இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வெள்ளி, ஜூலை 16, 2010

பச்சை வேட்டை: நாகரிகத்தின் காட்டுமிராண்டி முகம்

சட்டீஸ்கர் மாநிலம், தண்டேவாடா பகுதியில் கடந்த ஏப்ரல் 6ந் தேதி சி.ஆர்.பி.எப்-ஐ சேர்ந்த 76 பேர் மற்றும் இந்த மாதத்தில் 27 சி.ஆர்.பி.எப்.-ஐ சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைப்பற்றி அனைத்து ஊடகங்களும் தன் ஜனநாயகக் கடமையாற்ற 'காட்டுமிராண்டித்தனம்”, 'பயங்கரவாதச் செயல்” என பலவாறு வர்ணித்தன. அந்த படையினருக்காக நாமும் வருந்துவோம். அவர்களது குடும்பத்தோடு சர்ந்து துக்கத்தை பகிர்ந்து கொள்வதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

ஆனால், இந்த போர் உழைக்கும் மக்களுக்கும், பணக்கார நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் போர். அதில் உழைக்கும் மக்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்திலிருந்து வரும் இராணுவத்தினர் இருப்பது காலங்காலமாக ஆளும் வர்க்கத்தினர் செய்து வரும் சூழ்ச்சியாகும். இது துரதிஷ்டவசமானது.

இதே தண்டேவாடா பகுதியில் 2005 இல் சல்வாஜூடும் என்ற அரசு ஆதரவு பெற்ற குண்டர் படையின் முதல் தாக்குதலின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடியினர் கொல்லப்பட்டனர். இளம்பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆயிரக்கனக்கான பழங்குடி மக்கள் அரசு முகாமில் அடைக்கப்பட்டனர். மற்றும் பல்லாயிரக் கணக்கானவர்கள் உள்காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டனர். தன் உயிரைக் காப்பாற்ற காட்டுக்குள் சென்றவர்களை 'மாவோயிஸ்ட்' என்று முத்திரை குத்தினர். இதைப்பற்றி ஊடகங்கள் ஏதும் கூற விழையாமல் மௌனவிரதம் கடைபிடித்தன.

செய்தி ஊடகங்களும், அரசியல்வாதிகளும் (இதில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற எந்தப் பாகுபாடும் இல்லை) பிரச்சனையின் விளைவை (effect) மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். தவறியும் கூட பழங்குடியின மக்களின் எதிர்த்தாக்குதலுக்கான காரணத்தை (cause) காண மறுக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் பன்னாட்டு அடிவருடித்தனம்தான் காரணம்.
அரசும், முதலாளித்துவ அறிவு ஜீவிகளும், 'பழங்குடியின மக்களின் வளர்ச்சியை மாவோயிஸ்ட்கள் தடை செய்கிறார்களர்' என்ற கருத்தை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அம்மக்களின் வளர்ச்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பதென்றால், இந்திய அரசும், அதன் கூலிப் படைகளும், எழுநூறு கிராமங்களை எரித்தது, மூன்று லட்சம் பழங்குடி மக்களை தங்களது கிராமங்களிலிருந்து விரட்டியடித்தது, ஐம்பதாயிரம் பழங்குடி மக்களை முகாம்களில் அடைத்தது, பல நூறு பழங்குடிப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்தது எதற்காக? இது யாருடைய வளர்ச்சிக்காக? என்று கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா?

கடந்த முப்பது ஆண்டுகளாக சட்டீஸ்கர் போன்ற பகுதிகளில் மாவோயிஸ்டுகள் இருந்து வருகின்றனர். ஆனால் 2005 ஆம் ஆண்டிற்கு பிறகுதான் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. ஏனென்றால், அப்பொழுதுதான் பல நூறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memorandum Of Understanding)  கையெழுத்தானது. அதன் எதிர்வினைதான் மாவோயிஸ்டுகளின் பெருக்கம். மேலும், தண்டகாரண்யப் பகுதியில் பச்சை வேட்டை (Operation Green Hunt) என்ற பெயரில் 80,000 துணை ராணுவத்தினரை (இது அரசு சொல்லும் எண்ணிக்கை. உண்மையில்...?) அனுப்பி உள்ளது. அது மட்டுமல்லாமல் சல்வா ஜூடும், ஹர்மத் வாஹினி, சாந்தி சேனா போன்ற சட்ட விரோதக் கூலிப்படைகளும், வேட்டைநாய்கள், கோப்ரா, எல்லையோரக் காவல்படை, நாகா பட்டாலியன் போன்ற கொடூர அரசுப் படைகளும் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை யாரைப் பாதுகாக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளன? இப்படைகளுக்குப் பழங்குடிகளை அப்புறப்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களை குடியமர்த்துவதுதான் வேலையாக இருக்கின்றது.

