இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், ஆகஸ்ட் 19, 2010

முதுகாட்டில் காக்கையுகுத்த பிணம் - அமித் ஷா: முகமூடி கிழிந்த இனத்துவேஷி

‘ஒரு விசயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த செப்டம்பர் 2003 ஆம் ஆண்டு குஜராத் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைத் தாங்கள் இழந்து விட்டதாக, சுப்ரிம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கடந்த ஏப்பிரலில் 2004 ஆம் ஆண்டு, ஆதரவற்ற குழந்தைகளும், அபலைப் பெண்களும் உயிரோடு எரிக்கப்படும் போது, அதைச் சற்றும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு நவீன காலத்திய நீரோ மன்னன் என்று தங்களை சுப்ரிம், கோர்ட் நீதிபதி விமர்சித்துள்ளார். சுப்ரிம் கோர்ட்டுடன் தங்களுக்குப் பிரச்சனை உள்ளதாகத் தெரிகிறதே’
அக்டோபர் 19, 2007 அன்று சி.என்.என். - ஐ.பி.என் தொலைக் காட்சியில் கரன்தாப்பர் குஜராத் முதல்வர் மோடியை பேட்டி கண்ட போது கேட்ட கேள்வி.

நீரோ மன்னன் என்று சுப்ரிம் கோர்ட் விமர்சித்த ஒருவரால் தான் செய்த அநீதியைச் சொல்லியே ஓட்டுப் பெற்று முதல்வர் நாற்காலியில் உட்கார முடியும் என்பதை நிரூபித்தவர் நரேந்திர மோடி என்கிற இந்துத்துவப் பாசிசப் போக்கிரி. யாராலும் எப்போதும் மறக்கமுடியாத அநீதியை நிகழ்த்திய சங் பரிவாரத்தின் நவீனத் திருவுரு (Icon). இப்படியான பிம்பத்திற்குப் பின்னால் குஜராத்தை காந்தி பிறந்த மண் என்று சொல்வது எங்கோ கேட்ட ஒரு சொல்லாடலை ஞாபகப்படுத்துகிறது. ‘புறாவைத் தூக்கி துப்பாக்கி முன் வை’.

இப்போது அந்த பிம்பம் காங்கிரஸ் (காந்தியினால் கலைக்க வற்புறுத்தப்பட்ட கட்சி) மீது அலறலை பொழிந்திருக்கிறது. அந்த பிம்பம் அலறக் காரணம் 2005, நவம்பரில் நடந்த போலி மோதல் கொலையில் தாமும் தமது அமைச்சரும் தொடர்புப்படுத்தப்பட்டதற்காக என்பதே. இது காங்கிரஸின் சூழ்ச்சி என அலறிய அந்த பிம்பம் நரேந்திர மோடி, அமித் ஷா போலி மோதல் கொலை சம்பந்தமாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகாமல் தப்பித்துத் தலைமறைவாகிப் பின் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து சி.பி.ஐ. விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார். விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்பதோடு உண்மையை மறைத்தே பதில்களைத் தந்தார்.

