இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

அயோத்தி: மரத்தடி தீர்ப்பு

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி தீர்ப்பு சர்ச்சைக்குரிய இடம்தான் இராமர் பிறந்த இடம் என்று கூறியுள்ளது. இதுவரை இராமர் கோயிலைத் தேடிக்கொண்டிருந்த தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும் உறுதிபடுதர்த முடியாத இடத்தை இந்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இராமர் கிருதயுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். கற்பனைக்கு எட்டாத ஆண்டுகளுக்கு முன்பு, இராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் இடம், சர்ச்சைக்குரிய இந்த இடம்தான் என்று தீர்ப்பளித்த நீதிபதி தரம்சீர் சர்மாவை பாராட்டாமல் இருக்க முடியாது.



அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு பெருத்த எதிர்பார்ப்பு உலகளவில் இருந்தது. இதற்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் நாட்டு மக்களை அமைதிக் காக்கும்படி அறிவிப்புகள் வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இச்சூழலில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஹிந்து மகா சபை, நிர்மோகி அகாடா (வைணவ அமைப்பு)*, சன்னி வக்ஃப் வாரியம் ஆகியவற்றுக்கு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்படர்டதாக அனைத்துக் கட்சி தலைவர்களும் பாராட்டினர். எந்தக் கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு, பதட்டமான சூழ்நிலையில் அமைதியை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். ஆனால், நீதி நிலைநாட்டப்பட்டதா என்றால் அது பெரிய கேள்விக்குறிதான். எப்பொழுதுமே சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நீதி வழங்கப்படும்போது அமைதி நிலவத்தான் செய்யும். இந்த அமைதியை எவ்வாறு பாராட்ட முடியும்? ஜனநாயகம் என்றாலே, பெரும்பான்மை குரல்தான் ஆட்சி செய்யும், சிறுபான்மைக் குரல் நெரிக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அமைதியை நோக்கமாகக் கொண்டு நீதித்துறை செயல்பட்டால், தலித்களுக்கு எதிரான அநீதிகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் (பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது தெரிந்த விசயமே). குறிப்பாக, தலித்களின் கோயில் நுழைவுப் போராட்டங்களில் ஆதிக்க சாதிகள் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் தலித் உரிமையைத் தடை செய்தால் நீதி இருவருக்கும் சமமாக இருக்க முடியுமா? இது அமைதியை ஏற்படுத்தியது என்று பாராட்டத்தான் முடியுமா?

இந்திய நீதித்துறை என்பது கேலிக்கூத்தாக மாறி வருகிறது. 1984 இல் போபால் விஷவாயுவால் 25,000 பேர் இறந்தனர். 26 ஆண்டுகள் விசாரித்து, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பன்னாட்டு நிறுவனத்தை காத்தது நீதித்துறை. அயோத்தி தீர்ப்பின் மூலம் இந்துத்துவத்தை நிலைihட்டி இருக்கிறது. அதனால்தான் முன்னால் நீதிபதி இராஜேந்திர சச்சார், அயோத்தி தீர்ப்பை 'குற்ற ஆவணம்' என வர்ணிக்கிறார். எனவே, அயோத்தி பிரச்சனையின் மூலத்தை வரலாற்றில்தான் தேட வேண்டி இருக்கிறது.
 மரத்தடித் தீர்ப்பு வழங்கிய 'மாமேதை' நீதிபதிகள்

உத்திரபிரதேசத்தில் சிறிய நகரம்தான் அயோத்தி. இங்குதான் இராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இராமர் உண்மையில் வாழ்ந்தாரா அல்லது வால்மீகியின் கற்பனை பாத்திரமா என்பது விவாதப்பொருளே. இராமர் இருந்தார் என்பதற்கு சான்று, புராணங்களில் உண்டே தவிர வரலாற்றில் ஆதாரம் இல்லை. இராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். பிறந்த இடம் ஒருவருக்கு சொந்தம் என்றால், அரசு மருத்துவமனையை பங்கு போட வேண்டியிருக்கும்.  வளர்ச்சி என்ற பெயரில், எத்தனையோ பழங்குடி மக்களை அவர்கள் பிறந்த மண்ணை விட்டு வெளியேற்றுகிறார்கள். இவர்களுக்கு ஏன் பிறந்த இடம் சொந்தம் என தீர்ப்பு எழுதக்கூடாது?

