இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

ஸ்பெக்ட்ரம்: ஊழலுக்கெல்லாம் 'இராசா

பெயரில் மட்டுமே முற்போக்கை வைத்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) ஊழல் உச்சபட்ச எல்லையை எட்டியுள்ளது. மகாராஷ்டிரத்தில் கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கீட்டில் முதல்வர் அசோக் சவான் ஊழல். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் முறைகேடு. ரூ.70,000 கோடி செலவில் நடத்திய காமன்வெல்த் போட்டியில் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கல்மாடி பல கோடி ஊழல். அடுத்ததாக '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா ரூ.1.76 இலட்சம் கோடி (ரூ.1,76,000,00,00,000) ஊழல்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு 1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General) அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த இழப்பு எவ்வாறு ஏற்பட்டது என்றால், 'முதலில் வந்தோருக்கு முன்னுரிமை' என்ற விதியின் கீழ் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தன் மூலம். மேலும், 2001 ஆம் ஆண்டு ஒரு நிறுவனம் 2ஜி அலைக்கற்றை சேவைக்கு, 22 மாநிலங்களுக்கு உரிமம் பெற அரசுக்கு கட்ட வேண்டிய தொகை 1651 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. 2007-இலும் அந்தத் தொகையை உயர்த்தாமல் அதே தொகை நிர்ணயித்தது. இந்தத் தவறை எந்தச் சாமானியனும் செய்ய மாட்டான். 2001 இல் 40 இலட்சம் சந்தாதாரர்கள், 2007 இல் 30 கோடி சந்தாதாரர்கள். இவ்வாறு எண்ணிக்கை அதிகரித்த பின்பும் அதே 1651 கோடி தான் உரிமம் பெற என்றால் இதில் உள்ள அரசியலை நம்மால் யூகிக்க முடியும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 9 கார்ப்பரேட் நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் கொள்ளை இலாபத்தை அடைந்துள்ளன. உதாரணமாக, யுனிடெக் நிறுவனம் உரிமத்தைப் பெற்றிட 1651 கோடி செலுத்தியது. செல்போன் சேவை தருவதற்கு ஒரு வேலையும் செய்யாமலேயே 60 சதவீதம் பங்குகளை விற்று 6120 கோடி இலாபம் பெற்றது. இதுபோல ஒவ்வொரு நிறுவனமும் தனது பங்குகளை விற்று, கொள்ளை இலாபம் பெற்றன. ஸ்பெக்ட்ரம் உரிமத்தின் சந்தைமதிப்பு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் ஊழல் நடந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது. ஊழல் நடக்கவில்லை, அரசுக்கு 1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதற்கு காரணம், இராசாவின் நிர்வாகத் திறமையின்மைதான் என்று யாராவது கூறுவார்களேயானால், அதைவிட நகைக்கத்தக்க விசயம் எதுவுமிருக்காது. ஒரு கவுன்சிலரோ, வார்டு உறுப்பினரோ கூட தங்கள் பகுதியின் அத்தனை நிலவரத்தையும் (ஊழல் செய்வதற் காகவே) விரல் நுனியில் வைத்திருக்கும் போது, ராசாவுக்கு பங்குச் சந்தை நிலவரம் தெரியாது என்று சொல்வது எவ்வளவு பெரிய நகைச்சுவையாக இருக்கும்?

தமிழக முதல்வர் கருணாநிதி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி கூறும் போது, அமைச்சர் ராசா தலித் என்பதால் அவர் மேல் குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூறி, ஆரம்பத்திலிருந்தே தலித் என்ற கேடயத்தைப் பயன்படுத்தி வந்தார். தற்பொழுது ராசா குற்றவாளி அல்ல, பிரமோத் மகாஜன், அருண் சௌரி போன்றவர்கள் அமைச்சராக இருந்தபோது பின்பற்றிய 'முதலில் வந்தவருக்கு முன்னுரிமை' என்ற முறைதான் நடைமுறையில் இருந்தது, ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) கோரப் படவில்லை, அதனால் இவர் குற்றமற்றவர் எனக் கூறுகிறார்.

'இனிமேல் ஸ்பெக்ட்ரம் விற்பனை ஏலம் மூலம் நடத்தப்பட வேண்டும். அதைத் தவிர்த்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற முறையைப் பின்பற்றக் கூடாது' என்ற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை  ஆணையத்தின் (TRAI) சிபாரிசை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது (டைம்ஸ் ஆஃப் இந்தியா, நவம்பர் 1, 2008)

மேலும் ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமங்கள் குறிதர்த பிரச்சனைகள் கையாளப்பட்ட விதம் குறித்து தனக்கு ஒப்புதல்  இல்லை என தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இவைகளை வைத்துப் பார்க்கும் போது, இராசா தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. பிரமோத் மகாஜன், அருண் சௌரி ஆகியோர் பயன்படுத்திய முறையை இராசாவும் பின்பற்றினார் என்பதால் குற்றமற்றவர் என்று சொல்லவியலாது. அவர்கள் பயன்படுத்திய முறை தற்போதும் பயன்படுத்தலாம் என்பது முற்போக்கிற்கும், பகுத்தறிவுக்கும் ஏற்புடையதாக இருக்காது.


