இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



போராட்ட செய்திகள்

நவம்பர் 2011 இதழ் -


சாதிய அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக
பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்


செப்டம்பர் 11 அன்று சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மாஇ.னுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அணிதிரண்ட தலித் மக்கள் மீது பாசிச ஜெயா அரசு ஒரு கொடூரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. இதில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சயதய அரசு பயங்கரவாதத்தைக் கண்டித்து நவம்பர் 5 அன்று மாலை பரமக்குடியில் சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, குடியுரிமை பாதுகாப்பு நடுவம், பெண்கள் எழுச்சி இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், செயல்பாட்டாளர்கள் பொது மேடை, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. முதலில் பொதுக்கூட்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் காவல்துறை அனுமதி மறுத்ததால் கண்டன ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தப்பட்டது. பல்வேறு தடைகளை மீறியும் 1500க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வீர முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டமே பொதுக் கூட்டம் போல 5 மணிநேரம் நடத்தப்பட்டது. மக்களின் கோபக் கனல் முன்பாக காவல் துறை நெருங்கக் கூட முடியவில்லை.

     இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் முனைவர் ஆனந்த் தெல்தும்டே (ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, மும்பை), ஜவாஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சி), ரஜினிகாந்த் (சா.ஒ.வி.மு), பால்ராஜ் (செ.பொ.மே), பழனியாண்டி (கு.பா.ந), அகராதி (பெ.எ.இ), சந்திரபோசு (தியாகி இமானுவேல் பேரவை), ராஜாராம் (ஏ.எ.இ), மனுவேல் (பொ.மா.எ.இ) ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர். முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் பலியான முத்துக்குமாரின் மனைவியும், அவரது 2 வயது குழந்தையும் துப்பாக்கிச் சூடு நடத்திய செந்தில்வேலனைக் கண்டித்து ஒலிபெருக்கியில் முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும், ஜெயா அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.



பாலியல் வெறிபிடித்த பேராசிரியருக்கு எதிராக 
ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

     மதுரை - நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ச.வௌ;ளைச்சாமி நாடார் (SVN) கலை அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. படித்துவரும் முதலாண்டு மாணவியிடம் பாலியல் ரிதியாக தவறாக நடந்துகொண்ட கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குநர் பேராசிரியர் அசோகனை பணிநீக்கம் செய்யக் கோரி 11.10.2011 அன்று கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டத்தைத் துவங்கினர். மாணவர்கள் கல்லூரியிலிருந்து நாகமலைப் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்ட மாணவி பெயரில் புகார் அளித்தனர். பின்னர் கல்லூரி முன்பு மாலை வரை போராட்டம் நடத்தினர். எந்தத் தீர்வும் கிடைக்காத நிலையில் போராட்டம் மறுநாளும் தொடர்ந்தது. பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் மாணவர்களோடு இணைந்து இப்போராட்டத்தை வழிநடத்தியது. கோரிக்கையை வலியுறுத்தி அமைப்பு சார்பாக சுவரொட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.

     கொளுத்தும் வெயிலைப் பாராமல் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர். கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவிகளை மிரட்டியும், பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பற்றிய பொய்யான செய்திகளைப் பரப்பியும் போராட்டத்தைக் குலைக்க முயற்சி செய்தது. இதற்கிடையில் பேராசிரியர் அசோகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், கல்லூரி விட்டதும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக 100 மாணவிகள் உட்பட 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் களம் இறங்கினர். மாணவி கொடுத்த புகாரைக் கொண்டு உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். மறுநாளிற்குள் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் அன்று போராட்டம் நிறைவு பெற்றது. மாணவர் போராட்டத்தைத் தடுக்க கல்லூரி நிர்வாகம் காலவரையறையற்ற விடுமுறை அறிவித்தது.

