இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வெள்ளி, ஜூலை 16, 2010

பெருவெடிப்பு முதல் பொதுவுடைமை வரை... பாகம் - 7

-மனுவேல்

இதுவரை...

இயற்கை மற்றும் சமுதாயத்தின் விஞ்ஞானப் பூர்வமான வரலாற்றை சுருக்கமாக அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை துவங்கப்பட்டது. பாகம் - 1 இல் சில கேள்விகளைத் தொகுத்துக் கொண்டு இக்கட்டுரையைத் துவக்கினோம். பாகம் 6 வரை, உலகம் தோன்றியது எப்படி? உயிர்கள் தோன்றியது எப்படி? மனிதன் தோன்றியது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டோம். இந்த இதழில் நாம் சமுதாயம் தோன்றியது எப்படி? என்று பார்க்க இருக்கிறோம். இனி வரும் இதழ்களில் நாம் கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை காண்போம்.

சமுதாயம் அப்படியே இருக்கிறதா? இல்லை மாறிக் கொண்டிருக்கிறதா? எப்படி மாறுகிறது?

சமுதாயத்தின் அடித்தளம் எது? அது எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது?

சொத்துடைமை, ஏழை - பணக்காரன், மதங்கள், விஞ்ஞானம், குடும்பம், அரசு, பெண்ணடிமைத்தனம், சாதி, இனங்கள், கல்வி, கலை, இலக்கியம் ஆகியவை தோன்றியது எப்படி?

இன்றைய சமூகம் எப்படி உள்ளது?

சமத்துவ சமுதாயம் சாத்தியமா? அதை எப்படி உருவாக்குவது?

இனி...

உழைப்பில் ஈடுபட்டதன் மூலம் மனிதன் உற்பத்தி செய்தானர் உழைப்பில் ஈடுபட்டதன் மூலம் மனிதன் பேசினானர் உழைப்பில் ஈடுபட்டதன் மூலம்தான் அவன் விலங்கு நிலையிலிருந்து மனிதனாக மாறினானர் உழைப்புதான் மனிதனைப் படைத்தது. இவையெல்லாம் நாம் போன இதழில் பார்த்தவை. சரி... இப்போது அடுத்த விசயத்திற்கு வருவோம்.

சமுதாயம் தோன்றியது எப்படி?

முதலில், சமுதாயம் என்றால் என்ன? எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றனவே... மான்கள் மொத்தமாக திரிகின்றனவே... நிறைய உயிரினங்கள் மந்தையாக வசிக்கின்றனவே... இவையெல்லாம் சமுதாயம் தானா? இல்லை! விலங்குகளிடையே இருக்கும் கூட்டு வாழ்க்கை என்பது மிகவும் எளிமையானது. கூட்டமாக வாழ்வதானால் கிடைக்கும் பாதுகாப்போ அல்லது கூட்டமாக வேட்டையாடுவதனால் கிடைக்கும் சில பலன்களோதான் அவைகளின் கூட்டு வாழ்க்கைக்கு அடிப்படை. ஆனால் மனிதன் மேற்கொள்ளும் கூட்டு வாழ்க்கை என்பது இதை விட பலமடங்கும், பண்பளவிலும் உயர்ந்தது.

