இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



ஞாயிறு, நவம்பர் 06, 2011

வாகை சூட வா: வணிக சினிமா சொல்ல மறுத்த கதை

சமூக மாற்றத்திற்கான கலை வடிவங்களில் திரைப்படங்கள் பங்குகொண்ட காலங்கள் மாறி, வெறும் பொழுதுபோக்கிற்கான தளமாகவும், முதலீட்டுக்கான களமாகவும் மாறி இருக்கிறது. இது சமூகத்தில் உள்ள வியாபாரத்தின் (முதலாளித்துவத்தின்) தன்மையை காட்டுகிறது. இங்கே சமூகத்திற்குத் தேவையான திரைப்படங்கள்  எளிதில் வருவதும் இல்லை, வந்தால் சொல்லக்கூடிய கருத்துக்களை தெரிவிக்க முழு உரிமையும் தணிக்கை வாரியத்தால் தரப்படுவதுமில்லை. இன்று பெருமளவு சமூகத்தில் மிகப்பெரும் சக்தியாக உள்ள ஊடகங்களும், திரைப்படங்களும் மக்களுக்கான தேவையைப் புரிந்து தனது வேலையைச் செய்வதில்லை. காரணம் இவைகள் மக்களைச் சுரண்டும் முதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்க நலனை பார்க்கும் அரசு கையிலே தவழ்வதுதான்.



இந்த காரணங்களாலே நாம் இவைகளின் முகமூடிகளை கிழிப்பதற்காகவே திரைப்பட விமர்சனங்களை எழுத வேண்டியுள்ளது. அந்த வரிசையில் வாகை சூட வா... செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையையும், அங்கே உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் நிலைமையையும் எடுத்துக் கூறும் விதமாகவும், அங்கு தனது அரசு வேலைக்கான சான்றிதழுக்காக குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர செல்லும் கதாநாயகன் அந்த மக்களின் நிலையைக் கண்டு அங்கேயே இருந்துவிடுவதாகவும் மக்கள் அவரை பார்த்துக்கொள்வதாகவும் படம் முடிக்கப்பட்டுள்ளது. 1966, புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து படத்தின் களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கதாநாயகனின் தந்தை 100 பவுன் தங்க காசுகளைக் கொட்டி கொடுத்து வேலை வாங்கித்தர இயலாது என்று கூறுவது, அன்றிலிருந்து இன்றுவரை இந்த அரசாங்கம் கல்விக்கும் வேலைக்கும் காசு வாங்கிக் கொண்டிருக்கும் அதன் ஊழல் தன்மையை வெளிப்படுத்து கிறது. இப்படிப்பட்ட அரசாங்கத்தில் எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், லோக்பால் அமைத்தாலும் அரசாங்கத்தின் ஊழல் தன்மையை ஒழிக்க முடியாது என்பது நிதர்சன உண்மை.

     இத்திரைப்படத்தின் கதைக்களமான 'கண்டெடுத்தான் காடு' பற்றி பேச வேண்டியுள்ளது. ஒரு நிலப்பிரபுத்துவ கட்டமைப்பு கொண்ட, ஆண்டானால் அடிமைப்படுத்தப்பட்ட பகுதியாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட பகுதிகளில் நிகழும் கொடூரங்களையும், அதனால் அங்குயிருக்கும் மக்கள் படும் அவலநிலையையும் காட்டப்படவில்லை.  இன்றும் மிகப்பெரிய அவலநிலைகளில், மிகவும் கொடூரமாக பாதிக்கப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமை சொல்லிமாளாத அளவில் உள்ளது. கயர்லாஞ்சியில் தலித்குடும்பம் ஒன்று ஆளும் வர்க்க ஆதிக்க சாதிகளால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு மிக கொடூரமாக கொல்லப்பட்டது முதல் இன்று வரை தலித் மக்கள் மீது தொடரும் வன்கொடுமைகள் நம் இதயத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், கதைக்கான களம் 1966லிருந்து எடுக்கப்பட்டதாக கூறியிருப்பது இன்று அந்த நிகழ்வு இல்லை அதனால் நாம் பின்னுக்கு செல்ல வேண்டிய தேவையிருக்கின்றது என்று கூறுவது போல இருக்கின்றது.

