இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



ஞாயிறு, ஜனவரி 01, 2012

கல்வி உரிமைச் சட்டம்: மற்றுமொரு ஏமாற்று திட்டம்

“இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து பிரிவு 45 இன் படி, 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அரசே இன்னும் 10 ஆண்டுகளில் கல்வி கொடுக்கும்” இந்தக் கூற்று ஏதோ இன்றைய அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அல்ல. 1950 ஆம் ஆண்டு இந்திய பிரதமராகப் பொறுப்பேற்ற நேருவால் சொல்லப்பட்டது. அவர் திருவாயால் சொன்னதை அவரும் நிறைவேற்றவில்லை, பின்னால்; மாறி மாறி ஆண்ட எந்த ஒரு கட்சியும் அதை கண்டுகொள்ளவே இல்லை.


பள்ளிக்கல்வி முதல் உயர்க்கல்வி வரை கட்டாய இலவசக் கல்வி அரசு கொடுக்க வேண்டும், தாய்மொழி வழியில்; அது கற்றுத் தரப்பட வேண்டும் என்பவை பல்வேறுபட்ட கல்வியாளர்கள், மக்கள், மாணவர்கள் என அனைவரின் பல நெடுங்கால கோரிக்கைகளாகும். ஆனால் அரசு இவற்றிற்கு இன்றளவும் சற்றும் செவி கொடுக்கவில்லை. மாறாக அனைத்து பள்ளிகளையும், கல்லூரிகளையும் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததால், ஏழை மக்களுக்குக் கல்வி என்பது எட்டாக்கனியாகவே இன்று மாறியுள்ளது. 
இந்நிலையில், குழந்தைகளுக்கான கல்வி உரிமையை உறுதி செய்யும் 135 ஆவது நாடாக இந்திய அரசு தனது 63 ஆண்டுகளுக்குப் பிறகு, 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி, 2010 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது. இந்த கல்வி உரிமைச் சட்ட மோசடிக்கு பல கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தாலும், இது மக்களுக்கான சட்டமே என ஒரு பிரிவனர் தங்கள் வாதங்களை முன் வைத்து நியாயப்படுத்தினர். இன்னொரு புறம் இப்படியொரு சட்;டம் இயற்றப்பட்டதா? என பொது மக்கள் கேட்கும் அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் இதை ரகசியமாக அறிவித்தன. பல ஆண்டுகால கோரிக்கையை இந்த அரசுகள் நிறைவேற்றிவிட்டனவா என்ற மகிழ்ச்சிக்கு செல்வதற்கு முன் இதை பற்றி சற்று தெரிந்து கொண்டு சந்தோசப்படலாமா? வருதப்படலாமா? என்பதை நாம் முடிவு செய்வோம்.
கல்வி உரிமைச் சட்டம் 2009:
கல்வி என்பது அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக கருதப்பட ஏதுவாக இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குத் தகுந்த திருத்தம் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கடந்த 4 ஆகஸ்ட் 2009 அன்று, இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு 21 (ஏ)-இன் படி 6 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக கல்வி உரிமைச் சட்டம் என்று பொதுவாக சொல்லப்படுகின்ற ''சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்”” (The Right of Children to Free and Compulsoru Education Act) இந்திய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப் பட்டு, ஏப்ரல் 2010 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:
வறியநிலைக் குடும்பங்களின் சிறுவர்களுக்கு ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
அரசு  அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தடை செய்யப்படுகின்றன.
நன்கொடை மற்றும் கட்டுமானக் கட்டணம் பெறுவதை இச்சட்டம் தடுக்கிறது.
சிறுவர்களுக்கோ பெற்றோருக்கோ நேர்முகத் தேர்வு நடத்துவதை தடை செய்கிறது.
எந்தவொரு மாணவரும் துவக்கப்பள்ளி கல்விக் காலத்தில் பங்கெடுப்பதை நிறுத்தி வைப்பது, வெளியேற்றுவது அல்லது இறுதித் தேர்வில் தேர்வு பெறுவதை தேவையாக்குவது போன்ற செயல்களைத் தடைசெய்கிறது.
பள்ளியிலிருந்து நின்றுவிட்டவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து, அதே வயதுடைய மற்றவர்களுடன் இணையாக்குவதற்கும் வழி செய்கிறது.
மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு பதினெட்;டு வயது வரை கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.
இச்சட்டத்தின் மேற்பார்வைக்காக தேசிய சிறுவர் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில ஆணையங்கள் அமைக்கவும் வழி செய்கிறது. சிறுவர் உரிமை குறித்த பொதுமக்கள் குறைகளையும் ஆய்வு செய்யும்.
