இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



ஞாயிறு, ஜனவரி 01, 2012

முல்லைப் பெரியாறு அணை: விறகாகும் மக்கள்.. குளிர்காயும் அரசுகள்...

இன்று தமிழகத்தை மிகப் பெரிய அளவில் உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. தமிழகத்தின் தென் பகுதிகளான தேனி, கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக தன்னெழுச்சியாக எந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளையும் நம்பாமல் முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றுவோம் என, நவீன ஆயுதங்களுடன் அவர்களை மறித்து நிற்கும் அரசின் அடியாட் களையும்  (காவல்துறை), அரசையும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.


காவிரி, பாலாறு, ஒக்கனேக்கல்... என ஒவ்வொரு முறையும் மாநிலங்களுக்கிடையே சண்டையைக் கிளப்பி ஆர்ப்பாட்டம், மக்கள் போராட்டம் என முற்றி இரண்டு மாநில மக்களும் அடித்துக் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தி, பின்பு ஒரு குழுவை அமைத்து விசாரித்து, அந்த நிகழ்வை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று, அதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் தேவைப்படும் போதெல்லாம் பிரச்சனைகளை பூதாகரமாகக் கிளப்பி விட்டுக் கொண்டி ருக்கின்றன இந்திய ஓட்டுக் கட்சிகள்.
இன்று முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள மற்றும் தமிழக மக்களிடையே ஒரு மோதலைத் தூண்டிவிட்டு அதிலிருந்து ஆதாயங்களைத் தேட தன் கூரிய நகங்களால் கலவரங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் இந்திய ஓட்டுப் பொறுக்கி கட்சியினரும் அதன் ஆதரவாளர்களும். இந்தப் பிரச்சினைக்கான அரசியல் பின்னணியை நோக்கி நகருவதற்கு வரலாற்றின் பக்கங்களைப் புரட்ட வேண்டி யிருக்கிறது.

  மன்னர் சேதுபதியின் முயற்சியும், பென்னிகுயிக்கின் தியாகமும்:
1798 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளுக்குக் கொண்டு வர திட்;டமிட்டார். ஆனால் போதிய வசதியில்லாததால் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு இராணுவ பொறியாளாராக வந்த கர்னல் ஜான் பென்னி குயிக் மேற்குத் தொடர்ச்;சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, தமிழ்நாட்டிற்கு திருப்பிவிட்டு, வறண்ட நிலங்களை விளைநிலங்களாக்கும் நோக்குடன் முல்லை பெரியாறு அணையைக் கட்டத் திட்டமிட்டார். இதன் அடிப்படையில் 1893-இல் ஆங்கில அரசின் ஒத்துழைப்புடன் அணை கட்டும் வேலையைத் துவங்கினார். பல சிரமங்களுக்கு இடையில் கட்டப்பட்ட அணை பலத்த மழையால் அடித்துச் செல்லப்பட்டது. ஆங்கில அரசு மேலும் நிதித் தர மறுத்து விட்டது. இதனால் மனம் உடைந்த பென்னிகுயிக் தனது சொந்த நாட்டுக்குச் சென்று, தனது சொத்து களை விற்று முல்லைப் பெரியாறு அணையை 1895-இல் கட்டி முடித்தார். இதில் தமிழக மக்களின் உழைப்பு மிக மிக முக்கியமானது ஆகும்.
999 ஒப்பந்தம் பற்றி:
 
