இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

ஆடம்பரத்தில் அரசுகள் அதலபாதாளத்தில் பொதுமக்கள்

உத்திரபிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதி, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளது. இங்கு உள்ள 13 மாவட்டங்களை, உ.பி. அரசு புறக்கணிப்பதாகக் கூறி, தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், கோரி வருகின்றனர்.

ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ள பண்டல்கண்ட் பகுதியில் கந்து வட்டிகாரர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. கடன் வாங்கியவர்கள் நிலம், வீடு வைத்திருந்தால் அதை கந்துவட்டி கும்பல் அபகரித்துக் கொள்கிறது. சொத்து எதுவும் இல்லையென்றால், கடனைத் திருப்பி வசூலிக்கும் விதமே கொடூரமானது.



கடன் வாங்கியவரின் வீட்டில் உள்ள பெண்களே கந்துவட்டிக்காரர்களின் குறி. கடனுக்காக அந்தப் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். இந்தக் கொடுமை பலகாலமாக நடந்து வருகிறது.

இப்படி கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி கொடுமைப்பட்ட அனிதா என்ற 17 வயது இளம்பெண், கடந்த 2007இல் போலீசில் புகார் கொடுத்ததால் இந்த மாதிரியான கொடுமைகள் அம்பலமாகின. அனிதாவின் தந்தை படிப்பறிவில்லாத கூலித் தொழிலாளி. கந்துவட்டிகாரர்களிடம் தன் மகளின் மேற்படிப்பு செலவிற்காக 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இதை அவருக்குத் தெரியாமல் 50 ஆயிரம் கடன் வாங்கியதாகக் கந்துவட்டிக்காரர்கள் எழுதி வாங்கிக்கொண்டார்.

வாங்கிய கடனுக்கு வட்டியைக் கூட தரமுடியாமல் அவர் தத்தளித்த போது வீட்டுக்கு வந்த கந்து வடடிக்காரர்கள், 'உன் பெண்ணை அனுப்பு, உன் கடனைத் தள்ளுபடி செய்கிறோம்” என்று கூற, வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தார், அனிதாவின் தந்தை. அடுத்து ஆறு மாதத்தில், நினைத்த நேரத்தில் எல்லாம் வந்து, அனிதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர், கந்துவட்டிக்காரர்கள்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அனிதா, போலீசிடம் சென்று பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்தார். ஆனால் ஒரு சில மணி நேரங்களில் கந்துவட்டிக்காரர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டாராம். அனிதா புகார் கொடுத்த விவகாரம் சில மாதங்களர் பரபரப்பாகப் பேசப்பட்டு, அதன் பிறகு அதை எல்லாரும் மறந்து விட்டனர்.

இந்த நிலையில் கடந்த வருடம் கந்து வட்டிக்காரர்களால் அபகரிக்கப்பட்ட தன் மனைவி குஷ்மா தேவியை மீட்க காளிச்சரண் என்ற கூலி தொழிலாளி, போலீசில் முறையிட பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது. கடனுக்காக குஷ்மா தேவியை அழைத்துச் சென்ற கந்துவட்டிக்காரர் அந்தப் பெண்னை தேஷ்ராஜ் என்பவரிடம் விற்றுவிட்டார். பிறகு தேஷ்ராஜ், குஷ்மா என் மனைவி என்று அடித்துச் சொல்லியுள்ளார். இது பற்றி தேசிய மகளிர் கமிஷ்னர் குழு விசாரித்து வருகிறது. ஆந்த குழுவின் தலைவரான யாஸ்மீன் கூறுகையில், ''கந்து வட்டி கொடுமையால் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன, அது பற்றி இந்த பகுதி முழுவதும் விசாரிக்க உள்ளோம். கந்து வட்டி கொடுமையை தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் விசாரித்து மதர்திய அரசுக்கு அறிக்கை கொடுப்போம்'' என்று ஆறுதலுக்காக கூறுயுள்ளார்.
    இதுபற்றி உ.பி. அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுதுறை முதன்மை செயலாளர், அமல் வர்மாவிடம் கேட்டதற்கு, 'கந்து வட்டி கொடுமை நடக்கவே இல்லை, உங்களுக்கு தெரிந்து யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களை என்னிடம் அனுப்பி வையுங்கள் நான் விசாரிக்கிறேன்' என்று அலட்சியமாக பதில் சொல்லியுள்ளார்.

