இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



கவிதைகள்

2012 ஜனவரி இதழில் வந்த கவிதைகள்:

தினமும் செத்துக்
            கொண்டிருப்பவர்களுக்கு

அரசின் கோப்புகளிலிருந்து
நள்ளிரவில் கசியுது நச்சுவாயு
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து
வேண்டுமென்றே வெளியேற்றப்படும்
கருணையும் இரக்கமும் கலந்ததே அது.
தினமும் செத்துக் கொண்டிருக்கும்
தேவையற்றவர்களை
வேகமாய் கொல்லுவது அன்புள்ளம்
மூக்கை பொத்தி மூச்சடைக்கத் தெரியா
ஏழைகள் கோழைகள்
சேமிக்காதவர்கள்   
வாழ தகுதியற்றவர்கள்
மூக்கோடு வாயையும்
பொத்திக் கொள்ளத் தெரியாதவன்
குறைந்த பட்சம்
பரமக்குடியை சிந்திக்கவாவது
பயிற்சிக்க வேண்டும்
துப்பாகிக்காரருக்கு தெரியும்
ஏழைகள் யாரென்று
அடுத்த தேர்தல் வரை
பொறுத்துக்கொள்ளாதவன்
அமைதிக்கு எதிரானவன்
சட்டம் ஒழுங்கு
சாக்கைச் சொல்லி
சிறைச்சாலையில் தள்ளமுடியும்
மீறியும் கோபம் வருபவன்
மதுக்கடைக்கோ
ஐய்யப்பன் கோவிலுக்கோ செல்லவும்
தற்கொலை செய்து கொள்ளவும்
ஜனநாயகம் உண்டு
இதைவிட உலகில் எங்குள்ளது
பெரிய ஜனநாயகம்

-கு.பால்ராஜ் இராஜபாளையம்


நிலத்தில் புதையுண்ட
நீர்த் திவலைகள்
தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது
பாட்டாளிகளின்
வியர்வைத் துளிகளுடன்
புணர்வதன் மூலம்

விளைச்சலை
சுவிகரித்து கொண்ட
முதலாளி
தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறான்
செயற்கை சுவாசம்
அளிப்பதன் மூலம்
மக்கள் நலம்
பேணும்
அரசு இயந்திரம்
தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது
தானியங்களை
கடலில்
தானம் செய்து

அராஜகத்தின்
ஆணி வேர்
கௌரவனும்
பாண்டவனும்
தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறான்
ஏகலைவன்களையும்
சார்வகன்களையும்
நந்தன்களையும்
வீழ்த்தி 
தேசப் பாதுகாப்பின்
தெய்வீக மகான்கள்
தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது
கோத்ரா ஏரிப்பு
தாஜ் ஹோட்டல்
தாக்குதலால்

அரிதாரத்தின்
ஆத்திச்சூடிகள்
தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது
வெண்மணி, பிரிக்கால்
ஒடுக்கப்பட்டோர்
படுகொலைகளால்

- செல்வா,
அருப்புக்கோட்டை


தூக்குக் கயிறு

மனதளவில் ஏற்கனவே மரித்துவிட்ட
வெற்று உடல்களைத் தொங்கவிடும் போது
இலகுவாக இறுக்கமடைந்து
உயிரைப் பிரித்தெடுக்கும்
அவர்களின் கையிலிருக்கும் தூக்குக்கயிறு
இந்தக் கயிறு இதுவரை
பலரைச் சந்தித்திருக்கிறது
இந்தக் கயிற்றை இதுவரை
பலர் சந்தித்திருக்கிறார்கள்
நிலம் கெட்டு கடன்பட்டு மானம் இழந்த
பல விவசாயிகளை
அதிகாரத்திமிரில் சிக்கிக் கொண்ட
சில நிரபராதிகளை
வதைமுகாமிலிருந்து தப்பிக்க முயன்ற
பதின் வயது சிறுவனைக்கூட
இக்கயிறு சந்தித்திருக்கிறது
மூன்று மாவீரர்கள்
புரட்சியைப் பரப்ப
தானாகவே முன்வந்து
இக்கயிற்றைச் சந்தித்தார்கள்
இன்னொரு மாவீரன்
வௌ;ளையரை விரட்ட களம்கண்டு
தூக்குமேடையைப் பஞ்சுமெத்தை என்றான்

கிளர்ச்சி செய்த அடிமைகளுக்கு
ரோமப் பேரரசு வழங்கியது சிலுவை
சனநாயகப் புரட்சியாளர்களுக்கு
பிரெஞ்சு மன்னன் கொடுத்தது கில்லெட்டின்
எதிர்ப்பைப் பரப்பிய சமணர்களுக்கு
சைவர்கள் பரிசளித்தது கழுமரம்

மௌனம் கலைத்து பேச முற்படும்
ஒவ்வொருவரையும் மிரட்ட
மன்மோகன் சோனியா அத்வானி மோடியின்
கைகளில் தூக்குக் கயிறு
பிணத்திற்குச் சமமாய்
இருக்க முடியாமல்
எதிர்த்துக் கேட்கத்
துணிவீர்களா?
உங்களுக்கும் காத்திருக்கலாம்
ஒரு தூக்குக் கயிறு
அல்லது
ஒரு துப்பாக்கித் தோட்டா
இப்போதே
நம் கழுத்துகளில்
அணிந்து கொள்வோம்
ஒரு தூக்குக் கயிற்றை
புரட்சியாளர்களை அலங்கரிக்கும்
அணிகலன் இதுதான் என்று
இப்போதே அணிந்து கொள்வோம்
ஒரு தூக்குக் கயிற்றை
எதிரிகளின் கைகளிலிருந்து
நம்முடைய கைகளுக்கு
கயிறு கைமாறும் வரை
- அமல்

வாழ வழி சொல்லுங்க !

