இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், ஆகஸ்ட் 19, 2010

பெரு வெடிப்பு முதல் பொதுவுடைமை வரை பாகம் - 8

கடந்த இதழில் மனித சமுதாயம் என்பது என்ன, மனிதர்கள் எவ்வாறு ஒரு சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள், அத்தகையதொரு சமுதாயம் எப்படி படிப்படியாகத் தோற்றமெடுத்தது, என்பனவற்றைக் கண்டோம். காட்டுமிராண்டி நிலை மற்றும் அநாகரிக நிலையின் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் மனிதன், நாகரிக நிலையை அடைந்தான் என்பதைக் கண்டோம். இனி...

உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைப் பெறுவதற்கு மனிதர்கள் மிகக் கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருந்த காலக்கட்டமே வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இதுவரை நாம் இதைத்தான் கண்டோம். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையானதை விட அதிகமான பொருட்களை ‘உற்பத்தி’ செய்யத் தொடங்கியபோதுதான் ஏடறிந்த வரலாறு தொடங்குகிறது. அன்றாட உணவிற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்த மனிதன் எழுத்துருவை உருவாக்கி இலக்கியங்கள் படைப்பதற்கு சாத்தியமே இல்லாதிருந்தது. உற்பத்தி பெருக்கமே எழுத்துருக்கள், இலக்கியங்கள் ஆகியவற்றையும் அதன் வாயிலாக வரலாற்றுப் பதிவுகளையும் உருவாக்கியது.

சமுதாயம் தோன்றியபோது எப்படி இருந்ததோ அப்படியே இன்றுவரை இல்லை. ஏராளமான மாற்றங்களை - வளர்ச்சியை - சந்தித்து வந்துள்ளது. அடுத்த இதழில் நாம் ஏடறிந்த வரலாற்றுக் காலக்கட்டத்தில் சமுதாயம் எப்படி வளர்ச்சி பெறுகிறது, மாறி வருகிறது என்பதைப் பார்க்கவிருக்கிறோம். அதற்கு முன்பாக சமுதாயத்தின் அடித்தளம் எது, சமுதாயம் எப்படிக் கட்டமைக்கப் பட்டுள்ளது, என்பனவற்றை நாம் காண வேண்டியுள்ளது. இதன் பின்னணியில்தான் சமுதாய வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும்.

சமுதாயம் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது?

உழைப்புதான் மனிதனையே படைத்தது என்று முன்னர் கண்டோம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த உழைப்பின் ‘விளைவு’ என்ன? அதாவது உழைப்பின் மூலம் என்ன கிடைக்கிறது? அது, ‘உற்பத்தி’ ஆகும். உழைப்பின் நோக்கம்கூட என்ன? உற்பத்திதான். உற்பத்தி செய்யவே மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறான். ஒரு கற்பனை செய்து பார்ப்போம். இன்றிலிருந்து உலகில் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. என்ன நடக்கும்? ஒரு சில நாட்களுக்குள் ‘இருப்பில்’ உள்ள அனைத்துப் பொருட்களும் தீர்ந்துவிடும். 600 கோடி மக்கள் ‘உற்பத்தி’ செய்யாமல், இயற்கையில் தானாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களை உண்டு வாழ்ந்தால், அதுவும் சில நாட்களில் மொத்தமாகத் தீர்ந்துவிடும். பின்னர், மனிதனை மனிதன் அடித்துத் தின்ன வேண்டியதுதான்.

‘உற்பத்தி’ - இதுதான் மனித சமுதாயத்தின் அத்தனை அம்சங்களையும் தீர்மானிக்கக் கூடிய உயிர்நாடி. மனித சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி எந்த முறையில் நடக்கிறது என்பதுதான் - அதாவது உற்பத்தி முறை (Mode of Production) தான் - சமுதாயத்தின் அமைப்பையே தீர்மானிக்கிறது. அதாவது உற்பத்தி முறை வளர்ச்சி குன்றியதாக இருந்தால் சமுதாய அமைப்பும் வளர்ச்சி குன்றியதாக இருக்கும். முன்னது மிகவும் வளர்ந்த நிலையில் இருந்தால், பின்னதும் அவ்வாறே இருக்கும். இன்னும் இதை ஆழமாகச் சொல்ல வேண்டுமானால், சமுதாய அமைப்பில் எந்தவொரு சிறிய அல்லது பெரிய மாற்றம் நிகழ வேண்டும் என்றாலும் கூட அதற்கு முன்பாக உற்பத்தி முறையில் மாற்றம் நடக்க வேண்டும்.