திருவாங்கூர் மகாராஜா வைகாசம் ஐஐ சார்பாக வெங்கம் இராமையங்கர் அவர்களுக்கும், சென்னை இராஜதானி கவர்னர் ஹானிங்டனுக்கும் இடையே 29.13.1886 இல் அரசாணை 796 இன் படி ஒப்பந்தம் போடப்பட்டது. முழு தண்ணீரும் சென்னை (தமிழ்நாடு) இராஜதானிக்கு உரியது. இதன்படி 777 சதுர கி.மீ. (254 ச.மைல்) பகுதியில் உள்ள நீர் முழுமையும் தமிழ்நாட்டிற்கு உரிமையுடையது. அணை கட்டுப்பகுதி 104 ஏக்கருக்கும், நீரில் மூழ்கும் 8000 ஏக்கருக்கும், வருடத்திற்கு, ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் பிரிட்டிஷ் அரசு திருவாங்கூர் அரசுக்கு வாடகை கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கானது.
முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமான முறை:    
முல்லைப் பெரியாறு அணை TCHIL LIME என்ற ஐரோப்பிய முறைப்படிக் கட்டப்பட்டது. செங்கல், சுண்ணாம்பு, சுருக்கியுடன், சிறிது சிமெண்டும் சேர்ந்த கலவையினால் முறைப்படிக் கட்டப்பட்டுள்ளது. (எகிப்து பிரமீடும், சீன நெடுஞ்சுவரும், சூயஸ் கால்வாயில் போர்ட் ஹெலினாவி லிருந்து, போர்ட் சையது வரை 2 1ஃ2 கி.மீ. தூரமுள்ள உப்புக்கடலில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் இந்த முறையில்தான் கட்டப்பட்டுள்ளன.) 1,241 அடி நீளமும், 158 அடி உயரமும் 8,000 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பளவும் கொண்டது முல்லைப் பெரியாறு அணை. அணையிலிருந்து வெளியேறும் நீரானது வைரவன், சுருளி ஆறுகளில் கலந்து 60 கி.மீ. தூரம் பயணம் செய்து, வைகை ஆற்றை அடைகிறது. 104 அடி உயரத்திற்கு மேல் அணையில் உள்ள நீர் மட்டுமே தமிழகத்திற்கு விடப்படுகிறது. 152 அடிக்கு நீர் தேக்கி வைக்கப்படும் போது மட்டுமே தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2,17,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் மதுரை நகர மக்களின் குடிநீர் வசதியும் நிவர்த்தி அடையும். தமிழக மக்களின் வாழ்வாதாரமாக இந்த அணை உள்ளது.
இடுக்கி அணையும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையின் ஆரம்பமும்:
    
1963 இல் மிகப்பிரபலமான கேரள பத்திரிக்கையான மலையாள மனோரமா வில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று வந்த பொய்பிரச்சாரம் தான் இந்தப் பிரச்சனையின் ஆரம்பம். பிறகு 1979 அக்டோபரில் பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது என மறுபடியும் தனது பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்தது.
இதற்குப் பின் உள்ள அரசியல் ஆதாயங்கள் தான் இந்தப் பிரச்சாரத் திற்கான காரணம். 1969இல் ஆரம்பிக்கப் பட்டு 1976இல் கட்டிமுடிக்கப்பட்டது இடுக்கி அணை. இது உலகில் சிறந்த ஆர்ச்சு அணைகளில் ஒன்றாகும். 1976இல் இடுக்கி அணை கட்டப்பட்டதிலிருந்து 1979 வரை இடுக்கி அணை 72 டி.எம்.சி நீர் முழுக் கொள்ளளவை எட்டவில்லை. M.K. பரமேஸ்வரன் இடுக்கியில் செயற்பொறியாளராகப் பணிபுரிந்தார். 1976 முதல் 79 வரை மூன்று ஆண்டுகால மின் உற்பத்தி மற்றும் அதற்கான நீர்வரத்து பற்றிய ஒரு அறிக்கையை கேரள அரசுக்கு சமர்ப்பித்தார். அதில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தாமல் செய்துவிட்டால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் இடுக்கி அணைக்கு வந்து சேரும் அதன் பயனாக இடுக்கியில் முழுவீச்சாக 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும் என்றார்.
இதே நேரம் தற்செயலாக குஜராத் மாநிலத்தில் மோர்வி அணை உடைந்து வெள்ளளப் பெருக்கினால் உயிர்சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது.
அதை முன்வைத்து இடுக்கி அணையின் நீர்வரத்தை அதிகரிக்க முல்லைப்பெரியாறு அணை 84 வருடம் பழமையானது என அப்போது இருந்த ஆளுங்கட்சியான போலி கம்யூனிஸ்ட் கட்சியின், அச்சுதானந்தன் தலைமையில் ஆட்சி அதிகாரம் இருந்தது. அரசின் உதவியுடன் பத்திரிகை வாயிலாகவும், பிரச்சாரம் மூலமாகவும் முழுவீச்சில் செயல்பட்டு மிகப்பெரிய தர்ணா, பந்த், பொதுகூட்டம், கேரளா வரும் தமிழக வாகனங்களை மறித்தல், பொதுப்பணித்துறை ஜீப்பை எரித்தல் போன்ற கலவரங்களையும் கேரள ஆளுங்கட்சி கட்டவிழ்த்துவிட்டது.
தமிழக, கேரள அரசியல் கட்சிகளின் சமாதானம்:
    