விறகு வெட்டி பொழச்சோம்!
மொட்ட வெயிலிலே, வேர்வை சிந்தி கலச்சோம்!
கா வயிறு குடிக்க, காலம் முழுக்க ஒழச்சோம்!
அடிமை வேலை செய்யும், ஆளுங்க நாங்க!
எங்கள ஆளுகிற ஏளனத்துல ஆண்டானுங்க!
உசுரு குடுத்து ஒன்னா வகுப்பு படிக்க
ஒத்த புள்ளன்னு அனுப்பனா!
சாதிசொல்லி ஒதுக்கறாங்க படிப்புத் தெறிஞ்ச வாத்தி!
குனுஞ்சே வார்றத்துக்கு புள்ளைய படிக்க வெச்சு,
சாகலாமுன்னு பள்ளிகூட அனுப்பனா!
இங்கே நான் செய்யற வேலைய,
ஏன்புள்ள செய்யுது, அங்கே மத்திய சத்துணோக்கு!
ஒழைக்க நிலமுமில்ல, ஒழச்சா கூலியுமில்லன்னு!
ஓஞ்சுபோய், மூட்டை முடுச்சி எல்லாம் கட்டிகிட்டு,
ஓடிப்போனோம் பட்டணத்துக்கு,
கூலிவேல செஞ்சு, கூழுக்கு கூட வழியில்ல இங்க!
ஏம்புள்ள படிக்க யாராச்சு உதவிப்பண்ணா
நான் நிம்மதியா சாவேன்!
ஒடம்பு சரியில்லாம ஒடஞ்சு போய்!
வயித்துக்கு பிச்சை எடுக்க, குடும்பத்தோட
கோயில்ல உக்காந்தா?
பக்கத்துல இருந்த பிச்சைக்காரன்
ஏதோ பட்டபடிப்பாமா,
தள்ளி உட்கார சொல்லிட்டான்!
ஒழச்சும் பிச்சை எடுக்கிறோம்!
படிச்சும் பிச்சை எடுக்கிறான்!
எப்படிங்க வாழறது இங்க, படிப்பு செரியில்ல!
ஒழைப்புக்கு கூலியில்ல!
சுரண்டியே சாகடிக்கிறானுங்க
இந்த திருநாட்டுல!
ஓட்டுப் போடும்போதும் தெரியுது
இந்த நாட்டு புள்ளன்னு!
இந்த பாழாப்போன உசுர புடிக்கறதுலையே,
எங்க வால்வு போகுதய்யா!
நல்லவங்க இருந்தா வழி சொல்லுங்க, வாழறதுக்கு
இல்ல எங்க கழுத்த நெருச்சே கொல்லுங்க!





- செ.டானிஷ்
கோவை
பறவைகள் காடு. . . .
 
பகல் நேர வெப்பம்
இரவு நேரக் குளிர்
தாங்கிக் கொண்ட மரங்கள்
மரங்கள் நிறைய கூடுகள்
கூடுகள் முழுக்க பறவைகள்

கரைந்து கொண்டிருந்த காகங்கள்
பேசிக் கொண்டிருந்த கிளிகள்
சிணுங்கிக் கொண்டிருந்த குருவிகள்
விளையாடி மகிழ்ந்தன
இரைகள் தேடிய தாய்கள்
மாலை நேரம் திரும்பின
காணவில்லை குஞ்சுகள்
கலைக்கபட்ட கூடுகள்
சரிந்து கிடக்கும் மரங்கள்
மற்றதை சொன்னது தாய்கிளி
நாங்கள் அழியக் காரணம் நீங்கள்
ஒன்றையொன்றுக் கூறின
அலகுகளால் மோதின
மோதிக் கொண்ட பறவைகள்
திரும்பி சற்று பார்த்தன
மரத்தை வெட்டும் வேடன்
குஞ்சுகளைத் தின்னும் கழுகு
புரிந்து கொண்ட பறவைகள்
ஒன்று சேரக் கூடின
வெட்ட வந்த வேடனை
அலகு கொண்டு விரட்டின
குஞ்சுகளை தின்னும் கழுகினை
நகங்கள் கொண்டு கிழித்தன
ஒன்றாய் சேர்ந்து பறந்தன
பகைவரை அழித்து மகிழ்ந்தன
மீண்டும் கட்டபட்டது கூடு
இது பறவைகள் நிறைந்த காடு

- முத்துக்குமார்
கோவை

விசுவாசியே எச்சரிக்கை !

சமச்சீர்க் கல்விக்கு சமாதி கட்டிவிட்டு,
தூக்குக் கயிற்றுக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு,
சாதிவெறியோடு ஆயுதமேந்திக் கொன்றுவிட்டு.
அணு உலைக்காக மின்சாரத்தை துண்டித்துவிட்டு,
நீ ஏசியில் வாழ்வதற்காக - எங்கள்
அன்றாடத்தில் விலையேற்றி விட்டு,
அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக
அமோக நாடகம் நடத்தி விட்டு,
முல்லைப் பெரியாற்றில்
இனவெறியைத் தூண்டிவிட்டு,
இன்னும் எத்தனை எத்தனைதான்
செய்யப் போகின்றாய் - உன்
முதலாளிகளுக்காக…..?

செய்! செய்! நன்றாகச் செய்!
வாந்தியெடுக்கும் சாராயக்
கல்வியைக் கற்ற உன்னை
சமூகக் கல்வியை கவனமாகக் கற்றுகொண்டு
சாட்டையால் அடித்து விரட்ட வளர்கின்றோம்!
சாதிவெறியோடு நீ ஏந்திய ஆயுதத்தை
சமூக விடுதலைக்காக ஏந்தத் துடிக்கின்றோம்!
அணு உலை வேண்டும்! என்ற உன்னை
அணுஅணுவாக சித்ரவதைக்க விழைகின்றோம்!
ஏசியில் வாழும் உன்னை தூசியாய்
துடைத்தெறியத் துணிகின்றோம்!
அன்றாடத்தில் விலையேற்றிய - உன்;னை
மன்றாட வைக்க மகிழ்கின்றோம்!

அன்னிய முதலீடு எதிர்ப்பு நாடகத்தை 
துருப்பாக்க வைத்திருக்கின்றோம்!
இனவெறிக்கு தூண்டுகிறாய் மக்களை
தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்
நிச்சயமாக துயிலெழுவார்கள்
ஓர் வர்க்கமாக, பன்னாட்டு
விசுவாசியே, ஜாக்கிரதை!

- திரி,
 கோவை


வணிகமாக்கப்பட்டக் கல்வி. .