சரி... இப்போது உற்பத்தி முறை என்றால் என்னவென்று பார்ப்போம். அதாவது உற்பத்தி என்னமுறையில் நடக்கிறது என்பதை நாம் எவை, எவற்றை வைத்து மதிப்பிடுகிறோம் என்று பரிசீலிப்போம். உற்பத்தி முறை என்பது இரண்டு விசயங்களை உள்ளடக்கியது. அவை உற்பத்தி சக்திகள் (Productive Forces) மற்றும் உற்பத்தி உறவுகள் (Relations of Production) ஆகும். இவை இரண்டைப் பற்றியும் தனித்தனியாகப் பார்ப்போம்.

உற்பத்தி சக்திகள்:

உற்பத்தி நடைபெறுவதற்கு என்னென்ன தேவைப்படுகின்றன என்று நாம் பட்டியலிட்டோமானால், அவைதான் ‘உற்பத்தி சக்திகள்’ ஆகும். விவசாய உற்பத்தி நடைபெறும் இடத்தில் என்னென்னவற்றை நாம் பார்க்கிறோம்? முதலில் விவசாயிகள். இந்த மனிதர்கள் ஏன் ‘விவசாயிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்? அவ்வாறு அழைக்கப்படுவற்கு அவர்களுக்கு என்னென்ன தகுதி தேவை? முதலில், விவசாயம் பற்றிய அறிவு வேண்டும், விவசாயம் செய்து அனுபவமும் பெற்றிருக்க வேண்டும், மேலும் தற்சமயம் அவர்கள் உற்பத்தி செய்வதற்குத் தேவையான உடல்ரிதியான, மனரிதியான திறன் வேண்டும். ஆகவே அனுபவம், அறிவு மற்றும் உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கக்கூடிய மனிதர்கள் ஒரு முக்கியமான ‘உற்பத்தி சக்தி’ ஆவர்.

அடுத்தபடியாக விவசாய உற்பத்தி நடைபெறும் அந்த இடத்தில் நாம் வேறென்னவற்றைக் காண்கிறோம்? மண்வெட்டி, ஏர்கொழு, களைக்கொத்தி, கதிரறுவாள், டிராக்டர் இன்னும் இதுபோன்ற கருவிகள். மனிதன் ஆண்டாண்டு காலமாய் உழைப்பில் ஈடுபட்டதன் மூலம் இதுபோன்ற கருவிகளை உண்டாக்கினான். இவற்றை உழைப்புக் கருவிகள் (Instruments of Labour) என்கிறோம். வேறு என்ன காண்கிறோம்? நிலம், நீர், மாடுகள் போன்றவை. இவை இயற்கைப் பொருட்கள். இவை உழைப்பின் ஆதாரப் பொருட்கள் (Objects of Labour) எனப்படுகின்றன. இவற்றின் மீது உழைப்புக் கருவிகளைக் கையாண்டுதான் மனிதன் உற்பத்தியில் ஈடுபடுகிறான். உழைப்புக் கருவிகளையும், உழைப்பின் ஆதாரப் பொருட்களையும் இணைத்து ‘உற்பத்தி சாதனங்கள்’ (Means of Production) என்று கூறுகிறோம். உற்பத்தி சாதனங்கள் என்பவை மற்றொரு முக்கியமான ‘உற்பத்தி சக்தி’ ஆகும்.

ஆக, அனுபவம், அறிவு மற்றும் உற்பத்தித் திறன் பெற்றிருக்கக்கூடிய மனிதர்களையும், உழைப்புக் கருவிகள் மற்றும் உழைப்பின் ஆதாரப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்தி சாதனங்களையும் சேர்த்துதான் நாம் ‘உற்பத்தி சக்திகள்’ என்று கூறுகிறோம்.

இந்த உற்பத்தி சக்திகள் என்பவை சமுதாயத்தில் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொறுத்துதான் அந்த சமூக அமைப்பும் இருக்கும். ஆனால் உற்பத்தி சக்திகள் மட்டுமல்ல, நாம் ஏற்கனவே கண்டது போல் உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் இரண்டும் இணைந்தது ஆகும். ஆக, உற்பத்தி உறவுகளும் சமுதாய அமைப்பைத் தீர்மானிக்கக் கூடியவைதான். அப்படியென்றால், ‘உற்பத்தி உறவுகள்’ என்றால் என்ன?
 