     மறுநாள் வழக்கு பதிவு செய்யக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அன்று சில மணி நேரத்தில் இரு தரப்பிலும் விசாரித்தபின்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் நகலை பாதிக்கப்பட்ட மாணவியிடம் ஒப்படைத்தார். இந்த வெற்றிக்குப் பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

     ஆனால், இதன் பிறகுதான் கல்லூரி நிர்வாகம் தனது ஒடுக்குமுறை வேலைகளைத் தொடங்கியுள்ளது. பாலியல் வெறிபிடித்த பேராசியருக்கு எதிராக நியாயமாகப் போராடிய 'குற்றத்திற்காக” மாணவர்களைப் பழிவாங்கத் தொடங்கியுள்ளது. போராடிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் மிரட்டல் விசாரணை நடத்தி வருகிறது. பல மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு கல்லூரியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தி வருகிறது. மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் மனுக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

     இப்போது மாணவர்கள் சட்டரிதியாகவும், பிற வகைகளிலும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.



கோவையில் மாணவர் மாநாடு

 இனப்படுகொலையாளன் இராசபக்சேவை தூக்கி லேற்ற.. நிரபராதி மூன்று தமிழர்களை விடுதலை செய்ய.. என்பதை அடிப்படையாகக் கொண்டு கடந்த 23-10-11 அன்று மாலை பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் கோவையில் மாணவர் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு முன்பு பேரணி நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. இறுதி நேரத்தில் காவல்துறை சட்டம்-ஒழுங்கு காரணம் காட்டி அனுமதி மறுத்தது. எனவே அரங்கக் கூட்டம் மட்டும் நிகழ்த்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்களும், சனநாயக அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர். மாநாடு பறையாட்ட நிகழ்ச்சியுடன் துவங்கியது. சிறப்புரைகளாக தோழர்கள் தியாகு (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்), இராமகிருட்டிணன் (பெரியார் திராவிட கழகம்), வழக்கறிஞர் ரஜினிகாந்த் (சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி), வழக்கறிஞர் முருகவேல் (மக்கள் சிவில் உரிமை கழகம்), பிரியதர்சினி (ஜனநாயக மாணவர் சங்கம், புதுதில்லி), இராஜேந்திர பிரசாத் (பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்) ஆகிய தோழர்கள் பேசினர். மேலும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள், பொறுப்பாளர்கள் உரையாற்றினர். உரைகளின் இடையே மாணவர்களின் கவிதை வாசிப்பு, புரட்சிகர பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகன் நடைபெற்றன.


INDUS பொறியியல் கல்லூரி மாணவர்களின் 
உள்ளிருப்புப் போராட்டம் - முதல்வர் மாற்றம்

     கோவை ஆலாந்துறை அருகே உள்ள INDUS பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்துள்ளனர். மேலும் கல்லூரி முதல்வர் குமார் சார்லிபால் மாணவர்களை விலங்குகளைப் போல் கேவலமாக நடத்துவதாகவும், மாணவிகளிடம் பாலியல் ரிதியான தொந்தரவுகளை செய்வதாகவும் மாணவர்கள் பல குற்றச் சாட்டுகளை முன்வைத்தனர். இதைக் கண்டித்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 16.7.11 அன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி முதல்வரைப் பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும், அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை முன் வைத்து தீரமாக போராடினர். பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் மாணவர்களுக்கு வழிகாட்டியது. வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, கலைக்க முற்பட்டனர். ஆனால் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். மாணவர்களின் உறுதியான போராட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய கல்லூரி நிர்வாகத்தினர் வேறு வழியில்லாமல் முதல்வரை பதவியிலிருந்து நீக்கி புதிய முதல்வரை நியமித்தனர். மேலும் இனி அதிக கட்டணங்கள் வசூலிக்கமாட்டோம் என எழுத்து பூர்வமாக எழுதித் தந்தனர். போராட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியுடன் 3ஆம் நாளில் தங்களது உள்ளிருப்புப் போராட்;டத்தை நிறைவு செய்தனர். கல்லூரி மீண்டும் திறந்த போது போராடிய மாணவர்கள் மீது வருகைப்பதிவேட்டில் கைவைப்பது, தேர்வில் மதிப்பெண் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்தது. உசாரான மாணவர்கள் மீண்டும் ஒற்றுமையுடன் தங்களது போராட்டத்தை துவங்க முற்பட்டபோது நிர்வாகம் அப்படி செய்யமாட்டோம் என உறுதியளித்தது. போராட்டமே நம் பிரச்சினைக்களுக்கு தீர்வு என்று நமக்கு இந்த மாணவர்கள் நடைமுறையில் காட்டியுள்ளனர்.


