இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், ஆகஸ்ட் 19, 2010

சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம்: கருணாநிதியின் காலில் நசுங்கும் கருத்துரிமை

1983 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சிங்களக் கடற்படை, சுமார் 500 தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டும், அடித்தும் கொன்றுள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்களைப் படுகாயப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் செய்தியை வெளியிட்டு அடிக்கடி கதறும் ஆங்கில, இந்தித் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இதுவரை ‘இந்திய’ மீனவர்கள் கொல்லப்படும் செய்தியைக் கண்டுகொண்டதில்லை. மும்பையில் தாஜ் ஹோட்டல் தாக்குதலில் இறந்தவர்களை விட, தமிழ்நாட்டில் இறந்த மீனவர்களின் எண்ணிக்கை சில மடங்கு அதிகம். ஆனால், மும்பைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் திணித்த ஊடகங்கள் இதுவரை இலங்கை அரசை பெரிதாகக் கண்டிக்கக் கூட இல்லை.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசோ தமிழக மீனவர்களைக் கொல்லும் அதே சிங்கள இராணுவத்தைப் பலப்படுத்த ஆயுத, நிதி, பயிற்சி உதவிகளைச் செய்ய இராஜபக்சேவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எஜமானன் ஏவும் நாயான தி.மு.க. அரசு இங்கே எதிர்த்துப் பேசும் தமிழர்களைக் கடித்துக் குதறி வருகிறது.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக 2009 பிப்ரவரி மாதம், தற்போதைய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி போன்றோரை, தமிழக அரசு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை தார்மீக ரிதியாக ஆதரித்துப் பேசுவது குற்றம் இல்லை என்று பல நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்பினும், கருணாநிதி அரசு சீமானைக் கைது செய்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் உயர்நீதிமன்றம், சீமான் பேசியதில் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலோ, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் கருத்துக்களோ இல்லை என்று கூறி அவர்களை விடுவித்தது.
தற்போது தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருவதைக் கண்டித்துப் பேசிய தோழர் சீமானை தமிழக அரசு மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கினால், தமிழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களைத் தாக்குவோம் என்று பேசியது நாட்டில் வன்முறையைத் தூண்டுகிறது என்று கூறி கைது செய்திருக்கிறது தமிழக அரசு. நடந்து கொண்டிருக்கும் தமிழக மீனவர் படுகொலைகளைத் தடுக்க வக்கற்ற கருணாநிதி அரசு, இன்னும் நடக்கவே இல்லாத சிங்கள மாணவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க சீமானைக் கைது செய்திருக்கிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ‘சனநாயகவாதி’ போல கபட வேடம் போட்டுக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. கடந்த ஆண்டு தனி ஈழத்தை ஆதரித்துத் தொடர்ந்து போராடி வந்த வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் காட்டுமிராண்டிக் காவல்துறையை அனுப்பி, கொலைவெறியாட்டம் நடத்தியபோதே கருணாநிதி ‘சனநாயக வேடத்தை’ கலைத்துவிட்டு, தான் ஜெயலலிதாவிற்கு சற்றும் குறையாத ஒரு ‘பாசிசவாதி’ என்று நிரூபித்துவிட்டார். பின்னர் வரிசையாக நடந்த ஈழ ஆதரவாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் அவரது சுயரூபத்தை படம் பிடித்துக் காட்டின.
சமீபத்தில் நடந்த கருணாநிதியின் குடும்பத் திருவிழாவான செம்மொழி மாநாட்டின் போதும் அதற்கு முன்பும் நடந்த ஒடுக்குமுறைகள் ஏராளம். விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்க்கப்பட்டு, ‘பிரபாகரனின் தம்பிகள்’ என்ற பெயரில் துண்டறிக்கைகள் வீசப்பட்டிருந்ததாக ஒரு செயர்தி வந்தது. இதைத் தொடர்ந்து விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான தமிழ்த் தேசிய மற்றும் முற்போக்கு சக்திகள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதுபோன்ற இயக்கத் தோழர்கள் செம்மொழி மாநாட்டை எதிர்க்கக்கூடும் என்பதால், முன்கூட்டியே மக்கள் மத்தியில் ஈழ ஆதரவாளர்கள் மீதான அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இத் தண்டவாளத் தகர்ப்பை அரசே தனது உளவுத்துறையைக் கொண்டு செய்திருக்கக்கூடும் என்று அரசியல் அறிந்தவர்கள் பலர் ஊகித்தனர்.
இந்நிலையில் செம்மொழி மாநாடு வந்தது. ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்துவிட்டு, தமிழ்நாட்டில் தமிழ் மொழியைச் சீரழித்துவிட்ட கருணாநிதி அரசிற்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா? என்று கேட்டு ஏறத்தாழ எல்லா முற்போக்கு அமைப்புகளும் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தன. துண்டறிக்கைப் பிரச்சாரம் செய்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களை தமிழக அரசு கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கருணாநிதியைக் கண்டித்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பிய சேலம் மாணவரை விசாரணை செய்ததில் தொடங்கி தோழர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது வரை என எல்லா வகையான ஒடுக்குமுறைகளையும் தமிழக அரசு செய்தது. தர்மபுரி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் வடிவேல் மற்றும் சிவா ஆகியோரை, செம்மொழி மாநாட்டை சீர்குலைக்க சதி செய்ததாகக் கூறி கைது செய்து, சிறையிலடைத்தது காவல்துறை. இன்று, செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு, மீண்டும் சீமான் கைது.
இப்படியாக, காங்கிரஸ் அடிவருடி கருணாநிதியின் பாசிச முகம் மக்கள் மத்தியில் வெகுவாக அம்பலப்பட்டுப் போயுள்ளது. ஈழ ஆதரவையும், தமிழக மக்களின் தமிழ்த் தேசிய உணர்வையும் மழுங்கடிப்பதற்காகத் தான் இத்தனை ஒடுக்குமுறைகளும்! நாம் செய்ய வேண்டியது இதுதான். கருத்துரிமையை மறுக்கும் வண்ணம் காவல்துறையால் எங்காவது ஒரு சுவரொட்டி கிழிக்கப்பட்டாலும் சரி, யாராவது கருப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்டாலும் சரி, விசயம் பெரியதோ, சிறியதோ முற்போக்கு சக்திகள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பேசும் உரிமைக்காக, எழுதும் உரிமைக்காக, எக்கருத்தையும் பிரச்சாரம் செய்யும் உரிமைக்காகப் போராட வேண்டும்.

-ஆசிரியர் குழு

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014