இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

பெருவெடிப்பு முதல் பொதுவுடைமை வரை - பாகம் 9

பாகம்-7 இல்  மனித சமுதாயம் என்பது என்ன? அது எப்படித் தோன்றியது? எனக் கண்டோம். கடந்த இதழில், பாகம்-8 இல், சமுதாய அமைப்பைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உற்பத்தி முறை எவ்வாறு திகழ்கிறது என்று பார்த்தோம். உற்பத்தி முறையின் இரண்டு கூறுகளான உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் விளக்கங்களைப் பார்த்தோம். மேலும், உற்பத்தி முறை சமுதாயத்தின் அடிக்கட்டுமான மாகவும், அரசு, பண்பாடு, கலை, இலக்கியம், மதங்கள், தத்துவங்கள், கல்வி, ஆணாதிக்கம், வர்க்கங்கள், சட்டம் போன்றவை மேல்கட்டுமான மாகவும் அமைந்துள்ளன எனக் கண்டோம். இனி...



லுரலாறு என்பது ஏதோ சில தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளால் தீர்மானிக்கப்படுவதாக கல்வி நிலையங்களில் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளன. நல்ல அரசர்கள் சமூகத்தை நல்வழியில் மாற்றியதாகவும், தீய அரசர்கள் தீயவழியில் செலுத்தியதாகவும் வரலாறு எழுதப்பட்டுள்ளது. பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமுதாய மாற்றத்தில் எந்தப் பாத்திரமும் ஆற்றவில்லை என்றும், அரசர்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் போன்றோரின் சிந்தனைகள்தான் சமூகத்தை மாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் வரலாறு என்பது சமுதாயத்தின் ஒருசில தனி நபர்களின் வாழ்க்கை வரலாறுகளின் தொகுப்பாகவே கருதப்படுகிறது. இந்தத் துருப்பிடித்த பழைய கருத்தாக்கத்தின் மீது ஜெர்மன் தத்துவஞானிகளான தோழர் காரல் மார்க்சும் தோழர் ஏங்கெல்சும் சம்மட்டி கொண்டு அடித்தனர். அவர்கள் புதியதொரு கருத்தாக்கத்தை முன்வைத்தனர். வரலாற்றை முன்கொண்டு செல்லும் மாபெரும் சக்தி 'தனிமனித சிந்தனை' அல்ல என்றும், சிந்தனையைச் சாராமல் சிந்தனைக்கு வெளியே நின்று இயங்கும் ஒரு புறஉலக சக்திதான் அவ்வேலையைச் செய்யமுடியும் என்றும் கூறினர். அவர்கள் ஏடறிந்த வரலாறு அனைத்தும் 'வர்க்கப் போராட்டங்களின் வரலாறு” என்று கூறினர். அதாவது, சுரண்டும் வர்க்கத்திற்கும், சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் சமுதாயத்தை இயக்கும் சக்தி என்றனர். மேலும், அவர்கள் உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடுதான் சமுதாயத்தை முன்னுக்குத் தள்ளிச் செல்கின்றன என்றனர். உற்பத்தி முறையில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மாற்றம் தான் மேல்கட்டுமானங்களிலும் மாற்றத்தை உண்டாக்கி புதிய, புதிய சமூக அமைப்புகளைத் தோற்றுவிக்கின்றன என்றனர்.

காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சுக்கு முன்பிருந்த சமூகவிய லாளர்கள் இவ்வாறான கருத்துக் களைக் கொண்டிருக்கவில்லை. இப்போது வரைகூட ஒரு சில சமூகவியலாளர்கள் சமூக வளர்ச்சி பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்;லை. இருந்தாலும் மார்க்சிய சமூக அறிவியலைப் படிப்போரும், அதை ஏற்றுக் கொள்வோரும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர்.