உற்பத்தி உறவுகள்:

‘‘உற்பத்தியின் போது மனிதர்கள் இயற்கையோடு மட்டும் உறவு கொள்வதில்லை. குறித்த வகையில் ஒத்துழைப்பது மற்றும் தங்கள் நடவடிக்கைகளைப் பரிமாறிக் கொள்வதன் வாயிலாகத்தான் அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்’’

மேற்கண்ட காரல் மார்க்சின் வரிகளின் மூலம் நாம் உற்பத்தி உறவுகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களுக்கு இடையிலான உறவுகள்தாம் உற்பத்தி உறவுகள்.
நாம் முன்னர் கண்ட அதே வயல்வெளிக் காட்சிக்குச் செல்வோம். அங்கிருக்கும் உற்பத்தி ‘சக்திகளை’ விட்டுவிடுவோம். அங்கிருக்கும் மனிதர்களுக்கு இடையே என்னனென்ன உறவுகள் இருக்கின்றன. இரண்டு விவசாயத் தொழிலாளர்களுக்கிடையில் என்ன உறவு நிலவுகிறது? இருவரும் சக உழைப்பாளிகள். அவரவர் உழைப்பினால் அவரவர் உயிர் வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் மற்ற தொழிலாளர்களுடன் கூட்டாக ஒத்துழைத்து வேலை செய்தால்தான் உற்பத்தி செய்யமுடியும். சரி... அந்த நிலத்தில் இன்னொருவரும் காணப்படுகிறார். அவரைத் தமிழ் சினிமா பாணியில் இப்படி வர்ணிக்கலாம்... சட்டையணியாத ஒருவர் பிடித்திருக்கும் குடைக்குக் கீழே வௌ;ளை வேட்டி சட்டையுடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார் ஒருவர். யார் அவர்? பண்ணையார், ஜமீன், நிலப்பிரபு என்று அழைக்கப்படுபவர். இவருக்கும், ஒரு விவசாயத் தொழிலாளிக்கும் இடையில் உள்ள உறவு என்ன?

பண்ணையார் நிலத்தில் கால் வைப்பதே கிடையாது. விவசாயத் தொழிலாளி உழுது, விதைத்து, அறுத்து தினமும் நிலத்தில் பாடுபடுகிறார். பண்ணையாருக்கு ‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும்’ பல ஏக்கர் நிலம் சொந்தம். அது அவரது தாத்தா, பாட்டன், கொள்ளுப் பாட்டன் காலத்திலிருந்து இவர்களது பரம்பரைக்குத்தான் சொந்தம். இவரைப் போலவே பரம்பரையில் யாருமே உழைத்ததில்லை. விவசாயத் தொழிலாளியிடமோ நிலம் கிடையாது அல்லது ஓரிரு ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. அவரது தாத்தா, பாட்டன், கொள்ளுப் பாட்டன் காலத்திலிருந்து அவர்கள் இதே நிலத்தில் தான் கூலி வேலை பார்த்து வருகின்றனர். உற்பத்தி யாரால் நடக்கிறது? விவசாயத் தொழிலாளர்களால்... உற்பத்தி யாருக்குச் சொந்தம்? நிலவுடைமையாளருக்கு. இவைதான் உற்பத்தி உறவுகள்.

நிலம், தொழிற்சாலை போன்ற ‘உற்பத்தி சாதனங்களை’ வெகுசிலர் தனி உடைமையாகக் கொண்டிருப்பது ஒருவகையான உற்பத்தி உறவு ஆகும். அவற்றை பொதுச் சொத்தாக வைத்து ‘அனைவரும்’ உழைப்பில் ஈடுபடும் போது அது வேறு வகை உற்பத்தி உறவாக அமைகிறது. ஆதி சமுதாயத்தில் நிலத்தின் பயன்பாடே அறிந்திராத மக்கள் அதைச் சொத்துடைமையாகக் கொண்டிருக்கவில்லை. அப்போதிருந்த ‘உற்பத்தி உறவு’ என்பது என்னவாக இருந்தது? எல்லோரும் கூட்டாக உழைத்தால்தான் ஒவ்வொருவரும் வயிற்றை நிரப்ப முடியும். கூட்டு உழைப்பு, ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி என்பதுதான் அங்கு ‘உற்பத்தி உறவு’ ஆகும். ஆனால், பண்ணையார் - கூலி விவசாயிக்கு இடையே நிலவுவது ‘சுரண்டல்’ வகைப்பட்ட உற்பத்தி உறவு ஆகும்.

