இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வெள்ளி, ஜூலை 16, 2010

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வழக்குரைஞர்கள் உண்ணாநிலைப் போராட்டம்


உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி 09.06.2010 முதல் மதுரை உயர்நீதிமன்ற கிளை வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் பகத்சிங், இராசேந்திரன், ராஜா, எழிலரசு, ஜெயபாரதி மற்றும் நடராஜன் ஆகிய ஆறுபேரும் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் 17.06.2010 அன்று முதல் 7 வழக்கறிஞர்களும், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இந்த வழக்கறிஞர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறி மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சர்ந்த எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு 300 பேர் கைதானர்கள். தொழிலாளர் போராட்டத்தை வளர விடாமல் தடுக்க 2000 பேர் மீது வழக்கு போடப்பட்டது.

மதுரையில் பல்வேறு சனநாயக அமைப்புகள் ஒன்று சர்ந்து 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் - போராட்டக் கூட்டமைப்பு' என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி போராட்டத்தை அறிவித்தனர். பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், பெண்கள் எழுச்சி இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கூட்டமைப்பில் பங்குபெற்றன. இக்கூட்டமைப்பின் சார்பில் 16.06.2010 அன்று இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட 100 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். வழக்கறிஞர் போராட்டத்திற்கு சனநாயக சக்திகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவளித்தனர். 18.06.2010 நள்ளிரவில் மதுரையிலும், சென்னையிலும் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை தமிழகக் காவல்துறை கைது செய்து, சிறையிலடைத்தது. வழக்கறிஞர்கள் சிறையிலும் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து உறுதியுடன் நடத்தினர்.

21.06.2010 அன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதன் மதுரைக் கிளையிலும் தமிழில் வாதாட அனுமதியளிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். இருந்தபோதிலும், தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்குவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல்தான் முக்கியம் என்பதால் வழக்குரைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். தமிழை உயர்நீதிமன்ற மொழி ஆக்குவதற்கான கோப்பு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக டெல்லியில் நீண்டகாலமாகக் காத்துக் கிடக்கிறது. ஆனால், அதை நிறைவேற்ற வக்கில்லாத தமிழக அரசு, கோரிக்கையை நிறைவேற்றியதாக நாடகமாடியது.

இவ்வளவு போராட்டங்கள் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்து கொண்டிருக்கையில்தான் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு கோவையில் 400 கோடி செலவு செய்து செம்மொழி மாநாடு நடத்தியது. உயர்நீதிமன்றத்தில் தமிழை அனுமதிக்காத காங்கிரஸ் தலைவர்களும், குடியரசுத் தலைவரும் அம்மாநாட்டில் தமிழைப் பற்றி சிறப்புரை ஆற்றினர். இந்த முக்கியக் கோரிக்கையை நிறைவேற்ற வக்கற்ற ப.சிதம்பரம், தனது உரையில், பிள்ளைகளிடம் வீட்டிலாவது தமிழில் பேசுங்கள் என்று தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிலையில் மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வழக்கறிஞர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்தனர். தமிழை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க அனைத்து சனநாயக சக்திகளும், பொதுமக்களும், வழக்குரைஞர் களும் தொடர்ந்து இணைந்து போராட வேண்டியுள்ளது.

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014