     சுதந்திரம் அடைந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு அமைந்த இந்தக் கதைக் களத்தில் தபால்கார பெண்ணைத்தவிர வேறு எந்த ஒரு கதாப்பாத்திரமோ, நிகழ்வோ அங்கு  வாழும் மக்களுக்கு அரசாங்கத்துடன் எந்த தொடர்பும் இல்லாததைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நமக்கு அன்று தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு இந்த அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதையும், இன்றுவரை அதே நிலையையே கடைப்பிடிக்கும் வக்கற்ற நிலையையே பிரதிபலிக்கிறது. இது போன்ற திரைப்படங்கள் வரவேற்புக்கு உரியதாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையாக உள்ள அடிப்படை பிரச்சினைகளை பற்றி இந்த திரைப்படங்களால் எடுத்துகூற முடிவதில்லை. சரியான தீர்வும் சொல்லப்படுவதுமில்லை. கதாநாயகன் ஆட்டுக்கொட்டாயை சுத்தம் செய்யும்போது வரும் சிறிய பெண் குழந்தை ''பொம்பளைங்க இருக்கும் போது ஆம்பளைங்க பெருக்க கூடாது வாத்தியாரே" என்று சொல்வது, பிஞ்சு நெஞ்சு முதலே கிராமத்துப் பெண்கள் நெஞ்சில் பெண் அடிமைத்தனம் செதுக்கப்பட்டுயிருப்பது எதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது. மேலும் கதை களங்களில் வரும் குழந்தைகளின் தோற்றங்கள் அவர்களின் வறுமையையும், ஊட்;டச்சத்தின்மையையும், அடிப்படை மருத்துவ வசதி கூட கிடைக்காததையும், அவர்கள் வாழும் பகுதிகளில் மின்சாரமும், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததைப் போன்று கதைக் களத்தை அமைத்திருப்பது கிராம பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதே நிலையிலே மக்கள் இன்றளவும் உள்ளது, அவர்களின் உரிமைக்காக இந்த பாசிச, இந்துத்துவ, சாதியக் கட்டமைப்புக் கொண்ட அரசு முன்வராது என்ற கண்ணோட்டத்தையே ஏற்படுத்துகிறது. ஆண்டையால் அடிமைப்படுத்தப்படும் மக்கள் கதாநாயகனின் ஒத்துழைப்பால் அதை உணர்ந்து அவர்களின் பிள்ளைகள் எதிர்காலத்திற்காக வாத்தியாரிடம் படிக்க அனுப்புகிறார்கள். இதனால் ஆண்டையின் வருமானத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும் குழந்தைகள் யாரும் தன்னை மதித்துக் கும்பிடாமல் இருப்பதையும் பொறுக்க முடியாமல் ஆண்டை அடியாட்களை வைத்து வாத்தியாரை அடித்து வெளியேற்றுகிறான். இதைக் கண்டு மக்களும், குழந்தை களும் அந்த அடியாட்களை அடித்து விரட்டுவது போல காட்டப்படுகின்றது. இதை அறிந்த ஆண்டை, 'என் குடும்பத்திற்கு வேலை செய்யுறதுக்குதான் உங்களை இங்க வாழவிட்டேன், என்னையே எதிர்க்குறீங்களா' என்று சொல்லி மக்களை அந்த பகுதிகளில் இருந்து வெளியேற சொல்லுகிறான்.

     இந்த நிகழ்வை நாம் இரண்டு விதமாக பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று இப்படிப்பட்ட நிகழ்வு யதார்த்தத்தில் நடக்கும் போது உழைத்த உழைப்பிற்கு கூலி உயர்வு கேட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேரை உயிருடன் எரித்து கொன்ற வெண்மணி போன்ற சம்பவம்தான் இந்த கதாநாயகனுக்கும், ஊர் மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும். மற்றொன்று இந்த அரசும் மக்கள் மீது இதுபோன்ற வன்முறைகளை பெரும் முதலாளிகளுக்காகவும், ஆளும் வர்க்கங்களுக்காகவும் நடத்திவரும் இன்றைய நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த அரசாங்கத்தி லிருந்து அதையே எதிர்த்து திரைப்படங்களை எடுக்கவும் முடியாது, அதை தணிக்கை வாரியமும் அனுமதிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, கோவை விமான நிலையம் பெரிதுபடுத்து வதற்காக அங்கு வாழும் மக்களை விரட்டியடித்ததும், மேலும் பெரிய முதலாளிகளின் நலன்களுக்காக அரசு தன் வன்முறையை நிகழ்த்துவதையும் காண வேண்டியுள்ளது.