உற்பத்தி (Production) -> பரிமாற்றம் (Exchange) -> விநியோகம் (Distribution) -> நுகர்வு (Consumption) -> மீண்டும் உற்பத்தி என்ற உற்பத்தியின் சுழற்சிப் போக்கில் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் உறவுகள்தாம் உற்பத்தி உறவுகள் ஆகும்.
உற்பத்தி முறையின் இரண்டு கூறுகளான உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் பற்றி பார்த்துவிட்டோம். இனி அடுத்ததற்கு செல்வோம்.

உற்பத்தி முறை - சமுதாயத்தின் அடிக்கட்டுமானம்:

சமுதாயத்தில் நாம் பல்வேறு விசயங்களையும், பல நிறுவனங்களையும் காண்கிறோம். பண்பாடு, கல்வி, அரசு, சமயம், ஆணாதிக்கம், தத்துவங்கள், கலை, இலக்கியம், சட்டம், வர்க்கங்கள் போன்றவற்றையும் உற்பத்தி முறையையும் நாம் சமுதாய அமைப்பில் காண்கிறோம். ஆனால் அனைத்தும் சமுதாயத்தில் ஒரே வகையான பாத்திரத்தை (Role) ஆற்றுவதில்லை. இவை ஆற்றும் பாத்திரத்தைக் கொண்டு இவற்றை இருபெரும் பிரிவுகளாக வகுக்கலாம். ஒன்று அடிக்கட்டுமானம். உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் இரண்டையும் உள்ளடக்கிய உற்பத்தி முறை மட்டுமே சமுதாயத்தின் அடிக்கட்டுமானமாகத் திகழ்கிறது. பண்பாடு, கல்வி, அரசு... உள்ளிட்ட மேலே கண்ட பிற அனைத்தும் மேல்கட்டுமானமாகத் திகழ்கின்றன. அடிக்கட்டுமானத்திற்கும், மேல்கட்டுமானத்திற்கும் உள்ள உறவு இதுதான்: அடிக்கட்டுமானம்தான் (அதாவது உற்பத்தி முறைதான்) சமூக இயக்கத்தை, சமூக அமைப்பைத் தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சமுதாய அமைப்பில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட வேண்டுமென்றாலும் அடிக்கட்டுமானமான உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். மேற்கட்டுமானம் விசயங்கள் (அதாவது பண்பாடு, கல்வி, அரசு உள்ளிட்டவை) என்னவாக இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும், யாருக்கானதாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அடிக்கட்டுமானமே தீர்மானிக்கிறது. ஆனால் மேல் கட்டுமானம் என்பது செயலற்று சும்மா இருப்பதில்லை. அது சமுதாயத்தின் அடிக்கட்டுமானத்தின் மீதும், சமுதாய அமைப்பின் மீதும் ஒரு தாக்கத்தை, செல்வாக்கை செலுத்துகிறது. அதாவது அடிக்கட்டுமானம் வளர்ச்சியடைவதை, சமுதாய அமைப்பு மாறுவதை தாமதப்படுத்தவோ அல்லது விரைவுபடுத்தவோ செய்கிறது.


சரி... ஏன் உற்பத்திமுறை அடிக்கட்டுமானமாகவும் மற்றவை மேல்கட்டுமானமாகவும் இருக்கின்றன?

முதலில் இதைச் சுருக்கமாக விளக்குவதென்றால், இப்படிச் சொல்லலாம்: ஒரு மனிதனுக்கு முதல் தேவை என்ன? உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் தானே? இதைப் பூர்த்தி செய்து கொண்ட பின்புதான் மனிதன் பண்பாடு, கல்வி, மதம், இலக்கியம் போன்றவற்றைப் பற்றி சிந்திக்க முடியும். சமுதாய வரலாற்றில் கூட மேற்கட்டுமான விசயங்கள் அனைத்துமே ‘உற்பத்தி’ தோன்றியபின்புதான் தோன்றின என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதனால்தான் மனிதனின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யும் உற்பத்திமுறை சமுதாய அடிக்கட்டுமானமாக இருக்கிறது.