அயோத்தியில் ராமர் மட்டும்தான் பிறந்தாரா! ஜைன மதத்தின் முதன்மையானவரான ரிஷபதேவர் பிறந்த இடம் இதுதான் என்று நம்பப்படுகிறது. இவரைப் போலவே பல ஜைன தீர்த்தங்கரர்களும் பிறந்த இடமாக நம்பப்படுகிறது. நீதி அனைவருக்கும் சமம் என்றால் இவர்களுக்கும் நிலத்தில் பங்கு கொடுத்திருக்க வேண்டும் அல்லவா! சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்துக்கொடுத்த தீர்ப்பைப் பார்க்கும் போது, மற்ற அமைப்புகளும் உரிமை கொண்டாடினால்கூட பங்கு கொடுத்திருப்பார்கள் போலும். நீதிமன்றங்களின் தேவை அமைதிதான், நீதியல்ல என நிரூபித்திருக்கிறார்கள். நீதி மறுக்கப்பட்ட அமைதி, 'மயான அமைதியே' ஒழிய வேறொன்றுமில்லை.

கி.பி. 1528-29 ஆம் ஆண்டுகளில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அங்கு ராமர் கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதை இடித்து கட்டியதற்கான ஆதாரமும் இல்லை. தொல்லியல் ஆய்வு அறிக்கையானது, 'புராதன கோயில் இருந்ததற்கு அடையாளம் காணப்படுகிறது என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது. பாழடைந்த கோயில் மீது மசூதி கட்டப்பட்டிருக்கலாம்' என தெரிவிக்கிறது. மேலும் 1998 இல் உலக தொல்லியல் ஆய்வுக் கழகம் ஆய்வு செய்து கோயில்கள் இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று கூறுகிறது.

இந்தியாவிலுள்ள இந்து கோவில்களைத் தொல்லியல் ஆய்வு செய்தால் பழங்குடிகளின் தெய்வங்களும், புத்தக் கோயில்களும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கும். இதற்காக இருக்கின்ற கோயில்களை இடிக்க அல்லது பங்கிட அனுமதிப்பார்களா இந்துத்துவ ஆதரவாளர்கள்?    7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப்பயணி யுவான்சுவாங், தனது பயணக் குறிப்பில் அயோத்தியில் 100க்கும் மேற்பட்ட பௌத்த விகாரங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதற்கு என்ன பதில் சொல்வார்கள் இந்த நீதிபதிகள்?

அயோத்தி பிரச்சனை தொடர்பான முதல் ஆதாரம், 1885-இல் ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கு ஆகும். அது என்னவென்றால், பாபர் மசூதி அருகே இந்துக்கள் வழிபட்டு வரும் மேடையில் ராமருக்கு கோயில் கட்ட அனுமதி வேண்டிய வழக்கு. இதை விசாரித்த நீதிபதி இரண்டு மதக் கோயில்கள் அருகருகே இருந்தால் பிரச்சனை சிக்கலாகக் கூடும் என்பதால் வழக்கைத் தள்ளுபடி செய்தார். இந்த வழக்கின்படி, ஆரம்பத்தில் இராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என கேட்டது மசூதிக்கு வெளியில்தான் என்பதை கவனிக்க வேண்டும்.

