இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வெள்ளி, ஜூலை 16, 2010

அரசு நிர்ணயித்த பள்ளிக் கட்டணமும் அத்துமீறி செயல்படும் பள்ளிகளும்

'கல்வி - தனியார்மயம்

சாராயக்கடை - அரசு மயம்”

நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும் அதன் கீழ் உள்ள வரிகளுக்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றுகிறதா? நிச்சயமாகத் தோன்றும். அவ்வாறு நாம் எந்த ஒரு விசயத்தையும் தொடர்பற்ற நிலையிலேயே எண்ண கற்பித்துள்ளது நமக்கு அளிக்கப்பட்ட கல்வி. இந்நிலை மாற வேண்டுமெனில், நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும், கேள்விகள் பல கேட்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றளவிலும் சாராயக்கடையை அரசுடைமையாக்கி, கல்வியை தனியார்களுக்குத் தாரை வார்த்துக் கொண்டு, அவர்களுக்கான சேவையை இடைவிடாமல் செய்து வருகிறது நமது இந்திய அரசாங்கம். அப்படிப்பட்ட சேவை மனப்பான்மை படைத்த அரசாங்கத்தின் கீழ் நாம் இயங்கி வருகிறோம் என்பது பெருமைக்குரிய விசயமாக உள்ளது. நாம் பெருமைபடுவதற்கு முன்பு, நமது தார்மீக அரசானது இது போன்ற பல துறைகளில் பலபல சாதனைகளை புரிந்திருந்தாலும் இன்று வரை நம் கண்களுக்கு எட்டிய வரை கல்வியில் என்னென்ன சாதனை புரிந்திருக்கின்றன என்று பார்ப்போம்.

அரசு நமது கல்வி முறை முழுவதையும், தொடக்க கல்வியிலிருந்து உயர் கல்வி வரை ஏகாதிபத்தியங்களிடம் தாரை வார்த்து வருகிறது. மேலும், அந்நியக் கல்வி நிறுவனங்கள் தமது சந்தையை விரிவாக்கிகொள்ள, நமது நாட்டில் கிளைகளை திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்தியா, கல்வித்துறையும் கூட அயல்நாட்டு மூலதன அட்டைகளால் உறிஞ்சப்படுவதற்கான பரந்த சந்தையாக இருக்கிறது.

(போலி) சுதந்திரம் கிடைத்த 60 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்ற சட்டம் அமுலாக்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் பதினான்கு முதல் பதினெட்டு வரையிலான குழந்தைகள் 220 மில்லியன் இருந்து வருகின்றனர். அவர்களைச் சற்றும் எட்டிக்கூட பார்க்கவில்லை இச்சட்டம். இன்று வரையிலும் நம் நாட்டில் உள்ள ஏழை மாணவர்களுக்குக் கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

300 மீட்டருக்கு ஒரு அரசு பள்ளி அமைக்க வேண்டும் என்பது அரசின் நீண்ட கால கொள்கையாகவே இருந்து வருகிறது. இந்தக் கொள்கையை நோக்கி செயல்படுகிறோம் என்று கூறிக்கொள்ளும் நமது அரசு, 30 மீட்டருக்கு ஒரு சாராயக்கடையை திறந்துள்ளது என்பது மிகப்பெரும் சாதனைப்பட்டியலில் முதலாவதாக இன்றளவிலும் இருந்து வருகிறது. பல நாடுகளின் நிலையும் இதுதானா? என்று பார்த்தால், இல்லவே இல்லை பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் கியூபா போன்ற நாடுகளில், கல்வித்துறையில் எந்தவொரு பிரிவை எடுத்துக் கொண்டாலும் அது மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது. இது மட்டுமல்லாது தென்னமரிக்காவிலுள்ள மற்ற நாட்டு மாணவர்களுக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது. அந்நாட்டு அரசு இதை ஒரு சேவையாக செய்து வருகிறது. இது என்றோ தோன்றி என்றோ நிறைவு பெற்றது அல்ல, இன்றளவும் செய்து வரும் சேவையாகும்.

இப்படிப்பட்ட நாடுகளின் மத்தியில் நமது தமிழக அரசு பள்ளிக் கட்டணத் தொகையை தொடக்கப்பள்ளி ரூ.5,000, நடுநிலைப் பள்ளி ரூ.8,000 உயர்நிலைப்பளர்ளி ரூ.9,000, மேல்நிலைப்பள்ளி ரூ.11,000 வீதம் ஒரு மாணவனுக்கு ஆண்டுக் கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு தம் அறிக்கையை கடந்த மே 7ஆம் தேதி தாக்கல் செய்த நாடகத்தை பலரும் அறிவோம். இது அரசின் மிக மோசமான ஏமாற்று வேலையாகும். சரி அரசு பள்ளிக் கட்டணத்தை நிர்ணயித்தாலும் அதை எத்தனை பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன?

