இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

கருத்துரிமையை நொறுக்கும் இந்திய அரசின் அரக்கமுகம்

'இந்தியா தேசிய இனங்களின் ஒரு கொடுங்கோல் சிறைக்கூடம்' என்பதை பல வருடங்களாக மக்கள் அனுபவ ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உணர்ந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாகப் பல வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமைக்காக பலதரப்பட்ட மக்கள் வீரதீரத்துடன் போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அது காஷ்மீராக இருந்தாலும் சரி, மணிப்பூர், அஸ்ஸாம், நாகலாந்தாக இருந்தாலும் சரி எங்கும் மக்களே தங்களது சுயநிர்ணய உரிமைக்காக இந்திய பாசிச அரசை எதிர்த்தும், இந்திய இராணுவத்தை தங்களுக்கு கிடைக்கும் கல், அம்பு என்று கிடைக்கும் ஆயுதங்களைக் கொண்டு எதிர்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். மக்கள் உயிர் தியாகங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. தங்களது எத்தனை உயிர்களைப் பணயம் வைத்தும் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். இதுவே காஷ்மீரிலும் கூட நடக்கிறது. ஆனால் இந்திய பாசிச அரசோ இந்த மக்கள் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக தீவிரவாத போராட்டமாக சித்தரித்து மக்களை ஒடுக்கிக் கொண்டு வருகிறது. ஆனால், காஷ்மீர் மக்கள் ஒதுங்குவதும் இல்லை. ஒடுங்குவதும் இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை அவர்களுடைய போராட்டக் கோரிக்கை சுய நிர்ணய உரிமையாகத் தான் உள்ளது.

கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில், 'ஜம்மு-காஷ்மீர் குடிமைச் சமூகக் கூட்டமைப்பு' சார்பில், ''காஷ்மீர் நழுவிச் செல்கிறதா? சுதந்திரமா அல்லது அடிமைத்தனமா?'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பலதரப்பட்ட எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்று உரையாற்றினார்கள். இக்கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய புரட்சிகர எழுத்தாளரும், புக்கர் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளருமான அருந்ததிராய் மற்றும் பேராசிரியர் கிலானயை தீவிரவாத ஆதரவாளர்களாகவும், இந்திய அரசின் துரோகிகளாகவும் காட்ட வழக்குப் பதிவு செய்ய இந்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. அக்கருத்தரங்கில் எழுத்தாளர் அருந்ததிராய் கூறிய ஒரு சில வரிகள்:

''காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத ஓர் அங்கம் என்பது தவறான வாதமாகும். வரலாற்று ரீதியாகப் பார்த்தோம் என்றால், இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்திருந்தது கிடையாது. செயற்கையாக இந்தியாவுடன் காஷ்மீர் ஒட்ட வைக்கப்பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமை வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களை பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தி இந்திய அரசு நசுக்கி வருகின்றது...'' ''...காஷ்மீரின் சுதந்திரத்திற்காக துணிச்சலாகப் போராடிவரும் வீராங்கனைகளின் செயல்பாட்டைப் பாராட்டுகிறேன். இறுதி இலக்கை எட்டும் வரை தொடர்ந்து போராடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏ.கே.47 துப்பாக்கிகளிடையேதான் காஷ்மீர் மக்கள் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்... உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கிராம மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கிராமங்களில் வாழ்ந்துவரும் 80 சதவீத மக்கள் நகரங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றால், நகரங்கள் யாவும் நரகங்களாகிவிடும்.''
(பார்க்க: மாலை முரசு 25.10.2010)

அருந்ததிராய் கூறியுள்ள ஒவ்வொரு வரிகளும் அவருடைய குரலோ, அவருடைய கருத்தோ மட்டும் கிடையாது. நிச்சயமாக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் கருத்தாகும். சனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களின் கருத்தாகும். ''எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம். பாகிஸ்தானும் வேண்டாம்”” என்பதே காஷ்மீர் மக்களின் கருத்து. ஆனால், இது இந்திய பாசிச அரசும், ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாக செயல்படும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். என அனைத்து படுகொலையாளர்களின் காதில் விழுவதே இல்லை. அப்படியே அவர்கள் காதில் படும்படி உரக்க யாராவது கூறினார்கள் என்றால், அவர்களைத் தேடிச் சென்று நசுக்குவதையே தொழிலாகக் கொண்டு இருக்கிறார்கள் இந்தப் படுகொலையாளர்கள். கடந்த 31.10.2010 அன்று பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தலைமையில் ஏவல் நாய்கள் அருந்ததிராய் வீட்டை சூறையாடி யுள்ளனர். இதை ஒட்டி அருந்ததிராய் கூறியதாவது:

''சுமார் 100-க்கும் மேற்பட்டோர் எனது வீட்டைத் தாக்கி வாயிற்கதவை உடைத்தனர். வீட்டிலுள்ள பொருட்களைச் சூறையாடினர்... பி.ஜே.பி.யினர் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே NDTV, TIMES NOW, NEWS 24 முதலான ஊடகத்தினர் வந்து சம்பவங்களைப் படம் பிடித்தனர். பி.ஜே.பி. கும்பல் கலைந்த பிறகுதான் டெல்லி போலீசும் எங்களிடம் வந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் இச்சம்பவங்களைப் பதிவு செய்தனவா? என்று விசாரித்தனர்... காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான எனது பார்வைக்காக எனக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் ஆகிய வலதுசாரி சுனாமி படைகள் வெளிப்படையாக அறிவித்து வழக்குத் தொடர முன்னேற்பாடு செய்து வருகின்றனர். பி.ஜே.பி. கும்பலும் ஊடகத் துறையின் ஒரு பிரிவினரும் சனநாயகத்தின் அடித்தளத்தை அசைக்க இந்திய அரசே உதவி செய்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது...''
(பார்க்க: தி ஹிந்து 01.11.10)

இது ஒன்றும் புதிது அல்ல. இந்திய பாசிச அரசு பல ஆண்டுகளாகத் தன்னுடைய குறைந்தபட்ச சனநாயக முகத்திரையை கிழித்துவிட்டு, ஏகாதிபத்திய அடிவருடி அரக்கனாக தன்னுடைய முகத்தை காட்டிக் கொண்டுள்ளது. ஆனால் மக்கள் இதை விரும்புவதில்லை. இன்றைய சூழலில் பழங்குடி மக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்காக ஏகாதிபத்தியத்தையும், பாசிச இந்திய இராணுவத்தையும் எதிர்த்துப் போராடுகின்றனர். காஷ்மீர் மக்களும், நாகலாந்து மக்களும், இன்னும் பல இடங்களில் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமைக்காக தீவிரமாக பாசிச இராணுவத்தையும், ஏகாதிபத்திய அடிவருடிகளையும் எதிர்த்துப் போராடிக் கொண்டு இருக்கின்றனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளன. இந்த சூழலில் முற்போக்கு வாதிகளும், சனநாயகவாதிகளும், அறிவு ஜீவிகளும், புரட்சிகர இயக்கங்களும் மக்களுடன் ஒன்றோடு ஒன்றாக நின்று போராட வேண்டிய சூழல் உள்ளது. 'அடக்குமுறை எங்கெல்லாம் இருக்கின்றதோ, அங்கே புரட்சி பிறக்கின்றது” என்பதை நாம் மனதில் நிறுத்தி பரந்துபட்ட மக்களின் விடுதலைக்காக உறுதுணையுடன் போராடுவோம்.
 
-ரகு,
அரசு சட்டக் கல்லூரி, கோவை

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014