இந்தப்  போராட்டங்களின் விளைவாக 1979இல் மத்திய நீர்வளத் துறை கமிஷனின் (CWC) தலைவர் C.A.தாமஸின் தலைமையில் திருவனந்த புரத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் இராஜா முகம்மது தவிர தமிழகம் சார்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டவர் அனைவரும் கேரளாவைச் சார்ந்தவர்கள். மேலும் விவாதமும் மலையாளத்திலே நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவாதத்தில் தமிழக அரசு, அணை பலவீனமாக உள்ளது என ஒப்புக் கொண்டும், பலப்படுத்தும் நடவடிக் கைகள் முடியும்வரை அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரின் ஒப்புதலும், கையொப்பமும் இல்லாமல் இந்த ஒப்பந்தம் நிறைவடைந்தது.
    
152 அடி நீர் 136 அடியாக குறைக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் 1,22,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கிறது. 46,000 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி, நட்டமாகி உள்ளது. 47,000 மெகாவாட் மின் உற்பத்தி நட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக தென் மாவட்டங்களில் வாழும் 40 இலட்சம் மக்களுக்கு குடிநீர் தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது.
  
மேலும் 1980 இல் இருந்தே முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தமிழ்நாட்டு ஊழியர்கள் - பொறியாளர் களைத் தாக்கியும், கைது செய்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்தும், வழக்குப் போட்டும், கேரள அரசு தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி அராஜகம் செய்தது. இதை எதிர்த்து வாய்க்கூடத் திறக்கவில்லை தமிழக ஆட்சியாளர்களாக இருந்து வந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயா. இப்படி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கொடுத்த தமிழக அரசும், பறித்த கேரள அரசும் வித்தியாசமில்லாமல் தமிழக மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்துள்ளனர்.
அணை பலமாக இல்லையா ?
தமிழக, கேரள ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை ஒரு புவி ஈர்ப்பு அணை, அதாவது அணையில் தேங்கும் நீரின் அழுத்தத்தையும், நில அதிர்வையும் தன் எடையின் மூலமாக தாங்கும் திறன் உடையது. எனவே அணையின் எடையைக் கூட்ட அணையின் மேற்பரப்பில் 21 அடி அகலமும் 3 அடி கனத்திற்கு அணையின் மொத்த நீளத்திற்கு சுஊஊ கான்கிரிட் தொப்பி போலப் போடப் பட்டுள்ளது. இதனால் மீட்டருக்கு 35 டன் எடை வீதம் மொத்த எடை 12,000 டன் அதிகபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கேபிள் ஹேங்கரிங் முன் தகைவுறுதல் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நில அதிர்வைத் தாங்கக்கூடிய அளவு போடப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக கான்கிரிட் தாங்கு அணை, பழைய அணையின் பின்புறத்தில் 32 அடி அகலத்தில் அடித்தளத்திற்கு கீழ் 10 அடி தொடங்கி அணையின் மேலே 145 அடி வரை கான்கிரிட் தொப்பிப் பகுதியை உள்ளடக்கி அணையை பின்புறம் தாங்கிப் பிடிக்கும் வகையில் உறுதிப்படுத்தப்பட்டு புதிய தொழி;ல் நுட்ப அடிப்படையில் கட்டப் பட்டுள்ளது. இவ்வாறு மூன்று முறையில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழகப் பொறியாளர்கள் கூறுகிறார்கள்.   
ஆய்வு அறிக்கைகளும்,   புறக்கணித்த அரசியல் கட்சிகளும்:   
வட மாநிலங்களைச் சேர்ந்த 12 பேர் கொண்ட நிபுணர் குழு டாக்டர்.எஸ்.எஸ்.பிரார் தலைமையில் முல்லைப் பெரியாறு அணையை நேரில் உரிய கருவிகளுடன் ஆய்வு செய்தது. அணை பலமாக உள்ளது, 142 அடி நீர் தேக்கலாம் என அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதைக் கேரள அரசு மறுத்து விட்டது. பின்பு டாக்டர். டி.கே.மித்தல் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி மறுபடியும் வேறு வேறு கோணத்தில் அணையை நேரில் ஆய்வு செய்தது. மீண்டும் அணையின் பலத்தை உறுதிபடுத்தியது. இதையும் கேரள அரசு நிராகரித்தது. பின்பு கேரள கொச்சி கடற்படையினரை வர வழைத்து மேஜர் ராஜூ தலைமையில் 17 பேர் சேர்ந்து அணையில் நீர் மூழ்கி எக்கோ டெஸ்ட், நீர் கேமரா போன்ற பல சோதனைகள் செய்து அணை பலமாக உள்ளது எனக் கூறியுதையும் கேரளா அரசு குப்பையில் போட்டது. இதை யொட்டி 27.02.2006-இல் உச்சநீதி மன்றம் 142 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள 22 அணைகளிலும் எவ்வளவு நீர் தேக்க வேண்டும் என்பதற்கான அதிகாரம் எந்த அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் கிடையாது, முழு அதிகாரமும் கேரள அரசுக்கே உரியதுதான் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதில் முதன்மை அணையாக முல்லைப் பெரியாறு அணையைக் குறிப்பிட்டுள்ளதே, இங்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இரு மாநிலங்களுக்கு ஒப்பந்தமுள்ள அணைக்கு தனக்கு மட்டுமே உரிமையுள்ளது போல் நடந்துக்கொண்ட விதமே தமிழக மக்களின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் விதமாக உள்ளது.  இப்படி எல்லா அறிக்கையையும் குப்பையில் போட்டு கேரள அரசியல் கட்சிகள் தமிழக மக்களின் வாழ்வுரிமையை பறித்துக் கொண்டன.
    
