இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், ஆகஸ்ட் 19, 2010

காஷ்மீர்: இந்தியாவின் துரோக வரலாறு

பூலோக சொர்க்கம் என வர்ணிக்கப்படும் காஷ்மீர் இன்று தினந்தோறும் நடைபெறும் கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. அன்றாட நிகழ்வாக பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வழியாக காஷ்மீர் பிரச்சனையை பார்த்தோமானால் சாலைகளில் பொது மக்கள் சுடப்பட்டு இறந்து கிடப்பதும், நவீன ஆயுதங்களுடன் இராணுவ வீரர்கள் தெருக்களில் அணிவகுப்பதும், சாலைகளில் வண்டிகள் தீப்பற்றி எரிவதும், ஊரடங்கு உத்தரவின் மூலம் வெறிச்சோடி கிடக்கும் தெருக்களும், போராட்டக்காரர்கள் இராணுவத்தினர் மீது கற்களை எறிவதுமான நிகழ்வுகள் காட்டப்படுகின்றன.

காஷ்மீரிகளின் போராட்டக் குணத்தைப் பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. நவீன ஆயுதங்களுடன் இருக்கும் இராணுவப் படையை எதிர்த்து நிராயுதபாணிகளாய் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரக்கமற்ற முறையில் இந்திய இராணுவம் போராடக்கூடிய மக்களைக் கொன்றொழிக்கிறார்கள். காஷ்மீர் பிரச்சனையை, காஷ்மீர் மக்கள் பிரச்சனையாகப் பார்க்காமல் இந்திய - பாகிஸ்தான் பிரச்சனையாய்ப் பார்ப்பது, காஷ்மீர் போராளிகளை வெளிநாட்டுத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பது போன்ற செயல்களில் இந்திய அரசியல்வாதிகள் (இவ்விசயத்தில் காங்கிரசும், பி.ஜே.பி.யும் ஒன்றுபடுகிறார்கள்) தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். காஷ்மீரிகள் தங்கள் இன்னுயிர்களை இழந்து தொடர்ந்து போராடும் தேவைதான் என்ன? இந்திய அரசு 6,67,000 இராணுவ, துணை இராணுவத்தினை அமர்த்தி வருடத்திற்கு 6,000 கோடி ரூபாய் செலவு செய்து காஷ்மீர் மண்ணைக் காக்க அவசியம்தான் என்ன? பாகிஸ்தான் அரசு காஷ்மீரை வைத்துதான் அரசியலை நடத்திக் கொண்டிருப்பதேன்? போன்ற கேள்வி களுக்கு வரலாற்றில் விடை தேடுவோம்.

காஷ்மீர் முகலாய, ஆப்கானிய, சீக்கிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்கிடமிருந்து டோக்ரா (Dogra) வம்சத்தைச் சேர்ந்த குலாப்சிங், ஜம்முவை விசுவாசத்தின் பரிசாக பெற்று ஆண்டு வந்தபோது தான் ஆங்கி லேயருக்கும் சீக்கியருக்கும் போர் ஏற்பட்டது. சீக்கிய அரசுக்கு துரோகம் செய்து குலாப் சிங் ஆங்கிலேயரை வெற்றி பெறச் செய்தான். அதற்குப் பரிசாக காஷ்மீரை 75 இலட்சம் ரூபாய்க்கு ஆங்கிலேயர் விற்று விட்டனர். அப்பொதுதான் குலாப் சிங்கிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையில் ‘அமிர்தசரஸ் உடன்படிக்கை’ (1846) ஏற்பட்டது. இவ்வொப்பந்தத்தின்படி ஆங்கிலேய அரசு அதிகபட்சமாக காஷ்மீருக்குப் பாதுகாவலனாகவே இருந்தது. முக்கியமான விசயம் என்னவென்றால், என்றுமே காஷ்மீர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது கிடையாது.

1832க்கு பிறகு தோன்றிய ஷேக் அப்துல்லா தலைமையிலான இயக்கம் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் சேர்ந்த மதச்சார்பற்ற காஷ்மீர் தேசிய இயக்கமாக விளங்கியது. இதுதான் தேசியவாத காங்கிரஸாக உருப்பெற்றது. காஷ்மீரிகள் டோக்ரா வம்சத்தினர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தனர். 1942 இல் இந்தியாவில் நடந்த ‘வௌ;ளையனே வெளியேறு’ இயக்கத்தைப் போலவே 1946 இல் ‘டோக்ராவே, காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்ற இயக்கத்தை ஷேக் அப்துல்லா நடத்தினார்.

