இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



ஞாயிறு, ஜனவரி 01, 2012

பொய்மையால் பின்னப்படும் பார்ப்பனியம்: 7 ஆம் அறிவு திரைப்படத்தை முன்வைத்து...

'சாளரம்' போன்ற  ஒரு முற்போக்கான இதழில் ஒரு வணிகத்' திரைப்படத்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை நாம் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. இது, இதழை நிறையப் பேரைப் படிக்க வைப்பதற்கான ஒரு 'வணிகத்தனமான' உத்தி என்றுகூட விமர்சிக்கப்படுவதுண்டு. இன்னும் சிலர் இப்படிச் சொல்வதுண்டு: திரைப்படத்தை எதிர்மறையாக விமர்சிப்பது கூட அந்தத் திரைப் படத்திற்கான விளம்பரமாகத்தான் ஆகிவிடுகிறது...

உண்மை அதுவல்ல. ஒரு முற்போக்கான இதழில், சமூக மாற்றத்திற்கான பணியிலிருக்கும் ஒரு இதழில் திரைப்படங்களை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விமர்சிப்பதன் நோக்கம் வேறு.

கலையும், இலக்கியமும் சமூக மாற்றத்தில் ஆற்றும் பங்கை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டி யிருக்கிறது. அவை சமூக மாற்றத்தை வேகப்படுத்தவோ, மந்தப்படுத்தவோ வல்லவை. அதிலும் 'திரைப்படம்' மாதிரியான வலிமை வாய்ந்த கலை வடிவம் ஆற்றும் பங்கை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. நிலவுகிற சமூக அமைப்பை நியாயப்படுத்தவோ அல்லது எதிர்க்கவோ என்ற ஏதாவதொரு வேலையை ஒவ்வொரு திரைப்படமும் செய்கிறது. இப்படி எந்தவொரு 'அரசியல்' வேலையையும் செய்யாத ஒரு திரைப்படமோ, ஒரு கலைப்படைப்போ எங்கும் எப்போதும் இல்லை.
நிலவும் சமத்துவமற்ற, சுதந்திரமற்ற சமூக அமைப்பை நியாயப்படுத்தும் ஒரு கலைப் படைப்பை விமர்சித்து, அதன் அப்பட்டமான சமூக விரோத அரசியலை அம்பலப்படுத்துவதும், இச்சமூக அமைப்பை எதிர்க்கும், விமர்சிக்கும் கலைப் படைப்புகளை உருவாக்குவதும், அரவணைத்து வளர்த்தெடுப்பதும் ஒரு முக்கியமான கடமையாகும்.
திரைப்படம் மாதிரியான ஒரு 'காட்சி ஊடகம்' - வெகு மக்களைச் சந்திக்கும் கலை வடிவம் - மக்களிடம் வெகு சாதாரணமாக ஒரு முற்போக்குக் கருத்தையோ அல்லது பிற்போக்குக் கருத்தையோ ஆழமாக விதைத்துவிடும். ஆகவே, இந்தத் தளத்தில் நாம் மிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது.
*****

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வெளிவந்து, தமிழக இளைஞர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டத் திரைப்படம் 7 ஆம் அறிவு ஆகும். தமிழகத்திலிருந்து சீனா சென்று, குங் ஃபூ கலையையும், மருத்துவத்தையும், "நோக்கு வர்மத்தையும்' கற்றுத் தந்தவர் போதி தர்மர் என்ற வரலாற்றுக் கதைப் பின்னணியுடனும் தொடங்கும் கதை, பின்னர் இன்றைய காலக் கட்டத்திற்கு வருகிறது.
சீனா, இந்தியா மீது தொடுக்கும் உயிரியல் யுத்தத்திற்காக ஒரு சீனாக்காரன் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படுகிறான். 1600 வருடங்களுக்கு முன்பு போதி தர்மர் கற்றுக் கொடுத்ததாகச் சொல்லப்படும் அந்தக் கலைகளைப் பயின்று, தேர்ச்சி பெற்ற அவன் அக்கலைகளை தமிழக மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தி ஒரு கொடூரமான நோயைப் பரப்புகிறான்.
மரபணுவியல் பொறியியல் படிக்கும் சுபா சீனிவாசன் (ஸ்ருதிஹாசன்) என்ற மாணவி போதி தர்மருடைய தலைமுறையில் வரும் அரவிந்தனுடைய (சூர்யா) டி.என்.ஏ. போதி தர்மருடைய டி.என்.ஏ.வுடன் பெரிதும் ஒத்திருப்பதாகவும், அரவிந்தனுடைய டி.என்.ஏ.வைத் தூண்டிவிடுவதன் மூலம் போதி தர்மருடைய திறமைகளை அவனுக்குள் வரச் செய்யமுடியும் என்றும் ஆய்வு செய்கிறாள். இதுபற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை அவள் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் அனுப்புகிறாள். சீன அரசு இவளுடைய ஆராய்ச்சியின் விளைவால், போதி தர்மருடைய திறமைகளைக் கொண்ட ஒருவர் உருவானால், தங்களுடைய உயிரியல் யுத்தத்  திட்டத்திற்கு அது எதிராகப் போய்விடும் எனக் கருதி, இந்தியாவிற்கு வரும் சீனாக்காரனை விட்டு அவளைக் கொலை செய்யக் கட்டளை இடுகிறார்கள்.
திறமை வாய்ந்த சீனாக்காரனை அழிப்பதற்காக சுபா சீனிவாசனும் அவளது நண்பர்களும் இணைந்து போதி தர்மருடைய திறமைகளை அரவிந்தனுக்கு வரச் செய்கிறார்கள்.அரவிந்தன் அந்தச் சீனாக்காரனை அழித்து, அவன் பரப்பிய ஆட்கொல்லி நோயை ஒழிóக்கிறான். இது ஏழாம் அறிவுப் படத்தின் கதைச் சுருக்கம்.
*****

ஏழாம் அறிவுத் திரைப்படம் தமிழக வரலாற்றை (சீன வரலாற்றைக் கூட) 'ஒருவகையில்' விவரிக்கிறது. அறிவியல் பற்றிய 'ஒருவகையான கண்ணோட்டத்தைப்' பேசுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அது ஒரு 'அரசியலை' முன்வைக்கிறது. இந்த வரலாறு, அறிவியல் மற்றும் அரசியல் ஆகிய மூன்றையும் ஒரு மெல்லிய நூல் இணைக்கிறது. இவை எந்த நூலால் கட்டப் பட்டிருக்கின்றன என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றியும், நமது வரலாறும், அறிவியலும்  இருட்டடிப்பு செய்யப்பட்டது பற்றியும், ஏகாதிபத்திய நாடு தொடுக்கும் உயிரியல் யுத்தம் பற்றியும் பேசும் படமாக, முற்போக்கு சாயம் பூசிக் கொள்ளும் இந்தத் திரைப்படத்தின் உண்மையான நிறம் என்ன என்பதைச் சொல்வது கூட இக்கட்டுரையின் நோக்கம்தான்.