பள்ளிகளையும், சாலைகளையும் மாவோயிஸ்ட்கள் இடிக்கிறார்கள் என்று 'ஜனநாயக போக்கிரிகள்' கூப்பாடு போடுகிறார்கள். துணை இராணுவப் படையினர் பள்ளிகளை இராணுவ முகாம்களாகப் பயன்படுத்துகிறார்கள். காட்டுக்குள் இராணுவத் தளவாடங்களை கொண்டு செல்லவும், பன்னாட்டு நிறுவனங்கள் கனிம வளங்களை அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் அந்தச் சாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி இருக்கையில், அவற்றை இடிப்பதையன்றி அந்த பழங்குடி மக்களும், மாவோயிஸ்டுகளும் வேறு எதை செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.

1990க்கு பின்பு, புதிய பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்தியாவில் வளங்கள் அனைத்தும் முழுமையாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு அனைத்து கட்சிகளும் (காங்கிரஸ், பி.ஜே.பி., கம்யூனிஸ்ட் உட்பட) ஏஜெண்டுகளாக செயல்படுகின்றன. தண்டகாரண்யப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஒரிஸ்ஸாவில் மட்டும் பாக்ஸைட் மற்றும் இரும்பின் மதிப்பு ரூ.200 இலட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது (இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டே 6 இலட்சம் கோடிதான்). ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு கனிம வளம் இருக்கிறது என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாகக் கணக்கிட்டால் நம்மைத் திகைக்க வைக்கிறது. எஸ்ஸார், வேதாந்தா, மிட்டல், போஸ்கோ, டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு இவ்வளங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தாரை வார்க்கப்படுகின்றன.

சுரங்கத்தொழிலில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களை இங்கே அனுமதிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காகத்தான் என்ற ஒரு கருத்தை பரப்பி வருகின்றனர். இப்பெருஞ் செல்வத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு நிறுவனம் வெறும் ஏழு சதவீதம் மட்டுமே அரசுக்கு அவ்வளங்களுக்கான விலையாக செலுத்த வேண்டும் என்பது நம் வளங்களை தாரை வார்ப்பதன்றி வேறென்ன? இது எப்படி பொருளாதாரத்தை உயர்த்தும் என்று நாகூசாமல் கூறுகிறார்கள்.

பழங்குடி மக்களை நாகரீகமாக மாற்றுவதற்கும், பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கும்தான் இந்நிறுவனங்கள் நிறுவப்படுவதாக அரசுகள் பசப்புகின்றன. பழங்குடிகளை அவர்களது நிலங்களை எடுத்துக்கொண்டு தினக்கூலி அடிமைகளாக மாற்றுவதுதான் நிறுவனங்களின் தேவையாக இருக்கும்.


இந்நிறுவனங்களால்தான் நாகரீகம் அடைய முடியுமென்பது மீண்டும் பிரிடர்டிஷ் ஆட்சியைக் கோருவதற்கு சமம் என்று மூளை கொழுத்த அறிவு ஜீவிகளுக்கு தெரியாதா? தொல்குடிகளுக்கான நாகரீகம் என்பதை இவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? ஐரோப்பியர்களைப் போல உடை உடுத்திக் கொள்வதும், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவதும் என்றா? பழங்குடிகளுக்கு நாகரீகம் கற்றுத்தர இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

'பழங்குடி மக்களின் மன இயல்பும், நாகரீகமானவர் என்று கூறிக்கொள்ளும் மனிதர்களினர் மன இயல்பும் ஒன்றுதான். பழங்குடி தன் தொன்மம் வாயிலாக செய்வதும், நாகரீகமானவர் தத்துவத்தின் மூலம் செய்வதும் ஒரே செயல்தான். பழங்குடிகள் அறிவியல் கலைத்திறன்களில் நாகரீகமானவர்களுக்கு நிகரானவர்களே” என்று அறிவியல் ரீதியாக நிரூபித்தவர் மானிடவியலாளர் லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss). மேலும் நம் வாழ்க்கை முறைகளை பழங்குடிகளின் மீது திணித்தால் அவர்கள் மடியவும் நேரும் என்று எச்சரிக்கிறார்.

