இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



திங்கள், நவம்பர் 07, 2011

பெருவெடிப்பு முதல் பொதுவுடைமை வரை... பாகம்-10


கடந்த இதழில், பாகம்-9 இல் சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்து, உற்பத்தி உறவுகளுடன் (சொத்துடைமை உறவுகளுடன்) முரண்படுவதையும், அதன் விளைவாக சமுதாய, பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதையும் பற்றி பார்த்தோம். இதன் விளைவாக ஏற்படும் அரசியல்-சமுதாயப் புரட்சி பழைய சமூக அமைப்பை மாற்றியமைத்து, அதனிடத்தில் புதிய சமூக அமைப்பை நிறுவும் என்பதையும் பார்த்தோம். இவ்வாறு, துவக்க காலத்தில் நிலவிய ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் மாற்றமடைந்து அடிமை உடைமைச் சமூகம் தோன்றியது பற்றியும் எஜமானர்கள் மற்றும் அடிமை வர்க்கங்களைக் கொண்டிருந்த அச்சமூக அமைப்பு எப்படி இருந்தது என்பது பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம்.  இனி...


நிலப்பிரபுத்துவ சமூகம்:

     ரோம் அடிமை உடைமைப் பேரரசு சீரழிந்து போய், அடிமைகளின் கிளர்ச்சிகள் பெருகி, இவற்றின் விளைவாக பூர்வீக குடிகள் ரோம் பேரரசை வீழ்த்தின. இதன் பின்னர் அங்கு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு தோன்றியது. எல்லா பிரதேசங்களிலும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு வேறு வேறு காலக்கட்டங்களில் தோன்றியது.

     பழைய அடிமை உடைமைச் சமூக அமைப்பைப் போலல்லாமல், இவ்வமைப்பு புதிய சுரண்டும் வர்க்கமான நிலப்பிரபுக்களையும், சுரண்டப்படும் வர்க்கமான பண்ணையடிமைகளையும் பெற்றிருந்தது. நாட்டிலுள்ள நிலங்களில் ஏறக்குறைய அனைத்தும் நிலப்பிரபுக்களின் சொத்தாக இருந்தது. பண்ணையடிமைகள், ஒன்று, நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைப் பெற்று அதில் விவசாயம் செய்து, விளைச்சலின் பெரும் பகுதியை நில வாடகையாக நிலப்பிரபுக்களுக்குக் கொடுத்தனர். அல்லது தனக்குத் தரப்பட்ட சிறிய நிலத்தின் விளைச்சலை, தான் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பதிலாக வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் நிலப்பிரபுவின் நிலத்தில் இலவச உழைப்பைச் செலுத்தினர். இவ்வாறு பண்ணையடிமையின் உழைப்பின் பலனை எவ்வித உடலுழைப்பும் செலுத்தாமல் நிலப்பிரபுக்கள் சுரண்டி வந்தனர்.

     எல்லா நிலப்பிரபுக்களுக்கும் மேலாக, ஒட்டுமொத்த நாட்டினுடைய சொந்தக்காரனாக அரசன் இருந்தான். அரசனுக்கு இராணுவ சேவை செய்வது நிலப்பிரபுக்களின் கடமை. நிலப்பிரபுக்கள் பரம்பரை பரம்பரையாக நிலத்தின் மீதான உரிமையைப் பெற்றுவந்தனர். நிலப்பிரபுக்களின் உதவியுடன் அரசன் புதிய புதிய பிரதேசங்களைக் கைப்பற்றி நிலத்தையும், பண்ணையடிமைகளையும் அதிகரித்தான். உற்பத்தியாளர்களான, விவசாயிகளான பண்ணையடிமைகள் காலங்காலமாக நிலத்தில் கட்டுண்டவர்களாகவும், வறுமையில் உழன்றவர்களாகவும் இருந்தனர்.

     நிலப்பிரபுத்துவ சமூகம் தோன்றியபோது, அது சமுதாய வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தது. அடிமையுடைமைச் சமூகத்திலிருந்த அடிமைகள் விடுவிக்கப்பட்டு, அரை-அடிமைகளாக, அதாவது பண்ணையடிமைகளாக மாற்றப்பட்டிருந்ததால் அவர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்தது. விவசாய உற்பத்தியும், கைவினைப் பொருட்கள் உற்பத்தியும் பெருகின. உற்பத்திப் பொருட்கள் அதிகளவில் பரிவர்த்தனை (பண்டமாற்று) செய்து கொள்ளப்பட்டன. நிறைய நகரங்கள் தோன்றின. விவசாயப் பொருட்களை விவசாயிகள் சந்தைகளில் விற்று, நில வாடகையை பணமாகச் செலுத்தும் முறையும் வளர்ச்சி பெற்றது.