I

ஏழாம் அறிவு கூறும் வரலாறு:
தாமதமாக எழுதப்படும் இந்தக் கட்டுரைக்கு முன்னதாக பல்வேறு முற்போக்கு இதழ்களிலும், இணையத்திலும் வெளிவந்துவிட்ட ஏராளமான விமர்சனக் கட்டுரைகள் போதி தர்மரைப் பற்றி சில விவாதங்களை முன்வைத்தன. முதல் விவாதம், போதி தர்மர் ஒரு தமிழரா? இல்லையா? என்பதாகும். பல கட்டுரைகள் போதி தர்மரை ஒரு தமிழர் இல்லை என வாதிடுகின்றன. பல சான்றாதாரங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஒரு சிலர் போதி தர்மர் தமிழராக இருந்தாலும், அவர் வரலாற்றில் மறைக்கப்பட்டதற்குக் காரணம் அது கிடையாது; அவர் ஒரு புத்த மதத் துறவி என்பதனாலேயே மறைக்கப்பட்டார் என்கின்றனர். பெரியாரிய இதழ்கள் போதி தர்மர் ஒரு பார்ப்பனர், அவர் புத்த மதத்திற்குள் புகுந்து பார்ப்பனிய சித்தாந்தத்தை அதனுள் புகுத்தும் வேலையைச் செய்தவர் என்கின்றன. போதி தர்மர் ஒரு பல்லவ இளவரசர் என்று கூறப்படுவதால் இந்த ஆய்வு, முதலில் பல்லவர்கள் தமிழர்களா? என்பதை நோக்கிச் செல்கின்றது. பல்லவர்களைப் பற்றிய ஆய்வுகளும் பலவிதமான கருத்துக்களைக் கூறுகின்றன.
'நாம்' இதை எவ்வாறு 'சரியாக' அணுகுவது? போதி தர்மர் ஒரு தமிழரா? பார்ப்பனரா? என்பதைக் காணும் முன்னர் முதலில் அவர் போதித்த கருத்துக்கள் எப்படிப் பட்டவை?  அவை மக்களுக்குச் சார்பானதா? அன்றிருந்த ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதா? என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஜென் தத்துவம்:
போதி தர்மர் சீனாவில் உருவாக்கிய தத்துவம் அங்கு "சான்' (Chan) எனப்படுகிறது. இதுதான் ஜப்பானில் 'ஜென்' (Zen) என்று வழங்கப்படுகிறது. இந்த வார்த்தை 'த்யானா' என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. புத்தமத வார்த்தையான 'தியானம்' பின்னர் இந்து மதத்திற்குள் உள்வாங்கப்பட்டது. தியானம் என்பதும் 'ஜென்'னில் சொல்லப்படும் 'மெய்யொளி பெறுதல்' (Enlightenment) என்பதும் பகுத்தறிவிற்கும், விஞ்ஞானத்திற்கும் ஒவ்வாத ஆன்மீக சிந்தனையாகும். உயிர் பற்றியும், உடல் பற்றியும் விஞ்ஞான அறிவு வளராத காலத்தில் மனித உடலுக்குள் 'ஆன்மா' குடிகொண்டிருக்கிறது என்ற கற்பனை வலுவாக நிலவியது. அந்த ஆன்மாவானது மனிதன் இறந்ததும் உடலை விட்டு வெளியேறி, பின்னர் வேறொரு உடலை எடுத்துக் கொண்டு 'மறுபிறவி' எடுக்கிறது என்று புத்த மதம் நம்பியது. இவ்வாறு "துன்பம் நிறைந்த இந்த உலகில்" மறுபிறவி எடுக்காமல் தடுக்க வேண்டுமானால் தியானத்தின் மூலம் (தவம் செய்வதன் மூலம்) 'மெய்ப்பொருளை' அடைய வேண்டும் என நம்பப்பட்டது. இதுதான் 'மெய்யொளி பெறுதல்' எனப்படுகிறது.
போதி தர்மர் உருவாக்கிய ஜென் தத்துவம் முழுக்க, முழுக்க 'இத்தகைய' ஆன்மீகத்தைப் பேசியதுதான். இஸ்லாத்தில் உள்ள 'சூஃபி' மார்க்கமும், ஆதி சங்கரரின் 'அத்வைதமும்' ஜென் தத்துவத்தோடு ஒப்பிடத்தக்கவையாகும். புற உலகம் என்று எதுவுமில்லை, புற உலகம் என்பதே 'மாயை'தான் என்று பேசிய தத்துவங்கள் இவை. போதி தர்மருடைய வரிகளில் இதை விளக்க வேண்டுமென்றால்,
"உங்கள் கண்களால் பார்க்கும் வடிவங்களும், உங்கள் காதுகளால் கேட்கும் சத்தங்களும், உங்கள் மூக்கினால் உணரும் வாசனையும், உங்கள் நாக்கினால் சுவைக்கும் சுவைகளும், ஒவ்வொரு இயக்கமும் அல்லது நிலையும் எல்லாம் உங்கள் மனம்தான்"
"எல்லா விசயங்களும் காலியாவே உள்ளன"
"உங்கள் மனம்தான் புத்தர், புத்தர்தான் மனம்"
சமூகத்திலுள்ள அவலங்களுக்கு இந்த உலகத்திற்குள்ளேயே ஒரு தீர்வை முன்வைக்காத இத்தத்துவங்கள் தியானத்தின் மூலம் மெய்யொளியுடன் கலந்துவிடுதல், 'முக்தி அடைதல்', 'சமாதி அடைதல்' என்பது போன்ற போலியான தீர்வுகளை, பொய்த்தோற்றங்களை மக்களிடம் பரப்பின. பழைய பழங்குடி மரபுகளில் இருந்த தெய்வ வழிபாட்டு முறைகளையும் கூட முற்றிலும் நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஒரு அப்பட்டமான "பொய்மை உலகத்தை' முன்வைத்தவைதான் ஜென், சூஃபி, அத்வைதம் போன்ற தத்துவங்கள் ஆகும். இவை வளர்ந்துவந்த நிலப்பிரபுத்துவ சுரண்டல் சமூகத்திற்கு மிகப் பொருத்தமானவையாக இருந்தன.

