இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், ஆகஸ்ட் 19, 2010

கயர்லாஞ்சி: சாதிப் படுகொலையும் நீதிப் படுகொலையும்

‘காலம் தாழ்த்தி கிடைக்கும் நீதி அநீதிக்கு சமமானது’ என்பார்கள். இங்கு காலம் தாழ்த்திகூட நீதி கிடைப்பதில்லை. இலாப வெறிக்காக ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களைக் கொன்று குவித்த கொலைகாரர்களைக் காப்பாற்றி, நீதியை மறுத்து மீண்டுமொரு படுகொலையை போபால் மக்கள் மீது அரங்கேற்றிய நீதிமன்றத் தீர்ப்பைப் போலவே இன்னொன்றும் வந்திருக்கிறது. தலித் குடும்பமொன்றை ஊர் மையப்பகுதியில் நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி அதன் பின்பு படுகொலை செய்த சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளுடன் கைகுலுக்கி, இனிவரும் காலங்களில் ஆதிக்க சாதியினர் எவரும் தலித் மக்கள்மீது இது போன்ற கொடூரங்களை நிகழ்த்திக் கொள்ள ‘லைசன்ஸ்’ வழங்கியிருக்கிறது கயர்லாஞ்சி தீர்ப்பு.

மதக் கோட்பாடுகளைக் கொண்டு சாதிவெறியை நிலைநாட்ட வன்முறையை கையிலெடுப்பவர்களுக்கும் சரி, வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சரி, அதுதான் விதி என்று கூறும் இந்து சமூகக் கட்டமைப்பை இடித்துத் தரைமட்டமாக்க பௌத்த மதம் தழுவி, சாதி ஒழிப்பிற்கு போராடிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரா மண் இன்று தலித் மக்களின் இரத்தத்தால் நனைக்கப்பட்டு வருகிறது. பந்தாரா மாவட்டம் - கயர்லாஞ்சி கிராமத்தில் அம்பேத்கரின் கருத்தை ஏற்று பௌத்த மதம் தழுவி, ஓரவிற்குத் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ளுமளவிற்கும், சுயமரியாதையுடனும் வாழ்ந்து வந்த குடும்பம்தான் பய்யலால் போட்மாங்கே குடும்பம். பய்யலாலின் மனைவி பெயர் சுரேகா (வயது 44). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் - பிறவியிலேயே கண் பார்வையற்ற ரோஷன் (23), சுதிர் (21) ஆகிய இரண்டு மகன்களும், பிரியங்கா (18) என்ற ஒரு மகளும் - இருந்தனர். அந்த ஊரிலேயே அதிகம் படித்த குடும்பம். மேலும், ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். தாழ்த்தப்பட்டவன் அடிமைத் தொழில் பார்க்க வேண்டும் என்ற மனுஸ்மிருதி சட்டத்தில் இயங்கும் இந்து மதத்தை விட்டு வெளியே வந்தது மட்டுமில்லாமல் சுயமரியாதையோடு வாழ விரும்பியதுதான் அக்குடும்பம் செய்த மிகப்பெரிய தவறு. இவைதான் அவர்கள் மீது சாதி வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டதற்கு அடிப்படை காரணங்கள்.

வண்டி செல்வதற்கான சாலை என்று சொல்லி ஏற்கனவே இரண்டு ஏக்கர் நிலத்தை அவர்களிடமிருந்து பிடுங்கிய ‘குன்பி’ என்ற ஆதிக்க சாதியினர் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் வெட்ட வேண்டும் என்று மீண்டும் நிலப்பறிப்பில் ஈடுபட்டனர். விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிகையில்தான் தாம் இருக்கிறோம் என்றாலும், ஆதிக்க சாதியினரின் அரக்கக் கரங்களைத் துணிவோடு எதிர்த்தார் சுரேகா. இந்நிகழ்விற்குப் பிறகுதான் சாதிவெறித் தீயால் தலித் மக்களைக் கொளுத்த சாதி வெறியர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தனர். இதற்கிடையில் கூலித் தகராறில் தலித் மக்களுக்கு ஆதரவாய் நின்ற சித்தார்த் (சுரேகாவின் உறவினர்) சாதி வெறியர்களால் தாக்கப்படுகிறார். இச்சம்பவத்தை காவல்துறையில் புகார் செய்தனர். பெண்கள் சுடுகாட்டிற்கு கூட பயமில்லாமல் செல்வார்கள், ஆனால் காவல் நிலையம் செல்ல பயப்படுவார்கள் என்ற மரபு இருந்த போதிலும், ‘சாதி வெறியர்கள்தான் சித்தார்த்தைத் தாக்கினர், இதற்கு நான் சாட்சி’ என நெஞ்சுரத்துடன் கூறினார் சுரேகா. இதனால் காவல்துறை சித்தார்த்தைத் தாக்கிய 12 பேரைக் கைது செய்து அன்றே பிணையில் விட்டது.