Fimite Element Techniqe என்பது, அணை கட்டுமானத்தின் வடிவமைப்பில் உலகம் முழுவதும் ஒப்பு கொள்ளப்பட்ட நவீன ஆய்வு முறை ஆகும். இந்த ஆய்வு முறைக் கணக்கீட்டில் வல்லுநரான டாக்டர்.ஏ.ஆர். சாந்தகுமார், முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்படும் போது நில அதிர்ச்சியால் ஏற்படக் கூடிய விளைவுகள் அடிப்படையில் மேற்கண்ட முறையில் ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதாக சான்றிதழ் அளித்துள்ளார். எனவே கேரள அரசு கூறுவதில் உண்மையில்லை என்கிறார். 

முல்லை பெரியாறு அணையில் மேற்பார்வைப் பொறியாளராக சில ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவரான ஆர்.சம்பந்தம் புதிய அணை குறித்த விரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை அளித்துள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் புதிய அணை கட்டும் இடத்தில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்துக்கு வாய்ப்பே இல்லை என தமிழ் பொறியாளர்கள் சங்கம் கூறுகிறது. கேரள மக்களின் அச்ச உணர்வைக் கருத்தில் கொண்டு, தமிழக மக்களின் நீராதாரத்திற்கு முழு உத்திரவாதம் செய்யும் புதிய அணைக்கான திட்டம் ஏதும் இருந்தால் அதை செயல்படுத்துவது கூட சரிதான். ஆனால் இப்படிப்பட்ட முடிவுகளை கேரள அரசும், தமிழக அரசும் எடுக்காமலிருப்பது இவர்களின் மக்களுக்கு எதிரான துரோகத்தையே அம்பலப்படுத்துகிறது.
வேசம் கலையும் போலிகள்:
 தங்களைக் கம்யுனிஸ்டுகள் என்று வெட்கமில்லாமல் பொய் கூறிக் கொண்டும், கம்யூனிசத்தையே மக்கள் வெறுக்கும் எண்ணத்தை விதைத்த பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டையேச் சாரும். ஊழியர்களும், தொண்டர்களும் உண்மையாக இருந் தாலும் தலைமைகளின் தவறான வழி நடத்துதலும் இருந்தால் எந்தவொரு முற்போக்கு அமைப்போ, கட்சியோ கூட மக்களுக்கான வேலையை செய்யாமல் அராஜக அரசுக்கு ஆதரவாக மாறி விடுகிறது. அதே நிலைமைதான் இந்த போலி கம்யுனிஸ்டுகளின் நிலைமை.