போதி தர்மரும், பல்லவர்களும்:

போதி தர்மர் காஞ்சிபுரத்தில் பிறந்து, வசித்த ஒரு புத்த மதத் துறவியாவார் (இதுவே பெரும்பான்மையான வரலாற் றறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் ஆய்வு). சீனாவில் புத்த மதத்தை வளர்ப்பதற்காக அங்கு சென்ற வராவார் (ஏழாம் அறிவு திரைப் படத்தில் சொல்லப்படும் காரணங் களுக்காக அல்ல). அவர் பல்லவ மன்னனின் மகன்தானா என்பது சந்தேகத்திற்குரியதே. ஏனெனில், அக்காலக் கட்டங்களில் மிகப்பெரிய மனிதர்கள்   எல்லோருமே           அரச   குமாரர்களாகவே கருதப்படுவார்கள்.

பல்லவர்களைப் பொறுத்த வரை, அவர்களைப் பாரசீகர்கள், தெலுங்கர்கள் என்று பல கருத்துக்கள் உள்ளன. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் அவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியிலிருந்த பழங்குடிகளிட மிருந்து வளர்ந்து வந்தவர்களே என்கின்றன. தமிழ் மன்னர்கள் என்பதாலேயே அவர்கள் சிறந்தவர்கள் என்று கூறி விட முடியுமா? மன்னர்கள் என்று வந்து விட்டாலே அவர்கள் மக்களை ஒடுக்கி ஆண்டவர்கள் தான். உழைக்கும் மக்களை சுரண்டி வாழ்ந்தவர்கள் என்பதுதான் பொருள். அவர்கள் எந்த இனத்தை, எந்தச் சாதியை சேர்ந்தவர்களானாலும் சரி. வெற்றிகரமான வீரதீரமான போர்களை நடத்திய சங்ககால அரசர்களிலிருந்து, சில தமிழினவாதிகளால் தூக்கிப் பிடிக்கப்படும் இராஜராஜசோழன் என அனைத்து அரசர்களும் மக்களை ஒடுக்கி ஆண்டவர்கள்தான்.

பல்லவர்கள் முதலில் பௌத்தம் மற்றும் சமணத்தை ஆதரித்தவர்களாகவும், பின்னர் சைவம், வைணவத்தை ஆதரித்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

பௌத்தமும் பிற சமயங்களும்:

தமிழ் முற்போக்கு சக்திகள் பலரிடம் ஒரு தட்டையான கருத்து இருக்கிறது. 'பௌத்தம் ஒரு சிறந்த மார்க்கம். அது கடவுள் மறுப்புச் சிந்தனையைக் கொண்டிருந்தது. பார்ப்பனியத்தை எதிர்த்தது. சாதியத்தை எதிர்த்தது. இந்திய வரலாறு முழுக்க பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் போராட்டம் நடந்துள்ளது. இதில் பௌத்தம் எப்போதும் முற்போக்குப் பாத்திரத்தையே ஆற்றி யுள்ளது' என்பதுதான் அந்தக் கருத்து.

ஆனால் இவை எல்லாவற்றிலும் இருந்தாலும் கூட வரலாறு இவ்வளவு எளிமையாக இல்லை. பௌத்தம் ஒரு இயக்கமாக தோன்றி ஆளும் அரசை, ஆளும் வர்க்கத்தை எதிர்த்த காலக்கட்டத்தில்தான் அது மக்களுக்கான, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான சமயமாக இருந்தது. பின்னர் அது தோன்றிய  புதிய அரசுகளின் அரசு மதமாக அல்லது அரசர் ஆதரித்த மதமாக ஆன போது, அது பார்ப்பனியத்துடன், சுரண்டல் சமூக அமைப்புடனும் சமரசம் செய்து கொண்டு அதுவே மக்களை ஒடுக்கும் கருவியாக மாறிப்போனது. எல்லா சமயங்களின் வரலாறும் அப்படிப்பட்டதுதான்.

இன்றைய சமகால அரசியல் சூழலில், இந்துத்துவ பயங்கரவாதிகள் வரலாற்றைத் திரித்து பௌத்த சமயம் இந்து மதத்தின் ஒரு பிரிவே என்கின்றனர். உண்மையில் பார்ப்பனிய வேத மதத்தை எதிர்த்து உருவான சமயம் தான் பௌத்தம். அதன் வர்ணாசõரமக் கோட் பாட்டையும், அது ஆதரிக்கும் சமூக ஏற்றத் தாழ்வையும் எதிர்த்து கிளர்ந்தெழுந்ததுதான் பௌத்தம். ஆனால் பின்னர் பௌத்தம் புரட்சித்தன்மையை இழந்து, மக்களை கருத்தியல் ரீதியாக ஒடுக்கும் 'மற்றொரு சமயமாகிப்' போனது. பௌத்தத்தின் பண்பாடு களையும், அடையாளங்களையும் இந்துமதம் உள் வாங்கிக் கொண்டது. பௌத்த கோயில்களை அழித்து இந்துக் கோயில் களாக உருமாறியது. பௌத்தமும் இந்து மதக் கருத்துக்களோடு சமரசம் செய்து கொண்டது.

இது ஒருபுறமிருக்க, ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதிதர்மர் எந்தச் சமயத்தைச் சேர்ந்த துறவி என்பதையே திக்கித் திக்கிக் காட்டியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். இதுதான் மதச்சார்பின்மை என நினைத்து விட்டாரோ? போதிதர்மர் புத்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் ஒரு காட்சியைத் தவிர, அவரது வரலாற்றைக் காட்டும் காட்சிகள் முழுவதிலும் வேறு எதுவும் பதிவு இல்லை. பின்னால், கடைசிக் காட்சியில் கதாநாயகன் 'மதமாற்றத்தை' எதிர்த்துப் பேசும் வசனத்தையும் இணைத்துப் பார்க்கும் போது, இயக்குனர், போதிதர்மரை ஒரு இந்துத் துறவி என திரித்துக்காட்ட முற்படுவதாகவும் தெரிகிறது.

 போதித்தர்மர் மக்களுடன் வாழ்ந்தாரா?

