இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



செவ்வாய், நவம்பர் 08, 2011

மனித உயிர் வைத்து சூதாடும் அணு உலை விற்பனை நிறுவனங்கள் - கூடங்குளம் அணு உலையின் பின்னணி


மின்வெட்டு... கடந்த சில ஆண்டுகளாக மின்சார வெட்டு எல்லா இடங்களிலும் நீக்கமற இருந்து வருகிறது. இரண்டு மணி நேரம் முதல் எட்டு மணி நேரத்திற்கு மேலாக நடப்பில் உள்ளது. அலுவலகப் பணியாளர்கள் பணி முழுவதும் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கின்றனர். உற்பத்தி செய்ய இயலாமல் சிறு உற்பத்தியாளர்களும், வியாபாரம் செய்ய இயலாமல் சிறு வணிகர்களும் பாதிக்கப்படுகின்றனர். படிக்க முடியாமல் மாணவர்கள் அல்லல்படுகின்றனர் இப்படி அனைத்து தரப்பட்ட மக்களும் மின்வெட்டால் துன்பப்பட்டு வருகின்றனர்.


      நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்தடையை நீக்கி தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதி சொல்லி ஆட்சிக்கு வந்த செயலலிதா ஆட்சியிலும் மின்வெட்டே தொடர்கிறது. பல பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களும் சிறப்புப் பொருளாதார மன்டலம் என்ற பெயரில் மின்சாரத்தில் பெரும் பங்கை இலவசமாவோ அல்லது குறைந்த விலையிலோ பயன்படுத்திக் கொண்டு மிச்ச சொச்சத்தையே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அரசு வழங்குகிறது. அதற்கான கட்டணத்தை கறாராக வசூலித்துக்கொள்கிறது. தேர்தலில் செயலலிதா கொடுத்த வாக்குறுதியான மின்வெட்டில்லா தமிழகம் என்பது இப்பொழுது கடலில் கரைத்த பெருங்காயம் போலாகிவிட்டது. இது போதாதென்று விஷன் 2025 என்ற திட்டத்தின் மூலம் பல பன்னாட்டு பாகாசுர தனியார் நிறுவனங்களை தமிழகத்தில் தொழிற்சாலை நிறுவ அனுமதியளித்து தமிழகத்தின் மின்பற்றாக்குறையை போக்கப் போகிறார்களாம்.

      தொழிற்சாலைக்கும், மக்களுக்கும் தேவையான மின்சாரத் தேவையை நிறைவு செய்ய சிக்கனமானதும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாததுமான ஒரே வழி அணு மின்சாரம் தான் என்ற மிகப் பெரிய பொய்யை அவிழ்த்து விடுகின்றனர். இந்திய ஆட்சியாளர்கள் மேலும் இந்த நாசகர அணுஉலைகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வாங்க இந்திய உழைக்கும் மக்களின் இரத்தத்தினை உறிஞ்சி சேர்த்த பல லட்சம் கோடி வரிப்பணத்தினை கொண்டு முடிவு செய்துள்ளனர்.