இந்தியத் துணைக் கண்டத்திற்கு சுதந்திரம் அளிப்பது உறுதியாகிவிட்ட காலக்கட்டத்தில் மன்னராக இருந்த குலாப் சிங்கின் பேரன் ஹரிசிங்குக்கு எதிராக தேசிய மாநாட்டுக் கட்சி செயல் பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1947 இல் இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரம் பெற்ற பின்பு இந்திய - பாகிஸ்தான் பிரிவினை கலவரம் உச்சத்தில் இருந்தது. அதன் தாக்கம் ஜம்முவிலும் எதிரொ லித்தது. முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். 5 இலட்சம் அளவிற்கு முஸ்லிம்கள் ஜம்மு விலிருந்து வெளியேறினர். இதை எதிர்க்கும் விதமாக மன்னருக்கு எதிராக முஸ்லீம்கள் ஜம்மு பகுதியில் போராட்டத்தில் ஈடு பட்டனர். இவர்களுடன் ஆப்கானிஸ் தானின் எல்லையோர பாகிஸ்தான் பகுதியில் வசிக்கும் ‘பதான்’ ஆதிவாசிகளும், மன்னர் படைகளில் இருந்த முஸ்லிம்களும், அக்பர்கான் என்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் தலைமையில் ஜம்முவிற்குள் நுழைந்தனர். இந்தப் பழங்குடிப் படையினர் முஸ்லீம்கள், சீக்கியர், இந்து என வித்தியாசமில்லாமல் கொள்ளைகளில் ஈடுபட்டனர். இந்தப் படையெடுப்பைத் தடுக்க முடியாத மன்னர் இந்தியாவின் உதவியை நாடினார். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுதியதும், காஷ்மீர் சிக்கலின் தொடக்கப் புள்ளியும் இதுதான். இந்தியா - காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையை நிபந்தனையாக்கி, இந்திய அரசு பழங்குடிப் படையுடன் போரிட்டது. அவர்களை விரட்டிச் சென்ற இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. இதை சாக்காகச் சொல்லி பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. இந்திய - பாகிஸ்தான் முதல் போர் முடிவுக்கு வந்தபோது இரண்டு இராணுவம் எவ்வளவு முன்னேறி உள்ளதோ அதை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என உடன்படிக்கை ஏற்பட்டது. பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருந்தது. இந்த கைப்பற்றிய பகுதியின் எல்லைதான் பிறகு எல்லைக் கோடாக (LOC) நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதியை ‘சுதந்திரக் காஷ்மீர்’ என பாகிஸ்தானும், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர்’ (POK)  என இந்தியாவும் அழைத்துக் கொண்டனர்.

இந்தியா பாகிஸ்தான் போரினால் காஷ்மீர் புவியியல் ரிதியாக மட்டும் பிரியவில்லை. அங்கு வசிக்கும் ஒரே இன மக்களும் பிரிந்தனர். தன் சொந்த பந்தங்கள் அருகருகில் இருந்தும் கூட சந்திக்க முடியாத சூழல் நிலவுகிறது. இது காஷ்மீரின் வரலாற்றுச் சோகம் ஆகும்.

26.10.1947 அன்று காஷ்மீரைத் தற்காலிகமாக இணைப்பதற்கான இணைப்பு உடன்படிக்கை மன்னர் ஹரிசிங்கிற்கும் இந்திய அரசிற்கும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை இந்திய அரசாங்கம் பெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவின்படி சுயாட்சி உரிமைகள் கொண்ட மாநிலமாக காஷ்மீர் இருக்கும். இதையடுத்து இந்திய அரசு ஒரு வாக்குறுதி அளித்தது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு பொதுவாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவை காஷ்மீரிகளே தீர்மானிப் பார்கள் என நேரு அவர்கள் வானொலியில் (02.11.1947) தெரிவிக்கிறார். இதன் பிறகு நடந்ததெல்லாம் காஷ்மீரிகளுக்கு எதிராக நடந்தது. 370 ஆவது பிரிவின்படி சுயாட்சி உரிமையை இந்திய அரசு நீர்த்துப் போகச் செய்தது. 
1951 இல் ஜம்மு - காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. ஷேக் அப்துல்லா பிரதமர் ஆனார். ஜனாதிபதியாக காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் மகன் கரண் சிங் பதவியேற்றார். ஜனாதிபதியை சட்டமன்றம்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால் நேருவின் வற்புறுத்தலினால் கரண்சிங் ஜனாதிபதியானார்.