சமுதாய விடுதலைக்காகவும், அரசியல் விடுதலைக்காகவும் சிந்தித்த சில தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட மதம்தான் நம்மை ஒடுக்குகிறது, வேறு மதத்திற்கு மாறிவிட்டால் விடுதலை அடைந்துவிடலாம் என்று கருதியுள்ளனர். அமெரிக்க கருப்பர்களின் விடுதலை, கிறித்துவத்திலிருந்து இசுலாத்துக்கு மாறுவதில் தான் உள்ளது என்று மால்கம் எக்சும், தலித் மக்களின் விடுதலை சாதியத்தைக் கட்டிக் காக்கும் இந்து மதத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறுவதில்தான் உள்ளது என்று அண்ணல் அம்பேத்கரும் கருதினார்கள். மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கையை ஒழிப்பதுதான் சமூகத்தை மாற்றுவதற்கான முதன்மையான வேலை என்று தந்தைப் பெரியார் கருதினார்.

மதங்களும், கடவுள் நம்பிக்கையும் சமூக மாற்றத்தின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன என்பது உண்மைதான். இந்தத் தளத்திலான போராட்டங்களும் முக்கியமானவைதான். ஆனால் நாம் கடந்த இதழில் கண்டது போல் மதங்களும், தத்துவங்களும் மனிதனுடைய கருத்தியல் சார்ந்த விசயங்களாகும். இவை சமூக மாற்றத்தைத் 'தீர்மானிக்கக் கூடியவையாக' இல்லை. மாறாக, சமூக மாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்தி 'உற்பத்தி முறை'தான். அதாவது, இந்து மத சாதிய அமைப்பானது, 'சாதிய நிலவுடைமை உற்பத்தி முறை' மீதுதான் கட்டப்பட்டுள்ளது; கடவுள் நம்பிக்கை என்பது 'தனிச் சொத்துடைமை உற்பத்தி முறைகளின்' மீதுதான் கட்டப்பட்டுள்ளது. இவற்றைப் பற்றி வரும் இதழ்களில் தனித்தனித் தலைப்புகளில் விரிவாகக் காணலாம். இப்போது நாம் உலக வரலாறு என்பது எப்படி வர்க்கப் போராட்டங்களின் வரலாறாக இருக் கிறது என்பதையும், காலந்தோறும் உற்பத்தி முறை மாற்றமடைந்து எப்படி புதிய, புதிய சமூக அமைப்புகளைத் தோற்றுவித்தது என்பதையும் காண்போம்.

சமுதாயம் எப்படி மாறி வருகிறது?