தனது மூன்று மிகப்பெரிய அரசியல் தளங்களாகளான திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் மிகப்பெரிய ஆட்டம் கண்டுள்ள நிலைமை இன்று. மேற்கு வங்கத்தில் உள்ள பழங்குடி மக்களை அடித்துவிரட்டி அங்குள்ள இயற்கை வளங்களை அந்நிய முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்க இந்திய அரசின்  திட்டமான பசுமை வேட்டை (Green Hunt) எனும் உள்நாட்டுப் போரை தன் சொந்த பகுதியில் வாழும் மக்களுக்கு எதிராக நடத்தியது. இதை எதிர்த்து அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்களும் மிகத்தீவிரமாக போராடி வருகிறார்கள். இந்த வெட்கம் கெட்ட துரோக செயலினால் 30 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை தன் கைவசம் வைத்திருந்த போலி கம்யு+னிஸ்டுகள் தூக்கியெறியப்பட்டனர். கேரளாவிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், விலைவாசி உயர்வு என மக்களைத் திக்குமுக்காட வைத்துள்ளனர். தன் முகமூடி கிழக்கப்பட்ட இந்த இக்கட்டான நிலைமையில் நடக்கவிருக்கும் “பிரவம்” இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடனும், இனி வரும் காலங்களில் ஆட்சி அதிகாரத்தை தாமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனும் முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழக மக்களுக்கு வழங்கப்படும் நீர்வரத்து குறித்து கவலைப்படாமல், எந்த ஒரு தொழில்நுட்பப் பு+ர்வமான அறிக்கையும் ஏற்காமல் புறக்கணித்;;;து வருகிறார்கள்.
கதர்களின் கந்தல் தன்மை:
தேசத்தி(ன்)ற்காக உயிரைக் கொடு(குடி)க்கும் மிகப்பெரிய தேசிய ஓட்டுக்கட்சிகளில் ஒன்றான காங்கிரசுக் கட்சியின் தளமாக கேரளா இருந்து வருகிறது. இப்பொழுது நடந்த மிகப்பெரிய ஊழல்களான 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல்களினால் அதன் உண்மைத் தன்மை வெளியாகியுள்ளது. இந்த நிலைமையில் கேரளாவில் நடக்கயிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறாமல் தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள இயலாது. எனவே கேரள மக்களைக் காப்பாற்ற நாங்களே அவதரித்து உள்ளோம் என்பதை வெளிப்படுத்த உம்மன்சாண்டி தமிழக மக்களுக்கு நீர்த்தருவோம் என்று கூறிக்கொண்டே 120 அடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டுமென தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவில் பா.ஜ.க. தன் ரவுடித்தனத்தைக் காட்டி அணையை இடிக்கும் முயற்சியில் மற்றக் கட்சிகளுடன் சமரசத்துடன் வேலை செய்கிறது. அங்கு உள்ள தமிழக மக்களை அடித்து விரட்டும் வேலைகளை இந்த கட்சிகள் செய்தும், அதற்காக எந்த எதிர்ப்போ அல்லது பாதுகாப்போ செய்யாமல் மௌனம் சாதித்தும் வருவது இவர்களைத் தவிர வேறுயாரும் மக்களை ஏமாற்ற ஆள் இல்லை என்பதைக் காட்டுகிறது.
தமிழக மக்களை முதுகில் குத்திய தமிழக அரசியல் கட்சிகள்:
 1980இல் அணையின் பாது காப்பை தமிழகத்திடமிருந்து கேரள அரசுக்கு தாரைத் வார்த்தும், 136 அடியாக நீர்வரத்தை குறைத்தும் பல இலட்ச மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, அதற்கு மாற்று வழிக்கூட செய்யாமலும் மக்களை பரிதவிக்க விட்ட பெருமை எம்.ஜி.ஆரையே சேரும். 2007 ஆம் ஆண்டு வாக்கில், வழக்கு விசாரணையில் உள்ளபோதே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு செய்ய கேரள அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேசைக் கண்டித்து மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதாக அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி அறிவி;த்தார். உடனே மையத் தொலைத்தொடர்பு அமைச்சர் ராசாவின் அலுவலகங்களில் மையப் புலானய்வுத் துறை சோதனை என்ற நாடகத்தை காங்கிரசு எசமானர்கள் ஏவிவிட்டார்கள். உடனே சரணடைந்தார் கருணாநிதி. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செயல்படும் அளவுக்கு கேரள முதல்வர் போல் தைரியம் இல்லை என ஒளிந்து கொண்டார்.
கருணாநிதியின் துரோகம் அம்பலமானதும் ஏதோ அவரால் மட்டும் தான் தமிழக மக்களின் உரிமை பறிபோனதாக கூப்பாடு போடும் ஜெயா, கேரள தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்ட தொகுதிகளில் “முல்லைப் பெரியாறு அணையில் நீரைத்; தேக்கி வைக்க விடமாட்டோம்” என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, ஓட்டுப் பொறுக்கிவிட்டு, இப்பொழுது தமிழகத்தின் உரிமைக்காகப் போராடுவதாக பாசாங்கு செய்கிறார். உச்ச நீதிமன்றம் 142 அடியாக நீரை உயர்த்தலாம் என்று 2006 இல் தீர்ப்பு கூறிய போது, ஆட்சியில் இருந்த ஜெயா அரசு “அப்பொழுது கோடைக் காலமாக இருந்ததால் தீர்ப்பைச் செயல்படுத்த முடியவில்லை” என்று இப்பொழுது தனது துரோகத்திற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ். சி.பி.எம், பா.ஜ.க போன்ற கட்சிகள், தாங்கள் கேரளாவில் தமிழக மக்களுக்கு எதிராகச் செய்யும் துரோகங்களைக் கண்டிக்காமல், சமாதானம் என்று சொல்லிக் கொண்டும், ஒவ்வொரு முறையும் குழுவை அமைத்து விசாரிப்பதை மட்டுமே செய்து, கண்டிப்பான நியாயத்தை நிலைநாட்டாமல் கேலிக்கூத்து செய்யும் அவர்களின் விடாப்பிடியான மக்கள் துரோகத்தைக்  காட்டுகிறது.

