இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 05, 2011

வால் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் ஆட்டம் காணும் அமெரிக்க ஏகாதிபத்தியம்

 2008 இல் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தினால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். வீட்டை அடமானம் வைத்தவர்கள் வீடுகளை இழந்தனர். நம்முடைய ஊடகங்களால் சொர்க்கபுரிகளென வர்ணிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளில் மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் சாலையோரங்களிலும், பாலங்களின் அடியிலும், அட்டைபெட்டியிலும் உறங்கினர். படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் உணவுக்காகப் பிச்சையெடுத்தனர். இப்பொருளாதாரப் பெருமந்தத்தை ஏற்படுத்திய பெரும் வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மூலதன நிதியங்கள் ஆகிய கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்ற பல இலட்சம் கோடி டாலர்களை மக்கள் பணத்தை வாரி இறைத்த அரசுகள், தங்களின் கருவூலத்தை மீண்டும் நிரப்ப மக்களின் மீது அதிக வரிவிதிக்க ஆரம்பித்த பிறகு மேற்கு நாடுகளின் மக்கள் போராட்டம் வெடித்து எழுந்தது. ''மக்களின் பணத்தில் மக்களின் கடனை ரத்து செய்! பெருமுதலாளிகளுக்குக் கொடுக்காதே!" என்றும், ''பேராசைக்காரர்களான பெருமுதலாளிகளுக்கு வரியை போடு! உழைக்கும் மக்களுக்கல்ல!" என முழங்கினர்.



     மக்களுக்கு சில சலுகைகளைக் காட்டி, பொருளாதார பெருமந்தம் முடிந்ததாக உலக வங்கியும் மேற்கு பணக்கார நாடுகளும் பசப்பியது. அதை அப்படியே நம்ம ஊர் பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங், சிதம்பரம், மாங்டென்சிங் அலுவாலியா போன்றோர் ராகம் மாறாமல் ஆமாம் சாமி போட்டனர். ஆனால் பொருளாதார அறிஞர்களோ இப்பொருளாதார பெருமந்தம் 10 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என உறுதியாக கூறுகின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகளை சரிகட்ட அரசுகள் பல புதிய வரிகளை விதித்தும், சமூக நலத் திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டு நிதியைப் பெருமளவு குறைத்தும், கல்விக்கான அரசு பங்களிப்பை வெட்டியும், அனைத்து துறைகளையும் தனியாருக்கு திறந்துவிட்டும், 100 சதவிகிதம் வெளிநாட்டு மூலதனத்தை அனுமதித்தும், உலகவங்கி பரிந்துரைகளை மேற்கு உலக நாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதனால் படித்து வேலை கிடைக்காமல் திண்டாடும் சூழலும் படிக்கவே முடியாத சூழலும் உருவாகியுள்ளன. கடந்த ஆண்டில் லண்டன் நகரில் கல்விக் கட்டணங்களை பெருமளவு உயர்த்தியதைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் இறுதியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்ற காரை அடித்து நொறுக்குமளவிற்கு சென்ற பிறகுதான் அரசு மாணவர்களுக்குப் பணிந்து தன் கட்டண உயர்வை திரும்பப் பெற்றது. கிரேக்க அரசு, "வெளிநாட்டு கடன் சுமை" என்று காரணம் காட்டி கல்விக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை எதிர்த்து மாணவர்கள் ஏதென்சு பல்கலைக்கழகத்தைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தொடர்ந்து போராடி வருகின்றனர். தென்னமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு தனியார்மயத்தையும், உலகமயத்தையும் உலக மாணவர்களும் உழைப்பாளர்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம் என அழைப்பு விடுத்துள்ளனர்.
 இப்போராட்டங்களின் உச்சமாக உலகப் பங்குச் சந்தைகளின் தலைநகரமான அமெரிக்காவின் நியுயார்க்கில் உள்ள வால் ஸ்டீரிட்டைக் கைப்பற்று வோம் என தொழிலாளர்களும், மாணவர்களும் இணைந்து நடத்திய போராட்டம் அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமல்லாமல் சுரண்டல் அமைப்பான முதலாளியத்துக்கே சாவுமணி அடிக்கும் வருங்காலப் போராட்டங்களுக்கு நல்ல உரமூட்டுவதாக அமைந்தது. நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை அதை தொடர்ந்து அமெரிக்காவின் பல நகரங்களிலும், உலகின் பல நாடுகளின் நகரங்களிலும் லண்டனை ஆக்கிரமிப்போம், பாரிசை ஆக்கிரமிப்போம், டோக்கியோவை ஆக்கிரமிப்போம் என உழைக்கும் மக்களும் மாணவர்களும் நடத்திய போராட்டங்கள் மெய்பித்தன. இதுவரை உலகின் 800-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தாலியின் தலைநகரான ரோமில் உலக வங்கியின் மாநாடு நடைபெற்றபோது தொழிலாளர்களும், மாணவர்களும் நடத்திய உக்கிரமான போராட்டத்தின் வாயிலாக அம்மாநாட்டிற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

          இதே ரோமில் அடிமைகளின் விடுதலைக்காக போராடிய ஸ்பார்டகஸின் வாரிசுகள் தாங்களென நெஞ்சுயர்த்தி பிரகடனப்படுத்தினர். வால் தெரு ஆக்கிரமிப்புப் போராட்டத்தின் மைய முழக்கம் இதுதான்: ''நாம் 99 சதவிகிதம்... நம்மை சுரண்டும் கார்ப்பரேட் முதலாளிகள் 1 சதவிகிதமே..."

     பெரும்பான்மை மக்களாகிய நாம் தான் நம்முடைய வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவேண்டும், அதற்கு இந்த சுரண்டல் சமூகத்தை மாற்றி அமைப்பதே ஒரே வழி என்பதை உலக மக்கள் தெளிந்துள்ளனர்.
- இராஜேந்திர பிரசாத், வேலூர்
prasath.trex@gmail.com


இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014