முதல் வகுப்பு சேர்ந்தேன்
என் வீட்டு பாத்திரங்கள்
அடகு கடைக்கு போனது
இரண்டாம் வகுப்பு அடைந்தேன்
என் தாத்தா பயன்படுத்திய பொருட்கள்
இரும்பு கடைக்கு போனது
மூன்றாம் வகுப்பு அடைந்தேன்
என் அக்காவின் படிப்பு
களவு போனது
ஐந்தாம் வகுப்பு அடைந்தேன்
என் தங்கையின் கனவு
நொறுக்கப்பட்டது
எட்டாம் வகுப்பு அடைந்தேன்
சொந்தக் கடை
வாடகைக் கடையாக மாறியது
பத்தாம் வகுப்பு அடைந்தேன்
கந்து வட்டிக்காரன்
என் அப்பாவின் மோட்டார் சைக்கிளை
பிணையமாக எடுத்துக் கொண்டான்
பன்னிரெண்டாம் வகுப்பு அடைந்தேள்
அம்மாவின் சிறுநீரகம்
நாற்பதாயிரம் ரூபாய்க்கு
வேறு நாட்டுக்கு கடத்தப்பட்டு விட்டது
இன்று
நான் தனியார் கல்லுhரியில் உள்ளேன்
ஒரு கையில் புத்தகங்களையும்
மறு கையில் இதயத்தையும் சுமந்தப்படி
இரண்டாம் ஆண்டிற்காக... 
- சத்யபாலன்
கோவை

சாதியம் !
சமூகம் என்னும் தொட்டில் கட்டி
அதில் சாதி மதம் என்னும்
குழந்தை வளர்ந்தால்
அது எப்படிச் சமத்துவம் என்னும்
அரும் பாரதம் படைக்கும்?
ஈனச் சாவை
நோக்கும மனிதனுக்குச்
சாதி ஒரு கேடா?
சாதிச் சங்கம் வடித்து வைத்த
சரித்திரம் எங்கேடா?
- பிரபுராம்
பாரதியார் பல்கலைக்கழகம்
         
*******************************************************************************

நவம்பர்   2011 இதழில் வந்த கவிதைகள்:



காத்துக் கிடக்கிறது கோபம்

உங்களைப் போலவே
கண்ணால் பார்க்கிறோம்
செவியால் கேட்கிறோம்
கால்களால் நடக்கிறோம்
கைகளால் செய்கிறொம்

தங்களைப் போலவே
இதே பூமியில் பிறந்தோம்
காற்றைத்தான் சுவாசிக்கிறோம்

உங்களில் யாராவது
மலத்துளையால் உண்டு
வாயால் கழிக்கிறீர்களா
உங்களுக்குக் கொம்புண்டோ
எங்களையும் சேர்த்து
இந்தியர் என்பது ஏமாற்றவோ
சிலவேளையில் எங்களையும் தமிழர் என்பதும்
எம் உழைப்பைத் திருடவோ
அம்பேத்கரை சட்டமியற்ற சொன்னது மீறவா?
தனி சுடுகாடு
தனி குடியிருப்பு
தனி குவளை
ஏனென்று கேட்டால்
அமைதியைக் கெடுக்கிறோம் என்பீர்

உங்களுடைய அமைதிதான்
உலகத்தின் அமைதியா,

ஆயுதங்கள் கைமாறும் வேளையில்
இரக்கத்தை கோரும்
உங்களுடைய கோழைத்தனமும்
சட்டம் ஒழுங்கு
அரசு பொய் புளுகும்
அழுகி நாறும் சமூக ஒழுங்கை
பாதுகாக்கவே என்பதை
எம் மக்கள் உணர்ந்தேயுள்ளனர்

ஆறுபேர் உயிர்குடித்த
உனது துப்பாக்கிக்கு தெரியாது வேறுபாடு
உனக்கெதிராய் வெடிக்கும்
தோட்டாக்களும் உயிர் குடிக்கும்

உனது தோட்டாக்களுக்கு பலியான
அம்மாவீரர்கள்
எமது குலதெய்வங்கள்
இரத்தம் சிந்திய எமது தெய்வங்கள்
பலி கேட்காமல் பசியாறாது

அகோர பசியோடு
கோரை பற்களோடு
பேரிரைச்சல் குலவையோடு
எம்மக்கள்
இன்னொரு செப் 11க்கு தயாராகிறார்கள்
பலியாகப் போவது
உங்களில் யார் என்பதை
தீர்மானிக்கும் உரிமையை
உங்களுக்கே தருகிறோம்

காத்துக் கிடக்கிறது
கோபம்

- கு.பால்ராஜ், இராஜபாளையம்


---------------------------------


எங்கள் அடையாளங்களை மாற்றுவோம்

சட்டைகள் எங்களுக்கு கக்கத்து வியர்வை துடைப்பதற்கு
சாட்டைகள் எங்களின் முதுகில் வரிப்போடுவதற்கு
ஒரு படி நெல்லுக்கு மட்டும் ஒரு கோடி வியர்வைத்துளி சிந்துகிறோம்
சாவுக்கு சங்கு ஊதுவதும், சமாதி கட்டுவதும் நாங்களே
சாக்கடையை சுத்தம் செய்வதற்கே எங்களின் கரங்கள் வேலை செய்கின்றன
இங்கே உழுபவர்களும் நெய்பவர்களும்
ஏன் இந்த உலகத்தை உழைப்பில் வடிவமைத்தவர்கள் கூட
எங்கள் மூதாதையர்களே
என்ன இருந்தும் எங்களுக்கு கொடுக்கப்படும் வரையறை
அடிமை...

