இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வெள்ளி, ஜூலை 16, 2010

இரும்புக் கோட்டை அமெரிக்கா பம்மிக் குலையும் தமிழ் சினிமா


இந்திய நாட்டில் ஏகாதிபத்திய ஊடுருவலும், முதலாளித்துவத்தின் அட்டூழியங்களும் செல்வ செழிப்பாக மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றும் மக்கள் பட்டினியில் வாழ்வதும், இறப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் வறுமையில் வாடினாலும், வறுமை மட்டும் அவர்களிடம் செழிப்பாக வாழ்கிறது. இதனை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பேனா முனைகளோ, பத்திரிகைகளோ செழிப்பானவர்கள் பக்கமே ஊதுகுழலிட்டுக் கொண்டிருக்கின்றன. சினிமாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை. சமூகத்தின் உண்மை எதிரொளிப்புகளை திரையில் வெளிக்கொணரும் திரைப்படங்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு குறைந்து கொண்டு வருகின்றன. அப்படி வரும் திரைப்படங்கள் கூட தணிக்கை குழுவால் உண்மைகள் வெட்டப்பட்டு, சிதைந்த நிலையிலேயே வெளிவருகின்றன. மேலும், அவை முதலாளிகள் மற்றும் அவர்களது அரசை பாதிக்காத வண்ணம்தான் தயாரிக்கப்படுகின்றன.

இங்கே, இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் என்ற திரைப்படம் குறித்துப் பார்ப்போம். இயக்குநரிடம் எல்லையற்ற படைப்பாற்றலும், சமூக உணர்வும் இருந்தாலும், அதைத் திரையில் வெளிப்படையாகக் காணமுடிவதில்லை. இப்படத்தில் மேலோட்டமாக சொல்லப்பட்ட கதையிலும் கூட ஏகாதிபத்திய முதாலாளிய அரசின் போக்கை விமர்சிக்கும் முயற்சியைக் காண முடிகிறது. இப்படத்தின் கதையில் இரும்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள ஆறு கிராம 'கௌபாய்' மக்களை USA புரத்தை சேர்ந்த வில்லன் நாசர் தலைமையிலான குழு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. சிங்கம் என்ற புரட்சியாளன் (லாரன்ஸ்) மக்கள் விடுதலைக்காக போராடுபவன். அவன் திடீரென்று காணாமல் போய்விடுகிறான். இதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கை விட்டுப்போகாமல் இருக்க, சிங்காரம் என்ற பெயரில் இருக்கும் மற்றொரு லாரன்சை சிங்கம் குழுவினர் கொண்டு வருகின்றனர். இயல்பில் இவன் கோமாளித்தனமும், குறும்புத்தனமும் கொண்டவன். அவனை ஒரு புரட்சியாளனாக மாற்றவும், மக்களை வழி நடத்தவும் கற்றுக் கொடுக்கிறார்கள். இடையில் USA புரத்தின் கட்டளையால் செவ்விந்தியர்களும் கௌபாய் மக்களும் புதையல் தேடிச் செல்கின்றனர். புதையலைக் கொடுத்தபின்பும், மீண்டும் மக்களை அடிமைப்படுத்த முயல்கின்றனர்.  USA புரம் வில்லனை மக்கள் கிளர்ந்தெழுந்து அடித்துத் துவம்சம் செய்து விடுதலை அடைகிறார்கள்.

இது மேலோட்டமான கதை நகர்தல் என்றாலும், படத்தில் அரசின் போக்கையும், முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியங்கள் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றன என்று காட்டுவதே படத்தின மையக்கரு ஆகும். அந்தக் காட்சிகளையெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை என்பதே எதேச்சையான உண்மை.


