இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 12, 2011

மூன்று தமிழர் விடுதலை: ஜெயா அரசின் நயவஞ்சக நாடகம்


ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் இரத்தச் சுவடுகளின் வாடை கூட நம்மை விட்டு இன்னும் விலகவில்லை. அதற்குள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் அரசுக்கெதிராக, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகமெங்கும் பொதுமக்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், சனநாயக, முற்போக்கு அமைப்புகள் கடந்த பல மாதங்களாக மிகத் தீவிரமாக பல்வேறு வடிவங்களில் போராடினர். பொது மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் உச்சக்கட்டத்தை எட்டியபோது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி தனது இன்னுயிரை நீத்து போராட்டத்திற்கு ஆயுதமாக தன் உடலை தந்து போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கினார். பொய் சொல்ல எந்தக் கூச்சமும் இல்லாத ஜெயலலிதா, ஒரு மாபெரும் அண்டப்புழுகை மக்கள் நம்பும் வகையில் சொன்னார். 
      மூன்று பேரின் தூக்கு தண்டனையை குறைக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று சொன்னார். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் 161ஆம் பிரிவின் படி, இந்த விசயத்தில் இந்திய குடியரசுத் தலைவருக்கு இருக்கும் அதிகாரம் அளவிற்கு, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கும் இருக்கிறது. தமிழக அமைச்சரவையில் ஜெயா அரசு ஒரு தீர்மானம் இயற்றி, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்தால், அவர்களது தண்டனையைக் குறைக்க மட்டுமல்ல, அந்த வழக்கில் 20 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியும். தமிழக மக்களின், மாணவர்களின் கொந்தளிக்கும் போராட்டத்தைக் கண்டு சட்டமன்றத்தில் பெயரளவிற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நாடகமாடியது.

     தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை தூக்கிலிடாமல் வைக்கப்பட்டிருந்தவர்களுக்குகூட அந்த காலதாமதத்தின் காரணமாக, (அவர்கள் அந்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்ததால்) நீதிமன்றம் அவர்களது மரண தண்டனையை இரத்து செய்துள்ளது. இதுபோன்ற வழக்குகளை முன்னுதாரணமாகக் கொண்டு, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு 11 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறையில் இருக்கும் தமிழர்களின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளின் பதில்களை கூறச்சொல்லி, தூக்குத்தண்டனைக்கு 8 வார இடைக்காலத் தடையை விதித்தது. கடந்த அக்.28ம் தேதி 8 வார இடைக்காலத் தடைக்கு பிறகு மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. மத்திய அரசு தனது பதிலாக '11 ஆண்டு காலம் சிறையிலிருந்ததை காரணம் காட்டி தூக்குத்தண்டனையை ரத்து செய்யக் கூடாது. இந்த 11 ஆண்டுகாலம் அவர்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்ததாகத்தான் கொள்ள வேண்டும்' என திமிராக பதிலளித்துள்ளது. தமிழக அரசு தனது பதிலில் 'சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் இம்மூவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனக் கூறியுள்ளது. 

     உயர்நீதிமன்ற இடைக்காலத் தடையை பயன்படுத்தி ஜெயா அரசு மூவர் உயிரை காப்பாற்றும் என பல நபர்கள் தங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தினர். ஆனால் 'இலங்கை மீது பொருளாதார தடை' என்ற சட்டமன்ற தீர்மானத்தைப் போலவே இதுவும் காகிதத்தில் எழுதிய எழுத்தோடு மட்டும் நின்றுவிட்டது. ஒட்டுமொத்த மக்கள் போராட்டங்கள் எழும்போது அதை திசை திருப்ப அரசானது பல்வேறு நாடகங்களையும், தேவைப்பட்டால் வேறு ஒரு கொடூர சம்பவத்தையும் நிகழ்த்தும் என்பதே வரலாறு நெடுக உள்ளது. எந்த ஒரு ஆளும் வர்க்க அரசும் மக்களின் சரியான கோரிக்கைகளை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. மாறாக அப்படிப்பட்ட அரசுகளை மக்கள் தங்களின் போராட்டங்கள் வாயிலாக தூக்கியெறிந்து மக்கள் அரசுகளை நிறுவியதற்கு உலகம் முழுக்க வரலாறு உள்ளது.

     இன்று மூன்று தமிழரை விடுதலை செய்ய வேண்டும், ஈழப்படுகொலையை நடத்திய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், தனி ஈழம் அமைப்போம் என தமிழக மக்கள் மத்தியில் கோரிக்கை தீவிரமாக எழுந்து வருகின்றது. குறிப்பாக இராசபக்சே கும்பலை, மன்மோகன் அரசு போன்றவற்றின் மீது அனைத்து மக்களின் கவனமும் திரும்பியுள்ளது. இனி நாம் எந்த அரசுகளையும், மன்றங்களையும் நம்பிப் பயனில்லை. ஏழு தமிழர்களையும், மேலும் தேசிய விடுதலைக்காக போராடிய, ஆதரித்த காரணத்திற்காக கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும், ஈழ இனப்படுகொலை நிகழ்த்தியவர்களைத் தூக்கிலேற்ற வேண்டும் போன்றவற்றை இணைத்து மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் எந்த ஒரு அரசையும், நபர்களையும் நாம் தூக்கியெறிந்து முன்னேற வேண்டும். அதுதான் நமக்கு சரியான தீர்வை, விடுதலையை கொடுக்க முடியுமே தவிர உயர் அல்லது உச்ச நீதிமன்றமோ, ஜெயா அரசோ, மன்மோகன் அரசோ மக்களுக்கான விடுதலையைக் கொடுக்காது, கொடுக்க முடியாது.
- ஆசிரியர் குழு

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014