      உலகம் முழுவதும் அணு விபத்துகளிலிருந்தும், சமீபத்தில் சப்பானின் புகுசிமா அணுவிபத்தினால் பல்லாயிரகணக்கானோர் உயிரிழந்த பின்பும், ஆபத்தான கதிர்வீச்சினால் பல லட்சம் பேர் கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களிருந்து வெளியேற்றப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டும், மிருகங்கள், தாவரங்கள் அழிக்கப்பட்டு, இயற்கை சுற்றுச்சூழலை நிரந்தரமாக அழித்த பின்னரும் இவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் அணு மின் திட்டத்தை தொடர்வது தவிர வேறுவழியில்லை என்று இந்திய அணுசக்தி கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைவர், மேலாளர் எஸ்.கே.ஜெயின் கூறியுள்ளார். கட்டப்பட்டு வரும் பல அணு உலைகள் தவிர 2032இல் இந்தியா மேலும் 6 இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் அணுஉலை இறக்குமதி செய்யப்படும் என அவரே அறிவித்து உள்ளார். அவை மகாராட்டிரா மாநிலத்தில் ஜெய்தாபூரிலும், ஒடிசா கேன்பூரில் பிரெஞ்சு அணு உலைகளும், ஆந்திர பிரதேசத்தின் கோவ்வடாவிலும், குஜராத்தின் செயாமித்விரிடியில் அமெரிக்க அணு உலைகளும், மேற்கு வங்காளம் அரிப்பூரில் இரஷ்ய அணு உலைகளும் கட்டமைக்கப்பட உள்ளது.  கார்ப்பரேட் நிறுவனங்களால் உருவாக்கப்ட்ட அணுஉலைகளில், வடிவமைப்பு குறைபாடுகளும், தொடர்ந்து விபத்துக்குள்ளாவதால் உலகின் பல நாடுகள் அவற்றை வாங்கவில்லை. இதனால் 30-40 ஆண்டுகளாக யாரும் வாங்காத, துருபிடித்து போன அணுஉலையை தங்கள் நாட்டுத் தலைவர்களை கைகளுக்குள் போட்டுக்கொண்டு வளரும் நாடுகளின் தலைகளின் மீது கட்டிவருகின்றனர். பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தினர் தரும் கமிசன் பணத்திற்கு ஆசைப் பட்டுக்கொண்டு இந்திய ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும்,  அணு விஞ்ஞானிகளும் இந்தியத் துணை கண்டத்தையே சுடுகாடாக்க துணிந்துவிட்டனர்.