வழக்கறிஞர் மீது காவல்துறையினர் தாக்குதல்:
உள்ளிருப்புப் போராட்டம்

     கோவையில் கடந்த 7.10.11 அன்று தனது மனுதாரர் வழக்கு சம்மந்தமாக தகவல்களைப் பெறுவதற்காக துடியலூர் காவல்நிலையம் சென்ற ஆனந்தீஸ்வரன் என்ற வழக்கறிஞர், பாசிச ஜெயா அரசினுடைய காட்டுமிராண்டித்தனமான காவல்துறையால் தாக்கப்பட்டார். இதையடுத்து தன்னைத் தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற முழக்கத்தின் அடிப்படையில் அடிபட்ட வேதனையோடும், இரத்தக்காயங்களுடனும் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். அவருடைய போராட்டத்தின் விளைவாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாக்கப்பட்ட வழக்கறிஞர் இன்றுவரை நடக்க முடியாத நிலைமையில் இருக்க, அவரைத் தாக்கிய காவல்துறையினரை கைது செய்யாதது இந்த அரசின் பிடிவாதமான போக்கையே நமக்கு காட்டுகிறது.

     இதையொட்டிய நிகழ்வாக, சட்டக்கல்லூரி மாணவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை போராட்டமும், துடியலூர் காவல் நிலைய முற்றுகைப் போராட்டமும் நடத்தினர். 10.10.11 முதல் 24.10.11 வரை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர். மேலும் மனித சங்கலிப் போராட்டமும் நடத்தப்பட்டது. உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொள்ள நிபந்தனையாக போராட்டத்தை நிறுத்தக் கோரி கேட்டுக் கொண்டதன் பேரில், வழக்கறிஞரைத் தாக்கிய காவல்துறையினரை கைது செய்ய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒத்துழைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் சங்கம்; முடிவு செய்து காவல் கண்காணிப்பாளர் அலுவலக உள்ளிருப்புப் போராட்டத்தை நிறைவு செய்தனர். அதன் பிறகு 3.11.11 அன்றுதான் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர்.



-------------------------------------



நவம்பர் 2010 இதழ் -

சட்டக் கல்லூரி தகுதிகாண் தேர்வு...

சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பு முடித்து அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற பின் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் இன்னொரு தேர்வை எழுதினால்தான், வழக்குரைஞராகப் பதிவு செய்ய முடியும் என்றொரு திட்டத்தை இந்திய பார் கவுன்சில் கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். கோவை, மதுரை, வேலூர், சேலம், சென்னை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாக உள்ளிருப்புப் போராட்டம், சாலை மறியல், வகுப்புப் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என பல வடிவங்களில் போராடினர். பல கல்லூரிகள் நிறைய நாட்கள் மூடிக் கிடக்கும் அளவிற்கு மாணவர்கள் தொடர்ந்து போராடினர். இறுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்களும் சென்னையில் ஒன்று கூடி போராடுவது என முடிவு செய்தனர்.

இதனடிப்படையில் சேலம், கோவை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் 29.10.10 அன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்தின் முன்பு திரண்டனர். பார் கவுன்சிலின் கதவுகளை இழுத்து மூடினர். இப்போராட்டம் நீண்டநேரம் நடந்தபின்பு, மாணவர்கள் உயர்நீதிமன்றம் எதிரே உள்ள சாலையில் சாலை மறியலைத் தொடங்கினர். பேச்சுவார்த்தைக்கு வந்த காவல்துறையினர் மற்றும் பார் கவுன்சில் தலைவர்களிடம் தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று உறுதிபட தெரிவித்தனர். தமிழக அரசோ, காவல்துறையோ எந்த சலனமும் இன்றி இருக்க, மாணவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவது என்று முடிவு செய்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அரண்டு போன கருணாநிதி அரசும், அதன் ஏவல்படையும் பெரும் படை கொண்டு மாணவர்களைத் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். கைதான 50 மாணவர்கள் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

காஷ்மீர்...

உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்டு 13, 2010 அன்று காஷ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் போரை நிறுத்தக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. போராட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை, பனகல் மாளிகை அருகில் காலை 11 மணிக்கு கூட்டமைப்புத் தோழர்கள் திரண்டனர். காஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், இந்திய அரசு அம்மக்கள் மீது நடத்திவரும் போரைக் கண்டித்தும், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் தோழர்கள் முழக்கமிட்டனர். சிறிதுநேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 8 பெண்கள் உட்பட, 54 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பெண்கள் சென்னை புழல் சிறையிலும், ஆண்கள் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

வேலூர் சிறையில் மறியல் தொகுதியில் அடைக்கப்பட்ட தோழர்கள் ஆகஸ்ட் 15 - போலி சுதந்திர தினத்திற்கு சிறைக்குள்ளேயே கருப்புக் கொடி ஏற்றினர். பின்னர் ஒரு நாள் முழுவதும் அந்த தொகுதியில் உள்ள அத்தனை சிறைவாசிகளையும் அழைத்து பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் தோழர் கொளத்தூர் மணி (பெ.தி.க.), தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் சீமான் (நாம் தமிழர்), தோழர் ரஜினிக்காந்த் (சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி), தோழர் வேலுச்சாமி (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), தோழர் பிரசாத் (பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்), தோழர் தங்கத் தமிழ்வேலன் (இ.க.க. (மா.லெ.) மக்கள் விடுதலை), தோழர் கேசவன் (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), தோழர் பாரதி (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) உள்ளிட்டோர் உரையாற்றினர். காஷ்மீர் பிரச்சனை, போலி சுதந்திரம், ஈழப் பிரச்சனை என பல விசயங்கள் குறித்து தோழர்கள் உரையாற்றினர். நான்கு நாட்கள் கழித்து தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