     விவசாயிகளின் உற்பத்தித் திறன் வளர்ச்சி பெற்றதும், புதிய உற்பத்திக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதுமான உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் மீண்டும் உற்பத்தி உறவுகளோடு முரண்பட்டன. குறிப்பாக, நீராவி இயந்திரம் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளோடு, அதன் சொத்துடைமை அமைப்போடு முரண்பட்டன. இது எவ்வாறு அடுத்தகட்ட சமூக வளர்ச்சியான முதலாளித்துவ சமூக அமைப்பைத் தோற்றுவித்தது என்பதைக் காணும் முன்பு, நாம் இன்னொரு விசயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பிட்டதொரு நாட்டில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்புகள்:

     முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்புகளான ஆதி பொதுவுடைமை, அடிமையுடைமை மற்றும் நிலப்பிரபுத்துவம் பற்றிய ஆய்வை நாம் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் செய்யும்போது இயந்திரத்தனமான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது. அதாவது. மேற்சொன்ன அனைத்துச் சமூக அமைப்புகளும், மேற்சொன்ன அதே முறையில் எல்லா நாடுகளிலுமே நிலவியிருக்க வேண்டிய அவசியமில்லை. விதிவிலக்காக, சில நாடுகளில் புதிய வகை சமூக அமைப்புகளும் நிலவியிருக்கலாம். மேற்சொன்ன வகைப்பாடு என்பது பல்வேறு நாடுகளில் நாம் கண்டு, தொகுத்துள்ள பொதுவான வகைப்பாடு ஆகும். ஒரு குறிப்பிட்ட நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்யும் போது, கிடைக்கும் புறநிலையான தரவுகளைக் கொண்டுதான் அந்நாட்டில் என்னென்ன சமூக அமைப்புகள் நிலவின என்பதை ஆய்வு செய்து கண்டடைய வேண்டும்.

     ஒரு நாட்டின் வரலாற்றில் ஆதி பொதுவுடைமைச் சமூக அமைப்பே இல்லாமல் இருக்கலாம். அதாவது, வேறு பகுதியிலிருந்து வந்து குடியேறிய 'அடிமையுடைமைச் சமூகக்” கட்டத்தின் மக்கள், அம்மண்ணின் வரலாற்றைத் தொடங்கியிருக்கலாம். இன்னொரு சமூக அமைப்பு அடுத்தடுத்த வளர்ச்சியைச் சந்திக்கும் முன்பே, உலகின் வேறு பகுதியில் வளர்ச்சி பெற்று வந்தது. குடியேறிய அந்நியர்களால் சிதைக்கப்பட்டிருக்கலாம். எனவே, இயந்திரத்தனமான அணுகுமுறையானது கண்மூடித் தனமான ஆய்விற்கே இட்டுச்செல்லும்.

     இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் நிலவிய பல்வேறு சமூக அமைப்புகள் பற்றி நிறைய ஆய்வுகள் உண்டு. இந்திய நிலப்பரப்பு முழுவதும் ஆதி பொதுவுடைமைச் சமூக அமைப்பைச் சேர்ந்த பழங்குடி இனங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. கற்காலம், செம்புக்காலம், வெண்கலக் காலம், இரும்புக்காலம் ஆகியவற்றைச் சேர்ந்த பழங்குடி இனங்களை இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் அடையாளப்படுத்த முடிகிறது. ஆயினும், ரோம், எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவிய திட்டவட்டமான அடிமை உடைமைச் சமூக அமைப்பு போன்ற ஒன்று இந்தியாவில் நிலவியதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. மாறாக, இந்தியாவில் அதையொத்த 'சூத்திர உடைமைச் சமூகம்” நிலவியது.