      இத்தருணத்தில் இந்தியத் துணைகண்டத்தில் உழைக்கும் மக்கள் பல இடங்களில் திரண்டு அணு உலைக்கு எதிராக போராடிவருகின்றனர். அப்போராட்டங்களின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்துக் கொண்டிருப்பது கூடங்குளத்து மக்களின் சமரசமற்ற, உறுதியுடன் நடைபெற்று வரும் போராட்டமே ஆகும். அங்கு வாழ் பொதுமக்கள் சாதி, மதம் கடந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தும், மீனவர்கள் கடலுக்குள் செல்லாமலும், விவசாயிகள் வயல் வேலைகளுக்கு செல்லாமலும் அனைவரும் இணைந்து ஆயிரக்கணக்கில் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்தும், தொடர் சாலை மறியல் செய்வதும் போராடி வருகின்றனர். கூடங்குளம் அணுஉலை இயங்கி அதில் ஓர் விபத்து ஏற்பட்டால்  அது தென் தமிழகம், தென் கேரளம் மற்றும் ஈழம் அடங்கிய இலங்கை தீவிலும் உள்ள மனிதன் உட்பட அனைத்து உயிர்களையும் அழித்து எந்த உயிர்களும் உயிர் வாழ தகுதியற்று போகும். அதேபோல் கல்பாக்கதில் அணுவிபத்தொன்று நிகழ்ந்தால் வடதமிழ்நாடு, தென் ஆந்திரா மற்றும் தென் கர்நாடகாவிலும் மிகப்பெரும் அழிவுகள் ஏற்படும். சப்பானின் புகுசிமா விபத்தினால் வெளிவந்த கதிர்வீச்சானது 8,200 கீலோமீட்டர் கடந்து சென்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பாதித்துள்ளது. அம்மாநில அரசு அங்கு குழாய் நீரில் கதிர்வீச்சு காணப்படுவதை கண்டறிந்து, தன் மக்களை யாரும் குழாய் தண்ணீரை பருகவேண்டாம் என எச்சரித்து அண்டை மாநிலங்களிருந்து குடிநீரை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கி வருகிறது. நம் தமிழ்நாடோ புகுசிமாவிலிருந்து 6600 கிலோமீட்டர்களே தொலைவுள்ள நாம் பாதிக்கப்பட்டிருப்பதை இங்குள்ள அரசுகள் இன்றும் மறைத்ததோடு அல்லாமல், அக்கதிர்வீச்சால் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய வாய்ப்பில்லை என வாய்கூசாமல் பொய் சொல்லியே வருகின்றனர். இந்தியாவில் மக்கள் தொகை அதிகமான காரணத்தினால் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அணுவிபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு சாதாரணமாக கோடிகளைத் தாண்டும். இதன் காரணமாகத்தான் கூடங்குளம் போராட்டத்தின் ஒற்றை நோக்கம் கூடங்குளம் அணுஉலையை நிரந்திரமாக இழுத்து மூடுவதே ஆகும். இதற்கு இந்திய ஆட்சியாளர்களும், அணுவிஞ்ஞானிகள் என்ற பெயரில் உலவிக்கொண்டிருக்கின்ற ஏகாதிபத்திய அடிமைகளும் அணுஉலை பாதுப்பானது என ஒற்றை பதிலையே தேய்ந்துபோன ரிக்கார்டு போல திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றனரே தவிர அணுஉலையினை எதிர்ப்போர் கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல்பூர்மான பதில் கூற மறுக்கின்றனர். மேலும் இந்தியாவில் மின் பற்றாக்குறையை போக்க அணுமின்சாரத்தை தவிர வேறு வழியில்லை என சாமியாடுகின்றனர். இது சுத்தப்பொய் என மக்கள் நலனை விரும்பும் அணு விஞ்ஞானிகளும், அறிஞர்களும் உறுதிபட அடித்து கூறுகின்றனர். நம் நாட்டில் உள்ள 20 அணு உலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 19 அணுஉலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் 3 சதவீதமே. அதே நேரத்தில் இந்த 3 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்;ய ஆகும் செலவு மீதம் இருக்கின்ற 97 சதவீத மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் செலவைவிட பல நூறுமடங்கு அதிகமென இத்துறையின் வல்லுனர் தீரேந்திர சர;மா சான்றுகளுடன் மெய்ப்பிக்கிறார். இன்று புது அணுஉலைகள் கட்டுவதன் மூலம் மேலும் கூடுதலாக 3 அல்லது 4 சதவீத மின்சாரத்தைத்தான் உற்பத்தி செய்யமுடியும். அதுவும் ஒரு அணுஉலை கட்ட குறைந்தது ஆறு ஆண்டுகளாவது ஆகும். எனவே இந்த மின்சாரத்தை உடனே பெறவும் முடியாது.

      இதன்மூலம் அணுஉலைகளினால் மனிதபற்றாக் குறையை போக்க இயலாது என்பது உறுதி.

      அணு மின்சாரம் சிக்கனமானது எனும் இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் கூற்று மிகவும் துரோகத்தனமானது. உலகில் உள்ள எந்த நேர்மையான அணு விஞ்ஞானியும் இந்த கூற்றை ஏற்றுக் கொள்ளமாட்டார். அணு மின்சாரத்தின் விலையை, அணு உலையை கட்ட ஆகும் செலவும், தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்ற அணு எரிபொருள் செலவும், உலையின் இயக்கச் செலவும், பராமரிப்பு செலவும், கதிரியக்கமுள்ள அணுக் கழிவுகளை இயக்கத்தின் போதும், இயக்கம் நிறுத்திய பின் பல ஆயிரம் வருடங்களாக பாதுகாக்கும் செலவும் சேர்த்துதான் கணக்கிடப்பட வேண்டும். அதேபோல் அணு மின் நிலையம் நீண்ட காலத்திற்கு இயக்க முடியாது அதன் ஆயுள் வெறும் 30-40 ஆண்டுகளே ஆகும். இதற்கு ஆதாரம் இந்தியாவில் முதல் அணுஉலை இராஜஸ்தானில் 1973ல் செயல்பட தொடங்கிய அணுஉலை இன்று நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.