பிரஜா பரிசத் (ஆர்.எஸ்.எஸ். இன் ஒரு பிரிவு) என்னும் இந்து அமைப்பு மாநில சுயாட்சியை எதிர்த்தது. காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியது. இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதனால் ஷேக் அப்துல்லா, நேருவை மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றில் நம்பிக்கையற்றவர் எனப் பேசலானார். இந்தக் கருத்து வேறுபாட்டால் பேச்சு வார்த்தை நடத்தி, ‘டெல்லி ஒப்பந்தம்’ ஜூலை 24, 1952 இல் கையெழுத்தானது. இதில் காஷ்மீர் சுயாட்சி பற்றி வலியுறுத்தப்பட்டது. டெல்லி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கழித்து ஷேக் அப்துல்லாவுக்கு ரகசிய குறிப்பில் பொதுவாக்கெடுப்புக்கு சாத்திய மில்லையென 1948 இல் முடிவு செய்துள்ளதாக நேரு தெரிவித்தார். இந்தியாவின் தெற்காசிய பிராந்திய விரிவாக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள, இறுதியாக நேரு, காஷ்மீரின் சுயாட்சி உரிமையை இரத்து செய்தார். பொது வாக்கெடுப்பு வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டார். இதை வைத்துப் பார்க்கும் போது, நேரு எந்தவித ஜனநாயக விவாதத்திற்கும் தயாராக இல்லை எனத் தெரிகிறது. காஷ்மீர் எக்காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தானுக்குப் போய்விடக்கூடாது என்பதில் மட்டும் அவர் குறியாக இருந்தார் ஜனநாயகத்தைப் பற்றியோ, காஷ்மீரிகளின் பிரச்சனை பற்றியோ அவருக்குக் கவலை இல்லை.

ஷேக் அப்துல்லாவுடன் நேரு

இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ஷேக் அப்துல்லா என்று குற்றஞ்சாட்டி 1953 இல் காஷ்மீர் அரசை கலைத்துவிட்டு நேரு அவரைச் சிறையிலடைத்தார். காஷ்மீரின் பிரதமர் பதவி, முதல்வர் பதவியாகவும், ஜனாதிபதி பதவி ஆளுநர் பதவியாகவும் மாற்றம் பெற்றன. இந்த மாதிரியான செயல்பாடுகள் காஷ்மீரிகளுக்கு முரணாகவே இருந்தது. அதனால் அம்மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடலானார்கள். அதைக் கடுமையாக ஒடுக்குவதற்கு இந்திய அரசு தயங்கியதும் இல்லை.

1957 இல் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகிறது. காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு என்பதெல்லாம் கிடையாது என நேரு அறிவிக்கிறார். இது திடீரென்று வந்த அறிவிப்பு அல்ல. பத்தாண்டுகளாக படிப்படியாக நகர்த்தப்பட்ட சூழ்ச்சிதான். ‘இந்தியாவின் தலைசிறந்த ஜனநாயகவாதி’யான நேருவின் ஆட்சி காலத்திலே ஜனநாயக விரோதமாக காஷ்மீர் இந்தியாவுடன்  இணைக்கப்பட்டது. அவருக்குப் பின்பு வந்த ஆட்சி யாளர்களும் இதைக் கட்டிக்காக்கும் பணியைச் செவ்வனே செய்து  கொண்டு இருக்கின்றனர்.

இந்தியாவில் ஜனநாயகப் படுகொலை நடைபெறுகிறது என்றால், பாகிஸ்தானில் காஷ்மீர் பற்றி எதிரான கருத்துக்களை வெளியிடுவதற்கே யாருக்கும் உரிமை இல்லை என அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் சொல்கிறது (காஷ்மீருக்கான தனித்த அரசமைப்புச் சட்டம் - பிரிவு 7). பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் (POK) பகுதியில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பாகிஸ்தானோடு காஷ்மீரை இணைக்கப் பாடுபடுவதாக ஒப்புதல் கையெழுத்திட வேண்டும் என்பது விதியாக உள்ளது. காஷ்மீர் (POK) அரசைக் கலைக்கும் அதிகாரமும் பாகிஸ்தான் அரசுக்கு உண்டு. பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களின் கருத்துக்களைப் பொருட்படுத்துவ தில்லை. காஷ்மீர் விடுதலையை ஆதரிக்கவுமில்லை. தனது இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக காஷ்மீர் பிரச்சனையைப் பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்குத் தன் ஊழல்களை மறைக்கவும், தன் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு காஷ்மீர் பிரச்சனை உதவிகரமாக இருந்து வருகிறது.