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் சிலவற்றில் ரகசிய கட்டண விபரம் பற்றி நக்கீரன் (ஜீன் 11, 2010) இதழில் வெளிவந்த விபரங்கள் சில:

மாநில அளவில் 'ரேங்க்' வாங்கிய மதுரை சி.இ.ஓ.எ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் L.K.G.க்கு ஆண்டொன்றுக்கு ரூ.18,000, பதினொன்றாம் வகுப்பிற்கு சேர்க்கைக் கட்டணம் ரூ.5,000, பள்ளி பராமாpப்புச் செலவு ரூ.5,000, முன்வைப்புத் தொகை ரூ.6,500 எனக் கூறுகிறது அவர்களின் விலைப் பட்டியல்.

மதுரை டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளியிலோ வாங்கும் பணத்திற்கு ரசீது தருவதில்லை. மாறாக, அப்படி வாங்குவது குறித்த பின்னாலான பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக, சர்க்கையின் போதே பெற்றோர்களிடம் நீதிமன்றம், வழக்கு என்று போகாதபடிக்கு ஒப்பந்தம் செய்து, அதனடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தின் மிகச்சிறந்த பள்ளிக்கூடமென பெயர் எடுத்திருக்கும் சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு முதலில் ரூ.40,000-மும் பின்பு ரூ.20,000மும் விடுதிக்கென்றால் மொத்தம் ரூ.80,0000-மும் வேண்டும் என்று பேரம் பேசுகிறார்கள்.

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரின் சொந்தக்காரரான வினோத் என்பவர், பாரம்பரியம் மிக்க திருச்சி எஸ்.வி.எஸ் பள்ளியில் நன்கொடை மட்டும் ரூ.25,000 கட்டாயமாக தர வேண்டும் என்கின்றார்.

மூன்று வருடங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்தால்தான் சீட் கிடைக்கும் என்ற நிலையில் உள்ள கனவுப்பள்ளியான செயிண்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் விண்ணப்பப் படிவத்திற்கே ரூ.4,500 கேட்கிறார்கள்.

சேலம் மேத விகாஸ் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பிற்கு ரூ.45,000 வசூலிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றதாலேயே எஸ்.ஆர்.கே. பள்ளியில் சேர்க்கை கட்டணத்தை ரூ.40,000-இலிருந்து தற்போது ரூ.60,000-க்கு அதிகரித்துள்ளனர்.

சென்னையிலும் வேலம்மாள், டி.ஏ.வி., எஸ்.பி.ஒ.ஏ., முகம்மது சதக் ஆகிய பள்ளிகளில் இதே நிலைதான் தொடர்கிறது.

சாதாரண நகைப் பறிப்பு கொள்ளையில் ஈடுபடும் ஒருவனையே பதினைந்து நாட்களுக்கு சிறை வைக்கும் இந்த அரசு, இப்படிப்பட்ட நூதன முறை பணக் கொள்ளையர்களை ஒன்றும் செய்யாதிருப்பது இந்த ஜனநாயக நாட்டில் எந்த வகையில் நியாயமாக அமையும்.

ஒருவேளை, நமக்கு இந்த அரசு இலவச கல்வி அளித்தால் மட்டும் கல்வியில் மாற்றத்தை கொண்டு வரமுடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனென்றால், இன்றும் பல மாணவர்கள் தங்கள் குடும்ப வறுமையோடு போராட்டம் நடத்திக் கொண்டேதான் கல்வி பயில பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கல்வியை இலவசமாக தருவதன் மூலம் மட்டும் மாணவர்கள் சிறப்பான கல்வியை அடைந்துவிட முடியாது. மாணவர்களின் குடும்ப வறுமை நிலையை போக்கினால் அனைவரும் கல்வி பெறும் நிலை ஏற்படும்.

நம் நாட்டில் அப்படியென்ன வறுமை நிலை நிலவுகிறது என்று எண்ணுபவர்களே... உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் எண்ணிக்கையில் பல்வேறு நாடுகள் எவ்வளவு பங்கு வகிக்கின்றன என்று பாருங்கள்...


நைஜீரியா - 5 %

வங்கதேசம் - 5 %

பாகிஸ்தான் - 5 %

இந்தியா - 42 %

மற்ற வளர்ந்துவரும் நாடுகள் - 43 %

நன்றி: பிராண்ட் லைன் ஏப்ரல் 28, 2010


இதில் மற்ற வளர்ந்து வரும் நாடுகள் 43%  என இருக்கும் போது இந்தியா ஒரு தனிநாடாக மட்டும் 42%-ஐக் கொண்டு உள்ளது. முதலாளித்துவ நாடான அமரிக்காவிலே கல்வி அரசுடைமையாக இருக்கும் போது, இந்தியாவில் இலவசக் கல்வி தருவது சாத்தியமானதுதான். ஆக, தனியார் கல்வியையும், வறுமையையும் ஒழிப்பதன் மூலம் தான் நாம் விரும்பும் 'அனைவருக்கும் கல்வி' என்ற நிலையை அடைய முடியும்.

-பார்த்திபன்,

கோவை

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014