பள்ளிக் கட்டிடங்கள், கட்டமைப்புகள், ஆசிரியர் - மாணவர் விகிதம், கல்வியாளர் குறித்த மேம் பாட்டிற்கான செயற்திட்டங் களும் இடம்பெற்று ள்ளன.
நிதிப் பங்கீட்டை 65 சதவிகிதம் மத்திய அரசும், 35 சதவிகிதம் மாநில அரசும் பங்கிட்டுக் கொள்ளும். வட மாநிலங்களில் இது 90:10 என்ற அளவில் கொடுக்கப்படும்.
இதன்படி தமிழ்நாடு அரசும் அரசாணை வெளியிட் டுள்ளது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009, மைய அரசால் இயற்றப்பட்டு இச்சட்டம் 1.04.10 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, இலவச, தொடக்கக் கல்வி வழங்குவதே இச்சட் டத்தின் முக்கிய நோக்க மாகும். இச்சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் தகுந்த விதிகளை இயற்ற, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதல் வகுப்பிலோ அல்லது ஒரு பள்ளி, பள்ளிக்கு முந்தைய கல்வியை வழங்குமானால் அந்த வகுப்பில் சேரும் மொத்த மாணவர்களில் குறைந்தது 25 விழுக்காடு இடங்களை அருகாமைப் பகுதியிலுள்ள நலிந்த பிரிவுகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்குதல் வேண்டும்.
சேர்க்கும்போது அவர்களுக்குத் தேர்வுகள் நடத்து வதோ, அல்லது வாய்மொழி வினாக்கள் கேட்பதோ கூடாது. விண்ணப்பங்கள் பெற்று பரவல் தேர்வு அடிப்படையில் 25 விழுக்காடு மாணவர்களைத் தெரிவு செய்தல் வேண்டும்.
எஞ்சியுள்ள 75 விழுக்காடு இடங்களைப் பூர்த்தி செய்யும்போது ஒவ்வொரு பள்ளியும் பள்ளி சேர்க்கைக்கான சரியான அடிப்படைக் கோட்பாடுகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட கொள்கையைப் பின்பற்றுதல் வேண்டும். எந்த ஒரு சமயத்திலும் குழந்தையினுடைய இதரத் தகுதிகளையோ, பெற்றோர்களுடைய கல்வித் தகுதிகளையோ கருத்தில் கொள்ளக்கூடாது.
சேர்க்கைக்கான கொள்கைளைப் பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள், பள்ளிக் கையேடுகளில் தெரியப்படுத்துதல் வேண்டும்.
மேற்கண்ட 25 விழுக்காடு சேர்க்கை மற்றும் 75 விழுக்காடு சேர்க்கை என்ற இரண்டு சேர்க்கையின் போதும், முதல் வகுப்பிலோ அல்லது ஒரு பள்ளி, பள்ளிக்கு முந்தைய கல்வியை வழங்குமானால் அந்த வகுப்பில் சேரும் மாணவர்கள் சேர்க்கையின் போது அவர்களிடம் தேர்வுகள் நடத்துவது வாய்மொழியாக வினாக்கள் கேட்பது போன்ற எந்த ஒரு பரிசீலனை நடைமுறைக்கும் மாணவர்களை உட்படுத்தக் கூடாது.
(பார்க்க: தமிழ்நாடு அரசாணை நிலை எண் 9)
 
கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தொடரும் அரசின் ஏமாற்று வேலைகள்:
மத்திய, மாநில அரசுகள் கல்வி உரிமையை வெறும் ஏட்டளவில் மட்டுமே என்றும் நிறைவேற்றி வருகின்றன. இந்த சட்டத்தில் பல தெளிவில்லாத, ஏமாற்றுத்தனமான பல குறைபாடுகள் ஒருபுறம் உள்ளது. மற்றொருபுறம், தனியாருக்குக் கல்வி நிறுவனங்களைத் தாரை வார்த்து, கல்வியை ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றப்படுவது உள்ளது. படித்துப் பட்டம் பெற்று வருபவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. அதாவது மக்களை ஏமாற்றச் சட்டம் இயற்றும் நாடகங்களை நடத்திக்கொண்டே, அவர்களைப் படுகுழியில் தள்ளும் நடைமுறைகளை அரசு மேற்கொள்கின்றது.