கட்டவிழ்த்து விடப்பட்ட சாதி வெறி:

ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் சாதித்தீக்கு எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்த இச்சம்பவத்தால் ஆவேசமடைந்த ஆதிக்க சாதி வெறியர்கள் 50 பேர் கொண்ட கும்பல் பய்யலால் வீட்டிற்குச் சென்றது. அங்கு, பய்யலாலும், சித்தார்த்தும் இல்லை. அங்கிருந்த சுரேகா, சுதிர், ரோஷன், பிரியங்கா ஆகிய நால்வரையும் தரையில் போட்டு தரதரவென்று இழுத்துக் கொண்டு ஊரின் மையப்பகுதிக்கு வந்தனர். தாங்கள் அரங்கேற்றும் சாதிவெறிக்கு ஆதரவாயிருந்த அவ்வூர் பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் நால்வரும் நிர்வாணமாக்கபட்டனர். தாயை மகனோடும், தமையனைத் தங்கையோடும் புணரச் சொல்லி அவர்களுக்கு நரக வேதனை அளிக்கப்பட்டது. அவர்கள் மறுக்கவே ஆணுறுப்புகள் வெட்டப்பட்டன. மேலும் அக்கும்பல் ஒருவர் விடாமல் தாய் மற்றும் மகளை  வன்புணர்ச்சி செய்தனர். இதோடு நிற்கவில்லை சாதிவெறி. நால்வரும் தரைக்கும் வானுக்குமாய் சாகும் வரை தூக்கி எறியப்பட்டனர். பிரியங்காவின் பெண்ணுறுப்பில் தொரட்டியும், கம்பிகளும் குத்தப்பட்டு நிலை நாட்டப்பட்டது சாதிவெறி. இக்கொடுமைகளைத் தடுக்கச் சென்ற பய்யாலாலை தலித் மக்கள் தடுத்து அவரை மறைவிடத்தில் இருக்க செய்தனர். 
அத்தனை கொடுமைகளும் பய்யாலாலின் கண்ணெதிரிலேயே நடந்தன. இந்த நீதிமன்றம் சாதிவெறியர்களுக்குக் கொடுக்க மறுத்த மரணதண்டனையை விட கொடுமையான தண்டனையை தன் மனைவியும், மகளும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் போது பய்யாலால் அனுபவித்துவிட்டார். இத்தனை கொடுமைகளும் நடந்தேறி, பிணமாய், சதைப் பிண்டமாய் கிடந்த தாய் மற்றும் மகளை அந்த சாதி வெறியர்களின் ஊர்த் தலைவன் பாலியல் வல்லுறவு செய்தான். நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? இல்லை இலங்கையில் ஈழத் தமிழர்களாக இருக்கிறோமா என்று புரியவில்லை.

காக்கிக்குள் சாதிவெறி:

காவல்துறை, பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவத் துறை, நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் ஓட்டுக்கட்சிகள் இருக்கின்றனவா என்றால் இருக்கின்றன. ஆனால் எவையும் தலித் மக்களுக்கு இல்லை. 50 பேர் கொண்ட கும்பல் தங்கள் வீட்டை நோக்கி வரும் போதே பிரியங்கா சித்தார்த்திற்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனே சித்தார்த்தும், காவல் துறையிடம் புகார் செய்துள்ளார். இருந்தும் அவர்கள் கொல்லப்பட்டு, மாட்டு வண்டியில் ஏற்றிக் கண்மாயில் வீசும் வரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, எல்லாம் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் காவல்துறையினர் வந்துள்ளனர். முதலில் வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியவில்லை. பின்பு, பெண்களும், பொதுமக்களும் நடத்திய போராட்டங்களே அவ்வாறு பதிய நிர்பந்தப்படுத்தியது.

