இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



புதன், நவம்பர் 09, 2011

ஊழல்களின் மறுபக்கம்


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்,  இஸ்ரோ ஊழல், எஸ்பேண்ட் ஊழல், உணவு தானிய ஊழல் என இன்றும் தொடர்ந்து கொண்டு போகும் அரசின் இலட்சம் கோடிகளின் ஊழல்களின் மத்தியில் 'ஊழல் இல்லா இந்தியா ஒளிமயமான இந்தியா', வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற முழக்கங்களையும், மத்திய அரசின் அறிக்கைகளையும் நாம் பத்திரிகை, செய்திகளில் பார்த்து வருகின்றோம். உண்மையில் இது போன்ற முழக்கங்களும், அன்னா அசாரேவின் லோக்பால் நடைமுறை, அத்வானி ரதயாத்திரை, ராம்தேவ் உண்ணாவிரதம் போன்றவைகளும், மத்திய அரசின் அறிக்கைகளும் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகளா? இதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஊழலின் பிறப்பிடத் தையும், அவைகள் வளரும் முறைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இவைகள் நமக்கு நன்மையா? தீமையா? என்று புரிந்து கொள்வதோடு ஊழலை ஒழிப்பதற்கான நம்முடைய சரியான வழியையும் கண்டுகொள்ள முடியும். 


     முதலில் 'சுதந்திர இந்தியா' காலகட்டத்தில் இருந்து ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளும், அதே சமயத்தில் அரசு மக்கள் மீது கொண்டுள்ள அக்கறைகளையும் பார்ப்போம். பிறகு ஊழலுக்கான பிறப்பிடத்தையும் அதை ஒழிப்பதற்கான நம்முடைய நடைமுறை பற்றியும் சரியான முடிவுக்கு வருவோம்.

ஊழலுக்கு எதிரான அரசு நடவடிக்கைகள்:

       1948இல் ஊழல்கள், கறுப்பு பணம், தொழில் வரி மறைப்பு போன்றவைகளுக்கு எதிராக ஜவகர் லால் நேரு தலைமையில் ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1956இல் கே.சந்தானம் குழு தலைமையில் மத்திய அரசால் ஊழல் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. 1965இல் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழு நிறுவப்பட்டது. 1969இல் மத்திய அரசு லோக்பால் மசோதா முன்மொழிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சிறு, சிறு நிர்வாகச் சீர்திருத்தங்கள், அந்தந்த ஊழலுக்கான விசாரணை கண் காணிப்புக் குழுக்கள் அமைக்கப் பட்டன.

     1986இல் ராசீவ் காந்தி பிரதமராக இருந்த போது உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற கொள்கை நாட்டின் அனைத்து துறைகளிலும் (சேவை துறை உள்பட) நடைமுறைப்படுத்தப் பட்டது.  இதிலிருந்து ஊழல்களும் இலட்சம் கோடி கணக்கில் இரட்டிப்பாகின்றன. LPG எனப்படும் தாராளமயம், உலகமயம், தனியார்மயம் நடைமுறைக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் உள்ள அடிமட்ட அரசு அதிகாரிகள் முதல் உயர்பதவிகள் வகிக்கும் அரசியல் தலைவர்கள் வரை ஊழல்கள் எளிதாகவும், தாராளமாகவும் நடைபெற வழிவகுத்தன.
   
     2010இல் மத்திய அரசின் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழி யப்பட்டது. இதன் சாராம்சம் பின்வருமாறு : மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யும் ஊழல்கள் பற்றி விசாரிக்கப்படுவார்கள். லோக்பால் குழு 3 ஓய்வு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் இயங்கும். குழுவை துணை குடியரசுத் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற தலைவர், எதிர்கட்சித் தலைவர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோர் தேர்ந்தெடுப்பர். இதில் அரசு ஊழியர்கள் புகார் அழிக்கக்கூடாது. மக்களவைத் தலைவர் ஒப்புதல் இல்லாமல் உறுப்பினர்கள் மீது விசாரணை நடத்தக் கூடாது. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஊழல் செய்திருப்பது உண்மையென்றால் அதை விசாரித்து   மக்களவைக்கு லோக்பால் குழு அனுப்பி வைக்க வேண்டும்.

