இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

எந்திரன்: கற்பனை வறட்சி

 சமீபத்தில் 'கிராஃபிக்ஸ்' காட்சிகளுக்காக ஆஸ்கார் விருது பெற்ற ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார் படத்தை நிறைய பேர் பார்த்திருப்போம். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா அதில் குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டியடித்துவிட்டு, அவர்களது கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அது தொடர்பான ஒரு புனைகதைதான் 'அவதார்'. 'டைட்டானிக்', 'இண்டிபெண்டன்ஸ் டே' போன்ற அரசியலற்ற படங்களை எடுத்த ஜேம்ஸ் கேமரூனால் இப்படிப்பட்ட தீவிரமான அரசியல் படங்களையும் எடுக்க முடியும் என்று 'அவதார்' உணர்த்தியது. 'ஜுராசிக் பார்க்' போன்ற படங்களை எடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பர்க்தான் நாஜிக்களின் கொடூரமான வதைமுகாம்களில் சித்திரவதைப்பட்ட யூதர்களைப் பற்றிய அருமையான படமான 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்'டையும் எடுத்தவர். 1993 இல் இப்படம் ஆஸ்கார் விருது பெற்றது. மெல் கிப்ஸனின் 'அப்போகலிப்டா' மாயன் பழங்குடிகளின் வரலாற்றை, அதன் அத்தனை யதார்த்தங்களோடும் அழகாக பதிவு செய்த ஒரு படம். இப்படி சில ஹாலிவுட் இயக்குநர்கள் உலக அரசியலையும், வரலாற்றையும் ஆழமாகப் படித்த, அரசியல் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். சில நல்ல படங்களையும் அவர்களால் எடுக்க முடிகிறது.

ஆனால், தமிழ்நாட்டிலிருந்து 'ஹாலிவுட்டுக்கு சவால் விடும்' நமது இயக்குநர் சங்கர் எப்படி? ஆஸ்கார் விருதுக்காக அயராது உழைக்கும் அவரது அரசியல் புரிதல் என்ன? வரலாறு எதுவும் படித்துள்ளாரா? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இந்த இயக்குனர்களுக்கு ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. நல்ல வசூல் ஆகும் படம் எடுக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு படத்தை எடுத்து அதை எப்படியாவது பெரியளவில் விளம்பரப்படுத்தி இலாபம் சம்பாதிக்க வேண்டும். இங்கே ஒரு விசயத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நல்ல படம் எடுத்தால் தமிழக மக்களிடம் ஓடாது என்று சொல்வது அர்த்தமற்ற வாதம். ஏனென்றால், சமீபத்தில் வெளியான 'அங்காடி தெரு' போன்ற நல்ல படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

சரி, நாம் எந்திரனுக்கு வருவோம். படம் வெளியாவதற்கு பல நாட்களுக்கு முன்பிருந்தே, சன் நிறுவனத்தின் 'சானல்'களின் மூலம்  மீண்டும் மீண்டும் விளம்பரம் செய்யப்பட்டு, மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் அத்தனை பத்திரிகைகளும், ஊடகங்களும் எந்திரனைத் தூக்கி வைத்துக் கொண்டாடின. பல்வேறு படங்கள் எந்திரனுக்காக வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத் துறையையும் தன் பிடிக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கும் 'சன் பிக்சர்ஸ்', தமிழ் திரைப்படத்துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை 'எந்திரன்' மூலம் குறியீடாகக் காட்டியுள்ளது.

பல திரைப்பட விமர்சகர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது போல, எந்திரன் சில ஆங்கிலப் படங்களின் கலவைதான். டெர்மினேட்டர், மேட்ரிக்ஸ், பைசென்டென்னியல் மேன், ஐ ரோபாட் உள்ளிட்ட சில படங்களின் கதை, காட்சிகள், வசனங்கள் போன்றவற்றை திருடி, கலந்து உருவாக்கியதுதான். (தமிழ்நாட்டில் சில எழுத்தாளர்கள் இது தன்னுடைய கதை என்று வழக்கு போட்டுள்ளது நகைச்சுவைச் செய்திகள்).

