இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



தூரத்து இடிமுழக்கம்

மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளிவரும் பகுதி


ஆகஸ்ட் 2010

ஏவாள்... ஓ ஏவாள்

ஏவாள் ஏன் அந்தக் கனியை
புசித்திருக்கக்கூடாது?
அக்கனியை எட்ட அவளுக்கு
கைகளில்லையா?
பறிப்பதற்குதான் விரல்களில்லையா?
பசியை உணர ஏவாளுக்கு
வயிறுதானில்லையா
தாகத்தை உணர நாக்கோ
காதலை உணர இதயமோயில்லையா?

நல்லது.
பிறகு ஏன் ஏவாள்
அந்தக் கனியை உண்ணக்கூடாது?
ஏன் அவளது ஆசைகளை புதைத்து வைக்க
வேண்டும்?

பாத அடிகளை ஒழுங்குபடுத்தி
தாகத்தை மட்டுப்படுத்த வேண்டும்?
ஏடன் தோட்டத்தில்
ஆதாமுடன் இணைந்து உலாவ வேண்டுமென
ஏவாள் கட்டாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்?

ஏவாள் கனியை உண்டதனால்
நிலவு, சூரியன், நதி, கடல் உள்ளது.
மரங்களும், செடிகளும் ஒயினும்கூட
கனியை உண்டதனாலேயே உள்ளது.
ஏவாள் கனியை உண்டதினால்
சந்தோஷம் மகிழ்ச்சி ஆனந்தம்...
கனியைத் தின்று ஏவாள்
சொர்க்கத்தை பூமியில் உருவாக்கினாள்...
ஏவாளே, மேலும் ஒரு கனி கிடைத்தால்
புசிப்பதை எப்போதும் நிறுத்திவிடாதே. 

- தஸ்லிமா நஸ்ரின்
தமிழில்: இன்பா சுப்ரமணியன்
நூல்: நாடோடிகள் விட்டுச் சென்றவை (கவிதைத் தொகுப்பு)



கவிஞர் பற்றிய குறிப்பு:
தஸ்லிமா நஸ்ரின் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். பெண்களை ஒடுக்கும் இஸ்லாமிய மதவெறியை விமர்சித்து எழுதும் இவருக்கு அவரது நாட்டில் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. இவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.



ஜூலை 2010

மறைந்து போன இரத்தத்தைத் தேடி


இரத்தத்தின் அறிகுறி ஏதுமில்லை, எங்குமே இல்லை
எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து விட்டேன்
கொலையாளியின் கரங்கள் சுத்தமாக இருக்கின்றன
விரல் நகங்களோ பளிச்சென்று இருக்கின்றன
கொலைகாரன் ஒவ்வொருவனுடைய சட்டைக் கைகளிலும்
எந்தக் கறையும் இல்லை.
இரத்தத்தின் அறிகுறி இல்லர் சிவப்பின் சுவடு இல்லை,
கத்தி ஓரத்தில் இல்லை, வாள்முனையிலும் இல்லை,
தரையில் கறைகள் இல்லை, கூரையும் வர்ளை நிறம்.


சுவடேதும் இல்லாமல் மறைந்து போன இந்த இரத்தம்
ஏடேறிய வரலாற்றின் ஒரு பகுதி அல்ல
அதனிடம் சென்றடைய
எனக்கு வழிகாட்டுபவர் யார்?
பேரரசர்களுக்கான சேவையின் போது சிந்தப்பட்ட
இரத்தம் அல்ல - அது பட்டம் பெருமை பெற்றதுமல்ல,
அதன் எந்தவொரு
ஆசையும் பூர்த்தி செய்யப்படவில்லை.
பலிச்சடங்குகளுக்காக வழங்கப்பட்டதல்ல
கோவிலிலுள்ள புனிதக் கோப்பையில் பிடித்து வைக்கப்பட்டதுமல்ல
எந்தவொரு சண்டையிலும் சிந்தப்பட்டதல்ல -
வெற்றிப் பதாகைகளில் எழுத்துக்களைப் பொறிப்பதற்கு
யாராலும் பயன்படுத்தப்பட்டதுமல்ல


ஆயினும் யாருடைய செவிக்கும் எட்டியிராத இது
தன் குரலைக் கேட்கச் சொல்லி இன்னும்
கூக்குரலிடுகிறது
கேட்பதற்கு யாருக்குமே நேரமில்லை, விருப்பமில்லை
கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தது இந்த அநாதை இரத்தம்
ஆனால் அதற்கு சாட்சி ஏதுமில்லை
வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை
தொடக்கம் முதலே இந்த இரத்தத்திற்கு
ஊட்டமாக இருந்தது
தூசி மட்டுமே
பிறகு அது சாம்பலாயிற்று, சுவடு எதனையும் விட்டுச் செல்லாமல்,
தூசிக்கு இரையாயிற்று.


-ஃபெயிஸ் அகமத் ஃபெயிஸ்
மொழி பெயர்ப்பு: வ.கீதா, எஸ்.வி.இராஜதுரை
நூல்: அக்கரைப் பூக்கள்

(கவிஞர் பற்றிய குறிப்பு: இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து நிறைய கவிதைகள் எழுதியவர்.)



இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014