இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வெள்ளி, ஜூலை 16, 2010

உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு தமிழகமெங்கும் பிரச்சார இயக்கம் - ஒரு பார்வை

மோசமடைந்து கொண்டே செல்லும் இன்றைய சமூகச் சூழலில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் வெடித்து கொண்டு இருக்கின்றன. நம் நாட்டின் அரசியல்வாதிகளும், அவர்களை நிர்ணயிக்கும் தரகுப் பெரு முதலாளிகளும், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும் உழைக்கும் மக்களின் உரிமைகள், உடமைகள், உணர்வுகள் ஆகிய அனைத்தையும் பறித்தெடுத்து அவர்களை நடை பிணங்களாக ஆக்க நினைக்கின்றனர். இவர்கள் அனைவரின் தாரக மந்திரமே 'பயன்படுத்தித் தூக்கியெறிதல்;” என்பதுதான். பிணந்தின்னிக் கழுகுகளாக திகழும் இத்தகைய கூட்டங்களை எதிர்த்து தங்களுடைய உரிமைகளை மீட்டெடுக்கப் போராடும் மக்களுக்காக நாம் இணைந்து போராடுவது தான் உண்மையான நாட்டுப்பற்று.

அந்த வகையில் தற்பொழுது நடைபெற்று வரும் மக்களின் உன்னதமான போராட்டமான தண்டேவாடா பழங்குடி மக்களின் போராட்டமானது, உலகெங்கிலும் தங்களின் உரிமைக்களுக்காகப் போராடும் மக்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஒரு பாதையையும் வழங்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தையும் தரகுமுதலாளி களையும் எதிர்த்து நடைபெறும் இம்மக்களின் போராட்டமானது வீரஞ்செறிந்த போராட்டமாக திகழ்கின்றது. இந்தப் போராட்டத்தை திசைதிருப்ப ஆளும் வர்க்க தரகு முதலாளிகளும், ஏகாதிபத்திய ஊடகங்களும் அந்த மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா, ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு எதிராக இந்திய அரசு அறிவித்திருக்கும் பச்சை வேட்டைப் போரை எதிர்த்து தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்யும் நோக்கத்தோடு தமிழகத்திலுள்ள பல்வேறு சனநாயக, முற்போக்கு, புரட்சிகர, தமிழ் தேசிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கின.

கூட்டமைப்பின் தோற்றம்

பச்சை வேட்டைப் போருக்கெதிராக ஒரு கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்ற முன்மொழிவோடு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தது. அதன் பேரில், மார்ச் 6, 2010 இல் சென்னையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்பட்டது. இக்கூட்டத்தில்தான் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. முதல் கட்ட வேலையாக, கூட்டமைப்பின் சார்பாக துண்டறிக்கைகள் மற்றும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மாவட்டங்களில் கருத்தரங்கம் அல்லது பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்படர்டது.

இதன்படி முதலாவதாக, சென்னை, எம்.ஜி.ஆர்.நகரில் 23.04.2010 அன்று ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பெரியார் திராவிடர் கழகத் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் மணியரசன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர் அரங்க குணசேகரன், பேராசிரியர் சரஸ்வதி, மூத்த தோழர் எழுத்தாளர் கோவை ஈஸ்வரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸட்-லெனினிஸ்ட்) (மக்கள் விடுதலை)யைச் சேர்ந்த தோழர் தங்கத் தமிழ்வேலன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் தமிழ்நேயன், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் இரஜினிக் காந்த், கர்நாடகாவைச் சேர்ந்த தோழர் இராமசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். 300-க்கும் மேற்பட்ட மக்கள் இருக்கைகளில் அமர்ந்தும், 200-க்கும் மேற்பட்ட மக்கள் ஆங்காங்கே நின்றும் உரைகளைக் கவனித்தனர்.
முற்போக்குப் பேச்சாளர்கள் அனைவரும் இந்திய அரசின் பச்சை வேட்டை திட்டம் என்பது பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் இலாப வேட்டைக்காக அப்பாவி பழங்குடிகளைப் பச்சைப் படுகொலை செய்யும் திட்டமென உண்மையை மக்களுக்கு விளக்கிக் கூறினர். ஈழத்திலே இராஜபக்சே நடத்தியதைப் போன்ற ஒரு கொடூரமான போர்தான் பச்சை வேட்டைப் போர் என்பதை பலர் சுட்டிக் காட்டினர். தன் சொந்த நாட்டு மக்கள் மீதே இந்திய அரசு, ஒரு போரை அவிழ்த்து விட்டுள்ளது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம் என்று பேச்சாளர்கள் கண்டித்துப் பேசினர்.