கல்வி உரிமைச் சட்டத்தைப் பொறுத்தவரை 63 ஆண்டுகாலம் கழித்து, நிறைவேற்றப்பட்ட நல்ல சட்டம் என நினைக்கலாம். ஆனால் இது வெட்கக்கேடான விசயம் ஆகும். மொத்தம் உள்ள 193 நாடுகளில் உயர்கல்வி வரை, முன்பிருந்தே, கட்டாய, இலவச, தாய்மொழிவழிக் கல்வி தரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று 6-14 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டாயக் கல்வி சட்டத்தை நிறைவேற்றிய 135வது நாடு இந்தியா என்பதிலிருந்தே இது எவ்வளவு வெட்கக்கேடானது என்பதைப் பார்க்கலாம். இன்றைய வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மேல்நிலை மற்றும் பட்டப் படிப்பைப் பற்றி இந்தச் சட்டமும், அரசும் வாய் திறக்கவே இல்லை. இந்தச் சட்டத்தில் மேலும் பல குறைபாடுகள் உள்ளன:
இந்தச் சட்டம் 6 வயது முதல் 14 வரை உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி வழங்கும் என்று சொல்லுகின்றது. அதாவது 5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஆரம்பக்கல்வியையும், 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்;கு மேல்நிலை, உயர்நிலைக் கல்வியை முற்றிலும் அவசியமற்றதாக மாற்றுகின்றது. இன்று சராசரியாக ஒன்றாம் வகுப்பில் 100 பேர் படித்தால், அதில் பட்டப் படிப்பு வரை செல்வது 1 நபர் மட்டுமே ஆகும். இப்படிப்பட்ட மோசமான நிலையிலும் அரசு, உயர்கல்வி தேவையே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவைப் படும் 1,64,260 கோடி நிதியை மத்திய அரசோ, மாநில அரசுகளோ முழுமையாக ஒதுக்கவில்லை. ஒதுக்க தயாராகவும் இல்லை. இதுவரை வெறும் 4,200 கோடி மட்டுமே மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மிக மிக பற்றாக்குறையாக இருக்கும் ஆரம்ப, இடைநிலை பள்ளிகளை புதிதாக திறக்க அரசு தயாராக இல்லை. செயல்படும் 65 % பள்ளிக்கூடங்களில் மிக மோசமாக உள்ள ஆரம்ப சுகாதார வசதிகளைப் பற்றி அக்கறை இல்லை.
ஆசிரியர்களின் பற்றாக்குறை, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் பற்றாக்குறை பற்றியும் இதில் குறிப்பிடப்படவே இல்லை. இந்தச் சட்டத்தை நடைமுறைபடுத்தவே 12,00,000 ஆசிரியர்கள் தேவைபடுவார்கள். இதற்கான ஒரு துளி திட்டம் கூட இல்லை.
குழந்தைகள் கல்வி உரிமைச் சட்;டம் தொடர்பான நடைமுறைக் கையேடுகள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவித்திருந்தாலும், உண்மையில், மக்களுக்கு இந்தச் சட்டம் இயற்றப்பட்டதே தெரியாத நிலைதான் இன்று உள்ளது.
முழுமையாக, விரிவாகப் பார்த்தோமானால் கல்வி அளிக்கும் சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும் ஒரு சிலர் மட்டுமே முழுமையாகக் கல்வி பெறும் அல்லது பெரும்பாலானவர்கள் தரமற்ற கல்வி பெறும் அல்லது கல்வியறிவின்றியே இருக்கும் நிலையே தொடர்கின்றது. அனைவருக்குமான சிறந்த கல்வி கிடைக்க, இதுவரை இந்த அரசு ஒரு திட்டம் கூட இயற்றியதில்லை. சரியாகச் சொல்ல போனால் அரசிடமும், முறையான திட்டங்களும் இல்லை, அதைத் தீட்ட அரசு தயாராகவும் இல்லை.
கல்வியில் அரசின் இன்றைய நடைமுறை:
1986 இல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதிலிருந்து, இன்று வரை அரசுப்பள்ளிகள், கல்லூரிகள் திட்டமிட்டு மூடப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்கள் வருவதில்லை, பெற்றோர்கள் தனியார் பள்ளிகளையே விரும்புகின்றார்கள் போன்ற போலிக் காரணங்கள் அரசால் சொல்லப்படுகின்றன. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 % கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தும் இதுவரை அதிகபட்சம் ஒதுக்கபட்ட நிதி வெறும் 2.9 % மட்டுமே ஆகும்.