இன்னும் இதைக் கொஞ்சம் கூடுதலாக தத்துவார்த்த ரிதியாகப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

தத்துவ நோக்கில் பார்க்கும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமே இரண்டு விசயங்களால் ஆனதுதான். ஒன்று பொருள். மற்றொன்று கருத்து. விஞ்ஞானக் கருவிகளின் துணை கொண்டோ, துணை இல்லாமலோ ஐம்புலன்களால் உணர முடிந்த - மனதிற்கு வெளியே எதார்த்தத்தில் உள்ள - அனைத்தையும் ‘பொருள்’ என்கிறோம். சிந்தனையின் மூலம் மட்டுமே, மனதில் யோசிப்பதன் மூலம் மட்டுமே உணர முடிந்தவற்றை ‘கருத்து’ என்கிறோம். கல், மண், மனிதன், சமுதாயம், பிரபஞ்சம், பூமி, சூரியன், எலக்ட்ரான், புரோட்டான் போன்ற அனைத்துமே பொருள். நல்லது, கெட்டது, உயர்வு, தாழ்வு, ஒழுக்கம், ஒழுங்கீனம், அன்பு, காதல், வெறுப்பு, கடவுள், பேய் போன்ற அனைத்தும் கருத்து. சமுதாயத்தைப் பொறுத்தவரை ‘உற்பத்தி’ என்பதுதான் பொருள்சார்ந்த கூறாகும். அதுவே எதார்த்தத்தில் மனதிற்கு வெளியே நடக்கக் கூடியது ஆகும். ஆனால் பண்பாடு, மதம், கல்வி, அரசியல், ஆணாதிக்கம், கலை, இலக்கியம் போன்றவை கருத்து சார்ந்த கூறுகள் அல்லது ‘கருத்தியல்கள்’ ஆகும்.

தத்துவத் துறையில், கருத்து முதன்மையானதா? பொருள் முதன்மையானதா? கருத்து பொருளைத் தீர்மானிக்கிறதா? பொருள் கருத்தைத் தீர்மானிக்கிறதா? என்ற விவாதம் முக்கியமானதாகும். கருத்துமுதல்வாதிகள் மற்றும் மதவாதிகள் கருத்தே முதன்மையானது என்றும், பொருள்முதல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகள் பொருளே முதன்மையானது என்றும் கூறுவர். விமானம் பற்றிய கருத்துதான் விமானம் என்ற பொருளைப் படைத்தது என்று கருத்துமுதல்வாதிகள் கூறுவர். ஆனால், விமானம் என்ற கருத்தையே பறவை என்ற பொருளைக் கண்டுதான் மனிதன் உருவாக்கினான், எனவே, பொருள்தான் முதன்மையானது என்று பொருள் முதல்வாதிகள் நிறுவுகின்றனர். இன்று புதிய விஞ்ஞான ஆய்வுகள் பொருள்முதல்வாதம்தான் சரி என்று மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன.

ஆகவே, பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, ‘கருத்தியல்’களான மேல்கட்டுமான விசயங்கள், ‘பொருள்’ரிதியான உற்பத்தி முறையால்தான் தீர்மானிக்கப்படுகின்றது என்பதே உண்மை. இனிவரும் பாகங்களில் வரலாற்று ரிதியாகப் பார்க்கும் போதும், இதே விசயம் எப்படி உண்மையாகிறது என்பதைப் பார்ப்போம்.

இதுவரை கண்டவற்றிலிருந்து நாம் சிலவற்றைத் தொகுத்துக் கொள்வோம். இந்த சமுதாயத்தின் அடித்தளமாக இருந்து அதை மாற்றி அமைப்பதில் தீர்மானகரமான பங்கு வகிப்பது சமுதாயத்தின் உற்பத்தி முறைதான். அதாவது ஒரு சமுதாயத்தில் என்ன கருவிகள், சாதனங்கள், எத்தகைய உற்பத்தித்திறன் கொண்ட மனிதர்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது (உற்பத்தி சக்திகள்) என்பதும், அச்சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே எத்தகைய சொத்துடைமை அமைப்பு (உற்பத்தி உறவுகள்) நிலவுகின்றன என்பதும்தான் அச்சமுதாய அமைப்பைத் தீர்மானிக்கின்றன. எனவே, உற்பத்தி முறையில் மாற்றம் செய்யாமல், பண்பாட்டு ரிதியாகவே, மத ரிதியாகவோ, கலை, இலக்கிய ரிதியாகவோ மட்டும் சமுதாயத்தை மாற்றிவிட முடியாது. காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்றோர் வகுத்தளித்த சமுதாயம் பற்றிய கோட்பாடு, மற்ற அறிஞர்களின் கோட்பாடுகளிலிருந்து இந்த இடத்தில்தான் வேறுபடுகிறது.

(தொடரும்...)

- மனுவேல்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014