      அணு உலையின் மிகப் பெரிய ஆபத்து அது உற்பத்தி செய்யும் கதிரியக்கமே. இந்த கதிரியக்கமானது ஒன்று அணுஉலை விபத்தின் மூலம் அல்லது அணு உலையின் கழிவுகள் மூலமோ வெளிப்படும். கதிரியக்கத்தை செர்வியட் என்ற அளவில் அளக்கின்றனர். 5 செர்வியட் அளவு கதிரியக்கம் ஒரு மனிதன் மீது பாய்ந்தால் உடனே மரணம். அதற்கும் குறைவான அளவில் கதிரியக்கம் பாயும்போது மனிதனுக்கு பல்வேறு புற்றுநோய்கள், நுரையீரல் வீக்கம், குடற்பகுதிகளிருந்து இரத்தக்கசிவு, இரத்த சிவப்பு செல்கள் அழிவு, எலும்புக் குருத்து தீய்தல், கருவுக்குள் ஊடுருவி குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள், மரபணு மாற்றங்களினால் பல தலைமுறை பாதிக்கப்படுவதையும் நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும். சுற்றுசூழலைக் கெடுத்து அங்கு புல் பூண்டு முளைக்காமல் அந்த இடமே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு எந்த உயிர் வாழ்க்கைக்கும் தகுதியற்றுபோகும். 

      விபத்தே நடக்கமுடியாத அணுஉலை என யாரும் எந்த அணுஉலைக்கும் சான்று கூறமுடியாது. அணுஉலை விபத்து நடக்க மூன்று சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒன்று தொழில்நுட்ப கோளாறு. இரண்டாவது மனித தவறு. மூன்றாவது இயற்கை பேரிடர்.  அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள மூன்று மைல் தீவின் அணுஉலையை குளிர்விக்க இருந்த பல குழாய்களில் ஒன்று செயற்படாமல் போனதினால் 28.3.1979 அன்று பெரும் அணுவிபத்து ஏற்பட்டது தொழில் நுட்பக் கோளாருக்கு இது சிறந்த உதாரணமாகும். மனித தவறால் ஏற்பட்ட அணுவிபத்துகள் ஏராளம் அதில் மிகவும் கொடியது செர்னோபில் அணுவிபத்து. ஏப்ரல் 26, 1986ல் முன்னால் சோவியத் யூனியனும,; இந்நாள் உக்கிரேனில் அமைந்த செர்னோபில் அணுஉலையில் ஒரு சோதனையில் மனித தவறினால் ஏற்பட்ட மிகப்பெரிய அணுஉலை வெடிவிபத்தால் ஆயிரக்கணக்கானோர் கதிர்வீச்சால் மாண்டனர். இலட்சக் கணக்கானோர் புற்றுநோய்க்கு ஆளாயினர். இக்கதிர்வீச்சு பல நாடுகளுக்கு பரவியதால் வேறுநாட்டு மக்களும் புற்றுநோய்க்கு பலியாகினர். இன்று செர்னோபில் அணுஉலையை 30,000 மெட்ரிக் டன் கான்கீரிட்டை கொண்டு ஒரு பிரமீடு போல பெரும் செலவு செய்து மூடிவிட்டனர். இன்னும் பத்து ஆண்டுகளில் அக்கான்கீரிட்டை ஊடுருவி கதிர்வீச்சு வர வாய்ப்பிருப்பதால் மேலும் 40,000 மெட்ரிக் டன் கான்கீரிட் அதன் மீதே போட்டு மூட முடிவுசெய்துவிட்டனர். இயற்கை பேரிடருக்கு சப்பானே உதாரணம். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சுனாமியால் புகுசிமாவில் அமைந்துள்ள 3 அணுஉலை ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியது. கதிர்வீச்சு சப்பானையும் தாண்டி பல நாடுகளுக்கு பரவியது. இங்கு நாம் ஒன்று நினைவில் கொள்ள வேண்டும் 2004இல் ஆசிய சுனாமியால் கல்பாக்கம் அணுஉலை புகுசிமா போன்று வெடித்து சிதறவில்லை. அதற்குக் காரணம் உறுதியான கட்டுமானமல்ல, தென் இந்திய மக்களின் நல்வாய்ப்பே இருந்தாலும்; அணுஉலை சிறிது பாதிக்கப்பட்டதை இந்திய அரசு மக்களிடமிருந்து மறைத்துவிட்டது. ஆனாலும் கதிரியக்கமுள்ள அணுக்கழிவுகள் கடலில் கலந்ததினால் கல்பாக்கம் பகுதிகளில் முன்பு இருந்த கதிரியக்க அளவைவிட 100 மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் நலனில் அக்கறை உள்ள மருத்துவர் புகழேந்தி ஆதாரத்துடன் மெய்பித்துள்ளார்.