அன்றாட நிகழ்வுகளாய் வன்கொடுமைகள்:

கயர்லாஞ்சி படுகொலையும், பாலியல் வன்புணர்ச்சிகளும் தலித் மக்களுடைய வரலாற்றில் ஏதோ முதல் நிகழ்வு அல்ல. 32,841 தலித் படுகொலைகளில் இதுவும் ஒன்று, 19,348 பாலியல் வன்புணர்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று தேசிய குற்றவியல் பதிவேடுகள் துறை (National Crime Record  Bureau) கூறுகிறது. இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையே அச்செயல்களில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டில் கணவனின் கண் முன்னாலேயே பத்மினி என்ற தலித் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கயர்லாஞ்சி சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மராத்துவாடாவில் உள்ள ஔரங்காபாத்திலிருந்து 40 கி.மீ. தூரமுள்ள சஞ்ஜார்டி என்ற கிராமத்தில் காவல்துறையினர் ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்துவிட்டு, அவரையும் அவரது கணவனையும், எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இது போன்ற செயல்களைச் செய்யத்தான் காவல் நிலையங்கள் வைக்கப்பட்டுள்ளன போல.
ஒவ்வொரு வருடமும் 30,000 வன்முறைகள் தலித் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்றன என்று காவல்துறையினரின் பதிவேடுகள் சொல்கின்றன. இப்போதுதான் தெரிகிறது இந்திய காவல்துறையினருக்கு இரண்டாவது இடத்தை எதை வைத்துக் கொடுத்தார்கள் என்று. காவல்துறை இப்படியென்றால் நீதித்துறை என்பது சாதி வெறி கொண்ட பார்ப்பனிய செங்கற்களால் தான் கட்டப்பட்டிருக்கிறது.

நீதிப் படுகொலை:

சம்பவத்திற்குப் பின்னால் ஆதிக்க சாதியினர் 47 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனால், இறுதியாக சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில் 36 பேரை விட்டுவிட்டு, 11 பேர் மீது மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. 2008 - செப்டம்பர் 15 இல் பந்தாரா அமர்வு நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் சக்ரு மஹகு பிஞ்சேவர், சத்ருகன் இஸ்ஸாம் தண்டே, விஸ்வநாத் ஹக்ரு தண்டே, ராமு மங்ரு தண்டே, ஜெகதீஷ் ரத்தன் மண்ட்லேக்கா, பிரபாகர் ஜஸ்வந்த் மண்ட்லேக்கா ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சிசுபால் விஸ்வநாத் மற்றும் கோபால் சக்ரு பிஞ்சேவர் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. மீதியுள்ள மூன்று பேர் போதிய சாட்சிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். பாலியல் படுகொலை செய்த அத்தனை பேருக்கும் தூக்கு இல்லையென்றாலும் ஆறு பேருக்காவது தூக்கு தண்டனை வழங்கப்பட்டதால், சாதிவெறியைப் பிரயோகிக்க ஆதிக்க சாதியினர் அஞ்சுவர் என நினைத்தோம். அந்த நினைப்பிலும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை மண்ணை வாறிப் போட்டது. 2010, ஜூலை 14 இல் வெளிவந்த அந்தத் தீர்ப்பில் இப்பிரச்சனை வெறும் ‘நிலப் பிரச்சனை’ என்றும், ‘பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கை’ என்றும், எனவே அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாயாது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், கீழ் நீதிமன்றத்தில் 6 பேருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையும், 2 பேருக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையும் குறைக்கப்பட்டு, 8 பேருக்கும் 25 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவ்வாறாக, ஏ.பி.லாவாண்டே மற்றும் ஆர்.சி.சௌகன் என்ற நீ(சா)தியரசர்கள் இறுமாப்புடன் தீர்ப்பளித்து, மனுஸ்மிருதிக்கு மறுவடிவம் கொடுத்துள்ளனர். சாதி வெறிக்கு எதிராய் சமநீதியினை வழங்காத காவல் துறையும், நீதித்துறையும் இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் தலித் மக்களைத்தான் கைது செய்கிறது, சிறையிலடைக்கிறது.

