இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், டிசம்பர் 29, 2011

முல்லைப் பெரியாறு அணையும் இந்திய, கேரள, தமிழக கட்சிகளும் - தலையங்கம்

                


முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டு, அங்கு புதிய அணை கட்டப்படும் என்ற கேரள அரசு சமீபகாலமாக திட்டமிட்டுப் பிரச்சினையைக் கிளப்பியது. அணையைச் சுற்றி வாழும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் பயத்தை காரணம் காட்டி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. 40 ஆண்டுகாலமாக சிறு, சிறு வெடிப்பாக இருந்த பிரச்சினை தற்பொழுது விஸ்வரூபம் எடுத்ததற்கும் முக்கிய காரணம் உண்டு. கேரளாவில் இன்று காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியாக உள்ள சி.பி.எம். கட்சியும் ஒரு சீட் வித்தியாசத்தில் மட்டுமே உள்ளன. மேலும் இந்த இரண்டு கட்சிகளுமே கேரள மக்களின் நம்பிக்கையைப் பெருவாரியாக இழந்துள்ளன. இன்று அந்த ஒரு சீட்டை கைப்பற்றுவதும், மக்களிடம் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளவும் இவர்களுக்கு தீனியாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. காங்கிரஸ், சி.பி.எம், பி.ஜே.பி என அங்குள்ள ஓட்;டுக்கட்சிகள் திட்டமிட்டு கேரளாவில் வாழும் தமிழர்களைத் தாக்குவதும், போராட்டங்களை நடத்துவதுமாக உள்ளனர். 


தமிழகத்திலோ, பரமக்குடி பயங்கரம், விலைவாசி ஏற்றம், கூடங்குளம் போன்ற பிரச்சினைகளால் தமிழக மக்களின் கோபம் ஜெயா அரசை சுட்டு எரித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இங்குள்ள அனைத்து கட்சிகளுமே ஊழல் என்னும் பெருச்சாளி வலையில் சிக்கிக் கொண்டும், பல துரோகங்களை இழைத்தும் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்து நிற்கின்றது. கேரளாவில் எந்த கட்சிகள் அங்கு இல்லாத இனவெறியை திட்டமிட்டு தூண்டிவருகின்றனவோ, அதே ஓட்டுக்கட்சிகள் இங்கு தங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ், சி.பி.எம், பி.ஜே.பி போன்ற கட்சிகள் இதில் முக்கியமானவை. மேலும் கேரளாவில் அ.இ.அ.தி.மு.க. புது அணையை கட்டுவோம் என்று அறிவித்து விட்டு இங்கு தமிழக மக்களை காப்பாற்றுவது போல நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றது.

மத்திய அரசோ தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. கேரளாவை ஆளும் காங்கிரஸ் கட்சி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், பல அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வறிக்கையையும் முழுவதும் புறக்கணித்து விட்டு அடாவடித்தனத்தை ஊக்குவித்துக் கொண்டு இருக்கின்றது. ஒருவேளை இது கேரளா மக்களின் தன்னிச்சையான எழுச்சியாக இருந்திருந்தால் உடனடியாக 'இந்திய ஒருமைப்பாடு” என்று கங்கணம் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சி பறந்து வந்திருக்கும். தமிழகத்தில் தங்களின் வாழ்வுரிமைக்கான, அரசுகளுக்கு எதிரான நியாயமான மக்களின் போராட்டத்தை இங்குள்ள தேர்தல் கட்சிகளோ மலையாளிகளே முக்கிய பிரச்சினைபோல சுருக்கிக் காட்டுகின்றன.

முல்லைப் பெரியாறு அணையோடு தமிழக மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரும் அளவில் பிணைந்துள்ளது. மேலும் அதை பயன்படுத்துவதற்கும் தமிழக மக்களுக்கு முழு உரிமை உள்ளது. அதற்கு தடையாக இருப்பது கேரளத்தில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், திட்டமிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய மன்மோகன், சோனியா அரசும் ஆகும். மேலும் மாநிலத்திற்கு ஒரு ஏமாற்றுக் கொள்கையை வைத்துக் கொண்டு அனைத்து மக்களையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கும் பி.ஜே.பி., சி.பி.எம். போன்ற அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆகும். தமிழக மக்களாகிய நாம் இவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி நமது வாழ்வுரிமையை தக்கவைத்துக் கொள்வதும், நம்மை போலவே அன்றாடம் வயிற்று பிழைப்புக்காக உழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் சகோதரர்களாகிய கேரள உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதும் நம் முன்னே உள்ளே கடமை.

- ஆசிரியர் குழு 

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014