அன்னா அசாரேவின் ஜன்லோக்பால் (ஊழல் தடுப்பு ஆணை மக்கள் வரைவுச் சட்டம்):

     மேற்கண்ட அரசின் லோக்பால் மசோதாவில் இருக்கும் குறைகளைக் களைந்து சரியான ஜன்லோக்பால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அன்னா 2011 ஏப்ரல் மாதத்தில் முதல் கட்ட உண்ணாவிரதம் இருந்து அரசு பேச்சு வார்த்தையுடன் முடித்து கொண்டார். பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் கட்ட உண்ணாவிரதம் அறிவிக் கப்பட்டது. அன்னா குழுவின் சாராம்ச கோரிக்கைகள:;  ஜன் லோக்பாலின் குழுவில் அரசு சார்பாளர்கள், மக்கள் சார்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் இடம்பெற வேண்டும், ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அரசு சாரா அமைப்பு உருவாக்கிய லோக்பால் வரைவுச் சட்டம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்பட நீதித்துறை நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரை விசாரிக்கும் அதிகாரம் கொண்டதாக லோக்பால் உருவாக்க வேண்டும். அரசு ஊழியர் உள்ளிட்ட எவரும் லோக்பால் குழுவிடம் புகார் கூறலாம். லோக்பால் தானே முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கலாம். இது தேர்தல் ஆணையம் போல தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும். இதை உயர், உச்ச நீதிமன்றங்கள் ஆய்வு செய்யலாம். இதன் வரவு, செலவுகளை தலைமை தணிக்கை ஆணையம் ஆய்வு செய்யும். இதில் பிரதமரை உள்ளீடாகச் சேர்க்க வேண்டும்  என்ற கோரிக்கையை தவிர அரசுக்கு வேறு எதிலும் பிரச்சினை இல்லை என்று கூறிவிட்டது. 

இன்னும் அத்வானி போன்ற 'தூய்மையான' அரசியல்வாதிகளும், ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும், ராம்தேவ் போன்ற 'நியாயமான' சாமியார்களும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு வடிவங்களில் இன்னும் புதியதாக பல 'தூய்மையான' நபர்களும் முன் வந்து நிற்கின்றனர். இவர்களை இன்று வரை புதிய ஹீரோக்களாக ஊடகங்களும் தினமும் திட்டமிட்டு ஒளிபரப்புகின்றன. இவர்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை மறைத்து விடுகின்றன. உதாரணமாக 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அன்னாவின் குழுவில் ஒவ்வொரு நபர்கள் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அரவிநத்; கெஜிரிவாலும், மணிஜ் சிசோடியாவும் இணைந்து நடத்தும் கபீர் நிறுவனம் ஃபோர்டு என்ற பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து 4 லட்சம் டாலர் நிதி வாங்கியது. அன்னா அவரது கிராமமான ரலேகான் சி;த்தியில் இருக்கும் மக்கள் மீது செலுத்தும் சாதிய ஒடுக்கு முறைகளும், பொருளாதாரப் பின்னடைவுகளையும் இன்னும் இது போன்ற பலவற்றையும் ஊடகங்கள் முழுமையாக மறைத்து விடுகின்றன. நிற்க. இவைகள் ஏன் மறைக்கப்படுகின்றன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அரசின் மற்றொரு பக்கத்தையும் பார்ப்போம்.