2005 நவம்பரில் காவல்துறையினால் சுட்டுக் கொல்லப்பட்ட சொராபுதீன் ஷேக், கவுசர் பீவி முதலானோரின் கொலையில் மறைமுகத் தொடர்பு கொண்டவராக அமித் ஷாவை விசாரணைக் கமிஷன் கருதுகிறது. வழக்கை வெளி மாநிலத்தில் விசாரிக்க கோரிய கமிஷனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது. இதை மோடி ஏற்கவில்லை. தமது மாநிலத்தின் நீதிமன்றங்கள் அப்பழுக்கற்றவையானவை என்றும் இது சோனியா காந்தியின் வாக்கு வங்கி அரசியல் என்றும் கூப்பாடு போட்டார். குஜராத் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன், 2002 இனப்படுகொலை தொடர்பாக அளித்த அறிக்கையைத்தான் நாடே பார்த்ததே எங்ஙனம் நீதியை நிலைநாட்டி செம்மாந்திருந்தார் என்று. அவ் வறிக்கையில் தம் மேல் கறையேதும் பட்டு விடாதபடிக்கு தயாரித்து ஒரு நாடகத்தை அரங்கேற்றிய நரேந்திரமோடி இப்போது தம் மாநில நீதி மன்றங்களுக்கு வக்காலத்து வாங்குகிற நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் எனும் போதே அதில் உள்ள சூட்சுமம் புரிபடுகிறதே. ஒரு கொடூரத்தை நிகழ்த்தி விட்டு அதை யதேச்சையான சம்பவமாக வெளியிட்ட பாங்கைத்தான் ராஜதந்திரம் என்று சாணக்கியர் சொல்வார் போலும். அதுபோல் இவ்வழக்கையும் நீர்த்துப் போகச்செய்ய மோடி நினைப்பதில் ஆச்சரியமில்லை.

1995 ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் தம் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப் படுகிறார். பிறகு நிரபராதியென விடுவிக்கப்படுகிறார். 26 நவம்பர் 2005 இல் குஜராத் அகமதாபாத்தில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததாக காவல்துறை அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. காலை செய்திதாள்களில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது. குஜராத் முதல்வர் மோடியைக் கொல்ல வந்ததாகவும் ஆதலால் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்துக் கொன்றதாகவும் அத்தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை அரசு பாராட்டி மகிழ்கிறது. அம்மூவர் டி.ஜி.பி. வன்சாரா, ஏ.டி.ஜி.பி. ஆர்.கே.பாண்டியன், எம்.என்.தினேஷ் குமார் ஆகியோராவர்.

இத்தாக்குதல் நிகழ்ந்த பின்னர், ருபாதின் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்கிறார். அதில் தம் தம்பியான சொராபுதீன் ஷேக் காணாமல் போனதாகவும் அவரைக் கண்டுபிடித்ததுத் தரும்படியும் கோரியிருந்தார். அம்மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை விசாரிக்க அரசை வலியுறுத்துகிறது. விசாரிக்கப்பட்ட பின்பு நீதிமன்றம் பின்வருமாறு பதில் அளிக்கிறது.
‘‘சொராபுதீன் ஷேக்கும் அவரது மனைவியும் போலி மோதலில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது’’
இப்படியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் அதற்கு காரணமான அதிகாரிகளை சிறையிலடைக்க உத்தரவிட்டது. குஜராத்தில் இது போன்ற போலி மோதல் கொலைகளைப் பற்றி விசாரணை செய்து அறிக்கை கொடுத்த மாஜிஸ்திரேட் எஸ்.பி.தமாங், 2002க்கும் 2006க்கும் இடையில் இதுபோன்ற 21 போலி மோதல் கொலைகள் நடந்திருப்பதாக கூறுகிறார். அரசுக்கு இடைஞ்சல் செய்வதாகக் கொல்லப்பட்ட யாவருமே இஸ்லாமியர். இதைத் தனது தேர்தல் வெற்றிக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோடி, இதுபோன்ற போலி மோதல் செய்து கொன்ற போலீஸ் அதிகாரிகளைப் பரிசு கொடுத்துக் கௌரவிக்கிறது என்றும் தமாங் தமது அறிக்கையில் குற்றம் சாட்டுகிறார். அப்படி குற்றமர் சாட்டிய தமாங் என்னும் அந்த நீதிபதியை நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது வீண் வம்பிழுத்தார். எங்களை சீண்டினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என வெளிப்படையாகவே எச்சரித்தார், இப்படியான ஒரு மாநிலத்தின் நீதி குறித்தும் காவல்துறையின் போக்கு குறித்தும் முடிவெடுப்பது எளிமையானதாகவே இருக்கும்.