உதாரணமாக, நாம் ஒரு சில காட்சிகளைப் பார்ப்போம். சிங்காரம் என்ற லாரன்ஸை முதல்காட்சியில் நீதிமன்றத்தில் காட்டும் போது, நீதிமன்றத்தின் அலட்சிய போக்கையும், பயனற்றதாய் இருக்கும் நிலையை எடுத்துக்காட்ட  இயக்குனர்  முயற்சி செய்துள்ளார். குறிப்பாக அந்தக்காட்சியில் இம்மாத வழக்குகள் கொலை-7, கொள்ளை-22, கற்பழிப்பு-1,22,356 என்று எழுதப்பட்டிருப்பதாகக் காட்டுவதன் மூலம், நீதிமன்றத்தின் இன்றைய அலட்சிய போக்கை சுட்டிக்காட்டியுள்ளார். பிறகு, நீதிதேவதை கையில் அளவுதராசிற்கு பதிலாக அளவுப்படி கொடுத்திருப்பது ஒரு சாரத்தில் நீதி கேலிக்கூத்தாகவே இருக்கும் நிலையை காட்டுகிறது. உண்மையில் நீதிமன்றம் அப்படித்தான் உள்ளது. கொள்ளைக்காரர்களுக்குத் தஞ்சம் தரும் இடமாகவும், கொலைகாரர்களுக்கு மஞ்சம் தரும் இடமாவும், மக்களுக்கு மட்டும் அச்சம் தரும் இடமாகவும் உள்ளது. உதாரணமாக 50 ரூபாய் லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு 1 வருட சிறைத்தண்டனையும், கோடி கோடியாய் பணம் சுருட்டி வைத்திருக்கும் நித்யானந்தா மற்றும் கேசாரி கேத்தாய் (மருத்துவ கவுன்சில் தலைவர்) இன்னும் இது போன்ற பல பெரும் முதலாளிகளுக்கு சுதந்திர விடுதலை. என்னவொரு நீதிமன்ற தீர்ப்பு!

செய்தித்தாள்கள் நாளும் தேவையில்லாத, உண்மைக்கு புறம்பான செய்திகளை கொட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை 'தினசரி ஒப்பாரி' என்ற பத்திரிகையின் ஒருவார்த்தையிலேயே காட்டியுள்ளார். பணம் கொடுத்த முதலாளிகள், ஏகாதிபத்தியவாதிகள் தங்களுடைய பணத்தை மருத்துவமனை, பல்பொருள் அங்காடி என மக்களை ஏமாற்ற பல துறைகளில் முதலீடு செய்கின்றனர். அதுவும் யாருக்கும் பயன்படா வண்ணம் மக்கள் பணத்தை சுரண்டி பிழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை சப்ப சீலா மருத்துவமனை, ரிவிட் ஃப்ரஸ் சூப்பர் மார்க்கெட் போன்ற பெயர்களிலேயே சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், சிறு வியாபாரிகளின் வாழ்வைச் சீரழிக்கும் ரிலையன்ஸ் ஃபிரஸ் சூப்பர் மார்கெட்டை கேலி செய்து, ரிவிட் ஃப்ரஸ் சூப்பர் மார்க்கெட் என்று படத்தில் வரும் காட்சியை, படத்தை பலமுறை பார்த்தவர்களால் கூட கவனிக்க முடியாத அளவிற்கு நொடித் துளியில் ஓட விட்டிருக்கிறார். சினிமாத் துறையில் முதலீடு செய்து வரும் ரிலையன்ஸ் அம்பானியை பகைக்கக் கூடாது என்பதில் இயக்குநர் கவனத்துடன் இருந் திருக்கிறார்.

முக்கியக் கட்டமாக அணுகுண்டு ஒப்பந்தம் காட்சியில் இந்தியா எந்த அளவிற்கு அமரிக்காவிடம் அடிமைபட்டு கிடக்கின்றது என்பதை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம், அமரிக்காவுடன் 60 ஆயிரம் கோடி ரூபாயில் அணு உலை ஒப்பந்தம் போன்றவை மக்களுக்கும் நாட்டுக்கும் பயனற்றவையே. மேலும், அது ஏகாதிபத்தியவாதிகள் நம்மை அடிமைபடுத்திக்கொண்டு செல்லும் பாதையே தவிர வேறொன்றுமில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

செவ்விந்திய பழங்குடி மக்களின் பகுதிகளை காட்டும் பொழுது அவர்கள் சிறுவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு ஏன் அனுப்பவில்லை என்று கௌபாய் மக்கள் கேட்கும் பொழுது, எங்களை காட்டி தேர்தல் ஓட்டு எடுப்பது தானே அரசியல்வாதிகளுக்கு வேலை என்று சொல்வது அப்பட்டமான உண்மை. செவ்விந்தியர்கள் கழிப்பிடத்தில் தேர்தல் அறிக்கையைத் தொங்க விட்டிருப்பது அரசியல்வாதிகளுக்கு ஒரு செருப்படி! கௌபாய் மக்களும், செவ்விந்தியர்களும் புதையலைத் தேடிச் செல்லும் இடத்தில் புதையல் குகைக்கு முன்னே இதை நிறுவி வருவது ''......ஜவுளிக்கடை'' என்று விளம்பரதாரரைச் சுட்டிக் காட்டியிருப்பது விளம்பரதாரர்கள், தேவையற்ற எவ்வளவோ விசயங்களுக்குப் பணத்தை வாரி இறைக்கின்றனர், அது கிரிக்கெட், அழகு சாதனம், சாதாரண தலைமுடிக்கு கட்டும் ரப்பர் முதல் காலில் அணியும் செருப்பு வரையில் விட்டு வைக்கவில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறது.