உண்மையை மறைத்த ஊடகங்களும்
சாதியத்தைக் காத்த மருத்துவரும்:

கயர்லாஞ்சி படுகொலை நடந்த ஒரு மாதம் வரை செய்தி வெளிவரவில்லை. விதர்பா ஜான் அந்தோலன் சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த ஹிஷோர் திவாரி என்பவர் உண்மை அறியும் குழு அறிக்கையை அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பினார். இதுவும் கூட பத்திரிகையில் வெளிவராமல் மறைக்கப்பட்டது. பெண்கள் அமைப்புகள், பொதுமக்கள் போன்றோர் நடத்திய சட்டமன்ற முற்றுகை, செய்தித்தாட்கள் எரிப்பு, டெக்கான் குயின் இரயில் எரிப்பு போன்ற தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாகத்தான் செய்தி வெளியே வந்தது. நடிகை அசின் சினிமா படப்பிடிப்பின் போது நகம் பிய்ந்து விட்டதால் இரத்தம் கொட்டியது என்ற செய்தி அரைப் பக்கத்திற்கு போடுகின்றனர். கிரிக்கெட் வீரர் ‘தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தை ஒரு முழுப் பக்கத்திற்கு விளம்பரப்படுத்துகின்றனர். நடிகையின் நகத்திற்கும், கிரிக்கெட் வீரனின் புத்தகத்திற்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இச்சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் தலித் மக்களின் உயிருக்கு கொடுக்கப்படுவதில்லை. இதுதான் நான்காவது (சாதி வெறித்) தூணின் பத்திரிகை தர்மம்.

படுகொலை செய்யப்பட்ட உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர்கள் ‘பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படவில்லை’ என்ற பச்சைப் பொய்யைத்தான் அறிக்கையில் கூறினார். மக்களைக் காக்கும் மருத்துவத்தைக் கற்று தன் உயிரையும் கொடுத்து கியூபப் புரட்சிக்குப் போராடி, உயிர் நீத்தாரே சே குவேரா அவர் மருத்துவரா? சாதி வெறியர்களைக் காத்த இந்த கேடு கெட்டவன் மருத்துவனா?

ஓட்டுப் போடும் அடிமைகளா?
விலங்கை உடைக்கும் மனிதர்களா?

தலித் மக்களின் ஓட்டை மட்டும் வாங்க சேரி வரும் எந்த ஒரு ஓட்டுக் கட்சியாவது இப்படுகொலையைக் கண்டித்து போராடினார்களா? குறைந்தபட்சம் அறிக்கை வெளியிட துப்பிருந்ததா? இவர்கள் தலித் மக்கள் இறந்தால் மட்டும் வாயே திறப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் அடுத்த தேர்தலுக்கும் அனைவரும் நம் ஓட்டை நக்கிப் பொறுக்க வருகின்றனர். அம்பேத்கரின் காலந்தொட்டே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுவதுதான் காங்கிரஸ் கட்சியின் துரோக வரலாறு. இன்று கக்கன் நூற்றாண்டு விழா நடத்தி ‘தலித் மக்களே, எங்கள் கட்சியில் அணி சேருங்கள்’ என்கிறார் பெருமுதலாளிகளின் அடிவருடி ப.சிதம்பரம். மலம் அள்ளுவதும், சாக்கடையைச் சுத்திகரிப்பதும் தலித் மக்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழி என்று நம் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவை ஏற்றுக் கொள்ளச் சொன்ன நரேந்திர மோடியின் கட்சி இன்று நம்மையும் சேர்த்துக் கொண்டு, ‘இந்து மாணவர்களுக்கு சலுகை மறுக்கப்படுகிறது, வாருங்கள் போராடுவோம்’ என்கிறது வெட்கமில்லாமல். தமிழ்நாட்டிலோ, கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு சாதிவெறிக்குத் துணை போகின்றனர். வெண்மணி, திண்ணியம், மேலவளவு, சாலரப்பட்டி, கொடியங்குளம், உத்தப்புரம் என்று இன்னும் எத்தனையோ நிகழ்வுகளில் இவர்கள் தலித் மக்களுக்குச் செய்ததனைத்தும் துரோகம் தான். தலித் நிலங்களைப் பறித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று கூறிய ‘சமத்துவ பெரியார்’ தலித் மக்களின் உயிரைப் பறித்தவரின் பெயரை விமான நிலையத்திற்குச் சூட்டுவதாக அறிவித்து, இன்று தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுகிறார்.