மேலும் 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதப்படி, இன்று நாட்டில் தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 12,00,000-த்திற்கு மேலாகும். இன்று வேலையில்லாமல் உள்ள, ஆசிரியப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும் மூன்று இலட்சத்திற்கும் மேலாகும். ஆனால் அரசுகளோ புதிதாக பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அரசுப் பள்ளி, கல்;லூரிகளின் தரத்தை திட்டமிட்டுப் புறக்கணித்து மக்களை தனியார் பள்ளி, கல்லூரிகளை நோக்கி தள்ளிவிடுகின்றது. தனியார் நிறுவனங்களும் நன்கொடை, வளர்ச்சி, தரம் என்று கூறிச் சுரண்டி கொழுக்கின்றது. ஏழை மக்களுக்குக் கல்வி ஒரு எட்டாக்கனியாக மாற்றப்படுகின்றது. இதே திட்டத்தைத் தான் அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பயன்படுத்துகின்றது.
உதாரணமாக, நாம் தமிழகத்தின் நிலையை எடுத்துக் கொண்டோமானால், ஆரம்ப, இடைநிலை, உயர், மேல்நிலை ஆகிய நான்கையும் கொண்ட 3,703 பள்ளிகளில் அரசு பள்ளிகள் வெறும் 42 மட்டுமே ஆகும். மீதம் உள்ள 3661 பள்ளிகள் தனியார் பள்ளிகள் ஆகும். தனித்தனியாக பார்த்தால் ஆரம்ப, இடைநிலை, உயர், மேல்நிலை பள்ளிகள் முறையே 38, 40, 60, 68 சதவீதம் தனியாரும், மீதம் அரசுப்பள்ளிகளும் இயங்குகின்றன. வட மாநிலங்களுக்குச் செல்லச்செல்ல நிலைமை இன்னும் மோசம் அடைகின்றது. பள்ளிகள் மட்டும் அல்;ல, 304 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  அரசுக் கல்லூரிகள் வெறும் 58 மட்டுமே. மீதம் உள்ள 246 கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகும். பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் பற்றி நாம் சொல்ல தேவையேயில்லை. மாவட்டத்திற்கு ஒன்றோ இரண்டோதான் அரசுக்கல்லூரிகள் ஆகும். ஆனால் தடுக்கி விழுந்தால் ஒரு சுயநிதிப் பொறியியல் கல்லூரியை நாம் காணலாம். இதே மோசமான நிலைதான் கல்வியின் அனைத்துத் துறைகளிலும் உள்ளது.
சமூக வளர்ச்சிக்கே கல்வி :
    கல்வி என்பது தனி மனிதனின் அறிவை மேம்படுத்தவது மட்டும் அல்ல. சமுதாயத்தில், இயற்கையில் நடக்கும் அனைத்தையும் முழுமையாக அறிவியல் பூர்வமாக புரிந்து கொண்டு சமுதாயத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல உதவுவது ஆகும். ஆனால் இன்று கொடுக்கப்படும் மனப்பாடத் தேர்வுமுறையும், விஞ்ஞானப் பூர்வமற்றக் கல்வியும் மாணவர்களின் விரக்தி நிலைக்கும், மன அழுத்தத்திற்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதனால் தினமும் ஒரு மாணவர் தற்கொலையை நாம் கண்டு வருகின்றோம். இப்படிபட்டக் கல்வி முறை சமுதாய வளர்ச்சியைத் தடுக்கின்றது. அனைவருக்கும் கல்வி அறிவு சென்றடைவதில் சிக்கல் ஏற்படுகின்றது என்று கல்வியாளர்கள் அனைவரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் மக்கள் அனைவரும் கல்வி கற்றுவிடக்கூடாதென்பதில் ஆளும் அரசுகள் தெளிவாக உள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு வேலை செய்யத் தேவைப்படும் மனித எந்திரங்களை உருவாக்குவது மட்டுமே, இன்றைய கல்வி முறையில் 'தரமான கல்வி” என்ற பெயரில் கொடுக்கப்பட்டு வருகின்றது.
மேலே நாம் ஆராய்ந்த அடிப்படைக்கல்வி முதல் உயர்கல்வி வரை உள்ள அடிப்படைச் சிக்கல்களை தீர்க்க முன் முயற்சி செய்யாமல், ஒரு கல்வி உரிமைச் சட்டம் அல்ல, ஆயிரம் கல்வி உரிமைச் சட்டங்களை இயற்றினாலும் அதனால் மக்களுக்கு ஒரு பயனும் இருக்காது. வேண்டும் ஆனால் நம்மை ஏமாற்ற மட்டுமே பயன்படும். இதற்கு மாறாக சமூக, மனித வளர்ச்சிக்கான கல்வியை நம் சந்ததியினர் பெற நாம் இணைந்து முயற்சிக்க இதுவே சரியான தருணம்.
-ரகு,
கோவை அரசு சட்டக் கல்லூரி
ragu.dprs@gmail.com


இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014