அணு உலை எதிர்ப்பும்   -  பெரியாறு அணை உரிமையும்
முல்லைப் பெரியாறு மற்றும் கூடங்குளம் போராட்டங்களை நசுக்க, இன மோதலைத் தூண்டிவிடுவது என்ற வழிமுறையையே கையாளுகிறது இந்திய பாசிச அரசு. கூடங்குளம் போராட்டத்தில் கணிசமான மலையாள மக்களும் போராடி வருகிறார்கள், இந்த சூழலில் முல்லைப் பெரியாறு போராட்டத்தை இனவெறி போராட்டமாக மாற்ற, திட்டம் தீட்டி வேலை செய்தும், கலவரங்களை கட்டவிழ்த்து விட்டும் அதை கண்டு கொள்ளாமலும் இருப்பது மக்களுக் கெதிரான மத்திய அரசு மற்றும் இந்திய ஓட்டு அரசியல் கட்சிகளின் நிலைப் பாட்டை தௌ;ளத் தெளிவாகத் தெரிவிக்கிறது. கேரள மக்களின் மனதில் அணையின் பலத்தைப் பற்றிய பயத்தை பரப்பிவிட்ட இந்திய ஓட்டுக் கட்சிகளும், மத்திய அரசும் அதை தன்னெழுச்சியாகப் போராடிவரும் கூடங்குள மக்கள் போராட்டத்துடன் ஒப்பிட்டு மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது மட்டுமல்லாமல் போராட்டத்தை நசுக்கவே தமிழக மற்றும் கேரள மக்களுக்கிடையே இனவெறியைத் தூண்டிவிடுகிறது.
மக்களின் பயத்திற்கான காரணங்களைத் தாண்டி அதில் பொதிந்துள்ள உண்மையும், அரசியல் ஆதாயமுமே முக்கியமான விசயங்களாக உள்ளன.
பழமையான அணை, நில அதிர்வுப் பகுதி, அணையை இடிக்க வேண்டும் என்று கூறுவது உண்மையானால், இடுக்கி அணையும் கட்டி 40 ஆண்டுகள் ஆகிறது, நில அதிர்வு வந்தால் அதுவும் இடிந்து விழும் வாய்ப்புள்ளது.
வெகுண்டெழும் மக்கள் போராட்டமும், நீர்த்துப் போகச் செய்யும் அராஜக அரசும்:
 டேம் 999 படத்தின் வெளியீட்டாலும் கேரளாவில் உள்ள  காங்கிரஸ், சி.பி.எம்., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் அடாவடித் தனத்தாலும், அங்குள்ள தமிழக மக்களை அடித்துவிரட்டுவது, தமிழக தொழிலாளர்களை சிறைப்பிடிப்பது, அணையை இடிக்க முயல்வது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.  இதன் எதிரொலியாக தமிழகத்தில் தேனி, கம்பம், குமுளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் எந்த அரசியல் கட்சிகளையும் நம்பாமல் முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றுவோம் என தொடர்ச்சியாக அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். மேலும் ஒருபுறம் தமிழகத்தில்;;;;;; உள்ள சில தமிழினவாத குழுக்கள் கேரள வணிகர்களுக்கு எதிராக செய்த கலவரங்களும் தேசிய இனவெறியைத் தூண்டும் விதமாகவே உள்ளது. 