சமுதாயம் மாறிக்கொண்டே வருவதற்கு முக்கிய காரணம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியாகும். மனிதன் தொடர்ந்து புதிய உழைப்புக் கருவிகளை கண்டுபிடிக்கிறான்; இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்களை மேலும் மேலும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறான் (அதாவது உழைப்பின் ஆதாரப் பொருட்கள் பெருகுகின்றன); அதிகமான உழைப்பு அனுபவமும், உற்பத்தி அறிவும், மிகுந்த உற்பத்தி திறனும் பெற்ற மனிதர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இவ்வாறு உற்பத்தி சக்திகள் இடைவிடாது வளர்கின்றன. ஆனால், உற்பத்தி உறவுகள் அவ்வளவு வேகமாக வளர்வதில்லை. அதாவது, சொத்துடைமை உறவுகளில் மாற்றம் அவ்வளவு வேகமாக நடைபெறுதில்லை. தொடர்ச்சியாக வளரும் உற்பத்தி சக்திகள் மற்றும் தேங்கி நிற்கும் உற்பத்தி உறவுகள் - இவற்றிற்கிடையிலான முரண்பாடுதான் சமூகத்தில் அத்தனை சிக்கல்களுக்கும் காரணமாகிறது. சமூகத்தில், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், உற்பத்தி சக்திகளும், உற்பத்தி  உறவுகளும் சமநிலையிலும், ஒன்றிக்கு மற்றொன்று பொருந்துவதாகவும் இருந்தால்தான் சமூகம் சீராக இயங்க முடியும். மாறாக, உற்பத்தி சக்திகள் நன்கு வளர்ந்துள்ள நிலையில், உற்பத்தி உறவுகள் பின்தங்கி இருந்தால் என்ன நடக்கும்? உற்பத்தி சக்திகள் மேலும் மேலும் வளர்ச்சியடைவது தடைபடும். நாம் ஒரு கற்பனை செய்து கொள்வோம். ஒரு படிக்கட்டில் ஏறிச் செல்லும் மனிதர் இடது காலை மட்டுமே அடுத்தடுத்த படிக்கட்டுக்கு நகர்த்துகிறார்; ஆனால், வலது கால் ஒரே படிக்கட்டிலேயே இருக்கிறது என்றால் என்ன நடக்கும்? இடது காலால் இரண்டு மூன்று படிக்கட்டுகளுக்கு மேல் செல்ல முடியாது, அது மேல் நோக்கி செல்வது தடைபடும் இல்லையா? இப்படித்தான் உற்பத்தி சக்திகளுக்கும் நேர்கிறது. ஒரு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தடைபட்டால் அங்கு வறுமை, பொருளாதார நெருக்கடி, போர்கள், பட்டினிச்சாவுகள் ஏற்படுகின்றன. மேலும், இப்படிப்பட்ட காலத்தில்தான் திருட்டு, கொள்ளை, விபச்சாரம், பிச்சையெடுத்தல் போன்ற உதிரித்தனங்களும் பெருகுகின்றன.

இதைத் தீர்ப்பதற்கு என்ன வழி? ஆம்! வலது காலைத் தூக்கி அடுத்த படிக்கெட்டில் வைப்பதுதான். அதாவது, உற்பத்தி உறவுகளை உற்பத்தி சக்திகளுக்கு சமமாக வளர்த்தெடுப்பதுதான். இன்னும் விளக்கமாகச் சொன்னால், சொத்துடைமையை மாற்றி அமைப்பதுதான். இது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. எல்லோரிடமும் சொல்லி அனுப்பி, சம்மதம் பெற்று, ஒரு திட்டம் போட்டு செய்து முடித்துவிட முடியாது. ஏனெனில் அவ்வளவு காலம் சொத்துடைமையை அனுபவித்து வந்த வர்க்கம் அதை எளிதில் விட்டுவிடாது. (நாம் ஒரு விசயத்தை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு நாம் 'சொத்துடைமை' என்று குறிப்பிடுவது 'உற்பத்தி சாதனங்களின் சொத்துடைமை'யைத்தான். அதாவது, உழைப்பின் ஆதாரப் பொருட்கள் மற்றும் உழைப்புக் கருவிகளின் மீதான உடைமையைத்தான். நுகர்வதற்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மீதான உடைமை - அவை எவ்வளவு மதிப்பு மிக்க பொருட்களாக இருந்தாலும் - உற்பத்தி உறவுகளாக ஆகாது.) ஆக, உற்பத்தி சாதனங்களை ஏகபோகமாகக் கொண்ட உடைமை வர்க்கத்திற்கும், உற்பத்தி சாதனங்கள் மறுக்கப்பட்டுள்ள உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டம்தான் இந்த முரண்பாட்டைத் தீர்த்து வைக்கும். சமுதாயத்தில் பல்வேறு வடிவங்களில், வல்வேறு தளங்களில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உள்நாட்டுப் போராக வெடிக்கிறது. இது ஒரு அரசியல்-சமுதாயப் புரட்சியாக நடந்து, 'புதிய உற்பத்தி உறவுகளைத்' தோற்றுவிக்கிறது. இப்படித்தான் காலந்தோறும் சமுதாய வரலாற்றில் உற்பத்தி சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப உற்பத்தி உறவுகள் மாற்றமடைகின்றன. இப்படித்தான் பழைய சமூக அமைப்பு மாற்றப்பட்டு, புதிய சமூக அமைப்பு தோன்றுகிறது. கீழ்காணும் படம் இதை விளக்கும்:
  