சென்னைப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கருத்தரங்கம் அல்லது பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
மதுரையில் 01.05.10 அன்று ஜெய்கிந்துபுரம், சிகப்பியம்மாள் திருமண மண்டபத்தில் நடந்த கருத்தரங்கிற்கு தோழர் கேசவன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் திருச்சி பானுமதி, தோழர் கோவை ஈசுவரன், பேராசிரியர் கோச்சடை ஆகிய தோழர்கள் உரையாற்றினர். இக்கூட்டத்தில் 200 பேர் கலந்துகொண்டனர். பின்னர் மதுரையில் பெத்தானியாபுரம், கோரிப்பாளையம், மீனாட்சி புரம் ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரையில் வலையங்குளம் கிராமத்தில் நடத்தத் திட்டமிருந்த தெருமுனைக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அனுமதி மறுப்புக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்: 'சட்டம், ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், தீவிரவாதத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக இரகசியத் தகவல் கிடைத்ததாலும் அனுமதி மறுக்கப்படுகிறது.” இதற்கு முன்பும், பின்பும் பல இடங்களில் இவ்வகையான கூட்டங்கள் பல நடத்தப்பட்டாலும், மதுரை புறநகர் காவல்துறை தனது அதிகார முகத்தை இதன்மூலம் வெளிக்காட்டிக் கொண்டது. ஈரோட்டில் 13.05.10 அன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.


மதுரையில் மே 1 அன்று நடந்த கருத்தரங்கத்தில்
உரையாற்றும் தோழர் வழக்குரைஞர் திருச்சி பானுமதி




கருத்தரங்கில் பங்கேற்ற மக்களில் ஒரு பகுதியினர்

 
தர்மபுரியில் 15..05.10 அன்று பெரியார் மன்றத்தில் கருத்தரங்கம் நடந்தப்பட்டது. முன்னதாக, கருத்தரங்கை நடத்தவிடாமல் தடுக்க, கியூ பிரிவு போலிஸார் கடுமையாக முயற்சித்தனர். முதலில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒரு திருமண மண்டப நிர்வாகிகளை மிரட்டி, கொடுத்த முன்பணத்தைத் தோழர்களிடம் திருப்பிக் கொடுக்கச் செய்தனர். பின்னர் முடிவு செய்யப்பட்ட பெரியார் மன்ற நிர்வாகிகளையும் மிரட்டி கூட்டம் தொடங்கப்படவிருந்த இறுதி நிமிடங்களில் மண்டபத்தைக் கிடைக்கவிடாமல் செய்ய முயன்றனர். குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தோழர் கியூ பிரிவு போலீசாரிடம் தொலைபேசியில் பேசி, கருத்தரங்கத்தைத் தடுத்தால், இப்போதே நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரித்த பின்னர் தான், மண்டபம் திறந்துவிடப்பட்டது. பின்பு தோழர் சுதாகர் தலைமையில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.  தோழர்கள் கோவை ஈஸ்வரன், திருச்சி பானுமதி, மா.செந்தில் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும், கடைசி நேரத்தில் அரங்கம் மாற்றப்பட்ட போதிலும் கூட இக்கூட்டத்தில் 100 பேர் கலந்துகொண்டனர்.