     ஆண்டை மக்களை விரட்டும் போது அங்கே வரும் கதாநாயகனின் தந்தையின் சட்ட ரிதியான பேச்சையும், கலெக்டரிடம் மனுக்கொடுத்தால் இவர்கள் கைது செய்யப்படுவார்கள்  எனக் கூறுவதாலும் வேறு ஒரு ஆண்டையின் உதவியாலும் அந்த மக்கள் அங்கேயே இருக்கின்றார்கள் என்று படமாக்கப்பட்டுள்ளது வேடிக்கை யாக உள்ளது. ஏனெனில் இன்று நகர் புறங்களில் குடிநீருக்காகவும், மற்ற அடிப்படை வசதிகளுக்காகவும் தினமும் மக்கள் கொடுக்கும் மனுவே மதிக்கப்படாமல் இருக்கும் நிலைமையி;ல், 1966 இல் அரசாங்கத்தின் எந்த நலனையும் பெறாத இடத்தில் இப்படி நிகழ்வதாக கூறியிருப்பது உண்மைக்கு புறம்பாக திரையிடப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு சட்டத்தையும், ஆண்டைகள் மதித்ததாக வரலாறு இல்லை. வேண்டுமானால் நிலப்பிரபுக்களின் நலன்களுக்கான சட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர அவர்களை தண்டிக்கும் நோக்கோடு எந்த ஒரு நிகழ்வும் நடந்ததில்லை. திரைப்படத்தில் வரும் இந்த நிகழ்வுகள் உண்மையில் நடந்து இருந்தால் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு தெருநாய்களை போல அடித்து வீசப்பட்ட பரமக்குடி நிகழ்வே நிகழ்ந்திருக்கும் என்பதுதான் உண்மை. கதாநாயகன் அரசு வேலை கிடைத்து புறப்படும் போது நீங்கள் மீண்டும் ஒரு முதலாளியின் கீழ்தான் இருக்கிறீர்கள் எனவே சூதானமாக இருங்கள் என்று சொல்வது, எந்த ஒரு முதலாளியும் உழைக்கும் மக்களை சுரண்டுவானேத் தவிர அவர்களுக்கு நல்லது செய்யமாட்டான் என்பதை வெளிப்படையாக கூறியிருப்பது வரவேற்புக்குரியது.

     திரைப்படத்தின் இறுதியாக அந்த மக்களின் நிலையையும், குழந்தைகளின் நிலையைக் கண்டு, தனக்குக் கிடைத்த அரசு வேலையைத் துறந்து வருவதும், தன் பிழைப்பிற்காக செங்கல் சூளையில் இறங்கி வேலை செய்யும் போது, அந்த மக்கள்,"எங்களுக்காக உங்கள் வேலையை விட்டு வந்திருக்கிறீர்கள், உங்களுக்கு என்ன செய்யனும்னு எங்களுக்கு தெரியும்" என்று சொல்லியிருப்பது, உழைக்கும் மக்களின் நலன்களுக்காக வேலை செய்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்னும் உண்மையைக் கூறியிருப்பதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

     'கிராம சேவா' என்று குறிப்பிடப்பட்டுள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் சான்றிதழ் இருந்தால் அரசாங்க வேலை கிடைப்பதாக காட்டப்பட்டுள்ளது. கல்விக்கு தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அதிகாரம் கொடுக்கத் தெரிந்த அரசுக்கு, அடிப்படை உரிமையான கல்விக்கு நலத்திட்டங்களையோ, அதை இலவசமாக எளிதில் கொடுக்கவோ முயற்சி செய்யாது இன்றளவும் இ;ருப்பது தனியார்களுக்கு நலம் பயப்பதாகவும், மக்களுக்காக இந்த அரசு செயல்படாது என்ற கண்ணோட்டத்தையே காட்டுகிறது. கோவையில் 'கிராம சேவா' போன்ற தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்கி படிக்கும் குழந்தைகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த அவல நிலையே ஏற்படும் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

     ஒட்டு மொத்த திரைப்படத்திலிருந்து இன்றைய நடைமுறை சூழலில் இருந்தும் கிராமப்பகுதியை அடிப்படையாக கொண்டுள்ள நம் நாட்டில், நிலப்பிரபுத்துவ கட்டமைப்பை உடைக்காமலும், புதியதொரு சமுதாய மாற்றத்தை கொண்டுவராமல், இங்கு வாழும் மக்களுக்கான விடுதலையும், உரிமையும் அடிமை வேலை செய்யும் குழந்தைகளுக்கான கல்வியும் கிடைக்காது. இதற்காக திரைப்படத்தில் வரும் கதாநாயகனைப் போல் மக்களின் நலன்களுக்காக தன் சுய ஆசைகளை தியாகம் செய்து வேலை செய்ய முன்வர வேண்டும். அதற்காக இந்த அராஜக அரசை எதிர்த்து சண்டைப் போட வேண்டியுள்ளது. இந்த தேவையை கூறாமல் இருப்பது சாதாரணத் திரைப் படங்களைப் போல் இருந்தாலும், மிகப்பெரிய அளவில் கதைக்களத்தை அமைத்து திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கும், இது போன்ற நல்ல திரைப்படங்களைக் கொண்டுவர  நினைப்பவர்களை  வரவேற்போம், வாழ்த்துவோம்.

- செ.டானிஷ், கோவை

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014