 இந்துத்துவ அமைப்புகளுக்கு சாதகமான தீர்ப்பைக் 
கொண்டாடும் பா.ஜ.க.வினர் 

பாபர் மசூதிக்கு அருகே ''ராம் சபூத்ரா'' என்ற வழிபாட்டு மேடையில் ராமர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்தனர்.   1949, டிசம்பர் 22 ஆம் தேதி இரவு ஐம்பதிலிருந்து அறுபது பேர் கொண்ட கும்பல் மசூதிக்குள் நுழைந்து, மசூதியின் பூட்டை உடைத்தும், சுவரில் ஏணி வைத்து ஏறியும் உள்ளே நுழைந்தது. மசூதியின் பிரதானப் பகுதியில் இராமர், சீதை, இலட்சுமணன் சிலைகளை வைத்தனர். இந்த சிலைகள் மசூதிக்கு அருகில் இருந்த ''ராம் சபூத்ரா''  சிலைகள் தான். மறுநாள், காவல் நிலையத்தில் புகார் செய்யப்படுகிறது. காவலர்கள் நேரில் ஆய்வு செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்கிறார்கள். இது அயோத்தி பிரச்சனை குறித்த அடுத்த ஆதாரமாகும். அந்த அறிக்கையின் படி சுமார் ஐம்பது முதல் அறுபது பேர் வரை மசூதிக்குள் நுழைந்தனர். அதை நேரில் பார்த்த சாட்சியங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டதை இராமர் தானாக மசூதிக்குள் தோன்றியிருக்கிறார் என்று வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த இடம்தான் இராமர் பிறந்த இடம், இராம ஜென்ம பூமி என்றாகியது. இந்தப் பகுதியைத்தான் தற்போது அலகாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்குச் சொந்தம் எனத் தீர்ப்பளித்துள்ளது. நியாயப்படி, அத்துமீறி வைக்கப்பட்ட சிலைகளை அகற்றி மசூதியை முஸ்லிம்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ராமர் சிலையை அகற்றினால் பெரிய கலவரம் ஏற்படும் என்பதால் நேருவின் அரசும், நீதிமன்றமும் மௌனம் காத்தது. டிசம்பர் 29 ஆம் தேதி பாபர் மசூதியை பிரச்சனைக்குரிய இடமாக அறிவித்து, இந்துக்களும், முஸ்லிம்களும் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு, உளர்ர் நீதிமன்றம் சிலைகளை அகற்ற தடை விதித்தது. இதை அலகாபாத் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இந்தச் சிலைகளை பூஜை செய்ய ஒரு பூசாரியையும் அனுமதித்தது. முஸ்லிம்கள் தொழுக அனுமதிக்கப்படவில்லை. ராமர் சிலை வைக்கபட்டதிலிருந்து முஸ்லிம் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே வந்தது.

சின்ன உள்ளுர் பிரச்சனையாக இருந்த அயோத்தி பிரச்சனையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளும் ரத யாத்திரை போன்றவற்றால் வெகுஜன இயக்கமாக, தேசிய பிரச்சனையாக மாற்றி அமைத்தன. அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லிக் கொண்டே மத்தியில் ஆட்சியையும் பிடித்தது பி.ஜே.பி. இந்தச் சூழ்நிலையில் மசூதியைத் திறக்காவிட்டால், கதவை உடைத்து வழிபடுவோம் என எச்சரிக்கையும் செய்தனர் இந்துத்துவவாதிகள்.

இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில், அடுத்தகட்ட தீர்ப்பான 1986 பிப்ரவரி தீரர்ப்பில் அனைத்து இந்துக்களும் மசூதிக்குள் இருக்கும் ராமர் சிலையை வழிபடலாம் எனக் கூறியது. இதுவரை மசூதியை திறப்பதற்குத்தான் கோரிக்கை வைத்தனர். இதன் பிறகு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை 'ராம ஜென்ம பூமி' இயக்கம் வைக்க ஆரம்பித்தது. இந்த அமைப்பு எண்ணிக்கையில் மிகப் பெரிதாக வளர்ச்சியுற ஆரம்பித்தது.
1989, நவம்பர் 10 இல் அயோத்தியில் இராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அரசியல் ரீதியாக பா.ஜ.க. துணையுடன் இதை செயல்படுத்தியது. மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றாலும் இதனை தடுக்க யாரும் முன்வரவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இதை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டாலும் அதைப் பற்றி பொருட்படுத்த வில்லை. கோயில் கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்கள் நாடு முழுவதிலிருந்தும் வந்து கொண்டிருந்தன. ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் அத்வானி உட்பட பல தலைவர்கள் ரத யாத்திரை சென்று ஆதரவு திரட்டினர்.