மனிதன் உழைப்பில் ஈடுபட்டதன் மூலமாக கூட்டு வாழ்க்கையைப் பழகினான். உழைப்பின் விளைவாக நடக்கும் உற்பத்தி மனிதர்களுக்கிடையேயான பிணைப்பை மேலும் மேலும் அதிகரித்தது. சமுதாயத்தில் உற்பத்தி பெருகப் பெருக, தனிமனிதர்களுக்கிடையான பிணைப்பு மேலும் மேலும் அதிகரித்தது. இன்று வளர்ச்சி யடைந்துள்ள இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் சமுதாயத்தோடு எந்தவொரு தொடர்புமின்றி, யாரையும் சாராமல் வாழ முடியுமா? யோசித்துப் பார்ப்போம். நான் இன்று காலை சாப்பிட்ட உணவு என் வீட்டில் தயாரிக்கப்பட்டதுதான். ஆனால் அதற்கு தேவையான அரிசியை ஏதோவொரு கிராமத்திலிருந்து, கடைக்காரர் என் வீட்டிற்கு அருகே கொண்டு வந்து (அல்லது வரவழைத்து) விற்பனை செய்கிறார். அவர் இல்லையென்றால் நான் அந்த கிராமத்திற்குச் சென்றுதான் அரிசி வாங்கி வர வேண்டும். அதைக் கொண்டு வரக்கூட எனக்கு ஒரு வண்டிக்காரரின் உதவி தேவைப்படும். சரி... அந்த அரிசியை உற்பத்தி செய்தவர் ஒரு விவசாயி. அவரையும் சாராமல் நான் வாழ வேண்டும் என்றால், அரிசியை நானேதான் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் அதுகூட இந்த சமுதாயத்தைச் சாராமல் சாத்தியமே இல்லை. பிற மனிதர்களின் உழைப்பினால் உருவான மண்வெட்டியோ, கதிரரிவாளோ பிற கருவிகளோ இல்லாமல் நான் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், கற்கால மனிதனைப் போல கூரிய கற்கருவி தயாரித்து சிறு சிறு குழிகள் தோண்டி ஒவ்வொரு விதையாக விதைக்க வேண்டும். பருவமழை பொய்த்துப் போயுள்ள இக்காலங்களில், நீர் பாசனம்...? சரி அதைக் கூட விடுங்கள்... இந்த நிலம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு காடாக இருந்ததே... அதை வெட்டி, கழனியாகத் திருத்தியது ஒரு மனிதன் தானே? ஆக, நிகழ்கால சமுதாயத்தோடு மட்டுமின்றி, கடந்த கால மனிதர்களோடு கூட நாம் அவிழ்க்க முடியாத பிணைப்பில் உள்ளோம்.

அரிசியைச் சொல்லி ஆரம்பித்ததே இப்படி விரிந்து கொண்டே போகிறது. இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் ஆராய்ந்தால், தலை சுற்றும் அளவிற்கு பிரம்மாண்டமாய் பிணைந்து கிடக்கும் இந்த சமுதாயத்தைப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பிணைப்பில் எங்கு ஒரு சலனம் ஏற்பட்டாலும், அவ்வளவுதான்... பஞ்சம்... பட்டினி... பொருளாதார நெருக்கடி...

இதுதான் மனித சமுதாயம் பெற்றுள்ள மிகப் பரிய தனிப் பண்பு. விலங்குக் கூட்டங்களில் இதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நாம் மேலே கண்ட, உற்பத்தி சார்ந்த உறவுகளைத் தவிர்த்து, மனிதர்கள் தங்களுக்குள் குடும்பம், மதம், சாதி, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் அரசியல் என்று பல்வேறு தளங்களில் மேலும் மேலும் பிணைந்து கிடக்கிறார்கள். இவை அனைத்தும் சர்ந்ததுதான் சமுதாயம்.

இந்த சமுதாயம் எப்படித் தோன்றியது? ஆரம்பகால மனித சமுதாயம் இத்தனை பரிமாணங்களைக் கொண்டதாக, இத்தனை பிரம்மாண்ட மானதாக இருக்கவில்லை. உயிர் வாழ்வதற்கும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் மூளையைத் தவிர வேறெந்த வலிமையான உறுப்பையும் பெற்றிராத மனிதன், தன்னை மேலும் வலிமையாக்கிக் கொள்ள, ஒரு மூளையைவிட, பல மூளைகளை ஒன்றிணைப்பதற்காக கூட்டாக வாழத் தொடங்கினான் என்று கடந்த இதழில் கண்டோம்.

இப்படி வாழத் தொடங்கிய ஆதிகால மனிதர்கள், அதாவது குரங்கிலிருந்து மனிதர்களாக மாறிவந்த மனிதர்கள் முதலில் வெப்ப மண்டல பகுதிகளில்தான் வாழ்ந்தார்கள். குளிர் பிரதேசங்களில் வாழ்வதற்குத் தேவையான எந்த வசதியும் அவர்களிடம் கிடையாது. மனிதன் தோன்றிய இந்த வெப்ப மண்டலப் பகுதி ஒருவேளை இன்று அழிந்து போய்விட்ட குமரிக் கண்டமாகவோ (இலெமூரியா) அல்லது ஆப்பிரிக்காவாகவோ இருக்கலாம்.