 'ஏழாம் அறிவு போதித்தர்மர்' சீனாவில் ஒரு கிராமத்தில் மக்களுடன் வாழ்கிறார், மக்களுக்கு சேவை செய்கிறார். ஆனால் உண்மை வரலாறு அப்படி இருக்கவில்லை. போதிதர்மர் சீனா சென்றதும் அங்கு இருந்த புத்த சமய அரசன் 'வூ-டி' யை சந்தித்திருக்கிறார். பின்னர் 'ஷாவொலின் டெம்பிள்' என்ற புத்த மடாலயத்தில் வசித்திருக்கிறார். போதிதர்மர் காலம் சுமார் கி.பி 475 முதல் கி.பி 550 ஆகும். ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவில் பௌத்த சமயம் இருந்துவருகிறது. பௌத்தம் ஆட்சிமதமாக, மக்களை ஒடுக்கும் சமயமாக இருந்திருக்கிறது. புத்த சமயத்தில் 28-ஆவது சமய குருவாக கருதப்பட்ட போதிதர்மர் அங்கு அரசு உபச்சாரத்துடன் வாழ்ந்திருக் கிறார். டாய் மலையில் அவர் ஒன்பது ஆண்டுகள் குகைச் சுவற்றைப் பார்த்து அமர்ந்தவாறே தியானம் செய்தார் என்பதுதான் சீனத் தொன்மம் கூறும் கதை.

குங்ஃபூ கலையை போதி தர்மர்தான் சீன மக்களுக்கு அறிமுகப்படுத்தினார், கற்பித்தார் என்று கூறுவது வரலாற்றைத் திரிப்பதாகும். 4000 வருடங்கள் பழைமையான வரலாறு கொண்டது சீனாவின் தற்காப்புக் கலை. எல்லா கலைகளுமே நீண்ட காலமாக பல தலைமுறைகளாக பெருந்திரளான மக்களுடைய பங்கேற்பினால்தான் வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கப்பட்ட இருபெரும் சீனக் கலைகள்தான் குங்ஃபூவும், சீன மல்யுத்தமும். போதி தர்மர் எழுதிய நூல் ஒன்று ("தசைகளின் மாற்றம்") குங்ஃபூவை மேலும் வளர்ப்பதற்கு பயன்பட்டது என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும். இதைத் தவிர வேறொன்றுமில்லை.

போதி தர்மரின் இறப்பு குறித்தும், வாழ்க்கை குறித்தும் சொல்லப்படும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட 'ஊர்ப்பட்ட' கதைகள் உண்டு. வரலாற்று ஆதாரங்கள் மிகக் குறைவே.

II

பழந்தமிழர் அறிவியலும் நவீன அறிவியலும்:

 கதாநாயகி சுபா சீனிவாசனும், கதாநாயகன் அரவிந்தனும் இப்படத்தில் பேசும் 'அறிவியல்' விரிவுரைகளை சற்றுத் தொகுத்துக் கொண்டு அவற்றைப் பார்க்கலாம்.
'நம்முடைய அறிவியல் இன்றைய நவீன அறிவியலை விட 500 ஆண்டுகள் 'அட்வான்சானது'. இன்றைய அறிவியலில் ஏதேதோ கருவிகளை வைத்து 9 கிரகங்கள் என கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் 1000 வருடங்களுக்கு முன்பே நவகிரக வழிபாடு இருந்தது. ஆரியப்பட்டர் 1500 வருடங்களுக்கு முன்பு பூமியின் சுற்றளவை எப்படிச் சொன்னார்? திண்ணையில் உட்கார்ந்து பஞ்சாங்கம் சொல்பவர்கள் எப்படி அமாவாசை, பௌர்ணமியை துல்லியமாகக் கணக்கிடு கிறார்கள்?'

'1600 வருடங்களுக்கு முன்பே போதிதர்மர், டி.என்.ஏ. பற்றி தன்னுடைய புத்தகத்தில் பேசியி ருக்கிறார்'

'உடம்புல மஞ்சள் பூசுறது நோய் எதிர்ப்பு சக்தினு சொல்லிக் கொடுங்க, கிருமி வராமல் இருப்பதற்காகத் தான் சாணம் தெளித்து கோலம் போடுகிறோம், வீட்டு வெளியே வேப்பமரம், முற்றத்தில் துளசிச்செடி என்பதெல்லாம் மருத்துவம். நம்முடைய வரலாற்றில் வாழ்ந்த மாமேதைகளும், 'யோகி'களும் இதைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்'.

இந்த வசனங்கள் போக, மரபணு நினைவு (Genetic Memory), சீனர்களின் காலக்கணிதம், நோக்கு வர்மம், பஞ்சபூதங்களை அடக்குதல் என பல விசயங்களை திரைப்படம் பேசியிருக்கிறது. இவற்றைப் பற்றி விரிவாகப் பேச இக்கட்டுரை போதாது.

பழங்கால வானவியல்:

வானியலில் பல கண்டுபிடிப்புகள் நவீன அறிவியல் தோன்றுவதற்கு முன்பே நிகழ்ந்துவிட்டன. இத்தகைய கண்டுபிடிப்புகள் பழந்தமிழர்களாலும், ஆரியப் பட்டராலும் (காலம் கி.பி 5 ஆம் நூற்றாண்டின் இறுதி) மட்டுமல்ல, உலகின் எல்லாப் பகுதிகளிலும் தோன்றி வளர்ந்த பழங்கால மக்களாலும் கண்டு பிடிக்கப்பட்டு விட்டன. கிரேக்கர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பூமி உருண்டை என்பதைத் தங்களது 'பட்டறிவின்' மூலம் கண்டுபிடித்தார்கள். கடலில் தொடுவானத்தில் கப்பல் வருவது தெரியும் போது முதலில் பாய்மரமும், பிறகு கப்பலின் முகப்பும் தெரிகிறது என்றால், பூமி வளைந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு பூமி உருண்டையானது என்று முடிவு செய்தார்கள். பல மக்கள் குழுவினர் கிழக்கில் சூரியன் உதிக்கும் இடம் மாறுபடுவதை கூர்ந்து கவனித்து ஒரு ஆண்டிற்கு எத்தனை நாட்கள் என்பதை ஏறக்குறைய சரியாகக் கணித்தனர். வானத்தில் நிலையாக மாறாமல் தென்படுபவை எல்லாம் நட்சத்திரங்கள் என்றும், இடத்தை அடிக்கடி மாற்றும், நட்சத்திரங்களைப் போல தோற்றமளிக்கும் சிலவற்றை கோள்கள் என்றும் வகைப்படுத்தினார்கள். இவையெல்லாம் உண்மை.

ஆனால், இந்தப் பழங்கால அறிவியல் என்பதற்கு ஒரு கறாரான எல்லை இருக்கிறது. பழங்கால அறிவியல் என்பது மனிதர்கள் தங்கள் "வெற்றுக்' கண்களாலும், பிற புலன்களாலும் 'மட்டும்' உலகை அறிந்து கொண்டு உருவாக்கியதாகும். தங்களுடைய பட்டறிவாலும், உற்று நோக்குதலாலும், எளிமையான கோட்பாடுகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டவையே. இது அறிவியலின் குழந்தைப் பருவம் ஆகும்.

