இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



ஞாயிறு, ஜனவரி 01, 2012

பால், மின், பேருந்துக் கட்டண உயர்வு ஜெயா அரசு மக்களுக்குத் தோண்டிய சவக்குழி - தலையங்கம்

மக்களின் இன்றைய வாழ்க்கைக்கு மிக அத்தியாவசிய பொருட்களாகி விட்ட பால், பேருந்து, மின்சாரம் ஆகியவற்றின் மீது கடும் விலையேற்றத்தை திணித்து ஒட்டுமொத்த மக்களின் வயிற்றில் அடித்தது ஜெயா அரசு. பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பற்றவே இந்த விலைவாசி ஏற்றம் என பல புள்ளிவிவர நாடகங்களை முன் வைத்து இதை நியாயப்படுத்துகின்றது. ஆனால் உண்மை அவ்வாறாக இல்லை. மேலும் இது தமிழகத்தின் ஜெயா அரசின் விலையேற்றம் மட்டுமே அல்ல. மத்திய மன்மோகன் அரசு பெட்ரோல், உணவுப் பொருட்கள், எரிவாயு என மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மீது விலை ஏற்றுவது பொதுத்துறை நிறுவனங்களை தவிர்த்து விடுவதும் என திட்டமிட்டு ஏற்படுத்துகிறது.


பேருந்துக் கட்டணத்தை ஒரு மடங்காகவும், பால் கட்டணத்தை 30 சதவிகிதமாகவும், மின்கட்டணத்தை இரு மடங்காகவும் தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது. இதனால் பாதிக்கப்படுவது அன்றாட கூலித் தொழிலாளர்கள், மாதச் சம்பளம் வாங்கி திட்டமிட்டு வாழ்க்கை நடத்தும் தமிழ்நாட்டின் 90 சதிவிகித மக்கள். இவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். வேண்டுமானால் பால் குடிக்காமல் விட்டு விடலாம், மின்சாரத்தை பயன்படுத்தாமல் விடலாம், பேருந்துகளை தவிர்த்துவிட்டு நடைபயணங்களை மேற்கொள்ளலாம், அதை விட சிறந்ததாக நாட்டின் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் புறக்கணித்துவிட்டு ஒரு சவக்குழி தோண்டித்தருவோம் அதில் படுத்துக் கொள்ளலாம் என அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இன்று நாட்டில் அனைத்துப் பொருட்களும் வால்மார்ட் முதல் அம்பானி, டாடா போன்ற உலக முதலாளிகளும், தரகு முதலாளிகளும் தான் தீர்மானிக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். இதனால் ஏழை மக்களின் வாங்கும் திறனும், நுகரும் திறனும் குறைந்து வருவதை நாம் அறிவோம். அங்கும் இங்கும் ஒட்டிக் கொண்டிருக்கும் சில பொதுத்துறை நிறுவனங்களில் மக்கள் அணுக முடியாத அளவிற்கு விலைகளை உயர்த்தி விட்டு நட்டம் அடைகின்றது என்ற பொய் சொல்லி அரசு இழுத்து மூடுகின்றது. அந்தத் துறைகளில் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் புகுந்து விளையாடுகின்றனர்.

தமிழக ஜெயா அரசு கூட ஒரு புறம் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பாளர்கள் போல் காட்டிக் கொண்டு, காடு பசுமைத் திட்டம் என்ற பெயரில் ஜப்பானுக்கு 600 கோடியும், விசன் 2025 என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் திறந்துவிட்டுக் கொண்டிருக்கின்றது. வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது என்று சொல்லுவார்களே அது போல இவர்கள் விச ஊசியை நம் மீது ஏற்றுகிறார்கள். கோல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழகத்தில் மின்சார உற்பத்தியை கொடுத்து விட்டும், பாலில் ஆவின் பங்கைக் குறைத்து,  தனியார்களுக்கு கொடுத்துவிட்டும், பேருந்துகளை சொகுசுப் பேருந்துகளாக டாடா, மார்க்கோபோலோ போன்றவைகளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றது.

பாலுக்கு ஏங்காத குழந்தையும், கல்விக்கு ஏங்காத மாணவனும், வேலைக்கு ஏங்காத இளைஞனும் உள்ள நாடே உண்மையான சுதந்திர நாடு என்று 85 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன பகத்சிங் வரிகள் இன்று நம் காதுகளில் ஒளித்துக் கொண்டு இருக்கின்றன, இது சுதந்திர நாடா என்று.

- ஆசிரியர் குழு

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014