இப்படி மனிதன் வாழ்ந்து வந்த நிலையை 'காட்டு மிராண்டி நிலை' என்று காரல் மார்க்ஸினுடைய தோழரான பிரடரிக் ஏங்கெல்ஸ் தன்னுடைய 'குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற புகழ்பெற்ற நூலில் எழுதுகிறார்.* அந்நூலில் அவர் சமுதாயம் தோன்றியது பற்றிக் கூறும் பிற விசயங்களையும் தொடர்ந்து பார்ப்போம்.

இன்று நாம் காணக்கூடிய மனித சமுதாயத்தின் நாகரிக நிலையை அடைய காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை என்று இரண்டு நிலைகளை கடந்துவர வேண்டியிருந்தது. இவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சர்ந்தவை. இரண்டு நிலைகளையும் மூன்று, மூன்று கட்டங்களாகப் பகுத்துப் பார்ப்போம்.**

காட்டுமிராண்டி நிலை:

காட்டுமிராண்டி நிலையின் முதல் கட்டத்தில் மனிதன் வெப்பமண்டலக் காடுகளில் பழங்கள், கொட்டைகள், கிழங்குகளைப் பறித்து, உண்டு வாழ்ந்து வந்தான். பேசக் கற்றிருந்தான். குரங்குகளைப் போல மரங்களில்தான் தூங்கினான். இக்காலக்கட்டம் பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்தது. இக்கட்டத்தில் மனிதன் இறைச்சியை உணவாகக் கொள்ளவில்லை அல்லது பச்சை இறைச்சியை எப்போதாவது உண்டான்.

மனிதன் நெருப்பைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டவுடன், இரண்டாம் கட்டம் துவங்குகிறது. ஏனெனில் இப்போது மனிதன் இறைச்சி சாப்பிட முடியும். ஒப்பீட்டளவில் அதிக சிரமம் இல்லாமல் கிடைக்கும் இறைச்சி நதிகளிலிருந்து பிடிக்கப்படும் மீன்களும், பிற நீர்வாழ் உயிரினங்களும்தான். இக்கட்டத்தில் மனிதன் கரடுமுரடான கற்கருவிகளையும் சிலம்பம், ஈட்டி போன்ற எளிய ஆயுதங்களையும் பயன்படுத்தினான். இவற்றைக் கொண்டு அவனால் குறைவான அளவில் விலங்குகளை வேட்டையாடவும் முடிந்தது. மீனுணவு தொடர்ச்சியாகக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி மனிதன் நதிக் கரைகளைப் பின்பற்றி உலகின் பல இடங்களுக்குச் சென்றான். பல கண்டங்களுக்குப் பரவினான். என்னதான் இறைச்சி அதிகமாகக் கிடைத்தாலும் உணவுக்குத் தட்டுப்பாடு இருந்து கொண்டேதான் இருந்தது. எனவே, காட்டுமிராண்டி நிலை முழுவதுமே மனிதனை மனிதன் உண்ணும் வழக்கம் நீடித்தது.