அறிவியலும் சரி, சமூகமும் சரி மிகப்பெரிய வளர்ச்சியைக் காண வேண்டுமென்றால் அதற்கு முக்கியமான தேவை 'கருவிகள்' ஆகும். இந்தக் கருவிகளும் மனிதக் கண்டுபிடிப்புகள் தான். ஒவ்வொரு கருவி கண்டுபிடிக்கப்பட்டப் பின்பும் அறிவியல் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. பழங்கால அறிவியலில் கண்டுபிடிக்க முடியாதயிருந்த புதிர்களுக்கும், தப்பெண்ணங்களுக்கும் நவீன அறிவியல் முற்றுப்புள்ளி வைத்தது.

பழங்கால அறிவியலில் பல தப்பெண்ணங்கள் இருந்தன. 1500 வருடங்களுக்கு முன்பு நடைமுறை அறிவாலும் கணக்கீடுகளாலும் பூமியின் சுற்றளவை துல்லியத்திற்கு சற்றுக் குறைவாகக் கண்டுபிடித்த அதே ஆரியப்பட்டர்தான், 5 கோள்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் பூமியைக் சுற்றி வருகின்றன என்று 'புவிமையக் கோட்பாட்டை'யும் முன்வைத்தார். இந்தக் 'கண்டுப்பிடிப்பைக்' கொண்டு அவர் ஒரு பிரபஞ்ச சித்திரத்தையும் வரைந்தார். அவரது சித்திரம் அவருக்கு 800 வருடங்களுக்கு முன்பு கிரேக்கத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் வரைந்த சித்திரத்தைப் போல அப்படியே இருந்தது. இவர்கள் இருவருடைய கோட்பாடுகளும் தவறு என்றும், பூமியைச் சந்திரன் மட்டும்தான் சுற்றிவருகிறது, பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றும் பின்னர் நிரூபிக்கப்பட்டது.(இன்னொரு விசயம், ஆரியப்பட்டா தமிழர் கிடையாது. அவரது பிறப்பிடம் அநேகமாக கேரளாவாக இருக்கலாம் என சமீப ஆய்வுகள் கருதுகின்றன.)

பழங்கால தமிழர்கள் 9 கிரகங்களைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்பது அண்டப்புளுகு ஆகும். உண்மையில் 'நவகிரகம்' என்றக் கோட்பாடு தமிழர் களுடையதல்ல. நாம் ஏற்கனவே கண்டதுபோல பழங்கால மனிதன் வெற்றுக் கண்களால் பார்த்து கண்டுபிடிக்க முடிந்தவற்றை ஏறக்குறைய சரியாகவே கண்டறிந்தான். அவ்வாறுதான் இரவு வானத்தில் யாரும் பார்க்க முடிந்த புதன், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களை அவற்றின் இயக்கத்தை உற்றுநோக்கி, கணக்கிட்டுக் கண்டறிந்தான். இந்த உண்மையான 5 கோள்களுடன், சூரியனையும் (ஞாயிறு), சந்திரனையும் (திங்கள்) கோள்கள் என்ற கணக்கில் சேர்த்துக் கொண்டான். (இவையிரண்டும் கோள்களல்ல, சூரியன் ஒரு நட்சத்திரம், சந்திரன் ஒரு துணைக்கோள்). இந்த 7 'கோள்களோடு' இராகு, கேது என்ற இரண்டு கோள்களை இணைத்தான். சூரிய கிரகணத்தின் போது சூரியனை மறைக்கும் சந்திரனையும், சந்திர கிரகணத்தின் போது சந்திரனை மறைக்கும் பூமியின் நிழலையும் தனித்தனி கோள்கள் என நினைத்தான். அவைதான் இராகுவும், கேதுவும் (ஜோதிடம் இவை இரண்டையும் பாம்புகள் என்றும் கூட கூறுகின்றன). மற்றபடி வெற்றுக்கண்களால் வானில் பார்க்க முடியாத யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை தொலை நோக்கி என்ற 'கருவியால்' தான் கண்டுபிடிக்கப்பட்டன. (கோள் என்ற அளவீட்டிற்குள் வராததால் புளூட்டோவை கோள் கிடையாது என்று இன்றைய அறிவியல் வரையறுத்துள்ளது)

இதுதான் பழங்கால அறிவியலின் எல்லை. அவற்றின் கண்டுபிடிப்புகள் வரையறைக்குட் பட்டவையே. அறிவியலில் புரட்சிகர மாற்றத்தை உண்டாக்கியவை 'கருவிகளே' எனலாம்.



நாம் பழங்காலத் தமிழர்களுடைய அல்லது எந்த இனத்தைச் சேர்ந்த மக்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளையும் குறைத்து மதிப்பிடவில்லை. அப்படி அவை குறைத்து மதிப்பிடத்தக்கவையும் அல்ல. ஆனால் அதே நேரம் அவற்றை மிகை மதிப்பீடும் செய்யத் தேவையில்லை. அது நம்மிடம் அறிவியல் மனப்பான்மைக்கு மாறாக, இனவாதத்தையே விதைக்கும்.

நவீன அறிவியல் மீது முருகதாஸிற்கு ஏனிந்த காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. பழங்கால அறிவியலிலிருந்து வளர்ச்சி பெற்று வந்ததுதானே இந்த நவீன அறிவியல்? அது என்ன வேற்று கிரக மனிதர்கள் கொண்டு வந்ததா? சமூக வளர்ச்சி வேகமாக நடந்த ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு அறிவியல் வளர்ந்ததனால், அதில் தமிழர்களுக்கும், இந்தியாவிலுள்ள பிற தேசிய இன மக்களுக்கும், ஆப்ரிக்க, ஆசிய, தென்னமெரிக்க மக்களுக்கும் பங்கில்லையா?

உண்மையில் இங்குப் பிரச்சனை வேறு. இத்திரைப் படத்தின் இயக்குனரைப் போல நிறைய பேர் சமயத்தையும் அறிவியலையும் போட்டுக் குழப்பி ஒரு 'மசாலா கலவையை' மக்களுக்குக் கொடுக்கிறார்கள். இதற்கு 'தமிழர் அறிவியல்' என்று இனச்சாயம் பூசிக் கொள்கிறார்கள். இதைவிட, "மதங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைய உள்ளன", "மதங்கள் அறிவியலுக்குப் புறம்பானது இல்லை" என்று ஒரு பிரிவினரும் சொல்கிறார்கள். 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்றும், 'இஸ்லாம் பண்பாட்டில் உள்ள அறிவியல்' என்று பேசுவோர் பலர்.

