இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், ஆகஸ்ட் 19, 2010

நவீனத் தீண்டாமை: ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகளின் அவலம்

தமிழகத்தின் அனேக சீரழிவுகளில் நம்மைக் கவலையடையச் செய்கிற அவலமாக ஆதி திராவிடர் நலத்துறையின் கீழியங்கும் மாணவ மாணவிகளுக்கான விடுதிகள் மோசமான சூழலில் உள்ளதைக் கூறலாம். முறையான பராமரிப்பும், உள்கட்டமைப்பு வசதிகளும், கழிப்பறை முதலான வசதிகளுமற்ற நிலைகளில் இயங்கும் தமிழகத்தின் ஆதிதிராவிடர் நல மாணவ மாணவியற் விடுதிகளில் உள்ள மற்றொரு மனங்கலங்கச்செய்யும் நிலை ஆதி திராவிடர் என்கிற தீண்டாமையைக் கடைபிடித்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளாகும்.

மாணவர் விடுதிகளும் மாணவியர் விடுதிகளும் முறையற்ற பராமரிப்பினால் அங்க தங்கிப் பயிலும் மாணவ மாணவியரால் தம் படிப்பில் கவனத்தை செலுத்தவியலாமல் போகும் நிலையெய்துகிறார்கள். ஆதலின் அவர்களது கல்வித் தடைபட ஏதுவாகும் சூழல் அமைகின்றது. இப்படிக் குறைகளோடு உள்ள விடுதிகளில் படிக்கின்றவர்கள் பெரும் பாலும் வறுமையினால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களாவர்.  அவர்களது நலனில் அக்கறையின்றி அவ்விடுதிகளை கண்டு கொள்ளாதிருப்பது அரசின் நவீனத் தீண்டாமையின் அடையாளமாகவும் படிப்படியாக கல்வியைத் தனியாருக்கு ஒட்டுமொத்தமாக கொடுத்து விடும் மனப்போக்கையுமே காட்டுகிறது.

கல்வித்துறையின் இச்சீரழிவுகளால் பாதிக்கப்படப் போவது தற்போதைய மாணவ மாணவியர் மட்டுமல்ல. பின்வரும் தலைமுறைகளும் பாதிக்கப்படும் என்பதை அரசுகள் உணர வேண்டும். பின்வரும் தலைமுறை எப்படியான சூழலில் தம் கல்வியை அமைத்துக் கொள்ளப்போகிறது என்கிற போதத்துடனே அணுக வேண்டியதாக இப்பிரச்சினை இருக்கிறது. கல்வியின் தரம், அது கிடைக்கும் இடம் கிடைப்பதற்கான வசதிகள் முதலானவையே ஒரு தலைமுறையின் கல்வியளிப்பை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும். ஆதி திராவிட மாணவ மாணவியர் விடுதிகள் பராமரிப்பின்றியும், உரிய வசதிகள் இன்றியும் இருப்பது முந்தைய பிராமணியத்தின் போக்கை மீட்டெடுப்பதாக கருத இடமளிக்கிறது. திராவிட கட்சிகள் ஆண்ட காலத்திலும், அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி ஆண்ட காலத்திலும் அடித்தட்டு மக்களின் அடிப்படை வசதிகள் என்பவை  கீழ்நிலையிலேயே இருந்தது என்பதையும் இருக்கிறது என்பதையும் மறந்து விட முடியாது.

2007-2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1178 மாணவ மாணவியர் விடுதிகள் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வருகின்றன. அவற்றில் 81336 பேர் தங்கி பயின்று வருகின்றனர் அவ்வாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ641.54 கோடியாகும் இதில் கல்விக்கென செலவிடப்பட்ட தொகை 429.09 கோடியாகும் ஆயினும் அப்போதிருந்தே விடுதிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்தான் இருக்கின்றன. இதற்கு அதிகாரிகளின் மெத்தனமும் அரசின் கண்டுகொள்ளாமையுமே காரணமாகக் கூறலாம்.

மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள 40 விடுதிகளில் செய்யப்பட்ட ஆய்வில் மாணவர்களுக்கு சரியான உணவோ குடிநீரோ வழங்கப்படாமல் அவர்கள் அவதியுறுவதைக் காண முடிந்தது. அதிலும் அவர்கள் கழிப்பட வசதியின்றி வெட்ட வெளிகளில் மல ஜலம் கழிப்பதையும் அதனால் தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலையையும் காண முடிந்தது. பணியாட்கள் இன்மையால் அல்லது பணியாட்களின் அதிகாரப் போக்கால் மாணவர்களே  உணவு சமைத்தல்,  கூட்டிப்பெருக்குதல், பாத்திரம் கழுவுதல் முதலான வேலைகளை செய்கின்றனர். இவ்விசயங்கள் எல்லாம் அரசின் அல்லது துறையின் கவனத்திற்கு வருவதேயில்லை. வந்தாலும் அதன் மேலான நடவடிக்கை எடுப்பதில்லை. நடவடிக்கை எடுக்காத இந்நிலை மாணவர்களின் நலனில் அரசுக்கு அக்கறை என்பது துளியும் இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளது.

கல்வராயன் மலையில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான விடுதி ஒரு கிலோ மீட்டர் தள்ளியேயிருக்கிறது. மாணவிகள் சாப்பிடுவதற்காக அவர்கள் ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது அவ்வவேளையில் அவர்கள் மீதான அத்துமீறல்கள் நடப்பதாகவும் கூறுப்படுகிறது.

இதே போல் உரிய கட்டிட வசதி இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கும் விடுதிகள் ஏராளமாய் இருக்கின்றன. பழைய கட்டிடங்களில் அபாயச் சூழலில் தங்க வைக்கும் நிலையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விடுதியில் காணப்படுகிறது. அங்கு தலித் மாணவர்களுக்கான விடுதி ஒரு பழைய கட்டிடத்திலேயே பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருகிறது. திருப்புவனத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி வசதியின்மையால் அங்குள்ள காசியானந்த சாமி மடத்தில் தங்கி வருகின்றனர்.

மல்லாங்கிணறு ஆதிதிராவிடர் மாணவர்  விடுதியில் பழுதடைந்த மோட்டார் இணைப்பை ஏழ வருடமாக சரிசெய்யாததால் தொலை தூரங்களுக்குச் சென்று குளிக்க வேண்டிய நிலைமையுள்ளது. தண்ணீர் வசதியின்மை அவர்களுக்கு இடரைத் தருகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் ஆதி திராவிடர் விடுதிகள் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் தனித்தனியே உள்ளது. மாணவிகள் குளிக்குமிடம் திறந்த வெளியாய் இருப்பதும்  குளிப்பதை வெளியாட்கள் கண்காணிக்கிற மனநிலையில் குளிக்கும் மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளாவதும் நடக்கிறது. அதோடு அங்கு சுற்று சுவர் இன்மையால் மாணவிகளின் விடுதிகளில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதும் அவர்களின் அச்சத்தை அதிகரிக்கின்றது. இந்நிலையை அம்மாணவிகள் கண்ணீர் மல்க கூறுவதைக் காண முடிந்தது.

சரியான சாப்பாடோ குடிநீரோ இன்மையால் மாணவர்களும் மாணவிகளும் மாவட்ட ஆட்சியர்களிடம் முறையிடும் நிலையும்  அதற்கான நடவடிக்கை எடுக்காத நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான சூழலமைவுகள் சரிவர இல்லாத நிலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதொன்றாக மாறி விடுமேயன்றி ஆரோக்கியமான எதிர்காலம் அமையாது.
ஒப்புக்கு துறை அமைச்சர் பார்வையிடுவதும் வார்டன்களை இடை நீக்கம் செய்வதும் மீண்டும் அவர்கள் பழையபடியே நடந்து கொள்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை துறை இயக்குநர் நேரடியாக கண்டித்த நிகழ்வும்நடந்திருக்கிறது. மதுரையில் அமைச்சர் தமிழரசி தலைமையில் நடந்த விடுதி காப்பாளர்கள் தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் நலத்துறை இயக்குனர் தங்க கலிய பெருமாள் பேசும்போது ஆதிதிராவிடர் நல விடுதி காப்பகங்களில் உள்ள விடுதி காப்பாளர்களில் 90 சதவிகிதம் பேர் தலித் இனத்தவர்களாக இருப்பதும் அவர்கள் தம் சொந்த இனத்திற்கே துரோகம் இழைப்பதையும் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினார்.