வில், அம்பு கண்டுபிடிப்புடன் மூன்றாவது கட்டம் தொடங்குகிறது. இப்போது மனிதன் தூரத்திலிருந்தே பரிய பரிய விலங்குகளைக் கூட சுலபமாக வேட்டையாட முடியும். வேட்டைத் தொழில் சகஜமானதாக மாறியது. நீண்டகாலம் வேட்டையில் ஈடுபட்டுப் பெற்ற அனுபவத்திலிருந்து தான் மனிதன் வில், அம்பு கண்டுபிடித்தான். அம்பு என்பது ஒரு பறவையின் உடலைப் போல இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். வேட்டை யாடும் பறவை தரையிலுள்ள ஒரு இரையைப் பிடிக்க இறக்கைகளை மடக்கிக் கொண்டு, வேகமாக வரும் போது அது எப்படிக் காட்சியளிக்குமோ அதுபோலத் தான் அம்பு இருக்கிறது. பறவையின் அலகைப் போல முன்புறம் கூரிய முனை, வால் பகுதியில் இறகு, இடையில் உடலுக்குப் பதிலாக ஒரு குச்சி. பறவையைக் கண்டுதான் மனிதன் அம்பு கண்டுபிடித்திருக்க வேண்டும். இயற்கையைப் பார்த்து மனிதன் இன்னும் சில பொருட்களை - கூடைகள் (பறவைக் கூடுகளைப் பார்த்துப் பின்னியிருக்கலாம்), கலயங்கள் (மண்டை ஓடுகள், சுரைக்காய் கூடுகளைப் பார்த்து செய்திருக்கலாம்) போன்றவற்றை செய்யத் தொடங்கினான். சில இடங்களில் இந்தக் கட்டத்தை எட்டிய மனிதர்கள் கிராமம் கிராமமாகக் கூட வாழத் தொடங்கினர். கற்களை பட்டை தீட்டி கருவிகளாகப் பயன்படுத்தினர். இவற்றைத்தான் நாம் புதிய கற்காலக் கருவிகள் என்று இன்று அறிகிறோம்.

இந்த மூன்று கட்டங்களிலுமே உள்ள பொது அம்சம் என்னவென்றால், இப்போது வரை மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவை அல்லது பொருட்களை எடுத்து பயன்படுத்தி வந்தான். உணவுக்காக அவன் உற்பத்தியில் ஈடுபடவில்லை. விவசாயம் அறியாதவனாகவோ அல்லது தனது எளிமையான கருவிகளைக் கொண்டு உணவுக்காகத் தேவைப்படும் அளவிற்கு உற்பத்தி செய்ய முடியாதவ னாகவோ இருந்தான்.

அநாகரிக நிலை:

மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அநாகரிக நிலையின் முதல்கட்டம் துவங்குகிறது. மரக் கலயங்கள் எரிந்துவிடாமல் இருக்க, சமைக்கும் போது அதைச் சுற்றி களிமண் பூசிய மனிதன், பின்னர் மரக் கலயங்கள் இல்லாமலேயே களி மண்ணைக் கொண்டு மண் பாண்டங்கள் தயாரித்திருக்க வேண்டும். பாத்திரத்தில் கரிப்பிடிக்காமல் இருக்க இன்றுவரைக் கூட சில கிராம மக்களும், பழங்குடி மக்களும் களிமண் பூசுவதை நாம் பார்க்கிறோம். இக்கட்டத்தில் பயிர் சாகுபடி அதன் துவக்க நிலையில் இருக்கிறது. குறைந்த அளவில் மனிதன் விலங்குகளைப் பழக்கவும் கற்றிருந்தான். வில் அம்பு கண்டுபிடிப்பு வேட்டைத் தொழிலை வளரச் செய்ததன் விளைவாகத் தான் விலங்குகளைப் பழக்கவும் மனிதன் கற்றுக் கொண்டான். வேட்டையாடிய போது நிறைய மாடுகளை வீழ்த்திய மனிதன் அடுத்த நாள் உணவுக்காக சிலவற்றை உயிருடன் (காயங்களுடன்) கிராமத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். கன்றுக்குட்டிகளை வளரவிட்டு பின்னர் சாப்பிடலாம் என்று திட்டமிட்டிருக்கலாம். இவ்வாறுதான் மனிதன் விலங்குகளைப் பழக்கினான்.