எங்களின் உரிமைகள் சாதியென்னும் சாத்தானால் விழுங்கப்படுகிறது
செருப்பை தைக்க உரிமை உள்ள எங்களுக்கு
செருப்பை அணிந்துகொள்ள உரிமைத் தரப்படுவதில்லை
ஆதி மனிதனின் உருவத்தோற்றம்
எங்களின் கூன் விழுந்த முதுகில் தெரியும்
கொட்டாங்கச்சியே எங்களுக்கு கிடைக்கும் கிண்ணங்கள்
ஊரைச் சுத்தம் செய்வதாலோ என்னவோ
எங்களின் ஊர்கள் மட்டும் அந்த அழுக்கு மூட்டைகளை
சுமக்கும் தளங்களாகவே இருக்கிறது
உழைப்பதிலேயே உயிர்விட்டவர்கள் எங்கள் பெண்கள்
உழைப்பதற்கே பிறந்த எங்களுக்கோ
கால் காணி நிலம் கூட சொந்தமாக்கப்படுவதில்லை
ஊரை திருடும் காவலனின் பசிக்கு எங்கள்
வீட்டு விலங்குகளும் பெண்களுமே பலியாக்கப்படுகிறார்கள்
ஆளும் வர்க்கங்களுக்கு அடிமை வேலை செய்யவே
ஆண்டாண்டு காலமாக ஆண்டானால் அடிமைப்படுத்தப்படுபவர்கள் நாங்கள்
எங்களின் உரிமைகள் கேட்கப்படும் போதெல்லாம்
எட்டுத்திக்கும் வெண்மணியே நெருப்பாய் பாய்கிறது
இங்;;;;கே ஆளும் வர்க்கங்களால் வீசப்படும் அரிவாள்
எப்போதும் எங்கள் கழுத்தையே பதம் பார்க்கிறது

வறுமையாலும் கொடுமையாலும் வதைக்கப்படும் நாங்கள்
உரிமை கேட்டால் எங்களுக்கு ஆளும் வர்க்கத்தாலும் அராஜ அரசாலும்
பரிசுகளாய் கிடைப்பவை சாணிப்பாலும் தோட்டக்காளும் தூக்குகயிறுகளுமே
உலகத்தின் மாற்றத்தில் பெரும் பங்கு எங்களுடையது
இங்கே போரிலே வீரமரணம் எங்களுடைது
எங்களின் பொறுமையின் எல்லை வெடிக்கும் போதெல்லாம்
பொசுக்க நினைக்கும் ஆளும் வர்க்கமே அராஜக அரசே
எங்களை பள்ளன் பறையன் சக்கிலியன் என்று ஒதுக்கித் தள்ளினாய்
பழங்குடி என்று நசுக்கிப்போட்டாய்
இதோ எங்களின் ஆயுதங்கள் கூர்மையடைகின்றன
எங்களுக்கான புதியதொரு அரசியல் வருகிறது
எங்களின் சேரிகள் செங்கொடியால் அலங்கரிக்கப்படுகிறது
எங்களின் மக்கள் கூட்டம் புரட்சியை காண்கிறது
வந்தேறி நாய்களே உங்கள் கொட்டங்களை அடக்கும்;;
வாள்கள் வந்துகொண்டு இருக்கின்றன
உங்களின் கொடூரங்களால் அந்த வாள் பட்டைத் தீட்டப்படுகிறது
நிச்சயம் அது ஒருநாள் உங்களின் சாதித் திமிரை அறுக்கும்
அன்றே உழைப்பவர்களுக்கென புதியதொரு உலகம் பிறக்கும்

-செ.டானிஷ், கோவை


---------------------------------



1 + 1 = (உ)ரிமை

பறவையைப் பார்த்து
அதிகாரமாய் சொன்னது
அடைமழை

சிறகுடைய பறவையே
பறப்பது நம் உரிமை
பறக்காமலிருக்காதே
பற! பற! என்றது

அடைமழை அலற
பதிலுரைத்தது பறவை

அடேய் மழையே!
சிறகு கொண்டு பறப்பதா
காலைப் பரப்பி நடப்பதா
முடிவெடுப்பது நாங்களடா!

உரிமை என்றால் இரண்டுந்தான்
பறப்பதும் பறக்காதிருப்பதும்

இந்தப் பாராளுமன்ற வவ்வாள்
பல்லை மறைத்து
பறவை போல நடிக்கும்
பிறகு பல்லைக் காட்டி
மிருகம் போல் நடக்கும்

வவ்வாள்களின் அகராதியில்
நிற்றல் என்பதற்கு
தலைகீழாய் தொங்குவதே அர்த்தம்
பாராளுமன்ற வவ்வாள்களை
நேர்படுத்தல் என்பது
பிப்ரவரி முப்பத்தொன்றிலும் நிகழாது

மான்களின் தேசத்தில் மலைப்பாம்பின் செல்வாக்கில்
ஓநாய் தலைமையில் ஒரு கூட்டணி
நரியின் தலைமையில் ஒரு கூட்டணி
தண்ணீர்முதலைகள் தனியணி

மான்கள் தம் வாழ்வை
யாருக்கு பலியிடும்?
இதுக்கொரு தேர்தலா!

உன் பற்களின் பிடியில்
கூர்மையான அழுத்தத்தில்
மூச்சு உடைந்து
நாக்கு தள்ளுவதே
எங்கள் வாழ்க்கையா!

மடையன்தான் நான் என
நம்மையே பறைச்சாற்றும்
ஓட்டு நாம் போடல் நன்றா!

மனம் வெந்து போனாலும்
போர்வீரர் ஆனாலும்
உயிர்தியாகம் செய்தல் மேலா!

வலிமையின் முகமே மாற்றம்
எமது தேக்கம் விரைவில் நீங்கும்!

-புதியவன்


---------------------------------






நவம்பர்   2010 இதழில் வந்த கவிதைகள்:

கல்லான சொல்

எம்மைப் பிணைத்த சங்கிலிகளை
வெறுப்போடு பார்க்கும்
அந்தக் கணத்திலேயே
உன் முகத்தில் குடியேறும் பயம்
எழுதிச் செல்கிறது
துரோகத்தின் வரலாற்றை

கருப்பன் சுதேசி
பழங்குடி தலித்
பெண் அடிமை
எந்த அடையாளத்தின்
வரலாற்றையும்
நாங்கள் உணரத் துவங்கும் போதே
உன்னைக் கொல்கிறது பயம்

உரிமை போராட்டம்
கலகம் சிக்கல்
அரசியல் தத்துவம்
புரட்சி சமத்துவம்
உனக்கு வெறுப்பூட்டும்
இந்த வார்த்தைகளுக்குள்ளிருந்து
தான்
எழப்போகுது எம் புதிய வரலாறு

எம்மைப் போலவே
உனக்குப் பீதியூட்டும்
வார்த்தைகளை ஆயுதமாக்கி
மொழிசமைத்து உபசரிப்போம்
எம்மக்களை

மக்களோடு சேர்ந்து
புரட்சிக்குப் பங்களிப்பதே
எம் கவிதைக்கான வேலை
உனது துவக்குகள்
பீரங்கி
வெடிபொருள்
கூலி இராணுவம்
எல்லாவற்றையும்
எதிர்கொள்ள
ஏழுவயதுச் சிறுவன்
கைக்குள்ளிருந்து வீசும்
காஷ்மீரத்துக் கற்களுக்குள்
இருக்கிறது
எம் கவிதைக்கான
பொருள்

-கு.பால்ராஜ்
இராஜபாளையம்


---------------------------------


நாங்கள் பேசுவது கேட்கிறதா?