-------------------------------------


ஆகஸ்ட் 2010 இதழ் -

கொதித்துக் கொண்டிருக்கும் கோவை கல்லூரிகள்

கோவை, இன்று புகழின் உச்சியில் வைத்து அழகு பார்க்கப்படும் அரசியல் தளங்களில் ஒன்றே என்று கூறவேண்டும். செம்மொழி மாநாடு ஈழத் தமிழர்களின் கல்லறைமேல் சிறப்பாக ஒரு அரசியல் குடும்பத்தின் விளையாட்டாக நடத்தப்பட்டது. கோவையைச் சுற்றியிருக்கும் சுற்றுலாத்தலங்களைக் காட்டிலும், கல்லூரிகளின் கால்த்தடங்கள் அதிகம். எத்தனை கல்லூரிகள் வந்தாலும் கல்விக் கட்டணத்தில் குறைவோ, நன்கொடை இல்லாமலோ எந்தக் கல்லூரியும் வருவதில்லை. கோவையிலுள்ள கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி - ஒரு தன்னாட்சிக் கல்லூரி என்றாலும், கல்விக் கட்டணங்கள் அதிகம் வாங்கினாலும், சரியான கல்வி மேம்பாட்டிற்கான வசதிகள் இல்லையென்றாலும் வருடாவருடம் நன்கொடை என்ற பெயரில் இரசீதுகூட தராமல் பணவசூலில் மட்டும் தன் திறமையைக் காட்டும் கல்லூரிகளில் ஒன்று. அங்கே படிக்கும் மாணவ மாணவிகள் ஒன்றும் பில்கேட்ஸ் வீட்டின் அருகே இருப்பவர்கள் அல்ல. நம் நாட்டின் வயிற்றுப் பிழைப்பிற்கு மாரடிக்கும் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே.
இரத்தமே இல்லாத உடலில் அட்டைப் பூச்சி இரத்தம் உறிஞ்சிவது போல, அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடமிருந்து பணத்தை உறிஞ்சுகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் மாணவ மாணவிகள் நிறுவனத்திடம் கேள்விகளையும், பணம் தந்ததற்கான இரசீதுகளையும் கேட்க, கோபம் கொண்ட நிறுவனம் இனிமேல் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டால், உங்களுக்குப் படிக்கத் தகுதியில்லை என்று கூறி வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்று மிரட்டினர். கல்வியின் வளர்ச்சியே கேள்விகளில்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் கேள்வி கேட்டால் இன்று படிக்கத் தகுதியில்லை என்று விரட்டுவது கொடுமைதான். கோபம் கொண்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் அனைவரும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தொடங்கினர். விடிய விடிய கல்லூரி வளாகத்தில் உட்கார்ந்து போராடினர். ‘ஏழை மாணவர்களை வதைக்காதே, ‘கல்வியை விற்காதே’ போன்ற வரிகள் எழுதப்பட்டிருந்த முழக்க அட்டைகளைத் தயாரித்து கையில் பிடித்திருந்தனர். வழக்கம் போல் நம் சமாதான தூதுவர்கள் (காவல்துறையினர்) வந்தனர். பிறகு 5 மாணவர், 5 மாணவிகளை நிறுவனத்திடம் பேச அழைத்துச் சென்றனர். இனிமேல் நன்கொடை வாங்கமாட்டோம் என்று எழுத்துப் பூர்வமாக எழுதித் தருகிறோம், மற்ற பிரச்சனைகளை பெற்றோர் கூட்டத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு சமாதான உடன்படிக்கையை வைத்து பிரச்சனையைத் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டது கல்லூரி நிர்வாகம்.
---
மாணவர்கள் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, அனைத்துக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கட்டாயம் மாணவர் பேரவை தேர்தல் நடத்தி மாணவர் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நியமித்த லிங்தோ கமிசன் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இன்று எந்தக் கல்லூரியிலும் தேர்தல் நடத்தப்படுவதில்லை. மாறாக, மாணவர்கள் மிகவும் ஒடுக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, மாணவர் பேரவை தேர்தல் நடத்தக் கோரி, உடுமலைப் பேட்டை அரசுக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் செய்தனர். அங்கும் நம் சமாதானத் தூதுவர்கள் சென்று, இரண்டு நாட்களில் தேர்தல் நடத்துவதா, வேண்டாமா என்று சொல்கிறோம் என்று கூறி மாணவர்களைக் களையச் செய்தனர்.
---
பி.எஸ்.ஜி. - கோவை தனியார் கல்லூரிகளின் இராஜா என்று கூறலாம். ஆனால் அங்கே கல்லூரி நிர்வாகம் செய்யும் கொடுமைகளை வெளியே எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அக்கறை யாருக்கும் இல்லாததால் அங்கு நடக்கும் கொடுமைகள் வெளியே வருவதில்லை. 2009 ஆம் ஆண்டு அங்கு ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். 2010 ஆம் ஆண்டில் ஒரு மாணவி தற்கொலை. இவைபற்றிய செய்திகள் வெளியே துளிகூட கசியவில்லை. பல மாநில மாணவர்கள் கல்லூரிப் படிப்பே வேண்டாம் என்று ஓடியே போய்விடுகிறார்கள்.
கோவையில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் நிலைமை இதுதான். மாணவர் பிரச்சனைகள் பெருகிக் கொண்டும், கல்லூரி நிர்வாகம் மற்றும் அரசின் ஒடுக்குமுறைகள் பெருகிக் கொண்டும் வருகின்றன. மாணவர் அமைப்பாகத் திரண்டு எதிர் கொள்ளும் போது மட்டுமே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.
-செ. டானிஷ்,
கோவை