பல்வேறு சமூக அமைப்புகள்:

ஆதி பொதுவுடைமைச் சமூகம்:

காட்டுமிராண்டி காலக்கட்டத்தில்  மனிதன் இயற்கையில் கிடைத்த பொருட்களைச் சேகரித்து உயிர் வாழ்ந்தான் என்று நாம் ஏற்கனவே கண்டோம். அப்போது மனிதன் மிகக் குறைந்த அளவில் உற்பத்தி செய்தான். அதற்கு அவன் பயன்படுத்திய உழைப்புக் கருவிகள் மரத்தினாலோ, கற்களினாலோ ஆனவை. உழைப்பின் ஆதாரப் பொருட்களான நிலம், நீர், கால்நடைகள் போன்றவற்றை மிகக் குறுகிய அளவிலேயே பயன்படுத்தினான். யாருக்கும் சொந்தமில்லாத நிலம் ஏராளமாக இருந்தது. ஆனால் அதைப் பண்படுத்தி, பயன்படுத்தத் தேவையான உழைப்புக் கருவிகளும், உற்பத்தித் திறன் பெற்ற மனிதர்களும் போதுமான அளவில் இல்லை. இதனால், முக்கியமான உற்பத்தி சாதனங்களை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. ஒருசில உழைப்புக் கருவிகளை மட்டும் மனிதர்கள் உடைமையாகப் பெற்றிருந்தனரே தவிர, உற்பத்திக்கு ஆதாரமான உற்பத்தி சாதனங்கள் பொதுவுடையாகவே இருந்தன. இத்தகைய சமூக அமைப்பை ஆதி பொதுவுடைமைச் சமூகம் என்றழைக்கிறோம். அநாகரிக நிலையின் மூன்றாவது கட்டத்தில் இரும்பின் பயன்பாட்டால் உற்பத்தி பெருகும் வரை இச்சமூக அமைப்பே எல்லாவிடங்களிலும் நிலவியது.

மனிதன் உருவான காலக்கட்டத்திலிருந்து, அநாகரிக நிலையின் மூன்றாவது கட்டம் வரையிலுள்ள பல இலட்சம் ஆண்டுகாலம் இந்த சமூக அமைப்பே நிலவியது. இதைச் சரியாகச் சொல்வதென்றால், மனித சமுதாயம் என்ற ஒன்று தோன்றியபோது, அது இயல்பாகவே பொதுவுடைமை அமைப்பாகவே இருந்தது. சொத்துடைமை, வர்க்கங்கள் என்பவையெல்லாம் பின்னால் தோன்றியவையே. இச்சமூக அமைப்பில் மனிதர்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தனர். கூட்டாக உழைத்தனர். அனைவரும் உழைத்தனர். ஏனென்றால் ஒருவர் தன்னுடைய உழைப்பால் தான் உயிர் வாழ்வதே கடினமாக இருந்தது. இந்நிலையில்  அடுத்தவர் உழைப்பைக் கொண்டு எந்த நபரும் உயிர் வாழ முடியாது. மேலும், கூட்டாக சேர்ந்து உழைப்பது மட்டுமே இயற்கையை எதிர்கொள்ள அவர்களிடமிருந்த பலம் வாய்ந்த ஆயுதமாகும்.

இன்றைய பழங்குடி மக்களின் வாழ்வில் கூட 
கூட்டு உழைப்பானது சமூகத்தின் உயிர் நாடியாக உள்ளது.

