இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், டிசம்பர் 29, 2011

இடிந்தகரையில் ஒரு போராட்டம் - மனித குலத்தைக் காக்க...

பெரும் சர்ச்சையிலும் விவாதத்திலும் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு திருநெல்வேலி யிலிருந்து செல்லும் பாதையின் இரு மருங்கிலும் காற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகளைக் கடந்து செல்வதன் முரண் நகையினை பார்க்காமல் யாரும் முன்னே செல்ல முடியாது. இன்று அங்கு அணுமின் நிலையத்தை திறந்து வைத்துக் கொண்டு மக்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் முடிக்க அரசு திட்டமிட்டுக் கொண்டு இருக்கின்றது. அங்கு வாழும் இடிந்தகரை மற்றும் அப்பகுதியைச் சுற்றி வாழும் மக்கள் இந்த கூடங்குளம் அணு உலைக் கெதிராக பல காலமாக போராடி வருகின்றனர். இது 22 ஆண்டு களுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டம் ஆகும். கூடங்குளம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நடந்து வரும் போராட்டங்களையும், நட வடிக்கைகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் இந்த அரசு செய்யும் அப்பட்டமான பொய்களையும், அணு உலைக்கு தீர்வு என்ன என்பதையும் கவனிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

போராட்ட வரலாறு:

அணு உலை கட்டி முடிக்கப்பட உள்ள இந்தக் கடைசி நேரத்தில்தான் பொதுமக்கள் அதை எதிர்த்துப் போராடுகிறார்கள் என ஒரு பொய்ப் பிரச்சாரம் உள்ளது. ஆனால், உண்மையில், கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் மிகப்பெரிய வரலாறு கொண்டது.
1988 இல் இந்தியாவில் அணு உலை அமைக்க இந்திய பிரதமர் ராசீவ்காந்தி மற்றும் ரசிய பிரதமர் மிகையில் கோர்பசேவுக்கும் ஒப்பந்தம் iயெழுத்தாகிறது. அணு உலை எதிர்ப்பும், போராட்டமும் அதே சமயத்தில் துவங்குகிறது. இடிந்தகரையில் கூடிய 1000க்கும் மேற்பட்ட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அன்றைய ராசீவ் காந்தியின் மத்திய அரசும், எம்.ஜி.ஆரின் மாநில அரசும் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கலைத்தது.
1991 முதல் 2001 வரை சோவியத் ஒன்றியத்தின் சிதைவைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளாலும், தனது நலன்களுக்காக அமெரிக்கா கொடுத்துவந்த எதிர்ப்பாலும் பத்தாண்டு காலம் அணு உலைத் திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. 2001 இல் நிலம் அடையாளம் காணப்பட்டு கையகப் படுத்தப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, பகுதி மக்களால் சென்னையிலிருந்து திருநெல் வேலி வரை சைக்கிள் பேரணி நடத்தப் படுகிறது.
2002 இல் கூடங்குளம் அணு உலைக்குக் கான்கிரிட் ஊற்றப்படுகிறது. 2003 இல் பொதுமக்களால் 7000 பேர் கொண்ட போராட்டம் நடத்தப்படுகிறது.
2004 இல் பொருட்களை கொண்டு வருவதற்காக ஒரு துறைமுகம் உருவாக்கப்பட்டு அணு உலையை  அமைப்பதற்கான பொருட்கள் எடுத்து வரப்படுகின்றன. அணு உலைக்கெதிராக தொடுக்கப்படும் உச்சநீதிமன்ற வழக்கு தோற்கிறது.
2008 இல் மேலும் 4 அணு உலைக்கான பேச்சு நடைபெறுகின்றது.
2011 இல் ஃபுகுஷிமா அணுவிபத்தின் பின்னணியில் தற்போதையப் போராட்டம் உச்சத்தை அடைகிறது. செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய இப்போராட்டத்தை நெல்லையில் உள்ள கிராமத் தொழிலாளர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தில் மாதம் 100 ரூபாய் கொடுத்தும், போராட்டத்தில் அவர்கள் 
பங்கேற்றும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
அணுஉலையால் ஏற்படும் பாதிப்புகள்:
 
மருத்துவப் புத்தகங்கள் அணுஉலையிலிருந்து வெளியிடும் அயோடின்-131 எனும் வாயுக்கழிவு தைராய்டு புற்றுநோய்க்கும், ஆட்டோ இன்முன் தைராய்டு எனும் நோய் ஏற்படவும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
தாராபூர் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கடல்வாழ் தாவரங்களில் அயோடின்-129 இன் அளவு 740 மடங்கு அதிகமாக இருக்கையில் கல்பாக்கத்தில் அத்தகைய ஆய்வுகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?