      கொடிய கதிர்வீச்சு கழிவுகளை அழிக்க இதுவரை எந்த வழியும் கண்டறியப்படவில்லை. அக்கழிவுகளை அடர்த்தியான எஃகு டப்பாக்களில் நிரப்பி நிலத்தில் ஆழமாகபோட்டு புதைத்து வருவதே தற்போழுது வரை கடைபிடிக்கும் நடைமுறையாக உள்ளது. ஆனாலும் அக்கழிவானது விரைவில் எஃகை அரித்து நிலத்தடி நீரில் கலந்து நீரையும், மண்ணையும் கெடுத்துவிடுகிறது. இதோடு நில்லாமல் திருட்டுத்தனமாக அணுகழிவுகளை கடலிலும் போய் கொட்டியும் வருகின்றனர். இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மாண்டு, கடலை நம்பி வாழ்வோரின் பொருளாதார ஆதாரத்தையும் அழித்து உலகை மிகப்பெரிய உணவு பஞ்சத்தை நோக்கி தள்ளிவிடுகின்றது. இதோடு நில்லாமல் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுத்து சரிகட்டி அவர்களின் மண்ணிலேயே அணுக்கழிவுகளை புதைப்பதும் மற்றும் அந்தந்த நாடுகளில் உள்ள சமூகவிரோதிகளை பயன்படுத்தியும் இவற்றை செய்துவருகின்றனர். ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பழங்குடியினருக்கு இனா என்ற இத்தாலியின் அரசு சக்தி ஆய்வு முகமை என்கிற அமைப்பு பணம் கொடுத்து இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்சு, செர்மனி மற்றும் அமெரிக்கா நாடுளின் 600 பீப்பாய் கதிரியக்கமுள்ள அணுக்கழிவுகளை  புதைத்துள்ளனர் என்பது இன்று ஆதாரத்தோடு உறுதி படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பான லிகம்பெயின்டியின் கூற்றுப்படி டிரங்கீட்டா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஏகாதிபத்திய அரசுகளிடம் பணம்பெற்றுக் கொண்டு, கதிரியக்கமுள்ள பொருட்களை கொண்டு செல்லும் கப்பல்களை நடுக்கடலில் வெடிவைத்து கடந்த 20 ஆண்டுகளாக தகர்த்து வந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை போட்டு உடைத்துள்ளது.

      அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் அறிக்கையின்படி 1983 வரை உற்பத்தியான அணுகழிவு தன் கதிரியக்கம் தீர்ந்து இயல்பு நிலைக்கு மாற 30 லட்சம் ஆண்டுகள் ஆகுமென கூறியுள்ளது.