எளிமையான உழைப்புக் கருவிகள், மிகக் குறைந்த அளவில் பயன்பாடு அறியப்பட்ட உழைப்பின் ஆதாரப் பொருட்கள், மிகக் குறைந்த உற்பத்தித் திறனும், மிகக் குறைந்த உழைப்பு அனுபவமும், மிகக்குறைந்த உற்பத்தி அறிவும் பெற்றிருந்த மனிதர்கள் - இவைதான் ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் இருந்த உற்பத்தி சக்திகள் ஆகும். சுரண்டல் அற்ற கூட்டு உழைப்பு, உற்பத்தி சாதனங்களின் பொதுவுடைமை - இவைதான் ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் இருந்த உற்பத்தி உறவுகள் ஆகும். இந்த உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் பொருத்தமுடையவையாக இருந்தன. ஆனால், காலம் செல்லச் செல்ல உறபத்தி சக்திகள் வளரத் தொடங்கின. இரும்பு போன்ற உறபத்தியை பெருக்கெடுக்க வைத்த கண்டுபிடிப்புகள் சமூகத்தில் புதிய நிலைமையைத் தோற்றுவித்தன. புதிய உழைப்புக் கருவிகள் மற்றும் புதிய ஆதாரப் பொருட்களின் கண்டுபிடிப்பு ஒருவன் தனக்குத் தேவையானதை விடக் கூடுதலாக உற்பத்தி செய்ய முடிந்த நிலையை ஏற்படுத்தியது. ஆனால், கூட்டு உழைப்பும், பொதுச் சொத்துடைமையும் அப்படியே நிலவின. இப்போது, வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகள், பின்தங்கிய உற்பத்தி உறவுகளோடு முரண்பட்டன.

பலர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பானை தயாரித்த நிலை மாறி, ஒரேவொரு குயவர் சக்கரத்தின் உதவியுடன் பல பானைகள் செய்ய முடியும் என்ற நிலைமை வந்தது. எல்லோரும் எல்லா வேலைகளையும் கூட்டாகச் செய்தது மாறி, மொத்த வேலைகளை ஒரு சமூகம் தன்னுள் பிரித்துக் கொள்ளத் துவங்கியது. சமூகத்தில் பல்வேறு வேலைப் பிரிவினைகள் நடந்தேறின. பயிர்த் தொழில், கால்நடை வளர்ப்பு, கைவினைத் தொழில், வணிகம் என வேலைகள் பிரியத் தொடங்கின.

அடிமை உடைமைச் சமூகம்:

பழைய உற்பத்தி உறவான கூட்டு உழைப்பும், உற்பத்தி சாதனங்களின் பொதுவுடைமையும் மாற்றி அமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு இனக் குழுவில், வளர்ந்துள்ள உற்பத்தி சாதனங்களைப் பயன்படுத்த போதுமான ஆட்கள் இல்லாத நிலையில் அக்குழு, மற்ற குழுக்களுடன் மோதியது. அவர்களை வென்று, போர்க் கைதிகளாக சிறைப் பிடித்து வந்து அவர்களை அடிமைகளாக்கி உற்பத்தியில் ஈடுபடுத்தியது. வேலைப் பிரிவினையைத் தொடர்ந்து, உற்பத்தி சாதனங்களைத் தனிச் சொத்துடைமையாகப் பெறத் தொடங்கியவர்கள், அடிமைகளையும் உடைமையாகப் பெற்று எஜமானர்களாக ஆனார்கள். அடிமைகள் முக்கியமான உற்பத்தி சாதனங்களாக இருந்தனர்.


 ரோம் அடிமை உடைமைச் சமூக அமைப்பை 
எதிர்த்து அடிமைகளைத் திரட்டிப் போராடிய 
ஸ்பார்ட்டகஸ் (திரைப்படக் காட்சி)


விலங்குகளைப் போல, சங்கிலிகளில் பிணைக்கப் பட்டு, அடித்து வேலை வாங்கப்பட்ட அடிமைகளையும், அவர்களின் உழைப்பில் பெற்ற உபரி உற்பத்தியை ஏகபோகமாக அனுபவிக்கும் உழைக்காத எஜமானர்களையும் கொண்ட இந்த சமூக அமைப்பிற்குப் பெயர் அடிமை உடைமைச் சமூக அமைப்பு ஆகும். நாகரிகங்களாக வளர்ச்சியடைந்த சமூக அமைப்புகள் பெரும்பாலும் அடிமைகளின் உழைப்பைக் கொண்டே உருவாகின.

ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் மேற்கொண்டு வளர முடியாமல் தேங்கிப் போன உற்பத்தி சக்திகள் இப்புதிய சமூக அமைப்பில், தடைகள் நீங்கி வேகமாக வளரத் தொடங்கின. மனித குல வரலாற்றில் முதல்முறையாக ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது. அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், நகரங்கள், கலை, இலக்கிய வளர்ச்சி போன்ற பல முற்போக்கு மாற்றங்களை இச்சமூக அமைப்பு ஏற்படுத்தியது. அதே நேரத்தில், தனிச் சொத்துடைமை, குடும்பம் மற்றும் அரசு ஆகியவற்றைத் தோற்றுவித்ததன் மூலம் அது ஒரு சுரண்டல் சமூகமாகவும் உருவானது. தனிச் சொத்துடைமை, குடும்பம், அரசு ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி நாம் பின்னர் தனித்தனி தலைப்புகளில் விரிவாகக் காண இருக்கிறோம். இப்போது இந்தச் சமூகங்களின் உற்பத்தி சார்ந்த வளர்ச்சியை மட்டும் காண்கிறோம்.

 சீசென் ஈட்ஸா: வட அமரிக்கக் கண்டத்தில் 
மாயன் இன மக்கள் அமைத்த அடிமை உடைமை 
நாகரிக சமூகத்தில் கட்டிய 'பிரமிட்'


இரும்பு உள்ளிட்ட உலோகங்களிலான முன்னேறிய உற்பத்திக் கருவிகள், பண்படுத்தப்பட்ட நிலங்கள், அடித்து வேலை வாங்கப்படும் அடிமைகளின் உற்பத்தித் திறன்- இவை உள்ளிட்டவையே அடிமை உடைமைச் சமூகத்தின் உற்பத்தி சக்திகள் ஆகும். உடைமைகள் ஏதுமற்ற அடிமைகள், உற்பத்தி சாதனங்களை தனிச் சொத்துடைமையாகக் கொண்ட எஜமானர்கள், நேரடியான, கொடூரமான உழைப்புச் சுரண்டல் - இவையே அடிமை உடைமைச் சமூக அமைப்பின் உற்பத்தி உறவுகள் ஆகும்.

வரலாறு மீண்டும் திரும்பியது. உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சியடைந்தன. உற்பத்தி உறவுகள் பின்தங்கியவை ஆகின. எஜமானர்கள் தம்மிஷ்டம் போல தனது அடிமைகளைக் கொலை செய்வது, அடிமைச் சமூக அரசு நடத்தும் போர்களில் ஏராளமான அடிமைகள் உயிரிழப்பது, அடிமைகள் உழைப்பதில் விருப்பமற்று இருப்பது போன்றவை வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளுக்குப் பொருந்துவதாய் இல்லை. கொடூரமாக ஒடுக்கப்பட்ட அடிமைகள், அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். பேரரசுகளாக உருவான அடிமை உடைமை அரசுகள் சீரழியத் தொடங்கின. அடிமைகளின் கிளர்ச்சி சமூகத்தை மாற்றி அமைத்தது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரோம் பேரரசும், ஸ்பார்ட்டகஸ் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சியும் இதற்கு நல்ல உதாரணம்.

உற்பத்தி உறவுகள் மாற்றி அமைக்கப்பட்டன. அடிமைகளை (முழுவதுமாக இல்லாமல்) பாதியளவில் விடுவித்த புதிய சமூக அமைப்பு உருவானது. அதற்கு நிலவுடைமை (Fuedal) சமூகம் என்று பெயர்.
(தொடரும்...)
-மனுவேல்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014