 எக்ஸ் கதிர்கள், காமாக் கதிர்கள், நியூட்ரான்கள் ஆகியவை புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பது அதிகாரப் பூர்வமாக 2005 சனவரி 30 இல் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது முக்கியமான விசயமாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் நோய் தடுப்பு மையம் அணுகதிர்வீச்சால் ஏற்படும் வியாதிகள் (விடிவி) பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. அணுக்கதிர்வீச்சால் புற்றுநோய், பிறவி ஊனம், தன்னிச்சையான கருச்சிதைவு, மலட்டுத்தன்மை போன்ற 15க்கும் மேற்பட்ட நோய்கள் நம்மை மட்டும் அல்ல நம்முடைய சந்ததியினரையும் பாதி;க்கும் என அறிவித் துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எனவே நிலநடுக்கம் வந்தாலோ, எரிமலை வெடித்தாலோ, சுனாமி சீறினாலோ நமக்கு பேராபத்து எதுவும் வராவிட்டாலும் அணுக் கதிர்வீச்சால் நோய் பாதிப்புகள் ஏற்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.
அணுமின் உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது, விபத்து நேரும் வாய்ப்பே இல்லை என்பது உண்மையானால் விபத்து நேர்ந்தால் இழப்பீடு கோரி வழக்குத் தொடுப்பதை தடைசெய்யும் ஒப்பந்தம் செய்தது ஏன்? என்று நாம் யோசித்தால் சிறுகுழந்தைகூட இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அறியும். அணு உலைகள் இயங்கினாலும் நோய்கள் பெருகும் ஆபத்து, அணு உலைகள் செர்னோபில், புகுசிமா போல வெடித்தாலும் பேராபத்து என்பதை நாம் உணர்ந்து போராட வேண்டும்.
அணுஉலையை அமைப்பதற்கு சுமார் 1000 ஏக்கர் பருத்திக் காடு அழிக்கப்பட்டு இன்று மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு உள்ளதும் முக்கியமானதாகும்.
அணு உலையால் யாருக்கு லாபம்?
1995இல் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 81,000 மெகாவாட் ஆகும். அப்போது 52மூ கிராமங்களுக்கு மின் வசதியானது சுத்தமாகக் கிடையாது. இன்று இந்தியாவின் மின் உற்பத்தி 1.82 இலட்சம் மெகாவாட் என்று உயர்ந்து இருந்தாலும், 42மூ கிராமங்கள் இன்றும் இருட்டில்தான் இருக்கின்றன.
தற்போது கூடுதலாக உற்பத்தி செய்யும் மின்சாரம் ஐ.பி.எல் மேட்சுக்கும், டிஸ்கொத்தேக்களுக்கும் தான் அதிகம் பயன்படப் போகிறது. மேலும் இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் மின்சாரம் இன்னும் அதிகரிக்கப்போகின்றது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், ஸ்பென்சர் பிளாசா போன்ற ஆடம்பர கடைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது உள்ள அணுமின் நிலயங்களை தொடர்ச்சியாக இயக்கினால் கூட 2030இல் வெறும் 7.38 விழுக்காடு மின்சாரம் மட்டுமே நமக்கு கிடைக்கும். மின்பற்றாக்குறைக்கு ஒரே தீர்வு அணு உலைதான், அதைதவிர வேறு வழியில்லை என்று ஆளும் வர்க்கங்கள் திரும்ப திரும்ப சொல்வதற்கு அடிப்படை அவர்களின் அணு ஆயுதப் போர்வெறியே ஆகும்.
இத்துடன் அணு உலையை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வெறியையும், அதன் இந்திய அடிவருடிகளின் 'கமிசன்” நலன்களையும் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
காற்றாலை, அனல் மின்நிலையம், நீர் மின்நிலையம் போன்ற அனைத்து வழிமுறைகளையும் தவிர்த்துவிட்டு, பன்னாட்டு நிறுவனம் போடும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு அணுஉலையை கட்டியே தீருவோம் என கைக்கூலியான மன்மோகன் கும்பல் கூறுகின்றது. உண்மையில் நம் மக்கள் சோதனைக் கூடத்தில் பயன்படுத்தப்படும் எலிகளாவே ஏகாதிபத்திய நாடுகளாலும்;, இந்திய ஆளும் வர்க்கத்தினாலும் பார்க்கப்படுகிறார்கள்.
வெற்றிக்கிடைக்குமா என ஐயம் கொள்ளத் தேவையில்லை. தடுத்துநிறுத்தாவிட்டால் நாம் அழிவதோடு நம் வருங்கால சந்ததியினருக்கும் கொடிய நோய்களை மட்டுமே விட்டுச்செல்வோம். எனவே நாம் நம் கடமையை தவறாமல் செய்ய வேண்டும். மின்சாரம் நமக்கு தேவைதான். அதற்கு அணு உலை மட்டுமே தீர்வு என்பது குதிரைக்கு கடிவாளம் போட்டது போன்ற பார்வையே. தேவையென வந்தால் நாம் பல மாற்று வழிகளை கண்டுபிடிப்போம். இது வரலாறு. இவ்வரலாற்றை அறியாதவர்கள் மட்டுமே மின்சாரத்திற்கு வேறு வழியே இல்லை என ஏமாற்றுவார்கள். தேவைதான் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தொடக்கம் ஆகும். மண்புழுகூட வாழ்வதற்காகப் போராடுகிறது. நாம் புழுக்களல்ல.

-    திலீபன்
பி.எஸ்.சி. (நர்சிங்), வேலூர்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014