இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

கொலசாமிக்கு கடிதாசி

ஏப்பா... ஏ! பெரியகருப்பா. உன் மண்ணுல வாழுற மக்களுக்கு காவகாக்குற காவக்கருப்பா, நேத்திக்கடன் தீத்து வைக்கிற மொதலக்குளம் குட்டிக்கருப்பா, கொலவபோட்டா குறி சொல்லுற சங்கிலிக்கருப்பா, கெடா வெட்டி பொங்க வைக்கிற சின்னக்கருப்பா, உனக்கொரு சேதி தெரியுமா? தெரிஞ்சாலும் தீத்து வைக்க அருவாளத் தூக்க தெம்பு இருக்கா? உன் வாசல்ல எத்தன பேரு ஞாயத்துக்காக மண்ணவாரி தூத்தாக. அந்த மண்ணுபூரா(ம்) உன் மக்க தலையிலே விழுகுது, உனக்குத் தெரியலையா.



இந்;தப் பாவத்தப் போக்க தொணைக்கு எந்தக் கருப்பன வருந்தி அழைக்கப் போற. உனக்கு எத்தன கெடா வெட்டி எம்புட்டுப் பொங்கவச்சு நாங்க பூச செய்யனும்? எந்தக் கோடாங்கிய கூட்டுக்கு வந்து உருமியடிக்கனும்? ஆரு வாழனும், ஆரு மடியனும்முனு வாக்குச் சொன்ன உன் மண்ணுல அநியாயமும், அக்குரமமும் எப்படி கோயிலாச்சு? உழுகுறவனுக்குக் கஞ்சி கொடுத்தது இந்த மண்ணு. இன்னைக்கு உழுகுறதுக்கு மாடு இல்ல. மாட்டுக்குப் புல்லிருந்தாத்தானே, மாடுருக்கும். புல்லுக்கு மழபேஞ்சாத்தான. எப்படி மழபேயும். எத்தன ரா...க்கெட்டு. யம்மா! மனுசன் செத்தா மண்ணுல பொதைக்களாம்முடா, மண்ணு செத்துப்போச்சுனா எதுலடா பொதைக்க? மண்ணப்பூராங் கெடுத்து குட்டியச்செவரா ஆக்கிப்புட்டாங்கேடா. இரசாயனத் தொறைகர்கு முட்டாப்பய மந்திரியாம்! அது டெல்லிக்குப் பறந்து போயு காசு போட்டுத் தண்ணி வாங்கி குண்டியக் கழுவுதாம்!

எருமச்சாணிய எடுத்து அப்புனாவுல தெரியும்! நெலத்துல... ஓம் புள்ள பெரியதவசி இருக்குறப்ப எப்படி நீதி சொன்னான். மண்ணும் பொண்ணும் நிறுத்தா, சமமா நிக்ற உன் வாசல்ல, திருமல நாய்கர்கரே முப்பது நாளு தூங்கலையாம். உடனே ஒத்துக்கிட்டன்... எட்டு நாடு உண்மதான்! அத சுத்தி இருக்குறது பூராம் உபகிராமமுனு. இன்னைக்கு நாட்ட  கூறுபோட்டு விக்க கொங்கானி போட்டு வாராங்கேடா ரத்தக் காட்டேறிக.
கெடா ரத்தம் குடிச்ச நீ... இவிங்க ரத்தத்த எப்ப குடிப்ப? எப்படி குடிப்ப? காட்டுக்குள்ள இருந்த எங்கள வெரட்டிவுட்டுட்டு சூட்டுச் சட்டக்காரங்கேளா வாராங்கே, அதுக்குத் தொணையா நம்மாளுக இருக்காங்கே கையில டுப்பாக்கிய வச்சுக்கு.

உன் அருவா எங்க போச்சு? ஈட்டி எங்க போச்சு? பெரியகருப்பா!! மணியக் கொண்டியாச்சும் இவிங்க மண்டைய ஒடைக்க  வேணா. மணிச்சத்தம் கேட்டாவே மக்க மனுச மட்டுமில்ல, பட்சிப் பறவெக கூட ஆடாம அசையாம இருக்கும். மொச கூட முழி  மூடி நிக்குமாம்!