விசயங்கள் பூக்களாக இருந்தால்
பட்டாம்பூச்சிகளாக நாம்
சிறகடித்துப் பேசுவோம்...
பட்டாம்பூச்சிகளாக அவர்கள் பேசினால்
நாம் பூக்களாகக் கேட்டிருப்போம்

கடல் அளவில் விசயமென்றால்
வீசப்படும் வலையுள் மீன்களாக பேசுவோம்...
மீன்களாக அவர்கள் பேசினால்
நாம் ஆழ்கடலாக கேட்டிருப்போம்

விசயங்கள் பெருங்கல்லாக கடினமாக இருந்தால்
சிலை செதுக்கும் உளிகளாகப் பேசுவோம்...
உளிகளாக அவர்கள் பேசினால்
வடிவெடுக்கும் பாறைகளாகக் கேட்டிருப்போம்

ஊதா நெருப்பாக விசயங்கள் இருந்தால்
சிவந்த கங்காக வெடித்துப் பேசுவோம்...
கங்குகளாக அவர்கள் பேசினால்
காத்திருக்கும் எரிமலையாக
எழுச்சியுறக் கேட்டிருப்போம்

நம்மோடு அவர்களும்
அவர்களோடு நாமும்
பேசி முடிவெடுக்க
ஆயிரமாயிரம் இருக்கின்றன
கழுத்தை இறுக்கும் பிரச்சனைகள்

இந்த சமூகம் மாறிவிட வேண்டும்
இது மக்களின் விருப்பம்...
இந்த சமூகத்தை மாற்றிவிட வேண்டும்
இது போராளிகளின் முழக்கம்!

எடுக்கப்படும் முடிவுகள்
செயல்களாக முடிச்சவிழ்கின்ற
ஒவ்வொறு பொழுதிலும்...
நாம் சமூக மாற்றத்தை
கண்டெடுக்க முடியும்

சிமெண்ட்டும் மண்ணும்
நீரில் குழைந்து இறுகுதல் போல்
மக்களாக போராளிகளும்
போராளிகளாக மக்களும்
சமூக விஞ்ஞான உணர்வில்
கலந்து இறுகிவிட்டால்...
பூ போன்ற அடக்குமுறைக்கும்
புயல் போன்ற ஒடுக்குமுறைக்கும்
கண்முன் அரங்கேறும் அநீதிகளுக்கும்
கண்களில் நடனமிடும் துயரங்களுக்கும்
சமாதி கட்டும் சரித்திரத்தை
நாமும் படைக்கலாம்!

-புதியவன்


---------------------------------


குற்றப் பதிவு

பெருநகரத்து இரவுகளில்
கைது செய்யப்படுகிறார்கள் அரவாணிகள்
விபச்சாரம் செய்வதாக

ஆண்கள் சிறையில் அடைப்பதா?
பெண்கள் சிறையில் அடைப்பதா?
ஆண்கள் சிறையெனில்
அரவாணிக்கு ஆபத்து
பெண்கள் சிறையெனில்
இரண்டும் கெட்டானை நம்பக் கூடாது
காவல் நிலையத்தில்
கனத்த குழப்பம்

ஈ தின்ற பல்லியொன்று
முக்கிப் போடும் எச்சம்
குறிதவறாமல் விழுகிறது
குற்றப் பதிவேட்டில்

-ஜெயசீலன்


---------------------------------



பின் எப்பொழுதோ முளைக்கும் சிறகு

நெடுநாட்களாக
அசைவற்றுக் கிடக்கிறது
இதுவரை வாசிக்கப்படாத
புத்தகம் ஒன்று

யாரேனும் ஒரு வாசகனை
எதிர்நோக்கி
தூசுகள் தாங்கிக் கிடக்கிறது
நூலகத்தின்
துருப்பிடித்த ஜன்னலின் ஓரம்

மண் பரிவாரங்கள் அமைத்து
விரைவில் படையெடுக்கலாம்
கரையான்கள்
தின்று தீர்க்கும் பொருட்டு

பிரதேசத்தின் ஏதோ
ஒரு மூலையில்
அதன் ஆசிரியர் தவமிருப்பான்
வாசகனின் எதிரொலியை
எதிர்பார்த்து

துயரம் நிறைந்த ஒரு
மாலைப் பொழுதில்
இணை தேடிவந்த
சிட்டுக்குருவியொன்று
எச்சமிட்டுச் சென்றது
புத்தகத்தின் மீது

ஒரு நாள்...
நிச்சயமாக ஒருநாள்
ஆசிரியன் சிறைக் கம்பிகளுக்குப்
பின்னால் இருக்கையிலோ
அல்லது
குண்டடிப்பட்டுக் கிடக்கையிலோ
இந்த புத்தகம்
சிறகு விரிக்கும்
நிராகரிப்புகளை உடைத்த
புதிய அடையாளங்களுடன்.