எதிர்கட்சிகளும், கம்யூனிஸ்ட்களும் இராசாவை பதவி விலகுமாறு கோரி வந்தனர். இதைப் பற்றி இராசா குறிப்பிட்டபோது, 'நீதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. எனவே பதவியை ராஜிநாமா செய்யும் கேள்விக்கே இடமில்லை' என்று தெரிவித்தார். ஆனால் ஊழல், உலகம் பூராவும் நாறிப் போக, இராசா வேறு வழியின்றி இராஜிநாமா செய்துள்ளார். போபால் விஷ வாயு தீர்ப்பிலும், அயோத்தி தீர்ப்பிலும் நீதி எவ்வாறு செயல்பட்டது என்பது யாருக்கு தெரியுமோ இல்லையோ, இராசாவுக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்த ஊழலைப் பற்றி ஜெயலலிதா கூறும் போது இராசா பதவி விலகுமாறும், பதவி விலகுவதன் பொருட்டு தி.மு.க. கூட்டணியை விட்டு விலகினால், அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என காங்கிரஸுக்கு தைரியம் ஊட்டியுள்ளார். இவ்வளவு பெரிய ஊழல் காங்கிரஸுக்கு சம்மந்தமில்லாமல் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் ஜெயலலிதாவோ காங்கிரஸுக்கு சம்மந்தமில்லாதது போல் பேசுவது அரசியல் நலனுக்காகத்தான் என்று பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

ஊழல், முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் பதவி விலகுவது என்பது மட்டுமே தீர்வாகாது. அதற்கான தண்டனையும் அவர்கள் பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது. போதிய நிதியின்மை காரணமாக அரசு, தான் செய்யக் கூடிய வேலைகளை  தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. குறிப்பாக, கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் தனியாருக்கு வழங்கி வருகிறது (தனியாருக்கு வழங்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்பது வேறு விசயம்). போதிய நிதியின்மைக்கு என்ன காரணம்? ஊழல், முறைகேடுதான். இவைகளால்தான் பல இலட்சம் கோடிகளை இழக்க வேண்டி உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் ஏதோ தனிப்பட்டவர்களின் செயல்கள் போல காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சித்தரிக்கின்றன. இந்த ஊழல் உயர் மட்டங்களில் தலைவர்களுக்குத் தெரிந்தோ அல்லது அவர்களின் ஆணையின் கீழோதான் நடைபெற்று இருக்க வேண்டும். ஊழல் வெளிஉலகிற்கு தெரியும் போது குறிப்பிட்ட நபரை பலிகடாவாக ஆக்குகிறார்கள்.

உண்மையில், புதிய பொருளாதாரக் கொள்கையான உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்றவற்றோடு உடன் பிறந்தவைதான் இந்தப் பெரும் ஊழல்கள். ஹர்ஷத் மேத்தா, ஹவாலா ஊழல்களிலிருந்து தொடங்கி ஸ்பெக்ட்ரம் வரை அனைத்து முக்கிய ஊழல்களும், புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டுவரப்பட்ட பின்னர் தான் நடைபெற்றுள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

முதலாளிகளுக்கு உபரி மதிப்பு சுரண்டல் எப்படியோ, அதுபோல முதலாளித்துவ கட்சிகளுக்கு ஊழல் ஒரு மையப்பொருளாக விளங்குகிறது. சிறு சிறு இலஞ்சம், ஊழல்களுக்கு, நுகர்வுக் கலாச்சாரமும், சந்தைப் பொருளாதாரமும் காரணமாக இருக்கிறது. பணபலம் ஆட்சியை நிர்ணயிக்கிற சக்தியாக விளங்கும் சூழலில், பெரும் ஊழல் என்பது அரசியல் தேவையாக இருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றத்தின் போதும், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும், அரசியல்வாதிகளிடையே பணம் எப்படி விளையாடியது என்பதையும், அனைத்துத் தேர்தல்களிலும் பணம் எப்படி நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது என்பதையும் நாம் அறிவோம். ஆயினும், பணத்தைக் காட்டி வெகு காலத்திற்கு ஏமாற்ற முடியாது என்பதை மக்கள் நிரூபிப்பார்கள்.

-பால்பாண்டி

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014