ஆரும் புடிக்கமாட்டாங்கனு. உன் பூசக்கி அம்புட்டுச் சத்தி! இப்ப... கயிறு போட்டா பூசாரியாம் - கறி கிறி தொட மாட்டாராம்! காணிக்க போட்டா பூசையாம்! காருக் கதவடச்சுக்கு காசப்புடுங்குறாங்கேடா கொப்பனோளிக... மானங்கெட்ட காசப்புடுங்குறதுக்கு. மாமன் மடியில அக்காபுள்ள, சுத்தி குடும்பம் குட்டி, மொட்டையெடுத்து காதுகுத்துவம், மஞ்சத்தண்ணி ஊத்தி மாமன கேலி பண்ணுவோம், மச்சினன துண்ட உருவுவொம்! அரிசி ஒத்த ரூவா, பொங்கலு தீவாளிக்கு எலவச வேட்டி சேல,  கெழவிக்கு எனாப்பணம் மாசம் முன்னூறு, பாரு பாரு நல்லாப் பாரு பச்சக்கலர் போடப்பாரு பாக்கெட் தண்ணி நாலு ரூவா, வெளிய வந்தா பைன் கட்ட எழுநூறு ரூவா...  யம்மாடி, ஆத்தாடி... ராகத்தில் அடுத்த ஆட்சிக்குக் கட்சிப்பாட்டு தயார;...

கோவணம் கட்டுன பெரியாம்பளையும், காது வளத்த கெழவிகளும், சத்தம் போட்டுக் கத்துறதுல எல்லாச் சனமும் தூங்காமத்தாண்டா இருக்காம் பெரியகருப்பா. அதுலயும் செவக்காட்டுக் கெழவியோட ஒப்பாரியும், செவனாண்டி மகன் சீனிக்கெழவனோட கதையையும் ஒட்டுமொத்தமா கம்மாக்குள்ள குழி தோண்டிப் பொதைக்கிறாங்கடா. ஆருங்கேட்டா நூறு நாளு வேலத்திட்டமாம். ஒரு நாளைக்கு அறுவது ஓவா சம்பளமாம்! பாவம் கௌடு கட்டையெல்லாம் பள்ளிக்கோடம் போறதுகெணக்கா விடிஞ்சதும் ஓடுதுக. ஆபிசர் பூராம் கம்மாக்குள்ள இருக்குற கருவேலம் மரத்தப் பூராம் ஆக்கிரமிப்புப் பன்னி கட்டுக் கட்டா மஞ்சப் பையில செமக்குதுக. குருவி, மைனா, காட, கவுதாரிக, காட்டுச்சிட்டி, கொக்குக பூராம் பறந்துக்கே திரியுதுக. அந்தரத்துல அந்த வாயில்லா சீவிகள பாத்துமா ஒனக்கு எறக்கம் வரல கருப்பா! பாவம் எங்க போயி ஒறங்குதுகனு ஆருக்கும் தெரியல. வருசா வருசம் திருவுழா வருது, ஆனா தெருவுல ஒரு பயலும் இல்ல. பஞ்சம் பொழைக்க போனவுக வடக்குத் தெக்கா இருக்காங்கனு, சோவி போட்டு பாத்ததுல தெரிஞ்சுச்சு. உசுரோட இருக்காங்களாமுடா கருப்பா. போதுமா!

நெலத்தப்பூராங் கல்லூண்டி காவக்காக்குதுக பொணந் தின்னிக. கருங்காளையும், செவங் காளையும், ஒடுன ஓம் புழுதியில, வர்ள வேட்டிய விரிச்சு புழுதியப் பூராம் அள்ளிக்குப் போறாங்கேடா.. யப்பே! மூளிக்கெழவியோட ஒப்பாரிசத்தம் கேட்டுக்கேதாண்டா இருக்கு. கேக்குறதுக்குத்தான் ஆளே இல்ல  ஊருக்குள்ள. ஆளே இல்லாம இருந்தாலும் கரவேட்டிக்காரங்கே பூராம் சும்மாவா விட்டாங்கே, வீட்டுக்கொரு பூதத்தக் கொடுத்து வேடிக்க பாக்க வக்கிறாங்கே வக்கிரம் புடுச்ச பயபுள்ளைக.

வாடா கருப்ப வாடா.....

-கருமாத்தூர் மனோஜ்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014