அரசுகளின் மக்கள் மீதான அக்கறை

     மேற்கண்டவற்றை நாம் பார்க்கும் போது அரசு ஜனநாயகமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது போல் ஒரு தோற்றம் உருவாகும். இவை ஊழலை ஒழித்து மக்கள் பொருளாதாரத்தை, மக்கள் பணத்தை காப்பதற்கான உண்மை யான போராட்டங்கள் போலவும், அதுவும் இந்த அரசியல்வாதிகள்தான் முக்கிய பிரச்சினை என்ற ஒரு பிம்பம் ஊடகங்களால்; சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அரசு மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை யையும், இவர்கள் உருவாக்கும் போலி தோற்றத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் 2005லிருந்து அரசின் நிதிநிலை அறிக்கையை மிக மேலோட்டமாக பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

     2005-06இல் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அரசு செய்துள்ள வரிச் சலுகை - 3,74,937 கோடி (2ஜி ஊழலை விட இரண்டு மடங்கு). 

     2011இல் பிரணாப் முகர்ஜி நிதிநிலை அறிக்கையில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை - 88,263 கோடி. 
     
     நாள் ஒன்றுக்கு இந்த பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு செய்யும் வரிச்சலுகை மட்டும் 240 கோடி. இந்த 240 கோடியும் சுவிஸ் வங்கிகளுக்கு தினமும் ஏற்றுமதியாகின்றன என்று வாசிங்டன் பொருளாதார ஆய்வு நிறுவனம்(GFI) ஆதாரத்துடன் கூறுகின்றது. 

     எதிர்காலத்தில் கூட இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவ னங்கள் கட்ட வேண்டிய சுங்க வரியை கட்டத் தேவையில்லை என அறிவிக்கப்பட்ட தொகை - 48,798 கோடி.

     அப்போலோ போன்ற நட்சத்திர தனியார் மருத்துவமனைகளுக்கு (Star hospitals) வெளிநாடுகளில் இருந்து கருவிகளை இறக்குமதி செய்தால் சுங்கவரி விலக்கு - 1,74,418 கோடி. (கடந்த ஆண்டு 1,69,121 கோடி). 

     தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி என பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்த தேவையில்லை என 2005 இலிருந்து இதுவரை கொடுக்கப்பட்ட சலுகை - 21,25,203 கோடி (2ஜி யை விட 12 மடங்கு).  

     நாட்டின் விவசாயிக்களுக்கான மானிய தொகையில் வெட்டு - 5,568 கோடி. 

     விவசாயப் பயிர் பாதுகாப்புக்கான மானிய தொகையில் வெட்டு - 4,447 கோடி.

     இவை 2005இலிருந்து அரசின் நிதிநிலை அறிக்கையில் இருந்து நாம் பார்த்த சிறிய தகவல்கள் மட்டுமே. இதுபோன்ற 63 ஆண்டு கால நிதிநிலை அறிக்கையை நாம் ஆய்வு செய்தால் முழு உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். அது அத்வானி, வாஜ்பாய் தலைமையிலான பிஜேபி அரசாக இருந்தாலும், மன்மோகன்சிங், சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இந்த விசயத்தில் இவர்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும், வேறு நடை முறையும் இருந்ததில்லை. இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தை கைப்பற்றி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது போன்றவற்றிக்காக அரசு பொறுப்பேற்று கொள்ளும் நிதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சிறப்பு வரிச் சலுகைகள், 24 மணிநேர மின்சார வசதி போன்றவைகளும் அடங்கும். இவை களுக்காக தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பு, கல்வி, மருத்துவம் போன்ற சேவைத்துறைகளை தனியாரிடம் ஒப்படைத்தல், மக்கள் மீதான வரிகளை அதிகப்படுத்துதல், பொதுநலன் களுக்கான நிதியை வெட்டுதல். இப்படிதான் அரசு மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது. இந்த மோசடிகளை பற்றி அரசியல்வாதிகளும் சரி, ஊடகங்களும் சரி, மேலே நாம் பார்த்த போரட்டங்களும் சரி வாய் திறக்கவில்லை, திறக்காது. இப்படி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அதில் சிறுதொகையை இந்த அரசியல் வாதிகளுக்கும், அரசு சாரா அமைப்பு களுக்கும், ஊடகங்களுக்கும் வாரி இறைக்கின்றனர். அரசுகளும் ஏழை மக்களுக்கு உணவு வழங்க நிதி இல்லை என கைவிரித்து கொண்டே செல்லும், ஊழலை ஒழிப்பதற்கான அறிக்கைகளும் அரசால் வெளியிடப் பட்டு கொண்டே இருக்கும். 