இவர்கள் தான் இப்படியென்றால் தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரம் பெற்றால் சாதி ஒழிந்துவிடும் என்று கூறி ஆட்சி பீடத்திலிருக்கும் மாயாவதி எப்படியொரு சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்தி இருக்கிறார் என்று பாருங்கள். 2007 ஆம் ஆண்டில் உத்திரப் பிரதேசத்தில் அவர் ஒரு உத்தரவு பிறப்பிக்கிறார். அதில் தன் ஆட்சியில் காவல் நிலையங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிறைய வழக்குகள் பதியக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். தலித் ஆட்சி செய்யும் நாட்டிலே தலித் மக்களுக்கு எதிராக வன்கொடுமை நடப்பது வெளியே தெரிந்தால் அடுத்து தனது பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நினைப்பதுதான் காரணம். எனவே, தலித் மக்களுக்கு எதிராக நிற்பதில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் ஒரே கூட்டணியில் நிற்கின்றன. எந்தக் கட்சியும் வாக்குகளைத்தான் பார்க்கின்றன. வாக்களித்தவர்களைப் பார்ப்பதில்லை.

அரசும் அதன் அடக்குமுறை இயந்திரங்களான காவல்துறை, நீதித்துறை, ஊடகம் என அனைத்தும் உழைக்கும் மக்களுக்கும், தலித் மக்களுக்கும் எதிராகத்தான் நிற்கின்றன. இங்கே ஒரு தலித், ஊராட்சி மன்றத் தலைவராக இருக்க ஆயுதமேந்திய பாதுகாப்பு தேவைப்படுகிறது. செத்த பிறகு இடுகாட்டிற்கு எந்தப் பாதையில் பிணத்தை எடுத்துக் கொண்டு போவது என்ற முரண்பாட்டால் இங்கே பலர் செத்துப் போக நேர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை நடைபெறும் சாதி வெறியாட்டம், முதலில் நம் காலை இறுகப் பிடித்த போது, நாம் கண்டுகொள்ளவில்லை, நம் இடுப்பை முறுக்கியபோது அலட்சியமாக இருந்தோம். இன்று அது நம் கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கிறது. ஒன்று நாம் சாக வேண்டும். இல்லையென்றால் நம்மை நெரித்துக் கொண்டிருக்கும் சாதி வெறியின் கரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும்.

ஆனந்த் தெல்தும்டே என்ற மராட்டியத்தின் மார்க்சிய தலித்திய ஆய்வாளர் கயர்லாஞ்சிப் படுகொலை பற்றி கூறும்போது, இதுபோன்ற படுகொலைகளுக்கு நீதிமன்றத்தால் சமநீதி தரமுடியாது. மக்களே எழுதுவதுதான் தீர்ப்பு. நம்மைப் பலியிடும் சாதிவெறியைப் பலியிடுவது, வன்கொடுமைக்கு எதிரான வன்கொடுமை - இதுதான் தீர்வு என்கிறார். வெண்மணியில் 44 பேரை எரித்துக் கொன்ற மனிதமுகம் கொண்ட பண்ணை முதலை அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றை இன்று சாதி வெறியர்கள் மறந்துவிட்டனர். ‘வரலாற்றை மறந்தால் அது மீண்டும் நிகழ்ந்தே தீரும்’ என்று சொல்வார்கள். எனவே வரலாற்றை மறந்தவர்களுக்கு அதை ஞாபகப்படுத்துவோம். அவர்களை ஒடுக்குவதற்கல்ல, இனியும் ஒரு கயர்லாஞ்சி நடவாமலிருக்க.

-த.கார்த்திக்,
மதுரை

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014