இம்மோதல் சாவில் அமித் ஷாவின் பங்கு சொற்பமானதேயாகும் அல்லாமல் இக்கொலையில் அரசின் தலையீடு நேரடியாக இருந்தமைக்கு சான்றாகவே காணப்படுகிறார். சொராபுதீன் ஷேக் பிரபல தாதாவென்றும் அவரது மிரட்டலுக்கு பயந்த மார்பிள், ஜவுளி நிறுவன அதிபர்கள் அமித்ஷாவையும் மற்ற போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்புக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பேரில் சொராபுதீன் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆந்திர போலீசாரின் உதவியோடு காரில் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்படுகின்றனர். இதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆந்திரப் போலிசாரால் போலி நம்பர் கொடுக்கப்பட்ட காராகும். அதை ஏற்பாடு செய்து தந்தவர்கள் ஆந்திராவில் குருதயால் சிங் என்ற ஆந்திர தலைமைக் காவல் அதிகாரியும் அவரோடு பணிசெய்த காவல் அதிகாரிகளுமாவர் கார் தயார் செய்து கொடுத்த காவல் அதிகாரிகளுக்கு இதற்கு பின்னுள்ள சூட்சுமம் தெரியாது. விசாரணையின் போது வெளிவந்த தகவல் இதுவென தெரிவித்தனர். இது நடந்தது 22 நவம்பர் 2005 அன்று. ஆந்திராவிலிருந்து காரில் புறப்பட்டு சென்ற மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஆர்.கே. பாண்டியன் என்ற ராஜ்குமார் பாண்டியனும் ஒருவர் இவர் மதுரை, வாடிப்பட்டியைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி நல்லகாமனின் மகனாவார். அவர்களை காரில் கொண்டு சென்று ஹைதராபாத் - மும்பை நெடுஞ்சாலையில் நின்றிருந்த பேருந்தினுள் ஏற்றிக் கொண்டு போனார்கள். பின்பு சொராபுதீனும், கவுசர் பீவியும் நவம்பர் 26 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். திட்டமிட்டே நடத்திய இக்கொலைகளை வெளித்தெரியாமல் மறைத்து விடத் தீர்மானித்த அவர்களது எண்ணம்  ஈடேறவில்லை பிரச்சினை ஆள்கொணர்வு மனு மூலம் வருமெனக் கருதியிருக்கவில்லை. இவர்களை சுட்டுக் கொல்வதற்காக காவல்துறையினர் அவர் தாதாவென்றும், மார்பிள், ஜவுளி, எஸ்டேட் அதிபர்களை மிரட்டினார் என்றும் கூறினார்கள். ஏதொன்றுக்கும் ஷெராபுதின் ஷேக் தமக்கு இடைஞ்சல் தருவதாக  அவ்வதிபர்களிடம் குற்றச்சாட்டு ஒன்றை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டனர். எனினும் சுட்டுக்கொல்வதற்கு இக்காரணம் போதவில்லை யென்று தான் நரேந்திர மோடியை கொல்லவந்ததாக கதை புனைந்தார்கள்.