இங்கு கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம் இது போன்ற அவலங்கள் அரசியல் மட்டத்தில் கண்டு கொள்ளப் படுவதும் கவனத்திற்கு வருவதும் இல்லை என்பதுதான் முறையான பராமரிப்புகள் செய்யப்படுகிறதா? என ஆராயும் அதிகாரிகள் அப்பணியை செய்வதில்லை அதோடு விடுதிக்காப்பாளர்கள்இவ்விதமான அதிகாரிகளை தமக்குச் சாதகமானவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். அதிகாரிகளின் இத்தகைய போக்கே நல விடுதிகள் காப்பாளர்களின் சொந்த காழ்ப்பபுணர்வுகளுக்கு இடந்தரக்கூடிய அளவில் இழிந்து போவதற்கு காரணமாகிறது. சில விடுதிகளில் முறையான காப்பாளர்கள் இல்லை மாணவிகள் காப்பாளர்களால் உளரிதியான தொந்தரவுகளுக்கு ஆளாவதும் உண்டு அந்த நேரங்களிலெல்லாம் மாணவிகள் தற்கொலைக்கு முயல்கிறார்கள்.

விடுதிக்காப்பாளர்கள் இதற்கு பொறுப்பென்று கூறி அதிகாரிகளும் அமைச்சர்களும் தப்பிவிட முடியாது. தம் துறையின் கீழ் உள்ள விடுதிகளின் நிலைமை குறித்த போதம் இல்லாமல் அவர்கள் இருப்பார்கள் என்றால் அது மிக மோசமான துறை செயல்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக அமையும். அவர்களுக்கு தம் துறையின் செயல்பாடு குறித்த அக்கறை இல்லாத பட்சத்தில் அத்துறையால் என்ன பயன்? ஆதிதிராவிடர் நலத்துறையின் போக்கே ஆதிதிராவிடர் நலத்திற்கு முரணாக அமையுமானால் அது சீர்கேடான அரசு இயந்திரத்தைக் குறிக்கும் உதாரணமாக அமையுமேயல்லாமல் வேறு விதமாக அமையாது.

ஏழை எளிய மாணவர்கள் தம் படிப்பை உதவித்தொகையை நம்பியும் மாணவர் விடுதிகளை நம்பியுமே அமைத்துக் கொள்கின்றனர் அவர்களின் எதிர்கால வாழ்வு மீது யாதொரு அக்கறையும் கொள்ளாதவர்களாக துறையும் அரசும் நடந்து கொள்ளுமானால் அப்படி ஒரு துறை தேவையா? எனக் கேட்கத் தோன்றுகிறது. ‘‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும்’’ போக்கிரித்தனம் போல் ஆதிதிராவிடர் நலத்திற்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை தம் கேவலமான திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்யும் அரசுகளால் ஆதிதிராவிடரின் நலமும் அத்துறையின் கீழியங்கும் கல்வி சார்ந்த காப்பகங்களும் மிக மோசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் அபாயம் இருக்கிறது.

இதை விடவும் ஒரு அவலம் மாணவர்களிடம் விடுதி காப்பாளர்கள் நடந்து கொள்ளும் முறையாகும். சில காப்பகங்களில் விடுதிக்காப்பாளர்கள் மாணவர்களை ஓரினப்புணர்ச்சிக்கு ஆளாக்குகின்றனர் இதனால் மன அளவில் பாதிப்புக்கு உள்ளாவதும் விடுதியை விட்டே ஓடி விடுவதும் நடக்கிறது. மாணவர்களின் நிலையே இதுவென்றால் மாணவிகளின் நிலை இன்னும் மோசமாக அல்லவா போகும். விடுதிக்காப்பாளர்களின் இது போன்ற தொல்லைகளால் பாதிக்கப்படும் மாணவிகளும் மாணவர்களும் தற்கொலைக்கு  முயல்கின்றனர். இப்படியாக விடுதிகள் பிரச்சினைக்குரிய இடமாக ஆகுமென்றால் அது ஆரோக்கியமான கல்விச்சூழலுக்கானதாக இருக்கும் எனக் கூறவியலாது.