கரூரில் 16.05.10 நடந்த கருத்தரங்கிற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் பழனிச்சாமி தலைமை வகித்தார். தோழர் தியாகு, இ.க.க.(மா-லெ) மக்கள் விடுதலையைச் சேர்ந்த தோழர் மீ.த. பாண்டியன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர். 17.05.10 அன்று விருதுநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயல்பாட்டாளர்களுக்கான பொதுமேடையைச் சேர்ந்த தோழர் வழக்கறிஞர் பால்ராஜ், தோழர் இரஜினிக் காந்த், தோழர் பானுமதி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் மனுவேல் ஆகியோர் உரையாற்றினர். மேற்கண்ட இரண்டு கூட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறையில் 22.05.10 அன்று மாலை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் தனவேந்திரன் தலைமையில் பேராசிரியர் சரஸ்வதி, அரங்க குணசேகரன், பேராசிரியர் த.செயராமன் உள்ளிட்ட பல தோழர்கள் உரையாற்றினர். இக்கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டத்தில் நான்கு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. கோவையில் இரயில்நிலையம் அருகில் உள்ள திவ்யோதயா அரங்கில் 23.05.10 அன்று மாலை மனித நேயப் பாசறைத் தோழர் திருப்பூர் சக்திவேல் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தோழர் எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் ச. பாலமுருகன், மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பிரசன்னா, தோழர் சாதிக், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பிரசாத் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். இக்கூட்டத்திலும் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கோவையில் நான்கு இடங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன.


கோவையில் 23.05.10 அன்று நடைபெற்ற கருத்தரங்கில்
உரையாற்றும் தோழர் எஸ்.வி.இராஜதுரை

சேலத்தில் 29.05.10 அன்று மாலை ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சுமார் 800 பேர் கலந்துகொண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் காமராசு, தோழர் கோ. சீனிவாசன் உள்ளிட்ட பல தோழர்கள் உரையாற்றினர். மாவட்டத்தில் 16 இடங்களில் தெருமுனை பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. சேலத்திலும், மயிலாடுதுறையிலும் பச்சை வேட்டைப் போரை அம்பலப்படுத்தி தோழர் கோபால் மேனன் இயக்கிய ஆவணப்படத்தைத் திரையிட காவல்துறை தடை விதித்தது.

சென்னை, இராயபுரத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களின் முன்முயற்சியால் ஒரு தெருமுனைக்கூட்டம் 02.06.10 அன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டது.  அக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அன்பு தனசேகரன், விடுதலை இராசேந்திரன் ஆகியோரும் தோழர்கள் இரஜினிக்காந்த், மனுவேல் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
மதுரை மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பாக ஒரு கலைக் குழு உருவாக்கப்பட்டது. இக்கலைக்குழு பறையாட்டம், பாடல்கள் மற்றும் ஒரு 20 நிமிட நாடகத்தையும் தயாரித்து, மதுரைக் கூட்டங்களிலும், மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் சென்னைக் கூட்டங்களிலும் நிகழ்த்தினர். பொதுக் கூட்டங்களில் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டபோது ஏராளமான பொதுமக்கள் நின்று பார்த்தனர். கருத்துக்கள் ஆழமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

சென்னையில் மாபெரும் அரங்கக் கூட்டம்:

மாவட்ட அளவிலான கூட்டங்கள் நிறைவு பெற்ற பின்னர் உள்நாட்டு அடக்கமுறை எதிர்ப்பு கூட்டமைப்பின் மைய நிகழ்வாக சர்வதேச அளவில் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளிகளை கொண்டு மாபெரும் அரங்கக்கூட்டம் நடத்தப்பட்டது. 04.06.10 அன்று மாலை சென்னை, தியாகராயர் நகர் செ. தெ நாயகம் மேனிலைப் பள்ளியில் பழங்குடி மக்களைக் கொன்றொழிக்கும் இந்திய அரசின் பச்சை வேட்டைப் போரைக் கண்டித்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சென்னை பெருநகரத்திலிருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த சுமார் 2,000 பேர் பங்கேற்றனர். தோழர் வேலுச்சாமி தலைமை உரை ஆற்றினார். தோழர் விடுதலை இராசேந்திரன் வரவேற்புரையும், தோழர் தியாகு அறிமுக உரையும் ஆற்றினர். சிறப்புப் பேச்சாளர்களாக உலகப்புகழ் பெற்ற சமூக ஆர;வலர் மற்றும் எழுத்தாளரான அருந்ததி ராய், புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசியர் அமித் பாதுரி, புதுதில்லி பல்கலைக்கழகப் பேராசியர் சயித் கிலானி, போராசியர் சாயிபாபா ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் ஆற்றிய ஆங்கில உரைகளை தோழர் தியாகு அவர்கள் அழகு தமிழில் மொழியாக்கம் செய்து உரையாற்றினார்.

தோழர் விடுதலை இராசேந்திரன் தனது வரவேற்புரையின் போது, தமிழத்தில் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒரு மிகப்பெரும் சாதனையைப் படைத்திருப்பதாகக் கூறினார். தமிழகத்திலுள்ள பல்வேறு முற்போக்கு, சனநாயக, புரட்சிகர இடதுசாரி மற்றும் தமிழ்தேசிய இயக்கங்களை ஒன்றிணைத்து தொடர்ந்து வேலை செய்துள்ளது. இந்த ஐக்கியம் பல்வேறு விசயங்களில் நீண்டகாலத்திற்குத் தொடர வேண்டும் என்று பேசினார்.

அருந்ததி ராய் பேசும்போது, தான் ஒரு நாள் தாண்டேவாடா மாவடர்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசும்போது அந்த அதிகாரி தன்னிடம் ஒரு விசயம் சொன்னதாகக் குறிப்பிட்டார். அந்த அதிகாரி, 'இந்தப் போராட்டத்தை இப்படியெல்லாம் இராணுவத்தைக் கொண்டு ஒடுக்க முடியாது. அந்தப் பழங்குடிப் மக்களுக்குப் பேராசை இல்லை, பேராசையை உருவாக்க வேண்டுமானால் அவர்களுக்கு வீட்டுக்கு ஒரு கலர் டி.வி கொடுத்தால் போதும்” என்று கூறியதாகக் கூறிவிட்டு, இந்த உத்தியை தமிழக அரசு நன்றாக புரிந்து வைத்து இருக்கின்றது என்று அருந்ததிராய் கருணாநிதி அரசை விமர்சித்தார். 'ஈழத்தில் நடந்த படுகொலையை தலைமையேற்று நடத்தியது தனியார் நிறுவனங்களே, இது உண்மையிலேயே நிறுவனங்களின் யுத்தமே”, என்றும் 'ஈழப் போரைத் தடுப்பதற்கு உருப்படியாக ஏதும் செய்யாமல் தமிழக அரசியல் கட்சிகள் துரோகம் செய்துவிட்டன” என்றும் பேசினார்.

அன்பார்ந்த மாணவ நண்பர்களே! பொதுமக்களே!

இன்று வட இந்தியாவில் வாழும் பழங்குடிகளின் மீது இந்திய அரசாங்கம் தொடுத்திருக்கும் இப்போரானது இந்தியா முழுவதிலும் வாழும் பல்வேறு பிரிவு மக்களுக்கு எதிரானதும், பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளின் நலனுக்கானதுமாகும். பழங்குடிகளின் மீது நடத்தப்படும் அநீதியான போரை எதிர்த்தும் அவர்களின் வாழ்வுரிமையை காப்பாற்றிடவும் அலை கடலென திரள்வோம்! நம் உள்நாட்டு அடக்குமுறை  எதிர்ப்பு கூட்டமைப்பில் இணைவோம்! போராட்டக் களத்திற்குள் புகுவோம் நம் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைக் காப்போம்!

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014