இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

ஒபாமா இந்தியா வருகை: யாருக்கு நன்மை? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா?

ருப்புக் கொடிப் போராட்டங்கள், எதிர்ப்புச் சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், பந்த்களுக்கு இடையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியாவில் ஒரு 'நான்கு நாள் சுற்றுப் பயணத்தை' முடித்துவிட்டுச் சென்றுள்ளார். அமெரிக்கப் படைகளின் பாதுகாப்புடன், 250 க்கும் மேற்பட்ட அமெரிக்க முதலாளிகளுடன் (CEOs) வந்து ஒரு பொருளாதாரப் படையெடுப்பையே நடத்திவிட்டு சென்றுள்ளார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு நடத்தி தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். நவம்பர் 6 ஆம் தேதி மும்பை வந்திறங்கிய ஒபாமா, அங்கு இந்திய, அமெரிக்க முதலாளிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மறுநாள் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் நவம்பர் 8 ஆம் தேதி டெல்லியில் மன்மொகன் சிங்கையும், பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேசினார். பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் பேசிவிட்டு மறுநாள் நவம்பர் 9 ஆம் தேதி இந்தோனேசியா கிளம்பிச் சென்றுவிட்டார் (தீபாவளி கொண்டாடியது, ஊர் சுற்றியது, மாணவர்களிடம் உரையாடியது, விதவிதமான உணவு உண்டது, காந்திக்கு அஞ்சலி செலுத்தியது போன்ற பத்திரிகைகளின் முன்பக்கங்களை அலங்கரித்த இதர செய்திகள் பற்றி விரிவாக சொல்லத் தேவையில்லை). இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகவே ஒபாமா இந்தியா வந்து சென்றுள்ளார்.



இந்தியாவிற்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று, உள்நாட்டுக்குள் அது ஒரு மறைமுக காலனி நாடு. இந்திய முதலாளிகள், பெரிய மூலதனத்தை உடையவர்களாயினும், இந்தியச் சந்தையில் பன்னாட்டு முதலாளிகளுடன் போட்டி போட்டு வெற்றி பெற முடியும் அளவிற்கு மூலதனம் கொண்டவர்கள் அல்ல. இந்தியாவிற்குள்ளிருந்தோ, இந்தியாவின் எந்தவொரு தேசிய இனத்திற்குள்ளிருந்தோ உருவான சொந்த தொழில் நுட்பத்தை வளர்த்தெடுத்து அதன்மூலம் தொழில் செய்பவர்களும் அல்ல. எனவே, இந்திய முதலாளிகள் பன்னாட்டு மூலதனத்தையும், பன்னாட்டு தொழில்நுட்பத்தையும் சார்ந்திராமல் இலாபம் கொழிக்க முடியாது. அதாவது, பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்துதான் இவர்கள் எல்லாத் தொழில்களையும் நடத்துகிறார்கள். இவ்வாறு, இவர்கள் பன்னாட்டு முதலாளிகளை இந்தியச் சந்தைக்குள் அழைத்துவரும் தரகு வேலையைச் செய்யும் முதலாளிகளே ஆவர். சொந்த தொழில்நுட்பம், சொந்த மூலதனம் ஆகியவற்றைக் கொண்டு இயங்கும் ஒரு சில தேசிய முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களாலும், இந்தத் தரகு முதலாளிகளாலும் நசுக்கி அழிக்கப்படுகின்றனர். இந்தத் தரகு முதலாளிகள் ஊட்டி வளர்க்கும் கட்சிகள்தான் காங்கிரஸ், பி.ஜே.பி., தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பெரும்பாலான தேர்தல் கட்சிகள் ஆகும்.

இந்தியாவின் மற்றொரு முகம் - அண்டை நாடுகளைப் பொறுத்தவரை அது ஒரு விரிவாதிக்க நாடு. அதாவது, அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய நாடுகள் பல்வேறு மறைமுகக் காலனிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, பிராந்திய அளவில் சில விரிவாதிக்க நாடுகளை வளர்த்தெடுக்கின்றன. ஒரு பெரிய ரவுடிக்குக் கீழே ஆங்காங்கே பேட்டை ரவுடிகள் இருப்பது போல. இந்தியா தெற்காசியப் பகுதியில் ஒரு பேட்டை ரவுடியாக செயல்படுகிறது. இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள், வங்கதேசம், சிக்கிம், பூடான் உள்ளிட்ட நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது. இந்நாடுகளுக்குள் பன்னாட்டு முதலாளிகள், குறிப்பாக அமெரிக்க முதலாளிகள் தொழில் செய்வதற்கும், இந்திய முதலாளிகள் தொழில் செய்வதற்கும் எந்தத் தடையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதுதான் இந்திய விரிவாதிக்க அரசின் வேலை. இதற்காக இந்தியா, இந்நாடுகளில் தேவைபட்டால் போர் நடத்தக் கூட செய்யும்.