புதையல் குகையில் உள்ள கேள்விகளுக்கு பதில் கொடுத்தால்தான் புதையலை எடுக்க முடியும் என்ற காட்சியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் சிறப்பு. முதல் கேள்வி, தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள்? அதற்கும் தவறாக பதில் சொல்லும் போது, இன்றைய தமிழின் நிலையை சொல்லி உள்ளார். முப்பத்து மூன்று என்று சொல்லும் போது 'அது பெண்களுக்கான இடஒதுக்கீடு, கிடைக்கவே கிடைக்காது' என்று சொல்வது அருமை. தாய் மொழியில் கற்கும் பொழுது மட்டுமே பகுத்தறிவு விரிவடையும் என்பது அறிவியல் ஆராய்ச்சியின் உண்மை. ஆனால் இன்றையக் கல்வியில் நம் தாய் மொழி என்ன என்று கேட்கும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறோம்.

இரண்டாம் கேள்வி, பொங்கு தமிழனுக்கு துன்பம் நேர்ந்தால் என்ன செய்வீர்கள்? அகதிகளாக எல்லையில் அடிபட்டுக் கிடந்தால் என்ன செய்வீர்கள்? என்பதற்கு, டி.வி. பார்த்துக்கொண்டிருப்பேன், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பேன், டீக்கடையில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பேன் என்ற பதில்களைக் காட்டி மக்களைக் குறை செல்லும் இயக்குநர், தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் போராடிய தமிழக மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்கிய தமிழக அரசையும், இந்திய அரசையும் குற்றம் சொல்லாமல் விட்டு விட்டாரே?

அடுத்த கேள்வியாக ஆளவந்தான் யார்? என்பதற்கு ஜனாதிபதி, ஜனாதிபதி மச்சான், ஜனாதிபதியின் மகன் போன்ற பதில்கள் வருகின்றன. இதற்கு நாம் எங்கும் உதாரணம் தேடத் தேவையில்லை. தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி வீட்டிலேயே காணலாம். இறுதியாக புதையலை எடுக்கும் போது, 'கௌபாய்' மக்களுக்கு உள்ளேயே துரோகி உருவாகி அவர்களை மாட்டி விடுவது நம் நாட்டுத் தரகு முதலாளிகளையும், துரோகிகளையும் தவிர வேறு யாருமல்ல. கடைசி காட்சியில் வரும், 'மக்களுக்குத் தேவை, காற்று, நீரை விட உரிமை, சுதந்திரமே” என்ற வசனம் முற்றிலும் உண்மையானது. போராட்டமே மனிதனை அவன் உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுத்தரும் என்பதை இறுதிக்கட்டத்தில், அடிமையாக வைத்திருக்கும் முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகள் மக்களிடம் அடி வாங்கியே இறப்பார்கள் என்ற முடிவு சிறப்பானது.

ஆனால், முக்கியமான அரசியல் ரிதியிலான காட்சிகள் பெரும்பாலும் சாதாரண மக்களுக்கு உடனடியாகப் புரிந்துவிடக் கூடாது என்பதற்காக காட்சிகள் மிகவும் பூடகமாகவும், வேகமாக கடந்து செல்பவையாகவும் வைக்கப்பட்டுள்ளன. இதுவே இன்றைய ஊடகத்தின் நிலைமை. உண்மையை உரக்க கூறினால் குரல் வளை நெரிக்கப்படும் என்பதே உண்மை. மேலும், மிகப் பெரிய பட்ஜெட்டுகளுடன் எடுக்கப்படும் இன்றைய படங்களுக்கு மூலதனம் செய்வது இந்திய உழைக்கும் மக்களின் எதிரிகளான இந்தியத் தரகு முதலாளிகளும், அமெரிக்கக் கம்பெனிகளும்தான். எனவே இந்த வணிக சினிமாத் துறை மக்களுக்கு பயன்படப் போவதில்லை. விதிவிலக்கான சினிமா முயற்சியாக வேண்டுமானால், இத்திரைப்படத்தை கொள்ளலாம்.

-ரகு, கோவை

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014