தமிழ் செம்மொழி மாநாடு - நானூற்றி ஐம்பது கோடி
தலித் மாணவர் விடுதி - நாதியற்ற தெருக் கோடி

மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை சின்னச் சொக்கிகுளம் அம்பேத்கர் ஆதிதிராவிட மாணவியர் விடுதியில் கடந்த 11.07.2010 அன்று பாண்டீஸ்வரி என்ற 11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி மின்சாரம் தாக்கி இறந்தார். பாதுகாப்பில்லாத மின் இணைப்புகளால் மழைக் காலத்தில் மின்சாரம் தாக்கும் அபாயம் பல ஆண்டுகளாக அங்கு இருந்துவந்துள்ளது. மேலும் இது போன்ற ஆதிதிராவிட நலத்துறைக்கு கீழ் இயங்கும் எல்லா மாணவர் விடுதிகளிலும் போதிய அடிப்படை வசதியின்மை, போதிய கட்டிட வசதியின்மை, பாதுகாப்பின்மை நிலவி வருகிறது. இதைக் கண்டித்தும்,
    பராமரிப்பற்று இருக்கும் ஆதிதிராவிட மாணவ - மாணவியர்  விடுதிகளில் அடிப்படை வசதியை ஏற்படுத்து!
    விடுதிக்கு ஒரு மருத்துவர் என்பதை நடைமுறைப்படுத்து!
    விடுதிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்க! நடைமுறைப்படுத்து!
    விடுதியில் நூலகம், கணிப்பொறியை ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்று!
    நிரம்பி வழியும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு மதுரை நகர் பகுதியில் புதிய விடுதியை ஏற்படுத்து!
    விடுதிக் காலிப் பணியிடங்களை நிரப்பு!
என்ற கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி தமிழக அரசையும், ஆதி திராவிட நலத்துறையையும் வலியுறுத்தி 03.08.2010 அன்று காலையில் மதுரை வடக்கு மாசி வீதி - மேல மாசி வீதி சந்திப்பில் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், பெண்கள் எழுச்சி இயக்கம், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டைத்தை நடத்தின.
ஆர்ப்பாட்டத்தை பெண்கள் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் அழகுதேவி தலைமையேற்று நடத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையைச் சேர்ந்த தோழர் மீ.த.பாண்டியன், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் கார்த்திக்,  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் கதிர்வேல், தமிழர் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த தோழர் செந்தமிழன், பெண்கள் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் அகராதி, மே நாள் தானி ஓட்டுனர் நலச்சங்கத்தைச் சேர்ந்த தோழர் மெய்யப்பன், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் அறிவுமணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் விடுதலைச் செல்வன், தமிழ்நாடு வண்ணார் பேரவையைச் சேர்ந்த தோழர் மணிபாபா, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் பெரியசாமி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த செய்யது அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் முத்தமிழ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.


கட்டாய வசூல் கொள்ளைக்கு எதிராக போராட்டம்

தமிழர் உரிமை முன்னணி சார்பில் கடந்த 28.07.10 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சி அலுவலகம் முன்பு மாவட்ட கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பெயரிலும், பல்வேறு பெயர்களிலும் நடக்கும் வசூல் கொள்ளையைத் தடுக்கக் கோரியும், அதற்குத் துணை போகின்ற மாவட்டக் கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு அறிவித்த கல்விக் கட்டணத்தை புறந்தள்ளி தான் நினைத்தவாறு வசூல் கொள்ளையடிக்கும் - அரசு விதிமுறைப் படி விளையாட்டுத்திடல், மிதிவண்டி நிறுத்தம், காற்றோட்டம் இல்லாத வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத - ஆங்கிலப் பள்ளிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்யவும், கல்வி கொடுக்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுக்காதே என்றும் தமிழக அரசுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் உரிமை முன்னணியின் அமைப்பாளர் சுப்பு. மகேசு தலைமை வகித்தார். மாவட்ட, பகுதிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும் இதில் ம.தி.மு.க., இ.க.க. (மா.லெ.) மக்கள் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014