     நிலப்பிரபுத்துவ சமூகத்தைப் பொறுத்தவரை அது ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் நிலவியது என்றாலும், அதில் அந்நாடுகளுக்கே உரிய தனித்தன்மையும் உண்டு. இந்தியாவில் நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பு வேறெந்த நாடுகளிலும் இல்லாத தனித்தன்மையைப் பெற்றிருந்தது. இது 'சாதிய நிலப்பிரபுத்துவமாக” இருந்தது. பொதுத்தன்மையில் இது நிலப்பிரபுத்துவமாக இருந்தாலும், 'சாதியம்” என்ற இதன் குறித்தத் தன்மையைப் புரிந்து கொண்டால் மட்டுமே நாம் சரியான முடிவுகளுக்கு வரமுடியும். (இந்தியாவில் நிலவிய சூத்திர உடைமைச் சமூகம், சாதிய நிலப்பிரபுத்துவச் சமூகம் உள்ளிட்டவை பற்றி பின்னர் வரும் 'சாதி எப்படித் தோன்றியது?” என்ற அத்தியாயத்தில் பார்ப்போம்)

     இந்த வகைப்படுத்தும் முறை மற்றும் ஆய்வு முறையின் சாரத்தைப் பற்றிக் கொண்டு நாம் நமது மண்ணிற்கான ஆய்வைத் தொடங்க வேண்டும். உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் பற்றிய விதியையும், தனிச்சொத்துடைமை, வர்க்கங்கள், அரசு, குடும்பம், ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வுமுறையயும் பயன்படுத்தி, இந்திய வரலாறு மற்றும் தமிழக வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

     உதாரணமாக, தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் அடிக்கடி பேசப்படும் சங்க காலம் மற்றும் ஐந்து திணைகள் பற்றிய விசயங்களை எப்படி ஆய்வு செய்வது? நிறைய தமிழ் வரலாற்று அறிஞர்கள் இது குறித்து அருமையான ஆய்வுகள் செய்துள்ளனர். ஆனால், நமது அரசுப் பாடத்திட்டத்தில் நமக்கு எவ்வித பொருளுமற்ற வெற்று வார்த்தைகளாக இவை கற்பிக்கப்படுகின்றன.

     சங்க இலக்கிய காலம், அதாவது சங்க இலக்கியங்கள் தோன்றிய காலம் என்பது, தமிழ் சமூகமானது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வரலாற்றுக் காலத்திற்குள் அடியெடுத்து வைக்கும் காலமாகும். கி.மு. 200 இலிருந்து கி.பி. 250 வரையிலான இந்தக் காலத்தில்தான் தமிழ் சமூகத்தில் தனிச் சொத்துடைமையும், அரசும், வர்க்கங்களும், குடும்பமும் தோன்றின. இக்காலக்கட்டத்தில் சமூக அமைப்பானது, ஐந்து திணைகளாக இருந்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற இந்தப் பிரிவினைகள் குறிப்பிட்ட புவியியல் சூழலையும், குறிப்பிட்ட வகையான உற்பத்தி முறைகளையும் குறிக்கின்றன. துவக்கத்தில் இவ்வாறு ஐந்து திணைகளாகத் தங்களைப் பிரித்துக் கொண்டு மக்கள் வாழ்ந்தார்கள் என்று இதற்குப் பொருளில்லை. 

     குறிஞ்சித் திணையின் மக்கள் மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களுடைய தொழில் உணவு சேகரித்தலாகும். இவர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபடவில்லை. தனிச் சொத்துடைமை பெற்றிருக்கவில்லை. இது ஆதி பொதுவுடைமை நிலையாகும். காட்டுமிராண்டி நிலையிலிருந்து, அநாகரிக மற்றும் நாகரிக நிலைக்கு மாறி வந்துகொண்டிருந்த நிலையாகும். வனப்பகுதிகளிலிருந்து மேய்ச்சல் நிலங்களுக்கு குடிபெயர்ந்த மக்கள், கால்நடை வளர்ப்பையும், கூடவே விவசாயத்தையும் கற்று படிப்படியாக வளர்ச்சியடைந்து தனிச்சொத்துடைமைச் சமூகமாக உருவாகினர். இவர்கள் வாழ்ந்த மேய்ச்சல் நிலங்களைக் கொண்ட நிலப்பரப்பை முல்லை என்கிறோம்.