அநாகரிக நிலையின் இரண்டாம் கட்டம் என்பது விலங்குகளைப் பழக்கி பரிய மந்தையாக ஆக்குதல் அல்லது நீர் பாசனத்துடன் பயிர் சாகுபடி செய்தல் போன்ற விசயங்களோடு தொடங்குகிறது. இது வரைக்குமான காலத்தில் உலகம் முழுவதும் பொதுவாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டுதான் நாம் கட்டங்களைப் பிரித்தோம். நெருப்போ, கற்களோ, மரங்களோ, களிமண்ணோ உலகம் முழுவதும் கிடைக்கிறது. ஆனால் இந்தக் கட்டத்தை நிர்ணயிக்கும் பயிர் சாகுபடியும், விலங்குகளைப் பழக்குவதும், அந்தந்த புவியியல் சூழலில் எந்தப் பயிர், எந்த விலங்கு கிடைக்கிறது என்பதைப் பொறுத்து இடத்திற்கு இடம் மாறுவது ஆகும். உதாரணத்திற்கு, வட அமரிக்கா, தென் அமரிக்கா போன்ற கண்டங்களின் மக்களுக்கு மக்காச் சோளத்தைத் தவிர வேறு தானியங்கள் கிடைக்கவில்லை. அதே போல 'லாமா” என்ற ஒரே ஒரு விலங்கைத் தவிர வேறெதையும் அவர்கள் அறியவில்லை. அதனால் இக்கண்டங்களைச் சர்ந்த பூர்வீக அமரிக்கர்கள் அல்லது செவ்விந்தியர்கள் மக்காச்சோளம் மற்றும் சில காய்கறிகளை நீர்பாசனத்தோடு பயிரிடத் தொடங்கியதிலிருந்து அவர்களுக்கு இக்கட்டம் துவங்குகிறது. இந்தக் கட்டத்தைக் கடந்து இம்மக்கள் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன்னே, ஐரோப்பிய கண்டத்திலுள்ள மக்கள் பெரும் வளர்ச்சியை அடைந்து, துப்பாக்கிகளுடன் இந்தக் கண்டத்திற்குள் நுழைந்து பூர்வீக அமரிக்கர்களின் நிலங்களைக் கைப்பற்றி, அவர்கள் அதற்கு மேல் சுயமாக வளர்ச்சியடைய முடியாமல் தடுத்துவிட்டனர்.

இது ஒருபுறம். இன்னொரு புறத்தில் இந்த ஐரோப்பிய மக்களின் சமுதாய வளர்ச்சி எப்படி நடந்தது என்று பார்ப்போம். மத்திய ஆசியா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்த ஆரிய மற்றும் செமைட்டு இன மக்கள் விலங்குகளைப் பரிய மந்தைகளாகத் திரட்டியதன் மூலம் அநாகரிக நிலையின் இந்த இரண்டாவது கட்டத்தை அடைந்தனர். பரிய மந்தைகளுக்கு உணவளிக்க சரியான இடம் புற்கள் பெருமளவில் விளைந்து கிடக்கும் ஆற்றங்கரைச் சமவெளிகள்தான். பிற்காலத்தில் மெசபடோமியா என்றழைக்கப்பட்ட யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளின் சமவெளிப் பிரதேசத்தில் செமைட்டுகள், நிலையாகக் குடியேறினர். இன்று துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் என்று அழைக்கப்படும் நாடுகளில் ஓடும் அமுதார்யா நதி, கஜகஸ்தானில் ஓடும் சிர்தார்யா நதி, ரஷ்யாவின் டான் நதி, உக்ரைனின் நீப்பர் நதி மற்றும் இந்தியாவின் கங்கை நதி ஆகிய நதிகளின் சமவெளிகளில் ஆரிய இன மக்கள் குடியேறினர். விலங்குகளின் இறைச்சியும், பாலும் இவர்களுக்கு முக்கிய உணவாக இருந்தது. நீண்டகாலத்திற்கு இவர்கள் (ஆரியர்களும், செமைட்டுகளும்) பயிர் சாகுபடியை அறியவில்லை. மத்திய ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு துரத்தப்பட்ட ஆரியா;களின் ஒரு பிரிவினா; அங்கிருக்கும் குளிர் நிறைந்த காட்டுப் பகுதிகளில் விலங்குகளுக்குத் தீனி போடுவதற்காகவே பயிர் சாகுபடி செய்யத் துவங்கினர். பின்னர் சில காலத்தில் மனிதர்களும் உண்ணத் தொடங்கினர்.