1990 ஜூலை 5 இல் இந்தியாவில் அமலாக்கப்பட்ட ‘ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - ஜம்மு & காஷ்மீர்’{Armed Forces Special Power Act (AFSPA - JK)} மற்றும் ‘ஜம்மு - காஷ்மீர் கலகப்பகுதிச் சட்டம்’ ஆகிய இரு சட்டங்களும், ‘யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், ஐந்து பேர்களுக்கு மேல் கூடினால் கைது செய்யலாம், பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் நபர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தலாம், இரண்டு ஆண்டுகள் பிணையின்றி சிறையில் அடைக்கலாம்’ என்று கூறுகின்றன. காவல்துறையும் இராணுவமும் சேர்ந்து பொதுமக்களையும் போராட்டக்காரர்களையும் நிரந்தர முடமாக்குவது, சித்திரவதை செய்தல், சிறைக் காவலில் கொல்வது, போலி மோதல்களில் கொல்வது, ஆட்களைக் காணாமலாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ‘உண்மையறியும் குழு அறிக்கை’* தெரிவிக்கிறது. மேலும் சராசரியாக ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடக்கின்றன. ஐந்தாண்டுகளில் 20,000 பேர் இறந்துள்ளனர். இது குறைந்தபட்ச அளவு. உண்மையில் 40,000 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என ஆய்வறிக்கை கூறுகிறது.


 1999 - 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் 
அப்பாவி மக்களை இந்திய இராணுவம் 
படுகொலை செய்து புதைத்த புதைகுழிகள்



மற்றொரு ஆய்வறிக்கையான ‘சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின்’** அறிக்கை 1999 - 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் படுகொலை செய்யப்பட்டு பல்வேறு புதைகுழிகளில் புதைக்கப்பட்ட சடலங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 2,373 புதைகுழிகளில் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. அதில் 87.9 விழுக்காடு இறந்தவர்களின் பெயர் ஏதும் குறிப்பிடவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கபட்டிருந்தன. 23 புதைகுழிகளில் 3 இலிருந்து 17 சடலங்கள் வரை புதைக்கப்பட்டிருந்தன என இவ்வறிக்கை தெரிவிக்கிறது. காஷ்மீரில் நடந்த ‘மோதல் கொலைகள்’ யாவும் போலி மோதல் கொலைகளே எனக் கூறுகிறது. மேலும் அங்கு நடந்த 50 மோதல் படுகொலைகளில் பலியானவர்கள் 39 பேர் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவரும், 7 பேர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படவில்லை. இவர்களில் 49 பேரை ‘வெளிநாட்டுத் தீவிரவாதி’ என்றும், ஒருவரை ‘உள்;ர் தீவிரவாதி’ என்றும் முத்திரை குத்திக் கொன்றதாக அறிக்கை தெரிவிக்கிறது. 1989 - 2009 இடைப்பட்ட காலங்களில் 70,000 சாவுகள் நடந்துள்ளன. இக்கொலைகள்  அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை எனவும் அறிக்கை கூறுகிறது.


காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் வெளியிலிருந்து தூண்டி விடுவதாகவும், ஆயுதப் பயிற்சி கொடுப்பதாகவும், இன்று உள்ள மன்மோகன் அரசு வரை தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இந்தப் பிரச்சனையில் பாகிஸ்தான் பின்னணியில் செயல்படுகிறது என வைத்துக் கொண்டாலும் ‘காஷ்மீர் விடுதலைக்கான கோரிக்கை’ நியாயமானதுதான்! ஏன் அதைப் பற்றிப் பேசவே மறுக்கிறார்கள். இந்திய அரசும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தான்! கிழக்குப் பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) விடுதலையின் போது இந்திய இராணுவம் முன்னின்று பிரித்துக் கொடுத்தது. ஈழ விவகாரத்தில் ஆரம்பத்தில் இலங்கை அரசை அச்சுறுத்துவதற்காக தமிழ் போராளிக் குழுக்களுக்கு ஆதரவளித்ததும், இந்தியாவில் வைத்து ஆயுதப் பயிற்சி வழங்கியதுமான செயல்களில் ஈடுபட்டது. இவ்வளவு ஏன்? இன்று பாகிஸ்தானிற்குள்ளிருந்து தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் ‘பலுச்சிஸ்தான்’ போராளிகளுக்கு இந்தியா உதவி செய்து வருவது ஊரறிந்த விசயம். இரண்டு நாடுகளுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கின்றனர்.

காஷ்மீர் மக்களை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே ஆக்கிரமிப்பாளர்கள்தான். இந்நாடுகள் தங்கள் சொந்த நலனுக்காக காஷ்மீரிகளின் விருப்பங்களை மட்டுமில்லாமல் அவர்களையும் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் மக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக இந்தியாவும், பாகிஸ்தானும் துப்பாக்கி முனையில் கட்டிப் போட முடியாது.

- பால்பாண்டி

--------------------------------------

குறிப்புகள்:

* இந்தியாவின் 8 மாநிலங்களைச் சேர்ந்த 13 குடியுரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு வெளியிட்ட காஷ்மீரின் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆய்வறிக்கை

** முனைவர் அங்கனா சட்டர்ஜி, பர்வேசு இம்ரோசு, கௌதம் நவ்லாக்கா, ஜாஹிர் உத்தீன், மிஹிர் தேசாய், குர்றம் பர்வேசு ஆகியோர் அடங்கிய குழு

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014