சமயமும், அறிவியலும்:

சமயமும், அறிவியலும் வரலாறு நெடுகக் காணமுடிந்த இருபெரும் எதிரெதிர் சிந்தனைப் போக்காகும். கறாராக அறிவியலின் பக்கம் நின்ற சிந்தனையாளர்களையும், கறாராக சமயத்தின் பக்கம் நின்ற சிந்தனையாளர்களையும் வரலாற்றின் துவக்கத்திலிருந்து காண முடியும். ஆனால் இரண்டு பக்கமும் கால் வைத்திருந்தவர்களின் வரலாறும் கூட ஒரு தனி வரலாறுதான். ஆனால் நவீன அறிவியல் வளர வளர அறிவியலாளர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளைத் தொடர்ந்து தூக்கி எறிந்தார்கள். சார்லஸ் டார்வின் ஒரு கிறித்துவப் பாதிரியாராக இருந்து அறிவியலாளராக மாறினார். இப்போதிருக்கும் மிகப்பெரிய இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் முந்தைய இயற்பியலாளர்கள் போலல்லாமல் 'கடவுளின் இருப்பை' முற்றிலும் மறுக்கிறார். திரைப்பட வசனத்தில் சொல்லப்படும் "யோகி"களும், போதிதர்மர் போன்றோரும், ஒன்று, சமயத்தின் பக்கம் கால் ஊன்றியவர்கள் அல்லது இருபக்கமும் கால் பதித்தவர்கள்தான்.

சமயத்தையும், அறிவியலையும் ஒரு விசயத்தில் எளிமையாக வேறுபடுத்தலாம். 'மனிதன் தனது தொடர்ச்சியான உழைப்பாலும், உற்பத்தியில் ஈடுபடுவதாலும் புதிய புதிய விசயங்களைக் கண்டுபிடிக்கிறான். கண்டுபிடிப்புகள் பெருகப், பெருக அடுத்து கண்டுபிடிக்க வேண்டியவற்றின் பட்டியலும் நீள்கிறது. ஒரு குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்படாதவற்றிற்கு அறிவியல், "இன்னும் கண்டறியப்படாதது" என்று பெயர் வைக்கிறது. ஆனால் சமயம் அதற்குக் "கடவுள்" என்று பெயர் வைக்கிறது'

வானியல் என்ற அறிவியலை சமயத் தப்பெண்ணங் களுடன் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் சோதிடம், பஞ்சாங்கம்  எல்லாம். கோள்களின் நகர்வு என்பது மனித சமூக வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியது என்ற மூடத்தனத்தின் தொகுப்புதான் இவை. ஆனால் இவற்றைத் திரைப்படம் 'அறிவியல்' என்கிறது.

மரபணு நினைவு (Genetic Memory) என்பது உண்மையா?

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என அறிவியல் பேசும் இத்திரைப்படம் 'அறிவியல்' என்ற பெயரிலேயே ஒரு உண்மைக்குப் புறம்பான கோட்பாட்டை நிறைய தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நுண்ணுயிரிகள், தாவரங்கள், சிறு உயிரினங்கள், விலங்குகள், மனிதன் என்று பல்வேறுபட்ட உயிரினங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று என பரிணாம வளர்ச்சியில்தான் உருவாயின. இந்த வளர்ச்சிக்கு 'இயற்கைத் தேர்வு' தான் காரணம் என்று சார்லஸ் டார்வின் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். பல்வேறுபட்ட உயிரினங்களில் உயிர்வாழத் தகுதியானது எது என்பதை இயற்கை, தேர்வு செய்கிறது என்பது சரிதான். ஆனால் அந்த பல்வேறுபட்ட உயிரினங்களைப் படைப்பது எது என்ற நிலுவை யிலிருந்த கேள்விகளுக்கு க்ரெகோர் ஜோகன் மெண்டலின் மரபணுவியல் (Genetics) பற்றிய ஆய்வுகள் பதில் தந்தன. உயிரினங்களில் கலப்பு இனப் பெருக்கத்தின் வாயிலாக நடக்கும் மரபணு மாற்றம்தான் பல்வேறுபட்ட உயிரினங்களைப் படைக்கிறது. அதில் இயற்கைத் தேர்வு செய்கிறது என இருவருடைய கண்டுபிடிப்புகளையும் இணைத்து நவீன பரிமாண வளர்ச்சி பற்றிய கூட்டிணைக் கருத்து (Modern Evolutionary Synthesis) உருவாக்கப்பட்டது. இதுதான் பரிணாம வளர்ச்சி பற்றிய வளர்ச்சியடைந்த இன்றைய அறிவியலாகும்.

ஆனால் சார்லஸ் டார்வினுக்கு முந்தைய லாமார்க் என்ற கோட்பாட்டாளர் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு கோட்பாட்டை வைத்திருந்தார். இது "லாமார்க்கிசம்' எனப்படுகிறது. ஒரு ஒட்டகச் சிவிங்கி தன் வாழ்நாளில் கழுத்தை உயர்த்தி, உயர்த்தி இலையைச் சாப்பிட முயன்றதன் விளைவாகத்தான் அதன் கழுத்து அடுத்தடுத்த தலைமுறையில் வளர்ச்சி பெற்றது என்றார் அவர். அதாவது ஒரு உயிரினத்தின் வாழ்நாளில் அது செய்யும் முயற்சி, ஒரு உறுப்பை அது அதிகமாகப் பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்தாமல் இருத்தல் ஆகியவை அவ்வுயிரினத்தின் நினைவில் பதிந்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என்று அவர் கூறினார். ஆனால் பின்னால் வந்த உயிரியலாளர்கள் அதைக் கோட்பாட்டின் மூலமும், நடைமுறை ஆய்விலும் பொய்யென்று நிரூபித்தனர். வைஸ்மேன் என்ற ஜெர்மன் உயிரியலாளர் 1,500 எலிகளுக்கு அதன் 20 தலைமுறைகள் வரை தொடர்ந்து வால்களைத் துண்டித்து ஆய்வு மேற்கொண்டார். ஆனால், 20 தலைமுறைகளுக்குப் பின்னர் பிறக்கும் எந்தவொரு எலியின் வாலும் அது 'பயன்படுத்தாமல் விட்டதால்' இல்லாமல் போகவில்லை. மேலும் புதிய தலைமுறை எலிகளின் வாலில் எந்தவொரு சிறு மாற்றமும் நடக்கவில்லை.