உ.பி. மாநிலத்தில் மட்டும் அல்ல, தமிழகத்திலும் இது போன்று நடைபெறுகிறது.

சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் இப்படி ஒருசம்பவம் நடந்தது. கடன் பணத்தை திருப்பி கட்ட முடியாத நிலையில், தன் மனைவியை கந்துவட்டி காரர்களிடம், விட்டு விட்டார் ஒரு ஏழை விவசாயி . இதே போல், இராமநாதபுரத்திலும் நடந்தேறி இருக்கிறது.

உத்திர பிரதேசத்தின் தலைநகரமான லக்னோவில் நீதிமன்ற உத்தரவை மீறி கன்ஷிராம் நினைவிடப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலித் தலைவர்களின் நினைவிடம் அமைக்கும் பணியில் உ.பி.அரசு ஈடுபட்டுள்ளது.

அதன் மொத்த மதிப்பீடு 2.600 கோடி ரூபாய். இது லக்னோவின் மையப்பகுதியில் நடைபெறுகிறது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டுமான பணிக்கு இடைகாலத் தடை விதித்தது. இதை அம்பலபடுத்துவதாக கடந்த 08.11.2009 அன்று மாநில அரசும் உத்திரவாதம் அளித்தது. நீதிமன்ற தடைக்கு முதல்வர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தடையையும் மீறி, மாநில அரசு சார்பில் கட்டுமானப் பணிகள் நடந்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் பி.என்.அகர்வால், அல்டாப் ஆலம் அகியோர் முன்னிலையில் 05.11.2009 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை இரண்டரை மணிநேரம் நடைபெற்றது. மாநில அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஹரிஷ்சால்வே ஆஜரானார் . அவர் கூறியதாவது, நீதிமன்ற உத்தரவில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், உத்தரவை மாயாவதி அரசு புறக்கணிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது பதிலை பரிசீலித்த நீதிபதிகள் கூறியதாவது, 'நினைவிடம் கட்டுமானப்பணியை நிறுத்துவது தொடர்பாக உ.பி.அரசு அளிதர்த உத்திரவாதத்தை ஈடுபாட்டுடன் நிறைவேற்றவில்லை. உத்தரவில் குழப்பம் என்பதெல்லாம் கண்துடைப்பு, நீதிமன்ற உத்தரவில் ஏதாவது குழப்பம் இருந்தால் இது குறித்து நீதிமன்றத்தை அணுதி தெளிவான விளக்கத்தை பெறுவது மாநில அரசின் கடமை. சட்டப்பேரவையில் மற்ற கட்சிகளுடன் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதைப்போல எங்களுடன் விளையாட வேண்டாம்” என நீதிபதிகள் எச்சரித்தனர். இந்த உத்தரவையும் மீறி இன்றுவரை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நம் தமிழ் நாட்டில் நமது முதல் அமைச்சர், செய்கின்ற செலவு அருணாச்சலம் படத்தில் ரஜினி  செய்யும் செலவை விட அதிகம்

(இந்த வருடம் மட்டும் சில)

1. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு ஆன மொத்த செலவு 400 கோடி, இது ஐந்து நாட்களில் மட்டும்.

2. தமிழ்நாட்டில் ரூ.13 ஆயிரம் கோடியில் 3 புதிய ஆலைகள் அமைப்பது தொடர்பான ஒபபந்தங்கள். முதல் அமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 04.8.2010 அன்று கையெழுத்தாகின.

3. தற்பொழுது கட்டி முடிக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையின், மொத்த கட்டுமான செலவு ரூ.706 கோடி. இதில் முதல் அமைச்சருக்கென்று உள்ள கட்டிடத்தின் மகிப்பு மட்டும் ரூ.426 கோடி.