ஏங்கெல்சின் இந்த நூல் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிப்பதற்கு முன்பு எழுதப்பட்டதாகும். அதனால் ஆரியர்கள் கங்கைச் சமவெளியில் நாகரிக வாழ்க்கையை மேற்கொள்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர்களைச் சாராத ஒரு மக்கள் பிரிவினர் சிந்து நதிச் சமவெளிகளில் ஏற்படுத்திய நகர நாகரிகம் பற்றி இந்த நூலில் விவரங்கள் ஏதுமில்லை. சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தைச் சர்ந்தவர்கள் என்று இன்னும் தெளிவாகக் கண்டுபிடிக்கவில்லை.*** அம்மக்கள் நகர நாகரிகமாக வளர்ந்திருந்தனர். உலகின் ஏராளமான பகுதி மக்களோடு வணிகம் செய்தனர். பரிய பரிய கட்டிடங்கள், தெப்பக்குளங்கள், கழிவு நீர் வாய்க்கால் அமைப்புகள் அங்கிருந்தன. வர்ளீயம், தாமிரம் மற்றும் வேறு சில உலோகங்களின் கலவையால் உருவாக்கப்பட்ட வெண்கலத்தைக் கொண்டு உருவாக்கிய கத்திகள் மற்றும் கருவிகளை அம்மக்கள் பயன்படுத்தினர். ஆனால், விவசாயம் பெரு வளர்ச்சியடையத் தேவையான 'இரும்பு” அம்மக்கள் அறியாத விசயமாக இருந்தது. குதிரை, சக்கரங்கள் போன்றவற்றையும் அம்மக்கள் அறியவில்லை. அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டும் முன்பே சிந்து சமவெளி நாகரிகம் ஏதோ காரணங்களால் அழிந்து விட்டது. என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.****

இவ்வாறு பல்வேறு மக்கள் சமூகங்களின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் இரும்பு கண்டுபிடிக்கப் பட்டதானது, சமுதாயத்தை ஒரு புதிய பாய்ச்சலுக்கு இட்டுச் சென்றது. ஆனால் சிந்து சமவெளி மக்களும், பூர்வீக அமரிக்கர்களும், இன்னும் பல மக்கள் சமூகங்களும் இக்கட்டத்தை அடைவதற்கு முன்பே அழிந்து போயினர் அல்லது தடுக்கப்பட்டனர். இரும்பின் கண்டுபிடிப்பு மனித சமுதாயத்தை அநாகரிக நிலையின் மூன்றாவது கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. இரும்புக் கனிமத்தை எளிமையாக உருக்கி எடுக்கும் தொழில்நுட்பத்தை மனிதர்கள் அறியாதவரை மிகவும் அதிக உழைப்பு செலுத்தி பெறப்பட்ட குறைவான இரும்பு பல கனிமங்களை விட (சில இடங்களில் தங்கத்தை விடவும்) மதிப்பு உயர்ந்ததாகக் கருதப்பட்டு வந்தது. பின்னர் இரும்பு பெருமளவில் கிடைத்த போது மனித வாழ்க்கையில் பரிய மாற்றம் ஏற்பட்டது. மற்ற கனிமங்களைப் போலல்லாது இரும்பு நெகிழ்வுத் தன்மையுடையதும், தேவையான உருவமைப்புகளை உண்டாக்குவதற்கு ஏதுவானதுமான கனிமம் என்பதே அதன் சிறப்பு ஆகும். இரும்பினாலான ஏர்கொழுவைக் கொண்டு பரிய நிலத்தை வேகமாக உழ முடிந்தது. இரும்புக் கோடாலிகளைக் கொண்டு மரங்களை வெட்டி, மண்வெட்டிகளைக் கொண்டு நிலத்தை சமப்படுத்தி, காடுகளை விளை நிலங்களாக ஆக்க முடிந்தது. விவசாயம் பெரும் பாய்ச்சலைச் சந்தித்தது. இக்காலக்கட்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் அளவு இதற்கு முந்தைய எல்லாக் கட்டங்களின் மொத்த உற்பத்தியை விட அதிகம். வரி வடிவ எழுத்துக்கள் தோன்றின. இக்கட்டத்திற்குப் பிறகுவரும் நாகரிக நிலையில்தான் நாம் எழுத்துப் பூர்வமான வரலாற்று ஆதாரங்களைப் பெற முடிகிறது. இக்கட்டத்தில் மக்கள் தொகை பெருமளவில் வளர்ச்சி பெறுகிறது.