இந்தப் புரிதல்களோடு, நாம் ஒபாமாவின் இந்திய வருகையை அணுகுவோம். ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் மறைமுகக் காலனியாக உள்ள இந்தியாவை மேலும் அவ்வாறே திடப்படுத்திக் கொள்ளவும், தெற்காசியாவில் அமெரிக்காவிற்கு ஒரு பேட்டை ரவுடியாகவும், அடியாளாகவும் செய்யப்பட்டு வரும் இந்தியாவை மேலும் அவ்வாறே வளர்த்தெடுக்கவும்தான் பாரக் ஒபாமா இந்தியா வந்து சென்றுள்ளார். நவம்பர் 6 ஆம் தேதி மும்பையில் நடந்த முதலாளிகள் மாநாட்டில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 10 பில்லியன் டாலர் (44,000 கோடி ரூபாய்) மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அமெரிக்க 'போயிங்' நிறுவனம் டஜன் கணக்கான விமானங்களை இந்தியாவிற்கு விற்க உள்ளது. 'ஜெனரல் எலெக்ட்ரிக்' நிறுவனம் நூற்றுக் கணக்கான மின்சார எந்திரங்களை இந்தியாவிற்கு விற்க உள்ளது. இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்களான 'ஸ்பைஸ்ஜெட்'டும், அனில் அம்பானியின் 'ரிலையன்சு'ம் மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து முறையே 2.8 பில்லியன் டாலர்களுக்கும்,        2 பில்லியன் டாலர்களுக்கும் பொருட்கள் வாங்க கையொப்பமிட்டுள்ளன. அமெரிக்காவில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அமெரிக்காவிற்கு 'இவ்வாறு' வணிகக் கூட்டாளியாக இந்தியா 12 ஆவது இடத்தில் இருப்பதாகவும், இது வளர்ந்து இந்தியா, அமெரிக்காவின் மாபெரும் முதல் சந்தையாக மாற வேண்டும் என்றும் ஒபாமா திருவாய் மலர்ந்துள்ளார்.


கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. இதன் விளைவாக அமெரிக்காவில் வீட்டுக் கடன் பெற்று, அதன் மூலம் வீடு கட்டிய ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். ஏராளமான தொழிலாளர்கள் வேலைகளை இழந்தனர். நிறைய வங்கிகள், நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தப் பொருளாதாரப் பெருமந்தம் (Economic Depression) உலகப் பொருளாதாரப் பெருமந்தமாக வளர்ந்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி, வேலைவாய்ப்பு என அமெரிக்காவைச் சார்ந்து இயங்கும் அத்தனை நாடுகளின் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்தது. பல்வேறு நாடுகள் இந்த பெருமந்தத்திலிருந்து மீண்டு விட்டதாக தத்தமது மக்கள் மத்தியில் கதைகட்டி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல.

ஒபாமாவின் இந்தியப் பயணம்கூட இந்த பெருமந்தத்திலிருந்து மீள்வதற்கான ஒரு வழிமுறைதான். இந்தியாவில் தனது சுரண்டலை அதிகப்படுத்தலின் மூலம் தனது நாட்டுப் பொருட்களை அதிகமாக விற்பனை செய்வதன் மூலம், அமெரிக்கப் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்க முயல்கிறார் ஒபாமா. இந்த மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கலிபோர்னியாவிலும், ஓஹியோவிலும் அமெரிக்கர்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று ஒபாமா கூறுகிறார். இந்தியாவில், இந்தியர்களுக்கு என்ன கிடைக்கும்?