இந்திய வரலாற்றில் 'கருப்பு ஞாயிறு' என்றழைக்கப் பட்ட 1992, டிசம்பர் 6 ஆம் தேதி கர சேவகர்களின் கூட்டத்தில், பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ். போன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால் (வி.ஹெச்.பி.), ஹெச்.வி.சேஷாத்ரி (ஆர்.எஸ்.எஸ்.), கே.எஸ்.சுதர்ஸன் (ஆர்.எஸ்.எஸ்.), உமாபாரதி போன்றோர்களின் உணர்ச்சிகரமான பேச்சுகளுக்கிடையில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. இதை உத்திரபிரதேச கல்யாண் சிங் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது. 470 வருடங்களாக இருந்த புராதன சின்னமான மசூதி கற்குவியலாக மாறியது. இதனைத் தொடர்ந்து சுற்று வட்டாரப் பகுதிகளில் முஸ்லிம் வீடுகள் மற்றும் கடைகள் உடைக்கப்பட்டன. முக்கிய எதிரொலியாக மும்பையும் பற்றி எரியத் தொடங்கியது. மசூதி உடைப்புக்குப் பின், நிலம் அனைத்தும் அரசுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான் அலகாபாத் நீதிமன்றம் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு பாபர் மசூதி உடைப்புக்கு முன்பு உள்ள வழக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீர்ப்பு, இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை உடைத்ததை நியாயப்படுத்துகிறது.

இந்தத் தீர்ப்பை அனைத்து இந்து அமைப்புகளும் வரவேற்கின்றன என்பதிலிருந்தே, இது எப்படிப்பட்ட தீர்ப்பாக இருக்க முடியும் என்றும், நிச்சயமாக இந்துக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்க முடியும் என்றும் நம்மால் அறியமுடிகிறது. இந்த தீர்ப்பை கேட்டவுடன் எல்.கே.அத்வானி நிச்சயமாக அதிர்ச்சியுற்றிருப்பார். ஏனென்றால், ரதயாத்திரை சென்றிருக்கும் போது அயோத்தி பிரச்சனை நீதிமன்றங்களால் தீர்க்கப்பட முடியாதது, ஏனென்றால் இது நம்பிக்கை சமர்மந்தமான விசயம் என்று கூறியிருந்தார். ஆனால் தீர்ப்பு இவ்வாறு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஜெர்மனியில் ஹிட்லர், தனது காலக்கட்டத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட யூதர்களையும், கம்யூனிஸ்ட் களையும், நாடோடிகளையும், ஆரிய இன சுத்திகரிப்பு என்ற பெயரில் கொன்றொழித்து தன் ஆட்சியைத் தக்க வைத்தான். ஈழத்தில், விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று, சிங்கள இனவெறியைத் தூண்டிவிட்டு, தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டான் இராஜபக்சே. குஜராத்தில் நரேந்திர மோடி கோத்ரா இரயில் எரிந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 2,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்று பி.ஜே.பி. தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த வரலாற்றின் அடிப்படையில்தான் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால்தான், அதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்ற நோக்கில், அயோத்தித் தீரர்ப்பு அமைந்துள்ளது.

கட்டப் பஞ்சாயத்துகளில் ஒரு பெண்ணை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினால் அதைச் செய்த வனுக்கே திருமணம் செய்து வைப்பது உயர்ந்தபட்ச தண்டனை. தவறு செய்தவனுக்கு தண்டனை வழங்காமல் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது போல அயோத்தி தீரர்ப்பில் மசூதியை இடித்தவனுக்குத் தண்டனை கொடுக்காமல் மசூதியில் பங்கு கொடுத்தால் இந்தத் தீர்ப்பை எப்படிச் சொல்வது?

-பால்பாண்டி
                                                       

* இவ்வமைப்பு இராமருக்கு கோயில்கட்ட வேண்டும் என்று 1885 ஜனவரியில் வழக்குத் தாக்கல் செய்தது. அதனால் இதற்கு ஒரு பங்கு

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014