-ஆ.மீ.ஜவஹர்,
(மணல் வீடு, ஜூலை-அக். 2010 இதழில் வெளிவந்தது)


---------------------------------



நான் வணங்கும் கடவுள்

பசித்த பிஞ்சுக்கு
பால் வாங்க
வழி இல்லை
ஆனால்...
பட்டாடை உடுத்தி
பகல் பூசை நடக்கிறது
கோயிலில்
என் எதிர் வீட்டு
முதில் கன்னிக்கோ
கல்யாணம் நடக்கிறது
வெகுவிமரிசையாக
கனவில்...
ஆனால்...
நான் வணங்கும் கடவுளுக்கோ
தங்கத்தாலி கட்டி
கல்யாணம் நடக்கிறது
சன்னதியில்
என் வீட்டு அடுப்படியில்
வெகுநாளாக
வௌ;ளைப் பூனை தூங்குகிறது
ஆனால்...
நான் வணங்கும் கடவுளுக்கோ
பல்வகைப் பதார்த்த
நெய்வேத்தியம் நடக்கிறது...

-தேவசேனா,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

---------------------------------
---------------------------------

ஆகஸ்ட்  2010 இதழில் வந்த கவிதைகள்:

காதலின் கவிதை

உயிர்ப்புக்கு முன்பு வெளி வெறுமையாயிருந்தது
உயிர்த்தபின் உள்ளில் காதல் இருந்தது
காணும் உயிரில் எல்லாம் நானிருப்பேன் என்றது
வெளிக் கோலமெங்கும் விரவிப் பரவிய
அதன் ஆறாப் பசியின் முன்
இறுதி அறிவுக் கூர்மையின் வியாபகம் கொண்ட
மனித உயிர் துவண்டது
அதன்முன்பு சவப்பெட்டிகளில்
உயிர்கள் இருந்தன உடல்கள் உலவின
காதல் உள்வந்த மனிதனின் உயிர் உலவியது
உடல்கள் சவப்பெட்டியில் கிடந்தன - காதல்
கொழுந்தெனப் பற்றிக் கொள்ளும் பொருளாய்
இருந்தது
தூற்றப்படுவதும் போற்றப்படுவதுமாய் அல்லாடியது
உள்ளங்கள் இணைவதற்காய் மன்றாடியது
குழப்பங்களுக்கு மத்தியில் திணறியது
அறியாப் பருவத்தின் சேட்டை எனப்பெயர் பெற்றது
கொலைகளும் தற்கொலைகளும் பெருகி
உதிரம் பருகும் வேட்டை நாயைப் போல்
சிலபோது கோரம் காட்டியது

தமிழ் சினிமா பார்த்த நேரங்களில்
தன் அசுத்தம் பார்த்து தானே வெட்கியது
இளம் மனதில் வெளி நிறைத்தது.
பின் அது தன் பிறந்த தினத்திற்காய் ஏங்கித்
தனக்கென தேர்ந்த நாளில் சூல
முனைகளுக்கு பலியாகி நின்றது
அதன் உடலின் கூர்முனையில் சூலத்தின் கூர்
ரத்தத் துளியுடன் எட்டிப் பார்த்தது

- பாலை இலக்கியா


---------------------------------


எனக்கெதிராக ஒரு கவிதை

உன்னைக்
காலால் மிதித்தவனையும்
சாட்டையால் அடித்தவனையும்
தடுக்க வந்த நான் உனக்கு
பரிசளித்தது
ஒரு தங்கக் கைவிலங்கு

எனது நல்ல எண்ணத்தையும்
சந்தேகி

நீ ஒவ்வொருமுறை
கண்டுகொண்ட பின்பும்
வேறுவேறு பொம்மைகளாக
உருமாற்றித் தருகிறேன்
அதே களிமண்ணை

எனது பேச்சு எழுத்து
அக்கறை கண்காணிப்பு
கோபித்தது பயந்தது
சேர்த்துக் கொண்டது புறக்கணித்தது
என அனைத்திலும்
துர்நாற்றம் வீசியவாறு
ஒட்டிக் கொண்டிருக்கிறது
ஆதிக்க சிந்தனை

கழுத்தை நெரித்தவாறு
உன் தலைமீதேறி அமர்ந்திருக்கும்
நான் உனக்கு இனி
சொல்லப்போவது ஏதுமில்லை
என்னைத் தூக்கி எறி
என்பதைத் தவிர

-அமல்



---------------------------------



அதிரடிப் படை கிரிக்கெட்டும்
அடி வாங்கிடும் மக்களும்















விளையாட்டு, உடற்பயிற்சி, ஓய்வு
மனநிம்மதி, பொழுதுபோக்கு
அனைத்திலும்
கிரிக்கெட் கரும்புகை
நம்மை சூழ்ந்திருக்கிறது
வகுப்பறையில்
‘புக் கிரிக்கெட்’ ஆடுவதால்
கிரிக்கெட் கரையான்கள்
நம் படிப்பையும் அரிக்கின்றன...
நமது பல ஆயிரம்
கர்ப்பினி விளையாட்டுகளின்
புடைத்த வயிறை
பூட்சு கால்களால
மிதித்துக் கொன்ற
அதிரடிப்படை கிரிக்கெட்டிற்கு
வயல்வெளிகளையும்
பொட்டல் காடுகளையும்
மைதானங்களையும்
முட்டுச்சந்துகளையும்
பரிசாக கொடுத்துவிட்டோம்!
கிரிக்கெட் 
நமது வாழ்வானதால்!
நம்மை சுற்றி பூமியில
என்னவெல்லாம் நிகழுது
எத்தனை லிட்டர் வியர்வையில
எத்தனை பொருள்கள் மலருது
எப்படி நமக்கு கிடைக்குது
எத்தனை கிடைக்க மறுக்குது
விலைவாசி ஏன் உயருது
அரசியலில் என்ன நடக்குது
எதற்கும்
விடை எடுக்க விடாமல்
திணறசர் செய்கிறது
கிரிக்கெட் பேயின்
வலுவான ஃபீல்டிங்!

ஒவ்வொரு ஓவரிலும்
பட்டினி சாவுகளாய்
வேலை இன்மையாய்
ஊரிமையற்ற மக்களாய்
அடிமை நாய்களாய்
அடுத்தடுத்த பந்துகளில்
அவுட் ஆகிறோம்!

ஆட்டத்தின் ஒவ்வொரு பந்தும்
மட்டையில் படாமல்
பின்னுக்குப் போவதால்
இயற்கை, விஞ்ஞானம்,
சமூகம், அரசியல் பற்றி
சிந்திக்க வேண்டிய
நம் மூளை
‘கிளீன் ஃபோல்டு’ ஆகுது...