நமக்கு இப்போது கேள்வி இதுதான். ஒரு நல்ல ஆங்கிலப் படத்தைப் பார்த்துவிட்டு, சங்கர் உள்ளிட்ட இயக்குனர்கள் இதே போல் நாமும் ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்று யோசிக்காமல், அந்த ஆங்கிலப் படத்தை அச்சு மாறாமல் தமிழில் கொண்டு வரவேண்டும் என்று ஏன் யோசிக்கிறார்கள்? காரணம், நமது நாட்டில் படைப்பாற்றலுக்கு  (Creativity) வேலை யில்லை. மாணவர்கள் தேர்வுகளில் படித்ததை அப்படியே எழுத்து மாறாமல் எழுதச் சொல்லிதான் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இங்கே, விஞ்ஞானிகள் உருவாக்கப்படுவதில் எந்த கல்வி நிறுவனத்திற்கும் அக்கறையில்லை. விஞ்ஞானத்தைவிட தொழில்நுட்பக் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. அடிப்படை அறிவியல் (Basic Sciences) பாடங்கள்  படிப்பதை விட, நுண் அறிவியல் பாடங்களைப் படிப்பதில் தான் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. பன்னாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதற்காகத்தான் இங்கே கல்வி கற்பிக்கப்படுகிறது.

நமது நாடு சொந்தத் தொழில்நுட்பம் இல்லாமல், எப்படி பன்னாட்டு நிறுவனங் களையும், அவற்றின் தொழில்நுட்பங்களையும் சார்ந்து உள்ளதோ, அதே போலத்தான் நமது கலை, இலக்கியங்களும் கூட வெளிநாட்டு கலை, இலக்கியங்களின் ஒட்டுண்ணியாகவே இருக்கின்றன. இந்த ஒட்டுண்ணித்தனம்தான் நம் நாட்டில் பெருமைக்குரிய விசயமாகக் கருதப்படுகிறது.

'ஹாலிவுட் படம் மாதிரி இருக்கிறது' என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும். தனது சொந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப, தன் மக்களின் வாழ்க்கையைக் காட்டுவதுதான் ஒரு சிறந்த படைப்பாக இருக்க முடியும். ஆனால், ஒட்டுண்ணி முதலாளிகள், ஒட்டுண்ணித்தனத்தை உயர்த்திப் பிடித்து, அதன் மூலம் தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படித்தான் சன் பிக்சர்ஸ் என்ற ஒட்டுண்ணி முதலாளி எந்திரன் போன்ற படங்களை வெளியிடுகிறார்கள்.

'ஷ'ங்கர் 
எந்திரன் கதையில், ஒரு இயந்திர மனிதனுக்கு 'மனித உணர்வு' வருகிறது. உணர்வு வந்தவுடன் எந்திரன் என்ன செய்கிறான்? கோபப்படுகிறான், தன்னால் இறந்தபோன பெண்ணுடைய கல்லறைக்குச் சென்று பூக்கள் வைத்து வருந்துகிறான், பிரசவம் பார்க்கும் போது கர்ப்பிணியிடம் அக்கறையோடு பேசுகிறான். இதெல்லாம், எந்திரனுக்கு உணர்வு வந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்காக இயக்குநர் வைத்திருக்கும் சில துணைக் காட்சிகள். சரி... அடுத்து என்ன நடக்கிறது? காதல்! படத்தின் வில்லன், இக்காட்சியில், 'இனிதான் பிரச்சனை ஆரம்பிக்க போகிறது' என்று சொல்கிறார். காதல் என்பது அவ்வளவு பெரிய பிரச்சனையா? காதல் என்பது பல உணர்வுகளில் ஒன்றான சாதாரண மனித உணர்வு. அனைவருக்கும் வரக்கூடியது. மனித வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி. ஆனால் தமிழ் சினிமாக்கள் என்ன செய்கின்றன? காதல்தான் எல்லாம் என்று சித்தரிக்கின்றன. ஒரு எந்திரனுக்கு மனித உணர்வு வந்ததும், ஏன் அதற்கு 'சமூக அவலங்கள்' மீது கோபம் வந்து, அதை மாற்றுவதற்காக தன்னை ஒரு போராளியாக மாற்றிக் கொள்ளாதா? கொள்கைக்காகவும், சமூகத்தை மாற்றுவ தற்காகவும் உயிரை விட்டவர்களின் எண்ணிக்கை அதிகமா? காதலுக்காக உயிரை விட்டவர்களின் எண்ணிக்கை அதிகமா? எந்த உணர்வு மிகப் பெரியது?