 
ஆகஸ்ட் வைஸ்மேன்

 இந்த தோற்கடிக்கப்பட்ட, தவறென நிரூபிக்கப் பட்ட லாமார்க்கிய கோட்பாட்டைத் தழுவியே 'மரபணு நினைவு' என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அதாவது ஒரு உயிரினம் தன் வாழ்நாளில் செய்யும் முயற்சிகள் அதன் நினைவில் பதிந்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது எனச் சொல்வதுதான் 'மரபணு நினைவு' கோட்பாடு ஆகும். ஒரு மனிதனுடைய நினைவோ, திறமையோ, கருத்துக்களோ உடனடி அடுத்த தலைமுறைக்குக் கூட கடத்தப்படுவதில்லை. ஆனால் போதி தர்மருடைய திறமைகளை அவருடைய தலைமுறையில் 1600 வருடங்களுக்குப் பிறகு வரும் அரவிந்தனுக்கு வரவைக்க முடியும் என்று திரைப்படம் கூறுகிறது. இந்த மரபணு நினைவுக் கோட்பாடு ஒரு அறிவியலே அல்ல என்பது பெரும்பான்மையான உயிரியல் மற்றும் உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும்.

'ஏழாம் அறிவு' என்பது என்ன?

ஏழாம் அறிவு என்று படத்திற்கு பெயர் வைத்ததைத் தவிர்த்து எந்த இடத்திலும் அது பற்றி பேசப்படவில்லை. ஆனால், படத்தின் கதைக்குள் பூடகமாக ஒளிந்திருக்கும் படத்தின் சாராம்சம் ஏழாம் அறிவு பற்றியதுதான். ஐம்புலன்களால் உணரப்படும் ஐந்து அறிவுகளோடு காரணம் அறியும் அறிவு அல்லது பகுத்தறிவு என அறியப்படும் (மனிதனுக்கு மட்டுமே உள்ள) ஆறாம் அறிவையும் சேர்த்து அறிவியல் ஆறு அறிவுகள் என்று சொல்கிறது. பிரபஞ்சத்தைப் பற்றி மனிதன் இந்த ஆறு அறிவுகளைக் கொண்டு அறிந்து கொள்கிறான்.

மனதின் வழியாகவே பேசிக் கொள்ளுதல் (Telepathy), எதிர்காலத்தை அறிதல் மற்றும் இறந்த காலத்தை அறிதல் (Precognition and Retrocognition), தூரத்தில் வேறொடு இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியை அறிதல் (Clairvoyance) உள்ளிட்ட ஆறு அறிவுகளால் சாத்தியமில்லாத அறிதல் முறைகள் "மிகை புலனுணர்ச்சிகள்' (Extra Sensory Perception - ESP) எனப்படுகின்றன. இந்த மிகை அறிவை "ஏழாம் அறிவு" என்று சொல்வார்கள்.

உலகில் பலருக்கு இந்த ஏழாம் அறிவு இருந்ததாகவும், இப்போதும் சிலருக்கு இருப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் அறிவியல் இதைப் பற்றிய கருத்துகளையும் 'போலி அறிவியல்' என்றுதான் வகைப்படுத்துகிறது. ஏனெனில் இது பற்றிய எந்த ஆய்வும், அறிவியல் முறைப்படியும், முறையான ஆதாரங்களுடனும் செய்யப்படவில்லை. கடவுள் நம்பிக்கை போன்ற கருத்துக்களிலிருந்து வெளிவந்த சிலர் கூட இதுபோன்ற விசயங்களை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஞானிகள், யோகிகள் எல்லாம் ஏழாம் அறிவு பெற்றிருந்ததாக ஒரு மூட நம்பிக்கை உள்ளது. இது தான் இந்தக் கதையின் சாராம்சமாக உள்ளது. நோக்கு வர்மம், பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்துதல், காலக்கணிதம் போன்றவை எல்லாம் இது போன்றவை தான். இயற்கையை வெல்ல முடியாத பழங்குடி மக்கள் உருவாக்கிய மந்திரங்கள், சடங்குகள், கற்பனை களின் 21-ஆம் நூற்றாண்டின் மிச்ச சொச்சம் தான் இந்த ஏழாம் அறிவு என்ற கருத்து.

III

ஏழாம் அறிவு திரைப்படம் கூறும் அரசியல் என்ன?

ஒரு மனிதனுடைய திறமைகள் என்பவை பரம்பரையாக பிறப்பிலேயே வருகின்றன என்பதுதான் சாதியைப் பாதுகாக்கும் வர்ணாசிரமக் கோட்பாடு ஆகும். பிரம்மனின் தலையிலிருந்து பிறந்த பார்ப்பனர்களே, அவர்களுடைய வாரிசுகளே அறிவுத் திறன் நிரம்பியவர்கள் என்றும், பாதத்திலிருந்த பிறந்த சூத்திரர்கள் அடிமைத் தொழில்களை மட்டுமே செய்யும் திறன் நிரம்பியவர்கள் என்பதுதான் இந்து மதம் கூறும் பார்ப்பனிய சித்தாந்தம். இதைத்தான் 'மரபணு நினைவு' என்ற போலி அறிவியலின் வாயிலாக ஏழாம் அறிவுத் திரைப்படம் விவரிக்கிறது.

ஒருவருடைய திறமைகள் என்பவை அவர் எச்சூழ்நிலையில் வாழ்கிறார் என்பதைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகின்றன. காலங்காலமாக வாய்ப்பளிக்கப்பட்ட நல்ல சமூகச் சூழலில் வாழ்ந்த பிராமணர்களைவிட, பிற்படுத்தப்பட்ட மக்களும், அவர்களை விட துப்புரவாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும் இந்த சாதிய சமூகத்தில் ஒப்பீட்டளவில் திறமைகள் குறைவாகப் பெற்றவர்களாக உள்ளனர். எனவேதான் ஒருவருடைய 'திறமை' என்பதைவிட, ஒருவருடைய 'சமூக நிலையிலிருந்து' தான் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற 'இடஒதுக்கீடு' போன்ற சமூக நீதிக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. மிகப்பெரிய போராட்டங்களின் ஊடாக அது நடைமுறையில் உள்ளது.