      அணுஉலைகளினால் இவ்வளவு தீமை உள்ளதென தெரிந்த பிறகும் இந்திய அரசு அணுசக்தியானது மிகவும் பாதுகாப்பானது எனவும் அணு விபத்து ஏற்படாமல் அரசும் அணுசக்தித் துறையும் மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் பாhத்துக் கொள்வோம் என மனதறிந்து பொய் சத்தியம் செய்கிறது. இதே அரசும், அணுசக்தி துறையும் கல்பாக்கம் (1987, 1999), கய்கா (1994,2009), தாராபூர் (1989, 1992), கோடா (1992, 2001) உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே ஏற்பட்ட 10 சிறிய அணுஉலை விபத்துக்களை மறைத்துவிட்டது. அணு உலைகளின் அபாயத்தை பற்றி யார் கூற முற்பட்டாலும் அவர்களின் குரல்வளையை நெரிக்க இவர்கள் எப்பொழுதும் தயங்கியதேயில்லை. அணுத்துறையின் அநியாயச் செலவினங்களைக் கேள்விக்குள்ளாக்கிய புகழ்பெற்ற அறிஞர் டி.டி.கோசாம்பியின் ஆய்வுப் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானியும் பத்திரிகையாளருமாகிய டாக்டர் கே.எஸ். ஜெயராமன் தாராபூர் அணு உலைக்கழிவு மற்றும் ஜதராபாத் அருகில் அணுக்கழிவால் நிலத்தடி நீர் விசமாக்கப்படுவது போன்ற செய்திகளை வெளிக் கொணர;ந்ததற்காக சயின்ஸ் டுடே பத்திரிகையில் எழுதுவதிலிருந்து தடுக்கப்பட்டார. இந்தியாவின் அணு ஆதீனம் என்றொரு நூலின் மூலம் இந்திய அணுக் கொள்கையின் இன்னொரு முகத்தை படம் பிடித்துக் காட்டிய டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அறிவியற் கோட்பாட்டுத் துறைப் போராசியர் டாக்டர் தீரேந்திர சர;மா இரவோடிரவாக மொழித்துறைக்குப் பதவி மாற்றப்பட்டார்.

      சப்பானின் புகுசிமா விபத்து நடந்ததை பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொன்ன தற்போதைய அணு ஆற்றல்துறை செயலர் ஸ்ரீகுமார் பானர்ஜி "பத்திரிக்கைள் சொல்வதுபோல் இது அணுஉலை ஆபத்தால் விளைந்த நெருக்கடி அல்ல வெறும் வேதியியல் விபத்துதான்" என கூறி உண்மையை மறைக்கப் பார்க்கின்றார். இவருக்கு ஒரு படி மேலே போய் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசஙகர் மேனன் சப்பானில் நடந்தது ஒரு தீவிபத்தேயன்றி வேறெதுவுமில்லை என கூறியதன் முலம் தன் எசமான விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

      தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி அணுதுறையை பற்றி தகவல் கேட்டால் தகவல் தர மறுப்பது, அறிஞர்களின் கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பது என சனநாயகமற்ற, அதிகாரத்துவமிக்க, ஊழல்களும் திறமையின்மையும் நிறைந்த, உள்நாட்டில் நடந்த அணு விபத்துக்களை மறைத்த இந்திய அரசும் அதன் அணு சக்தி துறையையும் வழங்கும் வெற்று உறுதிமொழிகளை நாம் நம்பத்தான் போகிறோமா?

      புகுசிமா பேரழிவிற்கு பிறகு சப்பான் மக்களின் போராட்டதிற்கு பணிந்து பல அணுஉலைகளை இழுத்து மூடியுள்ளது அந்நாட்டு அரசு. செர்மன் அணு உலைகளுக்கு எதிராக 2 லட்சம் பேர் கொண்ட பேரணியால் அரண்டுபோன செர்மன் சான்சிலர் ஆங்கெலா மார்கெல் 1980 முன்பு தொடங்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருந்த ஏழு அணுஉலைகளை உடனே மூடவும், புதிய முயற்சிகளும் மறு பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார். சுவிட்சர்லாந்து தனது பழைய அணுஉலைகளை புதுப்பிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டது. 

      ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாடுகளை பாதுகாத்துக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக ஏழை மற்றும் வளரும் நாடுகளை ஒட்ட சுரண்டி வருவது அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு அம்சம் தான் இந்த அணுஉலை விற்பனை. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக இந்திய பொருளாதாரத்தையும், சிதைத்து, இயற்கை வளங்களை கொள்ளையிட அனுமதியளித்து பேராபத்தான அணு உலைகளை வாங்க அடுக்கிக்கொள்ள துடிக்கிறது இந்திய அரசு. இதனை அனைத்து தேர்தல் கட்சிகளும் மனமார ஏற்றுக்கொள்கின்றன. இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் மற்ற நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் இதற்கு சிறந்த சான்று. போபால் விசவாயுவினால் 25,000 அப்பாவி பொதுமக்களை கொன்ற ஆன்டர்சன் இன்று அமெரிக்காவில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கின்றான். அவன் அனுபவித்த ஒரே துன்பம் இந்திய நீதிமன்றமொன்றில் ஒரு நாள் ஆஜராகி பிணை வாங்கியது மட்டுமே ஆகும். அணு உலையை இங்கு அமைக்க இருக்கும் பன்னாட்டு கார்ப்பரேட்கள் ஏதேனும் அணு விபத்துகளால் நிகழும் பெரும் மனித பேரழிவு போன்ற எந்த குற்றத்திற்கும் பொறுப்பாளியாவதிலிருந்து முழுவிளக்களிக்க வேண்டும் எனவும், வேண்டுமானால் இறந்துபோன மனிதர்களுக்கு ஒரு பிச்சை தொகையை தூக்கி வீசுகிறோம் அதை பெற்றுக்கொண்டு அத்தோடு ஓடிவிடவேண்டுமென ஆணவத்துடன் கொக்கரிக்கின்றனர். இதற்கு இந்திய ஆட்சியாளர்களும் தேர்தல் கட்சிகளும் தங்கள் எஜமான விசுவாசத்தை நிரூபிக்க பாராளுமன்றத்தில் அணுசக்தி பொறுப்பாண்மைச் சட்டம் என ஒரு சட்ட மசோதாவை கொண்டுவந்து விபத்து நடப்பின் அந்த அணுஉலையை வழங்கிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அதிக பட்சமாக 500 கோடி இழப்பீடு வழங்கினால் போதும், அதோடு அவர்களுக்கு அனைத்து குற்றங்களிலும் விலக்களிக்கப்படும் என சட்டப் பிரிவை இயற்றி மனித உயிர்களை ஈன விலைக்கு விற்றுவிட்டது. 

     மின்சாரம் தேவைக்குத்தான் அணுஉலை என கூறும் இவர்கள் இயற்கை வளங்களை பல கொண்ட இந்திய துணை கண்டத்திலே சுற்றுசூழலை பாழ்படுத்தாமல் சூரியசக்தி, காற்றுசக்தி மற்றும் கடல் அலைகளின் மூலமாக குறைந்த விலையில் தேவையான மின்சாரத்தை தயாரிக்கலாம். இதை விடுத்து ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக, ஆபத்தான அணுஉலைகளை இந்தியாவில் இறக்குமதி செய்து, உழைக்கும் மக்களைச் சுரண்டவும், அவர்களின் வாழ்வையும் எதிர்கால தலைமுறையினரையும் அழிக்கவும் இந்த அணு உலைகளை அமைக்கிறார்கள். அணு உலை, அணு ஆயுதம் சம்மந்தமான அனைத்து ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும்.  எல்லா இடங்களிலும் அணு உலை எதிர்ப்பு இயக்கங்களை கட்ட வேண்டியுள்ளது. தொடங்கப்பட உள்ள கூடங்குளம், இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்பாக்கம், இந்தியா மற்றும் உலகிலுள்ள அனைத்து அணுஉலைகளை நிரந்தரமாக மூட ஒன்றிணைவோம். கூடங்குளம் மக்களின் போராட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வோம். வருங்கால தலைமுறையினருக்கு சிறப்பான வாழ்வை வாழ நல்ல இயற்கைச் சூழலை அமைத்துத் தருவது நமது கடமை.

- இராஜேந்திர பிரசாத், வேலூர்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014