங்கின என்று சுட்டிக்காட்டுகிறது. இனப்படுகொலை நடந்ததாக புகாரில் குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும்கூட தீர்ப்பாயம் அது பற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகிறது.

இந்த டப்ளின் தீர்ப்பாயத் தீர்ப்பு பற்றி இன்னும் சாதாரண மக்கள் பெரிய அளவில் அறியவில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியாமல் இருக்காது. இருந்த போதிலும் இத்தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்துவிட்டு 'போர்க்குற்றவாளி இராஜபக்சே'வுடன் டெல்லியில் ஒப்பந்தம் செய்கிறார் மன்மோகன். தமிழர்களின் செங்குருதி குடித்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு நடத்தியது. ஜூன் 9 அன்று இலங்கை - இந்திய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

என்ன ஒப்பந்தம்? இலங்கையின் பாதுகாப்புக்கு உள்நாட்டிலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்திய இராணுவத்தை அங்கு அனுப்புவதற்கு ஒரு ஒப்பந்தம்! சிங்களக் காவல்துறைக்கு பயிற்சி அளிப்பதற்கு ஒரு ஒப்பந்தம்! பலாலி இராணுவ விமானத் தளத்தை சரி செய்து, மேம்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு ஒப்பந்தம்! தமிழர்களின் விளைநிலங்களை அபகரித்து 'தமிழர் தாயகத்தை' அழிக்கும் சிங்கள அரசின் 'வடக்கின் வசந்தம்' என்ற விவசாயம் தொடர்பான திட்டத்திற்கு ஏற்கனவே பெரும் உதவி அளித்துவரும் இந்திய அரசு இப்போது இன்னும் விரிவாகச் செய்ய ஒரு வேளாண் ஒப்பந்தம்!

இப்படியாக, தமிழர்கள் மீண்டும் தங்கள் தனி ஈழக் கோரிக்கைக்காக கிளர்ந்தெழுவதை பல்வேறு வகைகளில் தடுத்து நிறுத்துவதும், இந்தியத் தரகு முதலாளிகள் இலங்கையில் இலாபம் சம்பாதிப்பதற்கு வகை செய்வதும்தான் இவ்வொப்பந்தங்களின், இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது. தெற்காசியாவில் தன்னை ஒரு பேட்டை ரவுடியாக நிறுவிக் கொள்வதும், இப்பிராந்தியத்தில் அமெரிக்கா  உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் ஏஜெண்டாகத் தன்னை வலுப்படுத்திக் கொள்வதும்தான் இந்திய விரிவாதிக்க அரசின் நோக்கம். சிங்கள இனவெறிக்கு எதிரான போராட்டம் என்பது உண்மையில் இந்திய விரிவாதிக்கத்திற்கும், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரான போராட்டம் என்பதை இத்தகைய ஒப்பந்தங்கள் மேலும் மேலும் நிரூபித்து வருகின்றன.

-ஆசிரியர் குழு

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014