     ஆதி பொதுவுடைமை நிலையிலிருந்த குறிஞ்சித் திணை மக்களும், அதிலிருந்து தனிச்சொத்துடைமைச் சமூகமாக உருவாகிவிட்ட முல்லைத் திணை மக்களும் தமிழகத்தின் வேறு வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். மேய்ச்சலை விட விவசாயத்தை மையமாகக் கொண்ட தனிச்சொத்துடைமைச் சமூகமாக மருத நில மக்கள் வாழ்ந்துள்ளனர். நெய்தல் நிலத்தில் மீன்பிடித்தலும், உப்பு விளைவித்தலும் முக்கிய தொழிலாகும். குறிஞ்சி என்பது மிகப் பழைமையான திணையாகவும், முல்லை, மருதம், நெய்தல் எல்லாம் பின்னால் தோன்றியவைகளாகும். குறிஞ்சித் திணை மலைவாழ் மக்களின் சமூக அமைப்பு பல்வேறு போர்களின் மூலம் தனிச்சொத்துடைமைச் சமூகங்களால் அழிக்கப்பட்டும், அவர்கள் இச்சமூகங் த்களுக்குள் உள்வாங்கப்பட்டும் வந்துள்ளனர். 

     திணைகள் என்பவை ஆரம்பத்திலிருந்து, ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாமல் தனிதனியாக, நிலையாக இருந்த பிரிவினை என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, ஒன்றிலிருந்து இன்னொன்று படிப்படியான பரிணாம வளர்ச்சியில் உருவான வேறு வேறு உற்பத்தி முறைகளைக் குறிக்கும் வகைப்பாடுகள் என்று பார்க்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இத்திணைகளில் நடைபெற்ற உற்பத்தி மற்றும் நிலவிய பண்பாடு பற்றிய பதிவுகளைக் கண்டெடுத்து தமிழ்ச் சமூக வரலாற்றை அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர்.

     ஆக, நாம் செய்யவேண்டியதெல்லாம் மார்க்ஸ், எங்கெல்ஸ் வகுத்தளித்த சமுதாயம் பற்றிய விதிகளையும் (டுயறள), ஆய்வு முறையையும் (ஆநவாழன ழக ஐnஎநளவபையவழைn) பயன்படுத்தி நமது சமூகத்தின் வரலாற்றைப் புரிந்து கொள்வதுதான்.

     சரி... மீண்டும் பல்வேறு சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்குத் திரும்புவோம்.

முதலாளித்துவ சமூகம்:
     
     ஐரோப்பாவில் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்டதானது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் ஒரு புரட்சிகரக் கட்டமாகும். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழில் வளர்ச்சியை 'தொழிற்புரட்சி” என்கிறோம். சிறு கருவிகளின் துணை கொண்டு செய்து கொண்டிருந்த சிறிய உற்பத்தி இப்போது இயந்திரங்களின் உதவியுடன் பேரளவு உற்பத்தியாகியது. அடிமையுடைமைச் சமூகத்தில் பரிவர்த்தனை (பண்டமாற்று) வளர்ச்சி பெற்ற உடனேயே தோன்றிய வர்க்கம் வணிக வர்க்கமாகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஒரு முக்கிய வர்க்கமாக இது படிப்படியாக வளர்ந்து வந்தது. தொழிற்புரட்சிக்கு பின்னர் அதிகமான பொருட்களை வியாபாரம் செய்து, இவ்வர்க்கத்தினர் வணிக முதலாளிகளாக வளர்ந்தனர். நிலப்பிரபுத்துவ சமூகத்திற்குள் வளர்ச்சி பெற்ற இவ்வர்க்கம், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டது. வணிக முதலாளிகள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வியாபாரம் செய்கையில் ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரத்திலிருந்த நிலப்பிரபுவுக்கு அதிகப்படியான வரி கட்ட வேண்டியிருந்தது. ஏராளமான மக்கள் நிலப்பிரபுக்களின் நிலங்களில் கட்டுண்டு கிடக்கும் பண்ணையடிமைகளாக இருந்தனர். இவர்களால் நிலப்பிரபுக்களின் நிலத்தையும், விவசாயத்தையும் விட்டு வேறு எந்த வேலைக்கும் வர முடியாது. ஆனால் தொழில் வளர்ச்சி பெறுவதற்கு நிறைய தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இக்காரணங்களால் முதலாளிகள் நிலப்பிரபுக்களுடன் முரண்பட்டனர். 

 ரூசோ                                               வால்டேர்                                                
     இந்நிலையில் கடுமையாகச் சுரண்டப்பட்ட பண்ணையடிமைகள் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களிலும், யுத்தங்களிலும் ஈடுபடத் தொடங்கினர். நிலப்பிரபுத்துவ சுரண்டல் பெருகிக் கொண்டே செல்லச் செல்ல விவசாயிகளின் கலகங்களும் பெருகின. இதனைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முதலாளி வர்க்கம் ஒரு முதலாளித்துவப் புரட்சியை நடத்தியது. இதில் பெருமளவில் பங்கேற்றவர்கள் விவசாயிகளாக இருக்க, புரட்சிக்குத் தலைமையேற்ற முதலாளி வர்க்கம் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பைக் கட்டமைத்து, வேறு வகையிலான புதியதொரு சுரண்டல் ஆட்சியை ஏற்படுத்தினர்.

     மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. நிலப்பிரபுக்களின் அதிகாரமும், நிலத்தின் மீதான ஏகபோக உரிமையும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இவ்வாறு உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்பட்டன. மன்னராட்சியின் 'அநீதியை” விமர்சித்து, மக்களாட்சியைக் கொண்டுவர வேண்டுமென முதலாளித்துவ அரசியல் அறிஞர்களான ரூசோ, வால்டேர் போன்றோர் எழுதினர். இவர்களுடைய நூல்கள் முதலாளித்துவ புரட்சிகர எழுச்சியை ஊக்குவித்தது. முழு விடுதலையை விரும்பி போராடிய விவசாயிகளை ஏமாற்றி, முடியாட்சிக்குப் பதிலாக குடியாட்சியை நிறுவுகிறோம் என்ற பெயரில் முதலாளிகள் 'முதலாளித்துவ பாராளுமன்ற முறையை அறிமுகப்படுத்தினர். 1789 ஆம் ஆண்டில் நடந்தேறிய பிரெஞ்சுப் புரட்சி இவ்வாறுதான் முடிந்தது. முதலாளித்துவப் புரட்சிகள் ஐரோப்பா கண்டம் முழுவதும் நடந்தன.

     வணிகத்தில் மட்டுமல்லாமல், தொழில்துறை உற்பத்தியிலும் மூலதனத்தை பயன்படுத்தி முதலாளிகள் வளர்ச்சிபெற்றனர். தொழில்துறை முதலாளிகள் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று வணிக முதலாளிகளைவிட பெரிய சக்திகளாக வளர்ந்து ஆளும் வர்க்கமாக மாறினர். ஏறத்தாழ எல்லா உற்பத்தி சாதனங்களும் முதலாளிகளின் கைகளுக்கு வந்தன.

     முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவு இப்படியாகத் தான் இருக்கிறது:

  • அனைத்து உற்பத்தி சாதனங்களும் முதலாளிகளின் உடைமையாக இருக்கின்றது.
  • எந்த உற்பத்தி சாதனங்களும் இல்லாத தொழிலாளர்கள் தனது உழைப்பை முதலாளிகளிடம் விற்று அதற்குப் பதிலாக கூலியைப் பெறுகின்றனர்.
  • தொழிலாளிக்கு தனது முதலாளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது.


     இங்கு நமக்கு ஒரு கேள்வி எழலாம்...

     முதலாளித்துவம் எல்லாருக்கும் தொழில் செய்யும் உரிமையை வழங்கியுள்ளதே. தனது முதலாளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்கியுள்ளதே. அடிமையையோ, பண்ணையடிமையையோ போலல்லாமல், அது யாரையும் கட்டாயமாக உழைப்பைச் செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கவில்லையே. யார் வேண்டுமானாலும் போட்டி போட்டு முதலாளியாக ஆகிக் கொள்ளலாமே. இது எப்படிச் சுரண்டலாகும்?

     "இதுதான் உண்மையான சுதந்திரம்... முதலாளித் துவம் எல்லா சுரண்டல்களையும் ஒழித்துவிட்டது. இந்த அமைப்பு நியாயமானது" என்று எல்லா முதலாளித்துவ அறிஞர்களும் வாதிடுகின்றனர்.

     எல்லா பொருளாதார அறிஞர்களும் முதலாளித்து வத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, தொழிலாளி வர்க்கத்தினர் இதற்கு விடை தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கையில், தொழிலாளி வர்க்கத்தின் தத்துவஞானியாக உருவெடுத்த காரல் மார்க்ஸ் இதற்கு ஆணித்தரமான பதிலளித்தார். 1848-இல் பிரெட்ரிக் எங்கெல்சுடன் இணைந்து அவர் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும், பின்னர் பல பத்தாண்டுகளாக அவர் ஆய்வு செய்து வெளியிட்ட 'மூலதனம்” நூலிலும் அவர் அவிழ்க்க முடியாதிருந்த இந்தப் புதிருக்கு தகர்க்க முடியாத பதில் தந்தார்.

(தொடரும்...)

-மனுவேல்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014