4. 22.8.2010 அன்று சினிமா கலைஞர்களுக்கு புதிதாக   15 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கும் கருணாநிதி அடிக்கல் நாட்டி உள்ளார;. பையனூரில், சென்னையை அடுத்து இதற்கு 96 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைத்துள்ளாராம்.
இந்த செலவுகள் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றாலர்,

1. உத்திரபிரதேச மாநிலத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இருக்கின்றன. அதை இந்த உ.பி.அரசு பொருட்படுத்தாமல் இருக்கிறது. இதற்கிடையில் தலைவர்களுக்கு 2.600 கோடி செலவில் நீதிமன்ற உத்திரவையும் மீறி, நினைவிடம் தேவையா, அதனால் என்ன பயன்?
அந்த எளிய விவசாயி குடும்பத்தால் கந்துவட்டி பணத்தை திருப்பி கட்ட முடியாத நிலையில் தன் பெற்ற பெண்பிள்ளையை அடகுவைக்கும்  குடும்பமும் அதே மாநிலத்தில்தான் உள்ளது. நினைவிடமும் அதே மாநில அரசால்தான் கட்டப்படுகிறது.

2. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என காவல்துறையும், நீதித் துறையும் கூறுகிறது. இதற்குக் காரணம், அந்த மாநில முதல் அமைச்சர் 2007 இல் பிறப்பித்த உத்தரவுதான். தன் ஆட்சியில், காவல் நிலையங்களில், வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் போன்ற தடுப்புச் சட்டங்களின் கீழ் நிறைய வழக்குகள் பதியக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவு. என்ன ஒரு அருமையான உத்தரவு!

3. அந்தப் பெண் மேற்படிப்பு படிக்க முடியாதவாறு உ.பி. அரசு கல்வியை இலவசமாக வழங்க மறுக்கிறது. எளிய ஏழை குடும்ப மாணவர்களுக்கு மட்டுமாவது இலவசமாக கல்வியும், உதவித்தொகையும் வழங்கலாமே!
மற்றும், இந்த கந்து வட்டிக் கொடுமைகள் தமிழகத்திலும் தலைவிரிக்க தொடங்கியுள்ளன. பெற்ற பிள்ளைகளையும் மனைவிகளையும், அடகு வைக்கும் கொடுமை தொடர்கிறது.

அடுத்து, தமிழக அரசின் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு.

5 நாட்களுக்கு 400 கோடி ரூபாய் செலவாம். ஏதோ தன்வீட்டு சொத்தை செலவு செய்வது போலத்தான் பணத்தை வாரி இறைத்தார் நம் முதல்வர்.

இது வரைக்கும் எத்தனையோ ஆட்சிகள் வந்து, இருந்து, அழித்துவிட்டுச் சென்றதெல்லாம், அதே பழைய சட்டப் பேரவையில் தான். அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். எல்லாம் ஆண்டு சென்றார்கள். ஏன், தற்பொழுது அந்த சட்டப்பேரவை இடிந்து விழும் நிலையிலா உள்ளது? எதற்காக இந்த புதிய சட்டப் பேரவை? அதுவும் 706 கோடி ரூபாயில்!

அவர் குடும்பம் மொத்தமும் தமிழகத்தை ஆட்சி புரிய அந்தப் பழைய கட்டிட இடம் போதவில்லையோ? பாவம்!

அடுத்து, செய்த செலவெல்லாம் பற்றவில்லையாம். சினிமா கலைஞர்களுக்குப் புதிதாக 15 ஆயிரம் வீடுகள் கட்டப் போகிறாராம்.

பாவம் சினிமா கலைஞர்களும், ஏழைகள்தானே! ஒரு திரைப்படத்திற்கு ஒரு கோடி முதல் ஐந்து கோடிகள் தானே வாங்குகிறார்கள்.

தன் அலுவலகத்தின் முன்பும், சென்னையைச் சுற்றி உள்ள பல இடங்களிலும் வீடு இல்லாமல், சாலை ஓரங்களில், மழையிலும், வெயிலிலும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள், கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஏழை எளிய மக்கள்.

அவர்களுக்கு ஒரு குடும்ப அட்டை கூட கொடுக்க யோசிக்க முடியவில்லை. இதற்கிடையில், 15 ஆயிரம் புதிய வீடுகள் தேவையா? கேட்டார்களா அந்த சினிமா கலைஞர்கள்?

இவற்றைப் பற்றியெல்லாம் இங்கு நாம் பேசக் காரணம் என்னவென்றால், நம் நாட்டில் இன்னும், படிக்காத, ஏழை எளிய விவசாய மக்கள் ஏராளமாக உள்ளனர். இந்த உபயோகமற்ற செலவுகளைத் தவிர்த்து அவர்களுக்கு உபயோகமான உதவிகளைச் செய்யலாமே இந்திய அரசு.

-இரா.திருமலை
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014