எவ்வளவோ மனித உணர்வுகள் இருக்கின்றன. ஆனால் ஏன் தமிழ் திரைப்படங்கள் காதல் உணர்வை மட்டுமே எப்போதும் மிகப்பெரிய உணர்வைப் போல காட்டுகின்றன? ஏனென்றால், காதல்தான் இந்த இயக்குநர்களுக்கு நன்றாக போணியாகும் பண்டமாக உள்ளது. இங்கே, எஸ்.பி.ஜனநாதனின் 'ஈ' திரைப்படத்தின் இறுதிக்காட்சிகள் நினைவிற்கு வருகின்றன. சமூக அவலங்களைப் புரிந்து கொண்ட நாயகன் ஜீவா, அவற்றை களைவற்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டு புறப்படுவான். அப்போது அவனிடம் அவனது காதலைப் பற்றிக் கேட்பார்கள். உலகத்திலுள்ள எல்லோரும் நிம்மதியாக வாழ வேண்டும். எல்லோரும் நன்றாக காதலிக்க வேண்டும். அதற்கு சில சமூகக் கிருமிகள் தடையாக இருக்கின்றன. அவற்றைக் களையத்தான் தான் புறப்படுவதாக அவன் சொல்லிவிட்டுச் செல்வான். எத்தனை 'உணர்வு'ப் பூர்வமான வரிகள்.

காதல் உணர்வு இயந்திர மனிதனை ஆட்கொண்டு அவனை மனித குலத்திற்கே எதிரானதாக மாற்றிவிடுகிறது. காதலுக்காக அது உலகையே அழிக்கத் தயாராகிவிடுகிறது. தவம் செய்யும் முனிவர்களின் தவத்தைக் களைக்க பெண்ணை நடனமாட விடுவதாக வரும் பழைய இற்றுப்போன கற்பனைக் கதைகளின் தொடர்ச்சிதான் இது. 'நல்ல எந்திரனை', அது உருவாக்கப்பட்டதன் இலட்சியத்தையே அழித்துவிடுவதாக கதாநாயகியின் முத்தம் அமைந்துவிடுகிறது. எவ்வளவு கேவலமான கற்பனை!

கதையின் மையக்கருவில் உள்ள இதுபோன்ற விசயங்களைத் தவிர்த்து, ஆங்காங்கே சில காட்சிகளில், பார்ப்பனிய சிந்தனை கொண்ட சங்கர் செய்திருக்கம் தகிடுதத்தம் வேலைகளைப் பார்ப்போம்.

தனது ஒவ்வொரு படத்திலும் கருப்பாக இருப்பவர்களை, அதாவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை மோசமானவர்களாக சித்தரிக்கும் காட்சிகளைத் தவறாமல் வைத்துவிடுவார் சங்கர். அதிலும், பொது இடங்களில் பெண்களிடம் 'கலாட்டா' செய்பவர்கள் கண்டிப்பாக கருப்பாக இருக்கும் இளைஞர்கள்தான். ஜென்டில்மேனில், கதாநாயகியின் தங்கையாக வரும் பெண்ணிடம் தவறாக நடக்க முயல்பவர்கள், இந்தியனில் மனிஷா கொய்ராலாவிடம் பிரச்சனை செய்யும் மாட்டுவண்டிக்காரர் கபாலி, முதல்வனில் கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் குப்பத்து இளைஞர்கள், அந்நியனில் பேருந்தில் சதா அருகில் வந்து அமரும் 'அந்த கருப்பு இளைஞர்', எந்திரனில் ஐஸ்வர்யாவிடம் பிரச்சனை செய்யும் 'கருப்பு' மைக் செட் தொழிலாளர்களும், பீச் அருகே பிரச்சனை செய்யும் பச்சமுத்துவும் (கலாபாவன் மணி) என தனது ஒவ்வொரு படத்திலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நச்சு சிந்தனையை சங்கர் விதைத்து வருகிறார். இது எந்திரனில், ஒரு உச்சத்திற்குப் போய், கலாபாவன் மணி ஐஸ்வர்யாவிடம் சொல்வதாக சித்தரிக்கப்படும் வசனத்தில் நிற்கிறது. ''நீ வெண்ணக்கட்டி மாதிரி இருக்க, நான் பன்னிக்குட்டி மாதிரி இருக்கேன். உன்ன மாதிரி ஆள் எனக்கு எப்பக் கிடைக்கும்?'' என்று அவர் பேசுகிறார்.