உயர்கல்வித் துறையில் அமெரிக்கா - இந்தியாவிற்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து வரும் ஆண்டில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை இந்தியா நடத்தப்போவதாக மன்மோகன்சிங், ஒபாமாவின் முன்னிலையில் பத்திரிகையாளர் களிடம் அறிவித்துள்ளார். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் மசோதாவை சட்டமாக்கும் முயற்சியில் காங்கிரஸ் அரசு உள்ளது. இது பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் பாராளுமன்றத்தில் இன்னும் சட்டமாகாமல் உள்ளது. இந்த சட்டமும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டமும் ஏற்கனவே வியாபாரமாகி சீரழிந்துகிடக்கும் இந்தியாவின் உயர் கல்வித்துறையை பன்னாட்டு முதலாளிகளுக்கு, குறிப்பாக, அமெரிக்க முதலாளிகளுக்கு மேலும் திறந்து விடுவதற்காகத்தான். விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறைகளில் இன்னும் அதிகளவில் அமெரிக்க முதலாளிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்வதற்கான  ஒப்பந்தங்கள், ஆலோசனைகள், திட்டங்களை வழங்கிச் சென்றுள்ளார் ஒபாமா.

சோனியா காந்தியைச் சந்தித்தபோது அணுசக்தி பொறுப்பாண்மை மசோதாவில் திருத்தப்பட்ட சில கூறுகள், அமெரிக்க நிறுவனங்களை சோர்வடைய வைத்துள்ளதாக ஒபாமா கூறியுள்ளார். இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடங்கும் அணு உலைகளில் ஏதேனும் கசிவோ, வெடிப்போ ஏற்பட்டு நிறைய மக்கள் உயிரிழந்தால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனம் குறைவாகத் தந்தால் போதும், மீதத்தை இந்திய அரசு (மக்கள் வரிப்பணத்திலிருந்து) அளிக்கும் என்ற கேடுகெட்ட சட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளிக்க அச்சட்டத்தில் பெயருக்கு சில திருத்தங்களைச் செய்தது. ஒபாமா இந்தத் திருத்தங்களுக்காகத்தான் வருந்தியுள்ளார்.

இந்தியாவிற்கு இறையாண்மை என்று ஏதும் மிச்சமிருந்தால், அதை முழுவதுமாக ஒழித்துவிட ஒபாமா சொல்லும் ஆலோசனைகளில் ஒன்றை இந்தியா அக்கறையோடு பரிசீலித்து வருவதாக இந்திய அரசு, நவம்பர் 10 ஆம் தேதி அறிவித்துள்ளது. பல்பொருள் சில்லறை வணிகத்தில் இப்போது உள்ள அரசுக் கொள்கை, 51 சதவீதம் அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதிக்கிறது. இதனை 100 சதவீதமாக உயர்த்தும் 'அற்புதமான' திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நம்மூர் வணிகர்களின் கதி அதோகதிதான்.

இவையெல்லாம் ஒருபுறம். இன்னொரு புறம், இந்தியா, வெளிநாட்டு விவகாரங்களில் தனக்கு தொடர்ந்து, சிறப்பான அடியாளாக திகழ வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவிற்கு உதவியாக, அங்கே இந்திய இராணுவம் நிலைகொண்டுள்ளது. இன்னும் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு இந்தியா எப்படி சிறந்த அடியாளாக இருப்பது என்பதைப் பற்றி மன்மோகன் சிங்கும், ஒபாமாவும் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஏகாதிபத்தியமாக வளர்ந்துவரும் சீனா, ஆசியப் பகுதியில் அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முக்கியத்துவம் அமெரிக்காவிற்கு அதிகமாகிறது. 2000-இல் முதன்முறையாக அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தார். பின்னர் 2006-இல் ஜார்ஜ் டபிள்யூ புஷ் வந்தார். இவர்கள் இருவரையும் விட தனது முதல் ஐந்தாண்டு ஆட்சியின், முதல் பாதியிலேயே ஒபாமா இந்தியா வந்துள்ளார். இது இந்தக் காலக்கட்டங்களில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. இதை இந்திய ஆளும் வர்க்கப் பத்திரிகைகள் பெருமையாகக் கூறுகின்றன. உண்மையில் இது இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால் நல்ல விசயமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு முதலாளிகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் மிகவும் அச்சுறுத்தலான விசயம் ஆகும்.

ஆப்கானிலும், ஈராக்கிலும் மிகக் கொடூரமான யுத்தத்தை நடத்தி முடித்த ஏகாதிபத்திய அமெரிக்காவின் அதிபரும், ஈழத்தில் மிகக் கொடூரமான யுத்தத்தை நடத்தி முடித்த விரிவாதிக்க இந்தியாவின் பிரதமரும் சந்தித்துக் கொண்ட இந்த நிகழ்வு இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கும், தெற்காசியாவின் மற்ற நாட்டு மக்களுக்கும் எதிரான விசயமே.

-ஆசிரியர் குழு

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014