ஊழலின் பிறப்பிடமும் அதை ஒழிப்பதற்கான மாணவர்கள், பொது மக்கள் பாதையும்

     மேலே நாம் பார்த்தவைகளி லிருந்து நாம் இரண்டு முடிவுகளுக்கு செல்லலாம். ஒன்று இந்த அரசு யாரால் எதற்காக உருவாக்கப்படுகின்றது என்பதாகும்;, மற்றொன்று இந்த அரசு முதல் அன்னா அசாரே வரை அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளிடையே ஊழல் நடந்தால் விசாரணை என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறதே தவிர ஊழலின் ஊற்று மூலத்தை ஒழிக்க இவர்கள் தயாராக இல்லை. ஆனால் உண்மையான மக்கள் உணர்வு அப்படி இல்லை. ஊழல் அவர்கள் மீது ஏற்கனவே உள்ள பொருளாதார சுரண்டலை பல மடங்கு அதிகமாக்கு கின்றது என்பதை உணர்ந்து உண்மையில் ஊழலை ஒழித்து கட்ட ஈடுபடுகிறார்கள். அரசும், அரசியல் வாதிகளும் இந்த உணர்வை பயன்படுத்திக் கொண்டு அதை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக உண்மைகள் போல தோன்றும் பல உணர்வுகளை, நபர்களை உருவாக்கு கின்றார்கள். இந்த அரசுகளையும், ஊடகங்களையும் கூட ஆட்டி வைப்பது யார் என்ற பார்த்தோமானால் அது வால்மாட், பில்கேட்ஸ் இன்னும் பல பன்னாட்டு தொழில் அதிபர்களுக்கு மட்டும் சேவை செய்ய பிறந்திருக்கும் அம்பானி, டாட்டா, மிட்டல், ஜிண்டால் போன்ற தரகு முதலாளிகள் ஆகியோரே ஆவர். 

     உண்மையில் ஊழலை தோற்றுவிக்கும் ஊற்று மூலங்கள் கூட இவர்களே. ஆம் லோக்பாலும் சரி, அனைத்து சட்டதிட்டங்களும் சரி இவர்கள் தோற்றுவிக்கும் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் பொருந் துமே தவிர இவர்களுக்கு பொருந்தாது. தங்களது சந்தை நலனுக்காக ராசா முதல் மன்மோகன் சிங் வரை ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும், பணத்தின் மூலம் வாரி இரைத்து மக்களின் பொருளா தாரத்தை ஒட்ட உறிஞ்சி இலாபம் சம்பாதிக்கும் இவர்கள் தான் ஊழலின் ஊற்று மூலங்கள். இது காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக, தேமுதிக என்ற இன்னும் எந்த புதிய கட்சி வடிவிலோ, தலைவர்கள் வடிவிலோ வடியலாம். ஆனால் ஒரே நோக்கம் மக்களிட மிருந்து கொள்ளையடித்து இலாபங் களைப் பெறவேண்டும் என்பது மட்டும் தான். இதில் எந்தவொரு மனிதாபி மானமோ, சமரசமோ இவர் களிடம் இருக்காது. அப்படி இந்த பன்னாட்டு தொழில் அதிபர்களுக்கு ஒத்துழைக்காத அதாவது ஊழல் செய்யாத, அல்லது அனைத்தையும் அரசுடைமையாக்கும் எந்த ஒரு அரசையும் இவர்கள் பதவியில் வைப்பதில்லை. அப்படி உருவாக நினைத்தால் ஒன்று அழிக்கப்படும் அல்லது மாற்றப்படும். இதுதான் இந்த சமூகத்தில் இவர்களால் உருவாக்கி வைக்கப் பட்டிருக்கும் விதி. இதுவே நம்முடைய 63 ஆண்டு கால போலி சுதந்திரத்தின் அனுபவம்.