அந்த மூன்று தொழிலதிபர்களின் பால் நடந்த இக்கொலையில் கைமாறிய பணம் 10 கோடி என்றும் அதை பெற்றுக் கொடுத்ததில் மூளையாகச் செயல்பட்டவர் அமித் ஷா என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சொராபுதீன் கடைக்காரர்களை மிரட்டினார், தாதாவாகச் செயல்பட்டார் என்பவை அவரைக் கொல்வதற்கு மோடியின் அரசு கூறும் உப்புச் சப்பில்லாத காரணங்களேயாம். மேலும் ஷொராபுதின் ஷேக் மற்றும் அவரது மனைவியை சுட்டுக்கொல்ல அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கதை புனைந்தார்கள் எதிர்க்கட்சிகள் இதை நரேந்திர மோடியை கதாநாயகனாக்கும் முயற்சியாக செயல்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டின. அவரவர் தத்தமது அதிகார நலன் குறித்த கவலை கொண்டவர்களாக இருநக்கிறார்களேயன்றி கொலை செய்யப்படும் நீதியைப்பற்றி கவலை கொண்டவர்களாக இல்லை. இதுபோன்ற கொலைகள் குஜராத்தில் மிகச் சாதாரணம். அதை நிகழ்த்துவதற்காக அவர்கள் கூறும் பொய்கள் அளப்பரியது. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 7வது பிரிவு தற்காப்புக்காக ஒருவரைச் சுட்டுக்கொல்லலாம் என்கிறது ஆனால் இந்த ஒரு வரி காவல் துறையால் தொடர்ந்து முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருவதையும் ஊடகங்களும் சினிமாவும் அதன் சாராம்சத்தை வெளிப்படையாக ஆமோதிப்பதாக அமைவதையும் காணலாம். காவல்துறைதான் சகல குற்றங்களையும் தடுத்து நாட்டை ரட்சிக்கும் என்பது போன்ற மாயத்தை சினிமாக்கள் செய்ததை இதன் பின்னால் உள்ள முதலாளிகளின் நலன்களோடு சேர்த்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஏனென்றால் சினிமா முதலாளிகளின் ஏகபோகமாக மாறி வருவதையும் அச்சினிமாக்கள் காவல் துறைகுறித்த பதிவுகளை செய்வதையும் அது வெகு ஜனத்தின் பொது மனதில் உருவாக்கும் பொதுபுத்தியையும் சாதாரணமானதாக பார்க்கவியலாது.

சட்டத்தின் ஓட்டைகள் அதிகார வர்க்கத்தை தப்ப செய்து விடுகிறது என்பதைத் தாண்டி அமித்ஷா விசாரணைக் கமிசன் முன்னால் ஆஜரான நிலைமை ஆசுவாசத்தை தருவதாக இருக்கிறதே ஒழிய அதிகாரத்திற்கு எதிரான நீதியின் அல்லது உண்மையின் பரிமாணம் சார்புத்தன்மையை பெறுவது தவிர்க்கவிய லாததாகவே இருக்கிறது. குஜராத் என்றில்லை தமிழகத்திலும் அதுவே நிலைமையாக இருக்கிறது. தொடர்ச்சியாக நடந்த மோதல் கொலைகள் அரசின் காழப்புணர்வால் நடந்தேறியதாக இருப்பதை பல நிலைகளில் ருசுப்படுத்தியிருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் சுட்டக் கொல்லப்பட்ட வெங்கடேசப்பண்ணையார் மனைவிக்கு திமுக பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்து அதிமுகவின் பழி வாங்கும் போக்கு அப்படுகொலை என்பதை வெளிப்படுத்தியது. இது போன்ற கொடூர கோமாளித்தனங்கள்தான் இனி நாட்டை ஆளப்போகிறது என நினைக்கும் போது நெஞ்சம் பதறவே செய்கிறது. தமக்கு இடைஞ்சல் தருகிறவர்களை கொலை செய்வது எளிது அதை நியாயப்படுத்துவதும் எளிது என்கிற போது நாம் அரசுக்கு எதிராக வாய் திறப்பது குறித்த அச்சத்தை கொண்டவர்களாக இருப்பதையே அரசு விரும்பகிறது என்பது புலனாகிறது.

அமித்ஷாவின் பொதுவாழ்க்கை இதனால் ஒரு சிறிதும் பாதிக்கப்படபோவதில்லை. விசாரணைக்கமிசனின் அதிகாரம் என்பது அத்தனைக்கு வலுவானதில்லை என்பது காரணம். நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி இதுதான் அதிகாரத்தின் மமதை இப்படியான கொலைகளை செய்வதற்கு மவுனத்தையே பதிலாக அளிக்கப் போகிறோமா? என்பதும் அப்படியென்றால் என்ன விளைவுகளெல்லாம் இனி ஏற்படும் என்பதும்தான்.