மக்கள் போராட்டங்களை தேசிய இனவெறியாக எப்பொழுதும் மாற்றி இந்தியாவிலுள்ள தேசிய இனங்களைப் பிரித்து வைக்கும் இந்த அரசின் தன்மை என்ன? என்ற கேள்வியும், இந்தியாவின் தன்மை என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கான விடை இந்தியா ஒரு தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதே ஆகும்.  

இரண்டாம் உலகப் போருக்கு பின் தன் காலனி நாடுகளைக் கையாளு வதற்கு திறன் இல்லா ஆங்கில அரசு, தன் காலனி நாடுகளில் தனது கைப்பாவைகளை அமைத்து சுதந்திரம் என்ற பெயரில் புதிய சுரண்டல் முறையைக் கையாண்டது.
காங்கிரஸ் தலைமையில் சமஸ் தானங்களாகவும், தேசிய இனங் களாகவும் பிரிந்து கிடந்த இந்தியாவை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் தனது ராணுவ சாகசங்களால் சிறைப்பிடித்தார். அந்த தேசிய இனங்களின் சிறைச் சாலைதான் இந்த சுதந்திர இந்தியா.
இன்றைய இந்த புதிய காலனி முறையில் போட்டிப்போட்டு ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்துவரும் நம் நாட்டின் ஆட்சியாளர்களின் ஊழலும், தவறுகளும் மக்கள் மத்தியில் போராட்டங்களையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்தும் போதெல்லாம், அதைப் பூசி மெழுகுவதற்காகவே, மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை அவர்களுக்கு எதிராகவே திருப்பி மாற்றிப் போராட வைத்து, தங்களுக்குள் அடித்துக் கொள்ள வைத்து தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள். 

நன்கு கூர்ந்து கவனித்தால் முல்லைப் பெரியாறு விவகாரமும் இதேபோன்றதுதான்.

உழைக்கும் தமிழக, கேரள மக்களின் கடமை:
முல்லைப் பெரியாறு போராட்டத்தில் திசை திரும்பாமலும், இருமாநில (கேரள-தமிழக) மக்களின் நலனையும் கருத்தில் கொண்டும், துரோகம் செய்யும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுக்கு எதிராகவும் போராட் டத்தைத் தீவிரபடுத்துவதே நமது கடமையாக உள்ளது. ஏனெனில் இது தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கேரள மக்களின் பாதுகாப்பு சம்பந்தமான விசயமாக உள்ளதாலும், இரண்டு அரசுகளும் தேசிய வெறியைத் தூண்டும் வேலையை செய்வதாலும் இதை கவனமாகக் கையாள வேண்டி யுள்ளது.
தமிழக மக்களின் நீர் உரிமையை உறுதிசெய்து, முல்லை பெரியாறு ஒப்பந்தத்தை முறையாக செயல் படுத்தவும், அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டும் நாம் மக்கள்       போராட்டங்களை வளர்த்தெடுக்க     வேண்டியுள்ளது.
 -செ.டானிஷ், கோவை



இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014