     நான் ரேசன் கடையில், தாலுகா அலுவலகத்தில் கொடுக்கும் ஊழல் களுக்கு கூட இவர்கள்தான் காரணமா என்றால், ஆம்! இதுமட்டுமில்லாமல் கல்வி கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் இலட்சக்கணக்கிலான பணம் வரை ஊழல்களில்தான் அடங்கு கின்றன. இதற்கு இவர்கள் தோற்றுவித் திருக்கும் இந்த அரசு அமைப்பு முறை, ஏற்றத்தாழ்வு முறைகள் தான் காரணம். உண்மையில் சிறிய ஊழல் முதல் நம்மை தின்றுகொண்டிருக்கும் பெரிய ஊழல் வரை எப்பொழுது ஒழிக்க முடியும்? ஊழல் என்பது இன்று நேற்றல்ல நாட்டு விடுதலைக்குப் போராடிய கட்டபொம்மனை காட்டி கொடுக்க பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திடம் லஞ்சம் வாங்கிய எட்டப்பன் காலத்திற்கு முன்பே துரோகிகளால் உருவாக்க ப்பட்டு விட்டது. அதே கட்டமைப்புடன் தான் நமக்கு போலி சுதந்திரம் கொடுக்கப் பட்டு பல எட்டப்பன்கள் அரசில் வைக்கப்பட்டனர். இன்று தங்கம், அரண்மனைகளுக்கு பதிலாக வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரை கொண்டு பன்னாட்டு தொழில் நிறுவனங்களிடம் நம்மை அடகு வைத்து பல எட்டப்பன்களால் அரசு நடத்தப் படலாம். ஆனால் நமக்கு ஆங்கிலேயன் காலத்திலிருந்து இன்று வரை சுரண்டல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. 

     எனவே சமுதாயத்தில் இருக்கும் ஒடுக்குமுறைகளை அதாவது பன் னாட்டு கம்பெனிகள் மக்கள் மீது செலுத்தும் இலாப சுரண்டல் ஒடுக்கு முறைகள், ஏழை மீது பணக்காரனின்; ஒடுக்குமுறை, உழைப்பவர்களின் மீதான முதலாளிகள் ஒடுக்குமுறை, தாழ்தப்பட்டடோர் மீது ஆதிக்கசாதிகள் ஒடுக்குமுறை, மக்களுக்கு இன்றுவரை முழுமையாக மறுக்கப்பட்டிருக்கும் அறிவியல் பூர்வமான கல்வி போன்ற ஓடுக்குமுறைகளை ஒழித்து கட்டினால் தான் ஊழலில்லா சமுதாயம் கூட இருக்க முடியும். இப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டு மானால் மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து மக்களும் இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்  அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே சரியான தீர்வாக இருக்க முடியும். 

     ஊழல் என்பது சமுதாய அமைப்பு முறையின் ஒரு குறிப்பான பிரச்சினை யாக உள்ளது. இந்த அரசின் ஒட்டு மொத்த அமைப்பு முறையின் பிரச்சினை ஆகும். இப்படிபட்ட அமைப்பு முறையை மாற்றுவதற்கான போராட்ட மாக, கருத்துகளாக நமது பாதை இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருக்கும் அனைத்து போராட்டங் களும், கருத்துகளும் நம்முன் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் ஒரு மாயமான போலி பிம்பம் மட்டும் அல்ல நம்மை திசை திருப்பவதற்கான பாதையும் ஆகும். இதை நாம் புரிந்து கொண்டு நமக்கான பாதையை நோக்கி நடைபோடுவோம்.
- ரகுவரன்,
கோவை அரசு சட்டக் கல்லூரி

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014