நாம்
கிரிக்கெட்டில் ஜெயிக்கிறோம்
வாழ்க்கையில்
என்ன செய்து கிழிக்கிறோம்!

-புதியவன்




---------------------------------



வேலி முட்களினூடே 








மௌனிக்க பேச
உரிமையற்றவனின் குமுறல்களையும்
திருடிக் கொண்டவர்களிடம்
எம் வாழ்வு. . .

அவர்களின் கருணையால்
எஞ்சியிருக்கும் எமது உடல்கள்
தினமும் எண்ணப்படுகிறது
அக்கறையோடு

வேலிகளுக்குள் கிடைகாக்கும்
ஆடுகளாய்
தண்ணீருக்கும் உணவுக்கும்
நேரம் வைத்து அனுமதிக்கிறார்கள்
மீட்பர்கள்

அப்பாவையோ அம்மாவையோ
மகளையோ
யாரையோ யாராவது
எப்பொழுதும்
தேடிக் கொண்டே

துரோகம் செய்தவனின்
உதவிக்கரம் நீட்டும்
அதே கைகளை
அணைத்துக் கொள்வதைத் தவிர
வேறிடமில்லை எமக்கு

வதைத்தவனே மீட்பனாக
போக்கிட மேது

உரிமைகள் கேட்ட கைகளில்
பிச்சை பாத்திரம்
வழியில்லை

மானம் மரியாதை
கௌவரம் மதிப்பு
இவ்வார்த்தைகள்
எங்கள் கூடாரத்துள்
இனி என்று கேட்கும்

வெப்பம் கொப்பளிக்கும்
மூச்சுக்காற்றால்
ஓய்வற்ற
வியர்வையும் கண்ணீரும்
கடலாய் கரைவதால்

இனி
பனி உருகும்
கடல் கொதிக்கும்
பூமி பிளக்கும்
சகலமும் அழியும்

நாங்கள்
இப்படித்தான்
ஜெபித்தாக வேண்டும்
எம் வாழ்விலிருந்து

பசி பிணி மூப்பு மரணம் பார்த்து
பௌத்தம் போதித்த
போதிச் சத்துவனோ
தன் மனைவியை மீட்க
கடல் தாண்டிய இராமனோ
சர்வலோக மீட்பன்
இயேசுவோ
இல்லாத இடமில்லாத
அல்லாவோ
இன்றுவரை
வரவில்லை
ஒரு குவளை
மலையகத் தேநீர்தர

- கு. பால்ராஜ்,
இராஜபாளையம்



---------------------------------



சுதந்திரம் யாருக்கு?

வரையறையோடு
(வாழப் பிடிக்காத,
வாழ்வைப் பறிக்காத)
வாழப் பழகி
உணர்வுகளை
விட்டுவிலகி - மூன்று
நாட்களைக் கடக்க - நான்காவது
நாளுக்காகப் போராடும் - என்
சகோதிரிகளுக்கா?

மாதத்தின் கடை நாளை
எதிர்த்துப் போராடி
முதல் நாளை எதிர்நோக்கும் - என்
மூதாதையர்களுக்கா?

மூலக்கல்வியை
மூடி மறைத்து - தாய்
மொழி வழிக் கல்வியை
தர மறுத்து - போலிச்
சுதந்திர உணர்வையூட்டி
வளர்த்து,
தேர்ச்சியடைந்த - என்
மாணவர்களுக்கா?

அரசியலை அம்மணமாக்கி
அடிமை மக்களை
ஆட்கொள்ளும் - என்
நாட்டுப் பற்றாளர்களுக்கா?

சாதியை ஒழிக்க முற்படும்
பைத்தியக்காரர்களுக்கா? அல்லது
அதைக் கட்டிக் காக்கும்
புத்திசாலிகளுக்கா?

சுதந்திரமாய்த் திரிந்த - எமது
பழங்குடிகளைச்
சூறையாடிய
சூனியர்களே!
சுதந்திரம் என்பது
உங்களுக்கெல்லாம்
உள்ளாடைகளோ?
மக்களுக்கு அதை
வெளியாடையாய்த்
தந்தீரோ என்னவோ?
அடிக்கடி பறிப்பதற்கு!

நீ விரும்பும் சுதந்திர
தரித்திரம் ஒழிந்து,
யாம் விரும்பும் புரட்சி
விதை வளரும் போது - எம்
மக்களின் ‘விடுதலை’
பிறக்கும் - அதில் உன்
சுதந்திர தரித்திரம்
இருக்காது! - எம்
மக்களின் சுதந்திரம்
தான் இருக்கும்!
-திரி, கோவை



---------------------------------



ஜூலை 2010 இதழில் வந்த கவிதைகள்:


காதலர் தினத்தின் கலக கீதம்

சுமையான சித்தாள் வேலைக்குள்
செதுங்கியிருக்கும் பெண் பிள்ளை
நுண்கலை வேலையை பதுக்கியிருக்கும்
வஞ்சகமான ஆண்பிள்ளை
தட்டுக்கு கரண்டிக்கு காதல்
இவளை தென்றல் போல என்பான்
இவனை உலக உத்தமன் என்பாள்


சீறி நிற்கும் முள்ளுக்காட்டை
வெட்டி சுமக்கும் பெண்பிள்ளை
மேடு பள்ளத்தில் மேலு குலுங்கி
மோட்டார் ஓட்டும் ஆண்பிள்ளை
முள்ளுக்கு மோட்டாருக்கு காதல்
இவளை பூவே என்பான்
இவனை வீரனே என்பாள்


குடும்ப வேலையும் கணக்கா செய்யும்
கல்லூரி பயிலும் பெண்பிள்ளை
இவளை மட்டுமே கணக்கு செய்யும்
சினிமா பைத்தியம் ஆண்பிள்ளை
சீரியலுக்கு சினிமாவுக்கு காதல்
இவளை சர்க்கரை போல என்பான்
இவனை மாசில்லா மன்னன் என்பாள்


வலிதாங்கும் வீரம்
விட்டுக் கொடுக்கும் தியாகம்
தேங்கிக் கிடக்கும் சோகம்
இதுதான் பெண்ணின் மொத்த உருவம்
இதையும் காதல் இப்படிப் பாடும்
பூவே... மானே... தேனே... ஜாமே... கிரிமே...