முதலாளித்துவ அறிவுஜீவிகளும், கார்ப்பரேட் ஊடகங்களும் மாவோயிஸ்ட்களை தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று கூறுகின்றன. ஆனால், தங்கள் உரிமைகளுக்காக போராடும் சொந்த நாட்டு மக்களை இராணுவத்தின் மூலம் கொன்றொழிக்கும் அரசின் செயல் கொடும் பயங்கரவாதம் இல்லையா?

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்திய அரசு, ஜனநாயகப் போராளியும், மருத்துவருமான பினாயக்சென்னை மாவோயிஸ்ட்களுக்கு தூது அஞ்சல் அனுப்பியதாகக் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது. லால்கரின் 'காவல்துறையின் வன்முறைக்கு எதிரான மக்கள் குழு' வின் தலைவர் சத்ரதார் மகோத்தோ என்பவரை மாவோயிஸ்ட் தலைவர் என்று கூறி சிறையில் அடைத்தது. ஜனநாயக ரீதியான போராட்டங்களையும், கருத்துரிமையையும் குரல்வளையையும் நெரிப்பதுதான் ஜனநாயகமா? இந்திய அரசு போர்த்தியிருக்கும் ஜனநாயகப் போர்வையைக் கிழித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் அருந்ததிராயை தண்டேவாடாவுக்கு தூது சென்றதாக கூறி சிறையில் அடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அரசு தனது ஏகபோக அதிகாரத்தை நிலைநிறுத்துவதை எதிர்த்து ஜனநாயகப் போராட்டம் மேற்கொண்டால் அதை மாவோயிஸ்ட் போராட்டம் என்று வர்ணிப்பது அரசின் தந்திரமாகும் என்பது லால்கர் தந்த பாடமாகும். பழங்குடியினர் எவரொருவர் ஜனநாயக வழிமுறையிலான போராட்டத்தின் மூலம் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கருதுபவராகவும், அரசியல் தன்மை பெற்றவராகவும் ஆகிறாரோ அப்போது அவரை மாவோயிஸ்ட் என்றே இந்திய அரசு அழைக்கிறது.

பழங்குடி மக்கள் வெளிப்புற காரணிகளால் மட்டுமே மாவோயிஸ்ட்களால் ஈர்க்கப்பட்டிருந்தால், அவர்கள் எப்பொழுதோ மாவோயிஸ்ட்டுகளாக மாறியிருக்க வேண்டும். மாறாக 2005 க்குப் பிறகு அரசின் சல்வாஜூடும் படை அமைத்தபின்பு தான் மாறியிருக்கிறார்கள். எனவே உட்புற காரணிகளால்தான் மாவோயிஸ்ட்டாக மாறியுள்ளார்கள். அதனால்தான் மாவோயிஸ்ட்களும் பழங்குடி மக்களும் 99.9 சதவீதம் கருத்து ரீதியாக ஒன்றுபடுகிறார்கள். இரண்டு பேரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து இருக்கின்றனர் என்று அருந்ததி ராய் கூறுகிறார்.

ஈராக்கில் உயிரியல் ஆயுதம் (Biological Weapon) இருப்பதாக கூறிக்கொண்டு, எண்ணெய் கிணறுகளுக்காக ஒருபோரை நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்றழித்தது ஏகாதிபத்திய அமெரிக்க அரசு. அதே போல் இந்திய அரசு கனிம வளங்களுக்காக, மாவோயிஸ்ட் என்ற பெயரில் அப்பாவிப் பழங்குடி மக்களை கொன்றொழிக்கிறது. இந்தப் போரை தண்டகாரண்யப் பழங்குடி மக்கள் தீரத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், உலகின் அனைத்து திசைகளிலிருந்தும் அம்மக்களுக்கான ஆதரவு பெருக்கெடுத்து வருகிறது.

-பால்பாண்டி, மதுரை

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014