இந்தத் திரைப்படத்தில் ஒரு இடத்தில் கதாநாயகி (அநேகமாக பிராமணராகவோ அல்லது அதற்கடுத்த உயர்தட்டு சாதியைச் சேர்ந்தவராகவோ இவர் சித்தரிக்கப் படுகிறார்) பேசுகிறார், "ரிசர்வேசன் (இடஒதுக்கீடு), ரெக்கமெண்டேசன், கரப்சன் இவைங்களாலதான் நம்ம நாட்டுல திறமையே வளராமப் போச்சு", "திறமை உள்ளவனெல்லாம் வெளிநாட்டுக்கு ஓடிப் போயிடுறான்". அம்பேத்கரும், பெரியாரும் போராடி வெற்றிபெற்று வாங்கித் தந்த இட ஒதுக்கீட்டில் படித்து அறிவு பெற்று வந்த, இந்த முருகதாஸ் போன்ற அயோக்கியர்கள் இன்று அதற்கெதி ராகவே பேசுகிறார்கள்.

உண்மையில், பெருந்திரளான உழைக்கும் மக்களாய் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும் வரைதான் இங்கு திறமைகள் வளர முடியாது. திறமை என்பது முதன்மையாக தனிநபர் சார்ந்த விசயம் அல்ல, முதன்மையாக அது அந்த சமூகம் எப்படி சமத்துவமும், சுதந்திரமும், ஜனநாயகமும் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்தது. இது சில மெத்தப்படித்த மேதாவிகளுக்கு என்றுமே புரியப் போவதில்லை.

வீரத்தையும், நாகரிகத்தையும் உலகிற்கு பரப்பிய பழங்காலத் தமிழர்கள்தான் உண்மையான தமிழர்கள் என்று கூறும் வரலாற்று விளக்கத்திலும் பார்ப்பனியம் தான் ஒளிந்திருக்கிறது. கல்வியைப் பரப்பிய சமணர்களைக் கொலை செய்த சைவர்களையும், முற்போக்கான கருத்துக்களைப் பேசிய பௌத்த, சமண சமயங்களை அழித்த தமிழ் அரசர்களையும், சாதியைக் கட்டிக்காத்த பிற்காலச் சோழர்களையும், அரசு என்ற அடக்குமுறைக் கருவியை உருவாக்கி, பலப்படுத்திய சங்க கால அரசர்களையும்தான் இவர்கள் உண்மையான தமிழர்கள் - வீரத்தையும் நாகரிகத்தையும் உலகிற்குப் பரப்பியவர்கள் - என்கிறார்கள்.

கலைகளை, இலக்கியங்களைக் கற்க உரிமைபெற்ற ஒரே வர்ணமான பார்ப்பனர்கள்தான் உண்மையான தமிழர்களா...? பழந்தமிழர்களின் பெருமையைப் பேசும் போது அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சமூக அவலம் மறைந்து போகிறது. ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்ற வகையில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழ் சமூகத்தின் வரலாற்றிலும், அறிவியலிலும் உள்ள முற்போக்கான அம்சங்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், ஆணாதிக்கமும், சாதியமும், வர்க்க ஒடுக்குமுறையும் நிறைந்த தமிழ் சமூக வரலாற்றை பார்த்து பெருமிதம் கொள்ள இந்த மண்ணின் உழைக்கும் மக்களால் முடியாது.
"மதமாற்றம், இனமாற்றம், மொழிமாற்றம் ஆகியவற்றால் நமது அடையாளங்களை இழந்து விட்டோம்" என்ற வசனத்தின் மூலம் இந்து பாசிச வெறியைக் கக்கியிருக்கிறது இந்தப் படம். உண்மையில் நமது அடையாளங்கள் எல்லாம் மதம் சம்மந்தப் பட்டதுமல்ல. அப்படிப்பட்ட பார்ப்பனிய, சாதிய அடையாளங்களை நாம் இழப்பது சமூகத்திற்கு மிகவும் பயன்படக்கூடியதுதான்.

'ஃபேஷனாகி' வரும் உயிரியல் யுத்த கதைகள்:

ஏகாதிபத்தியங்கள் இந்தியா மீது தொடுக்கும் பொருளாதார அடக்குமுறைகளையும், இந்திய ஆட்சியாளர்களின் அடிவருடித் தனத்தையும் பேசத் துப்பற்ற தமிழ் இயக்குநர்கள், எஸ்.பி.ஜனநாதன் 'ஈ' திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய 'உயிரியல் யுத்தம்' என்ற கருத்தை மட்டும், கதை சொல்வதற்கு நன்றாக இருக்கிறது என தொடர்ச்சியாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான பரிசோதனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது பயன்படுத்துகிறார்கள் என்ற உண்மையையும், மருந்து விற்பனைக்காக நோய்களைப் பரப்புதல் என்ற உண்மை யையும் தவறாகத் தொடர்புப் படுத்தி 'நோயைப் பரப்பி ஒரு நாட்டைக் கட்டுப்படுத்துதல்' என்றொரு விசயம் இருப்பதாகக் கதையளக்கிறார் ஏழாம் அறிவு இயக்குநர். 'ஒரு நாட்டை கடனாளி ஆக்கிக் கட்டுப்படுத்துதல்', 'ஆட்சியாளர்களுக்கு இலஞ்சம் கொடுத்துக் கட்டுப்படுத்துதல்', 'ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்களின் வாயிலாக கட்டுப்படுத்துதல்' போன்ற பல்வேறு சதி வேலைகளை ஏகாதிபத்தியங்கள் செய்து இந்தியா போன்ற நாடுகளை அடிமை நாடாக்கி வைத்திருக்கின்றன. இதுதான் யதார்த்தம். ஆனால், இது மசாலாப் பட கதைக்கு பொருத்தமானதாக இருக்காதே! சில நாடுகளில் விபச்சாரப் பெண்களைக் கூட்டிக் கொடுத்துகூட, ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடியாட்கள் நாடுகளை அடிமைப்படுத்துகிறார்கள். வேண்டு மென்றால், இந்தக் கதையை இத்தகைய இயக்குநர் களுக்கு முன்மொழியலாம். இதை வைத்த சில 'குத்துப் பாடல்களுடன்' ஒரு திரைக்கதையை அவர்கள் தயாரிக்க முடியும்.
*****
ஏழாம் அறிவு திரைப்படம் சொல்லும் 'போலி தமிழ் தேசியப் பெருமை' வரலாறும், பொய்யான அறிவியலும், பார்ப்பனிய அரசியலும் எந்த நூலால் கட்டப்பட்டிருக்கிறது என்பதை இப்போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அது பூணூல்தான்.

வியாபார இலாபத்திற்காக 'கொசுராக' கொஞ்சம் ஈழத் தமிழர் பிரச்சனையைத் தொட்டு, தமிழர் பெருமை பேசி, முற்போக்குச் சாயம் பூசியிருக்கும் இப்படத்தின் உண்மையான நிறம் "காவி' என்பதும் தெளிவாகிறது.


-மனுவேல்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014