சகதி மனசு
தப்ப ஒத்துக்காத கோழைத்தனம்
குற்றம் நூறானாலும் ஆம்பளங்கிற அகங்காரம்
இதுதான் ஆணுக்கு பெரிய உருவம்
இதையும் காதல் இப்படி சொல்லும்
உலக உத்தமனே.. மகாவீரனே.. மாசில்லா மன்னனே..
சீறும் சிங்கமே.. பாயும் புலியே..
கட்டுக்கடங்காத காளையே..


காதல் மேடையில்
பெண்களுக்கு மென்கலவை நீராட்டு
ஆண்களுக்கு கண்டபடி பாராட்டு
காதல் ஒரு பைத்தியந்தான்
அதான் காதலர்கள்
பொருந்தாதவற்றையும் பொருத்திப் பாடுகிறார்கள்
கேட்டால் கவிதை என்கிறார்கள்


எந்த இனத்துக்கும்
இல்லாத காதல்
மனித இனத்தில் மட்டும்
எப்படி...?


நமக்கு காதலின் வரலாறே தெரியாது
இதில் காதலர் தினம் வேறு!
பிப்ரவரி பதினாலு
ஒதைக்கிறான் இந்து பரிசத்து
கொதிக்கிறான் சாதிவெறி பிடித்து


சீழ்வடிந்து குமட்டுகிற
சாதி வெறி சனியனை
வீச்சமெடுத்து நாறுகிற
மதவெறி மடையனை


ஆணுக்கும் பெண்ணுக்கும்
தனித்தனி நியாயமென
சரிசமத்தை மதிக்காத
புளுத்துப்போன பூமியை
மனிதகுலம் வெற்றிபெற
சண்டைபோட வேண்டும்!


இதுகளோடு சண்டை போட
காதல் ஒரு 'களம்”
தலையணையோடு சண்டைபோடும்
சிறுவர்களைப் போலாவது
போராட வேண்டும்
'காதலர்கள்”


நீயும் நானும் புலம்புவதால்
என்னாகப் போகுது
சினிமா பாணிக் காதலர்களுக்குப்
புரியவா போகுது


வா பெண்ணே
நாம் காதலில் குழைவோம்


ஆண் மயிலே... பூவே... தேனே...
என என்னை நீயும்
பெண் சிங்கமே... வலிய தேகமே... முரடியே...
என உன்னை நானும்
பாராட்டிக் காதல் செய்வோம்...


காதலர் தினத்துக்குப்
புதுசாக இருக்கட்டும்!


-புதியவன், மதுரை



------------------------------------------



புதிய அத்தியாயம்



கருங்கல்லை வணங்கும் மூடருக்கு - நாங்கள்
தீட்டுப் பொருளாம்
உயிரற்ற சிலைக்கு தங்கத் தட்டில் படையலாம்
உயிருள்ள நாங்கள் வெற்றுக் கையால் பருகவாம்
பிறர் மனை நோக்குதல் இவர்க்குப் புண்ணியமாம்
எம்மனைதனில் பாதம் பட்டால் பாவமாம்
வருணாசிரம வேதம் இவர்க்கு பாடமாம்
எம் மக்கள் வறுமைதான் இவர்க்கு லாபமாம்
மனையுள் நுழைய வக்கில்லாத எம்மக்கள் - அவர்தம்
வயலில் மட்டும் நுழையவாம் - எம் உழைப்பில்
விளைந்த நெல்மணிகள் அவர்தம் கண்மணியாம்
வாழ்கிறான் கோமான் மாடக் கோபுரத்தில்
வாடுகிறோம் நாங்கள் ஓலைக் குடிசைகளில்
உள்ளோர்க்கே வரம் வழங்கும் கடவுளை
நம்பாமல் உள்ளது உள்ளபடி என களங்களில்
இறங்குகிறோம் - நம்பிக்கையுடன்
உயிர் துறப்பது நாமாயினும் இனி பிறப்பது
நாடாளட்டும் என

-பரம மைந்தன்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்



------------------------------------------



‘விலை’ நிலங்கள்


விரல் பிடித்து பேரம் பேசுகிறார்கள்
மாடுகளை மட்டும் அல்ல
மா நிலங்களையும்


என் தாய்நாட்டின் விளை நிலங்கள்
உலகமயமாக்கலால் 'விலை” நிலங்களானது


அங்கங்களை வெளிக்காட்டுவதையே
கலாச்சாரச் சீரழிவாக நினைக்கும்
இந்திய மக்களுக்குத் தெரியாது

நம் 'தாய்” நாட்டின் அங்கங்களை
அங்குலம் அங்குலமாக விலைக்கு
வாங்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் பற்றி


-கண்ணன் குமார்,
அரசு சட்டக் கல்லூரி, மதுரை



------------------------------------------



சிங்கள வெறியர்களே!
ஈழத் தமிழன் உங்களுக்கு
ஈனத் தமிழனானானோ
தமிழன் உரிமை கேட்டான்
உயிரைப் பறித்தாய்...


பாவம் நீங்கள் என்ன செய்வீர்
உம்முடைய வெறி உங்களுக்கு...


தமிழன் தலைநிமிர தமிழன் விரும்பினாலும்
அரசியல் என்னும் அரங்கத்தில்
அற்பப் பாத்திரத்திற்காக
அலைகிறான் இங்கே...


நிலையிலா அரங்கத்தில்
நிலையிலா பாத்திரத்திற்கா
நிந்தனை செய்கிறான்
அடுத்தவனை...?


தமிழனுக்கு
இரக்கம் அதிகம் அதனால்
இழிவுபடுத்திவிட்டாய் அவனை...


தமிழனுக்குப் பொறுமை அதிகம் - அதனால்
பொசுக்கி விட்டாய் அவனை...


சிங்களா!
வினையை விதைத்துவிட்டாய்
அறுவடைக்குத் தயாராயிரு
'புரட்சி” எனும் சொல் புதுமையாய் மாறியுள்ளது
புறப்பட்டு விட்டனர் எம்முடைய தோழர்கள்
தமிழன் தன்மானம் காக்க...


-சரண்யா,
மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014