அநாகரிக நிலையின் பல்வேறு கட்டங்களின் பொது அம்சம் என்னவென்றால், மனிதன், உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கினான். தன் உழைப்பின் மூலமாக இயற்கையின் உற்பத்தித் திறனை அதிகரித்தான். இந்நிலையின் இன்னொரு முக்கிய விசயம் என்ன வென்றால், கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர் சாகுபடியின் விளைவாக போதிய உணவு கிடைத்ததால் மனிதனை மனிதன் உண்ணும் வழக்கம் படிப்படியாகக் குறைந்து இல்லாமல் போனது.

மனித சமுதாயத்தின் தோற்றம் இப்படியாக இரண்டு நிலைகளை ஆறு கட்டங்களை கடந்து நாகரிக நிலையை அடைந்தது. அநாகரிக நிலையின் இறுதியில் மனிதனுக்கு பல்வேறு விசயங்கள் தரியும். மனித வாழ்க்கைக்குத் தேவையான இன்னும் பல சாதனங்களை மனிதன் தொடர்ந்து கண்டுபிடித்தான். பல்வேறு இயந்திரங்கள், உற்பத்தி சாதனங்கள், தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து மனித சமுதாயம் வளர்ந்து கொண்டே செல்கிறது. சமுதாயம் எப்படித் தோன்றியது என்பதற்கு மேற்கண்டவற்றை நாம் அறிந்து கொண்டது போதுமானதாய் இருக்கும். இனி நாம் அடுத்த விசயத்திற்குச் செல்வோம்.

(தொடரும்...)

குறிப்புகள்:

* மேற்கண்ட நூலில் பிரடரிக் ஏங்கெல்ஸ் அவர் காலத்தில் வாழ்ந்த லெவிஸ் ஹென்றி மார்கன் என்பவருடைய கருத்துக்களையே அதிகமாகப் பயன்படுத்துகிறார். மனித சமூக வளர்ச்சியை காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என்று வரையறுத்தது கூட மார்கனுடைய கண்டுபிடிப்புதான்.

** ஏங்கெல்சினுடைய நூலில் காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை ஆகிய இரண்டையும் கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் என்று மூன்று, மூன்றாகப் பிரிக்கிறார். மேற்கண்ட கடை, இடை, தலைக் கட்டங்கள் என்ற வார்த்தைகள் ஆரம்பநிலை வாசகா;களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க இங்கு அவற்றை முதல், இரண்டாம், மூன்றாம் கட்டங்கள் என்றே குறிப்பிடுகிறோம்.

*** சிந்து சமவெளி நாகரிகத்தைச் சர்ந்த மக்கள், திராவிடர்கள் என்றும் அதிலும் குறிப்பாக தமிழா;கள் என்றும், இல்லை, அவர்கள் மெசபடோமியாவில் நாகரிகம் அமைத்த அதே மக்கள்தான் என்றும், இல்லை இல்லை, இன்னும் சிந்துப் பகுதியில் வசித்துவரும் மேற்கண்ட யாரையும் சாராத ஒரு மக்கள் பிரிவினர் என்றும் இன்றுவரை பலவிதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பான்மையான ஆய்வாளா;கள் ஏற்றுக் கொள்ளும் கருத்து உருவாக இன்னும் நிறைய ஆதாரங்கள் தேவை. ஆனால், சிந்து சமவெளியின் மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது இது கண்டிப்பாக ஆரியர்களின் நாகரிகம் கிடையாது என்பது பெரும்பான்மை ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்ளும் கருத்தாகும்.

**** ஆரியப் படையயெடுப்பினால்தான் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது என்ற கருத்து சமீபத்திய கண்டுபிடிப்புகளுக்குப் பின்னர் பெரும்பான்மையான ஆய்வாளர்களால் மறுக்கப்படுகிறது. ஏனெனில் ஆரியர்களின் படையெடுப்பிற்கும் சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சிக்கும் பல நூறு ஆண்டுகால இடைவெளி உண்டு.

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014