குஜராத்தின் மோதல் கொலைகளுக்கு தமிழத்தில் போன்று அரசியற் காரணங்கள் இல்லை. இனத் துவேசமே இதன் முக்கிய காரணமாக இருக்கிறதென்பதை அறிவதில் யாதொரு சிக்கலுமில்லை. அதே போல் தம் பழிவாங்கலுக்கு இது போன்ற மோதல் உத்தி பலனளிக்கக் கூடியதாக இருப்பதால் அதையே கடைபிடிக்கிறார்கள். மோடி போன்ற வல்லரசியத்திற்கான ஆளுமைப் போக்கிரிகளை முன்னிறுத்தும் பா.ஜ.க. போன்ற காட்டுமிராண்டிக் கட்சிகளால் இனத்துவேசத்தைக் கொண்டுதான் அரசியல் நடத்தமுடியும் என்பதற்கு அவர்கள் உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிட்ட பிரச்சார ஒலித்தட்டு சாட்சியம் கூறுகிறது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அவர்கள் கொலைகாரர்கள் என அந்த சி.டி.யில் பதியப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த வாசகங்கள் இனத்துவேசத்தின் உச்சம். அதைவிடவும் பிரவீண் தொகாடியா எனும் இந்துத்துவ வெறியனின் வாசகம் ‘‘திரிசூலத்தின் முதல்முனை முஸ்லீம்களையும், இரண்டாவது முனை கிறித்தவர்களையும், மூன்றாவது முனை மதச் சார்பற்றவர்களையும் குத்தும்’ என்பது இந்துத்துவத்தின் கொடூர மனத்திற்கு ஒரு சோறு பதம்.

மோடியின் தூண்டுதலால் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் சமீபத்தில் தெஹல்கா பத்திரிகையில் தாங்கள் அவற்றை செய்ததற்காக பெருமைப்படுவதாக தெரிவித்த காட்சிகள் நம்மை இன்னும் உறையச் செய்கின்றன. இந்தப் பின்னணியிலேயே சமீபத்தில் வெளிவந்த ஆர்.கே.ராகவன் விசாரணைக் கமிசனின் அறிக்கையை காண வேண்டும். பச்சை ரத்தம் பார்க்கத் துடிக்கும் அரக்கர்களின் கையில் நம் நாட்டின் பெயரளவிலான சனநாயகம்கூட அறுபடக் காத்திருக்கிறது அல்லது இதன் பெயரால் இனிவரும் காலத்தில் மாபெரும் ரத்தக்களரியேற்படும். அமித் ஷா முதலானவர்களின் தூண்டுதல் இருக்கும். மோடி முதல்வராவதற்கான துருப்புச்சீட்டாக அதை பயன்படுத்தக் கூடும். நிர்கதியான சனநாயகம் அக்கொடியவர்கள் முன் மண்டியிட்டு இருக்கும். காலத்தின் முன் உள்ள  கேள்வி காந்தியின் நாடா இது? காந்தியைக் கொலை செய்த நாடு என்று சொல்லக் கூடும். இதே சூழலில் தொடரும் இனிவரும் காலங்களில் கொலை ஒரு கலையாயிருக்கும் கலையை வளர்ப்பதற்கு இனத்துவேசம் பயன்படக் கூடும். நாம் வாழ்வைக் கசப்பாக எதிர் கொள்ளத் தயாராக வேண்டும் அல்லது கொலையின் சுவராசியத்திற்கு ஏங்கியவர்களாக மாற வேண்டும். இரண்டின் மேலும் பிணக்குவியலின் கொடூர நாற்றமடிக்கும். அதற்கு இட்டுச் செல்லும் காலத்தை கடிவாளமிட வேண்டுமென்றால் சனநாயகத்திற்கான போர் மற்றும் அதை நிகழ்த்துவதற்கான எடுகோள்கள் உருவாக்கப்பட வேண்டும்.

- பாலை இலக்கியா

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014