சுஜாதா 
ஸ்டீபன் ஹாக்கிங்
அடுத்து, நாம் தவறாமல் பேச வேண்டியது சுஜாதாவைப் பற்றி. இவரது வசனங்களைப் பற்றிப் பேசாமால் இந்தத் திரைப்பட விமர்சனத்தை நாம் நிறைவு செய்ய முடியாது (சுஜாதாவைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல், சாரு நிவேதிதாவைப் போல எந்திரனை விமர்சனம் செய்ய நான் ஒன்றும் 'உயிர்மை' இதழில் இக்கட்டுரையை எழுதவில்லையே!) விஞ்ஞானி வசீகரன் எந்திரனை பலர் மத்தியில் அறிமுகம் செய்யும் காட்சியில், எந்திரனிடம் பல கேள்விகள் கேட்கப்படும். அதில் ஒன்று 'கடவுள் இருக்கிறாரா?' அதற்கு எந்திரன், பதிலுக்கு அந்த நபரிடம் கேட்பார், 'கடவுள்னா யார்?' கேள்வி கேட்டவர் பதிலளிப்பார், 'நம்மைப் படைத்தவர்தான் கடவுள்'. அதற்கு எந்திரன் சொல்வார் 'என்னைப் படைத்தவர் வசீகரன், கடவுள் இருக்கிறார்”. இந்த வசனத்தில் இயந்திர மனிதன் 'லாஜிக்' முறையில் ஆய்வு செய்து கடவுள் இருக்கிறார் என்கிறான். இது சுஜாதாவின் கருத்து. பார்ப்பனியவாதி சுஜாதா நீண்டநாட்களாக செய்துவரும் வேலை இது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடவுளை ஏற்றுக் கொண்டார் என்று அப்பட்டமாக பொய்யாக எழுதுவதும், விஞ்ஞானங்கள் அனைத்தும் கடவுள் கொள்கைக்கு எதிரானது அல்ல என்று சொல்வதுமாக அவர் தொடர்ந்து விஞ்ஞானத்தை கொச்சைப்படுத்தி வந்தவர். இதன் தொடர்ச்சிதான் இந்த வசனமும். உலகின் இன்றைய மிகப் பெரிய விஞ்ஞானியான, 'வாழும் ஐன்ஸ்டீனாக' கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக 'கடவுள் இல்லை' என்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ரஜினியைப் பற்றி எழுத புதிதாக ஒன்றும் இல்லை. முந்தைய படங்களில் எந்த 'மேக்னடிக்' சக்தியும் இல்லாமலேயே, எதிரியை தூரத்திலிருந்தே விரல் அசைவின் மூலம் தூக்கி எறிந்துவிடும் ரஜினிக்காந்த் இந்தப்படத்தில் அந்த சக்தியை வைத்துக் கொண்டு செய்கிறார். அவ்வளவுதான்.

மொத்தத்தில், வணிகத் திரைப்படத் துறையில் இனி எந்த நல்ல திரைப்பட முயற்சிக்கும் வழியில்லை என 'எந்திரன்' நமக்கு நிரூபணத்துடன் விளக்கியிருக்கிறது.
-அமல்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014