சமீபத்தில் மதுரை சின்னசொக்கிகுளம் மாணவியர் விடுதியில் நிகழ்ந்த பாண்டீஸ்வரி எனும் மாணவியின் துர்மரணம் வெறுமனே மின்கசிவால் நிகழ்ந்தது என ஊற்றி மூடப்பார்க்கிறார்கள். அம்மாணவியின் இறப்பு கவனக்குறைவால் பழுதான மின் உபகரணங்களினால் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அதன் உள்ளீடான விசயம் வெளித் தெரியாமலே மறைக்கப்படுகிறது. அம்மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கிறாள் எனும் உண்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. இது போன்ற பாலியல் தொந்தரவுகளால் மாணவிகள் மனமுடைகிறார்கள் தற்கொலை செய்து கொள்ளத் தள்ளப்படுகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர்கள் விசயம் வெளித்தெரிந்து விடுமென கொலை செய்வதும் நடக்கிறது.

மாணவிகள் தங்கள் மீதான உடல் ரிதியான தொந்தரவுகளை சகித்துக்கொண்டு கல்வியைத் தொடர்வது ஆகவும் கடினமான காரியம் என்பதை அறியலாம்.

விடுதிகளில் வழங்கப்படும் உணவு மற்ற சேமப்பொருட்களுக்கான அரசு நிர்ணயம் என்பது எல்லா விடுதிகளிலும் சுரண்டப்படுகிறது. அவை முறையாக வழங்கப்படுவதில்லை.

நூலக வசதியும் கணிப்பொறி வசதியும் செய்து தர வேண்டிய விடுதகளில் அவை செயற்படுத்தப்படுவதில்லை மருத்துவ வசதியும் செய்து தர வேண்டும் அதையும் செய்வதில்லை மின்உபகரணங்களுக்கான பாதுகாப்பான வசதிகளும் முறையாக இருப்பதில்லை

உணவுக்கான ஒதுக்கீடும் அதாவது 100 மாணவர்களுக்கு மாதத்திற்கு 1800 கிலோ அரிசி உபயோகப்படுத்தப்பட வேண்டும். ஒரு மாணவனுக்கு சோப்பு முதலிய சேமப்பொருட்களுக்கு ரூ25 செலவிடப்பட வேண்டும் ஆனால் இவற்றில் எல்லாம் ஊழல்கள் நடந்து வருகின்றன என்பதுதான் கவலையளிக்கிறது. 

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இந்த நிலையென்று கருத வேண்டியதில்லை ஏனென்றால் எல்லா மாவட்டங்களிலும் இதுதான் நிலைமையாக உள்ளது. விடுதிகள் வாடகை கட்டிடத்தில் இயங்குவது இன்னும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. பெண்களுக்கான விடுதிகள் உரிய பாதுப்பான வசதிகளுடன் இருப்பதில்லை. சில விடுதிகள் அப்பகுதியின் ஆளும் வர்க்கத்;தினரின் கட்டளைக்கு இணங்க நடந்து கொள்கின்றன ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளை சாதிய ரிதியில் ஒடுக்கும் முறையும் காணப்படுகிறது. மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக நேரும் அவலம் முழுமையாக தீர்ந்தபாடில்லை இத்தொந்தரவுகளுக்கு உள்ளாகும் மாணவிகள் தமக்கு இழைக்கப்படும் கொடுமையை வெளிச்சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.        
       
பள்ளி, கல்லூரி விடுதிகள் பெரும்பாலும் பள்ளியருகிலேயோ கல்லூரிகளுக்கு அருகிலோதான் இருப்பது வழக்கம் அதற்கு மாறாக பெரும்பாலான   விடுதிகள் வெகு தூரத்தில் உள்ளன. உரிய எண்ணிக்கையில் இல்லாமையும் இதற்கு காரணமாக அமைகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத சரியான பராமரிப்பு இல்லாத ஆதிதிராவிடர் விடுதிகளை மூடிவிடும் நிலையை நோக்கி அரசு திட்டம் போட்டே இப்படி செய்கிறது என கருத இடமளிக்கிறது. ஏனென்றால் உரிய பாதுகாப்பும் வசதியும் இல்லாத விடுதிகளில் தம் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் விரும்ப மாட்டார்கள். உரிய வசதிகள் உள்ள தனியார் விடுதிகளில் சேர்த்துப்பயில அனுப்புவர். ஆள் இல்லாத காரணத்தை காட்டி அவற்றை மூடி விடலாம் இதன் மூலம் அரசு உதவிகளை பெற்று பயில விரும்பும் மாணவர்களைக் குறைத்து தனியார் பள்ளி கல்லூரிகளை நோக்கி அவர்களை மடை திருப்பி விடலாம் அதுதானே அவர்களின் முக்கிய நோக்கமும்.

உலக வங்கி இந்தியாவின் நலனில் அக்கறை கொண்டு கூறிய இது போன்ற விசயங்களை செயல்படுத்த அரசுகள் விரும்பவது இயல்புதானே. கல்வியைத் தனியாருக்கு முழுமையாக கொடுத்து விட்டால் கல்வி நிலை சீராகி விடும் பாலாறும் தேனாரும் ஓடும் என்கிற பரப்புரை அடுத்த தேர்தலில் ஒலித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆட்சியாளர்கள் தம் நலம் பேணுகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதால் தம் நலனிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வரை அதைப்பற்றிய போதம் அவர்களுக்கு வரப்போவதில்லை.

தமிழகத்தின் வாக்கு வங்கி அரசியலுக்கு மாணவ மாணவிகள் யாதொரு பயனையும் தரப்போவதில்லை  என்பதால் கண்டு கொள்ளாமல் விடுகிறார்களா? வாக்கு வங்கியாக இருப்பவர்களுக்கும் அவர்கள் எதையும் செய்வதில்லையே பிறகு எப்படி மாணவ மாணவியரை கண்டு கொள்வார்கள்?

மற்றொரு வகையில் கல்வி ஆளும் வர்க்கத்திற்கானதாக இருக்க வேண்டும் என்கிற அதிகார வர்க்க மனப்போக்கு ஏழை எளியவர்கள் தம் நிலைக்கு விதியைக் காரணங்காட்டிக் கொண்டு இருக்க வேண்டுமே அல்லாது உரிமையை தட்டிக்கேட்கக் கூடியவர்களாக  ஆகக் கூடாது என நினைக்கிறார்கள். அரசின் நோக்கும் அதிகாரிகளின் போக்கும் இதையே காட்டுகிறது. ஏழை எளியவர்களுக்கான அரசுகளாக காட்டிக்கொள்ளும் அரசுகள் ஏழை எளியவர்களை முன்னேற விடாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும்  செய்கிறதாக இருப்பதை வியப்பிற்குரியதாக காணத் தேவையில்லை. ஏனென்றால் கால ஓட்டத்தில் தூர்ந்து போனதாக பிராமணியம் புதிய வடிவெடுத்து இருக்கிறது திராவிடக் கட்சிகளின் சாயத்தைப் பூசிக்கொண்டு தன்னை புனருத்தாரணம் செய்து கொண்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்தில் அக்கறை கொள்ளாதது என்பதை விட அவர்களை தம் பபூர்விக தொழிலை நோக்கி தள்ளும் முயற்சியாகவே பள்ளி கல்லூரிகளின் சூழலமைவுகளை கட்டமைக்கிறது உடலுழைப்பிற்கும் மூளையுழைப்பிற்கும் ஆன சமனை அது எதிர்கொள்ள தயாராக இல்லை. எனவே அவர்களை அவர்தம் தொழிலுக்கு திருப்பி விடும் முயற்சியாக  இது போன்ற வசதிகளற்ற பாதுகாப்பில்லாத விடுதிகளை இயக்கி வருகிறது.

மீண்டும் பார்ப்பனியம் தனது அடக்குமுறைக்கு புதிய பெயரிட்டுக்கொண்டால் அது நடக்கும் திராவிடக் கட்சியின் பெயரை சூட்டிக்கொள்ளும்.

-அறிவுமணி,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014